ஆண்டாளும் தோழிகளும் - வங்கக் கடல் கடைந்த - (பாசுரம் 30)
(சூழல்: இது திருப்பாவையின் நிறைவுப் பாசுரம். இதுவரை தன்னை ஒரு ஆயர் சிறுமியாகப் பாவித்துப் பாடிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் 'வில்லிபுத்தூர் பட்டர்பிரான் கோதை'யாகத் தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். இந்தப் பாசுரங்களை ஓதுபவர்களுக்குக் கிடைக்கும் பலனை (பலச்ருதி) விளக்கும் வகையில் கண்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான இந்த இறுதி உரையாடல் அமைகிறது.)
கண்ணன்: "கோதை! நீயும் உனது தோழிகளும் இந்த முப்பது நாள் நோன்பை மிகச் சிறப்பாக நிறைவு செய்து என்னைப் பாடிப் புகழ்ந்தீர்கள். ஊராருக்கு 'பறை' வேண்டும் என்று ஒரு சாக்குபோக்கு (வியாஜம்) சொல்லிவிட்டு, கடைசியில் 'குற்றேவல்' என்ற பெரும் பலனைப் பெற்றுவிட்டீர்கள். உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம்!"
ஆண்டாள்: "வங்கக் கடல் கடைந்த மாதவா! கேசவா! இதையெல்லாம் உன்னிடமிருந்து தானே நாங்கள் கற்றுக்கொண்டோம்?"
கண்ணன்: "என்னிடமா? நான் பசுவைப் போன்றவன், உங்களுக்கு எப்படி சாமர்த்தியத்தை கற்றுக்கொடுப்பேன் ?"
ஆண்டாள்: "கண்ணா! நீ பாற்கடலைக் கடைந்ததற்கும், நாங்கள் இந்த நோன்பு நோற்றதற்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அன்று தேவர்களுக்கு அமுதம் பெற்றுத் தருவது போல ஒரு காரணத்தைச் (வியாஜம்) சொல்லி, உண்மையில் நீ எதைப் பெற்றாய்? அலைகடலில் பிறந்த பெண்ணமுதமான மகாலட்சுமியைத் தானே உன் மார்பில் அணைத்துக்கொண்டாய்! அதைப் போலவே, 'ஊர் செழிக்க மழை வேண்டும்' என்ற காரணத்தைச் சொல்லி, நாங்கள் இந்த நோன்பின் மூலம் உன்னையே அடைந்துவிட்டோம்!"
கண்ணன்: "கோதை! இதுவரை 'கோவிந்தா' என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாய், இப்போது திடீரென்று 'மாதவா', 'கேசவா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டாயே!"
ஆண்டாள்: "கண்ணா! 'மாதவன்' (திருமகளுடன் எப்போதும் கூடியிருப்பவன்) என்று உன்னை அழைப்பதற்குக் காரணமே உன் கருணையைச் சொல்லத்தான். ஒரு குழந்தை செய்த குற்றத்தைத் தந்தை தண்டிக்க நினைத்தாலும், தாய் அருகில் இருந்தால் தந்தை மனம் மாறிவிடுவார் அல்லவா? பாற்கடல் கடைந்த பின் பிராட்டி எப்போதும் உன்னைப் பிரியாமல் இருப்பதால், அடியவர்களின் குற்றங்களை நீ பொருட்படுத்தாமல் அவர்களுக்கு அருளுகிறாய் அல்லவா?"
கண்ணன்: "மாதவன் சரி கோதை, அதற்குப் பிறகு ஏன் 'கேசவன்' என்று அழைத்தாய்?"
ஆண்டாள்: "அதிலும் ஒரு நயம் இருக்கிறது மாதவா! பிராட்டி உன்னுடன் சேர்ந்த போது உன் முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட்டது. நீ கடல் கடைந்தபோது ஏற்பட்ட அந்த அலைச்சலில், உனது திருமுடி (கூந்தல்) கலைந்து அலைபாய்ந்தது. அந்த அழகிய கலைந்த கூந்தலின் அழகு உன் முகத்திற்கு பொலிவுக்கு பொலிவு சேர்க்கும் வண்ணம் இருந்தது. அந்த அழகை பிராட்டியே ஆசைப்பட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள் அல்லவா? அதைத்தான் 'கேசவன்' (அழகிய கூந்தலை உடையவன்) என்றேன்."
கண்ணன்: "ஓ! நான் 'கேசி' என்ற குதிரை அசுரனை அழித்தவன் என்பதால் அப்படிச் சொல்லுகிறாய் என்று நினைத்தேன்."
ஆண்டாள்: "அதுவும் ஒரு காரணம் தான். உன்னை அடையத் தடையாக இருக்கும் எங்கள் விரோதிகளை மட்டுமல்லாமல், அகங்காரம் போன்ற மன விரோதிகளையும் நீ கேசி போல அழிப்பாய். நீ எத்தகைய அரிய காரியத்தையும் முடித்துத் தருவாய் என்பதற்கு அந்த 'கடல் கடைந்த' செயலே சாட்சி! அந்தப் பெரிய கடலைக் கடைந்த போது அமுதம் கீழே போய்விடாமல் மேலே கிளம்பும்படி செய்தாய். கப்பல்கள் (வங்கங்கள்) கூட அலசாதபடி மிகச் சாமர்த்தியமாகக் கடைந்தாய். அப்படிப்பட்ட நீ, சம்சாரக் கடலில் தவிக்கும் எங்களை உன் திருவடி என்ற தோணியில் ஏற்றி அருளமாட்டாயா என்ன?"
கண்ணன்: "கோதை! உன் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது! பிராட்டியைப் போலவே நீயும் இப்போது அதே பொலிவோடு விளங்குகிறாய்!"
ஆண்டாள்: "கேசவனே! இது தற்பெருமை அல்ல. உன்னோடு சேர்ந்த மகிழ்ச்சியால் எங்களது முகம் குளிர்ந்து, மலர்ந்து, பூரண சந்திரனைப் போலப் பொலிவு பெற்றுவிட்டது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது ஒரே ஒரு சந்திரன் தான். ஆனால், உன்னை வந்து அடைந்த போது, இங்கே ஐந்து லட்சம் பூரண சந்திரர்கள் ஒரே நேரத்தில் உதித்தது போல் இருக்கிறது!"
தோழி: "சாதாரண சந்திரன் தேய்ந்து வளரும்; ஆனால் உன் அருள் பெற்ற எங்களது திருமுகம் எப்போதும் குறையாத தண்மையுடன் (குளிர்ச்சியுடன்) இருக்கிறது. அதோடு, நீயும் நப்பின்னையும் ஆசையோடு எங்களுக்குப் பூட்டிவிட்ட அந்த ஆபரணங்கள் (சேயிழையார்) எங்களை மேலும் அழகாக்குகின்றன."
கண்ணன்: "கோதை! எல்லாம் நல்லபடியாக நடந்தது, ஆனால் எனக்கு ஒன்று மட்டும் வருத்தமாக இருக்கிறது."
ஆண்டாள்: "அது என்ன கோவிந்தா?"
கண்ணன்: "நீயும் உனது தோழிகளும் நோன்பு நோற்று என்னைப் பாடிப் புகழ்ந்தீர்கள். உங்களுக்குப் 'பறை' என்று மறைத்துச் சொன்ன 'குற்றேவல்' என்ற பெரும் பலனைத் தந்துவிட்டேன். இப்போது என்னுடன் இருக்கும் நீங்கள் இந்தப் பெரும் பேற்றைப் பெற்றுவிட்டீர்கள்; ஆனால், உங்களுக்குப் பின்னால் வரும் காலத்தவர்கள் இந்தப் பலனைப் பெற என்ன செய்வார்கள்? அவர்களால் உங்களைப் போல இந்த நோன்பை அப்படியே அநுஷ்டிக்க முடியாதே! அப்படியானால் அவர்கள் இந்த இன்பத்தை இழக்க வேண்டியதுதானா?"
ஆண்டாள்: "இல்லை கண்ணா! அதற்கும் ஒரு வழி இருக்கிறது. எக்காலத்திலுமுள்ள மக்கள், நாங்கள் இப்போது பாடிய இந்த 'சங்கத் தமிழ் மாலை முப்பதையும்' கற்று, அதன் பொருளை உணர்ந்து ஓதினாலே போதும்; அவர்களும் உன்னால் அங்கீகரிக்கப்படுவார்கள்."
கண்ணன்: (சிரித்துக்கொண்டே) "அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?"
ஆண்டாள்: "கோவிந்தா! கேள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்தச் சம்சாரத்திற்கே ஒரு ஆபரணம் போன்றது. அங்கே நீ (வடபெருங்கோயிலுடையான்), நான் (ஆண்டாள்), என் தந்தை (பெரியாழ்வார்) என மூவரும் இணைந்திருப்பது 'ஓம்' என்ற பிரணவ மந்திரம் போலப் பெருமை வாய்ந்தது.
நீ சூடிக் களைந்த தாமரை மாலைகளால் (பைங்கமலத் தண் தெரியல்) அலங்கரிக்கப்பட்டவர் என் தந்தை பெரியாழ்வார். அவர் வேதத்தின் உட்பொருளை உலகுக்கு விளக்கியவர்; உனக்கே 'பல்லாண்டு' பாடியவர்.
அத்தகைய மகானின் மகளாகிய நான் (பட்டர்பிரான் கோதை) சொன்ன இந்த வார்த்தைகளில் எந்தக் குற்றமும் இருக்க முடியாது. வேதம் வடமொழியில் இருப்பதால் 'பெண்ணுக்கும் பேதைக்கும்' (எளியவர்களுக்கும்) புரியாமல் இருக்கலாம். அது அனைவருக்கும் புரியாத கடினமான கடல் நீர் போன்றது; ஆனால் என் வாய் வழியாக அது வந்தவுடன், மேகம் பருகிய கடல் நீர் மழையாகப் பொழிவது போல, அனைவருக்கும் புரியும் இனிமையான தமிழில் சங்கத்தமிழ் மாலையாகமாறிவிட்டது. அது குளிர்ந்த 'பைந்தமிழ்' மாலையாக அனைவரையும் சென்றடையும்!
கண்ணன்: "'சங்கத் தமிழ் மாலை'! அருமையான பெயர்."
ஆண்டாள்: "கண்ணா! இந்த முப்பது பாசுரங்களும் சங்கத் தமிழின் அங்கங்களான இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் கொண்டுள்ளது. இதைத் தவிர, இந்தப் பாடல்கள் ஒரு கடலைப் போன்றது. தனியாக அனுபவிக்கத் துணிந்தால் இதில் மூழ்கிப்போவோம்; எனவேதான், பலரும் சங்கமாக (கூட்டமாக) கூடித் திரள் திரளாகப் பாடி, கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பதாலும் இதை 'சங்கத் தமிழ் மாலை' என்கிறேன்
கண்ணா! இந்தப் பாசுரங்களைத் தப்பாமல் பாடுபவர்களுக்கு, எங்களுக்குக் காட்டியதைப் போலவே நீ உனது செங்கண் திருமுகத்தைக் காட்டி அருள வேண்டும். அவர்கள் பாடும் போது அதைக் கேட்டு மகிழ்ந்து, உனது நான்கு தோள்களும் (ஈரிரண்டு மால் வரைத்தோள்) பூரித்து மலைபோலப் பருத்து நிற்க வேண்டும். அதையும் அவர்களுக்கு காட்டி அருள வேண்டும்.அப்போது உன் கண்கள் அன்பினால் சிவந்து (செங்கண்), உன் முகம் பொலிவு பெற்று (திருமுகம்),உன் தேவியான மகாலட்சுமியுடன் நீ அவர்களுக்குக் காட்சியளிக்க வேண்டும்!"
கண்ணன்: "ஆனால் கோதை, நேரடியாக நோன்பு நோற்றவர்களுக்கும், வெறும் பாடல்களைப் பாடுபவர்களுக்கும் ஒரே பலன் எப்படிக் கிடைக்கும்?"
ஆண்டாள்: "ஓர் உவமையைச் சொல்கிறேன் கேள். ஒரு பசு தன் கன்றை இழந்துவிட்டால், அதன் துயரத்தால் பால் சுரக்காது. அப்போது அந்தப் பசுவின் உரிமையாளர், இறந்த கன்றின் தோலுக்குள் வைக்கோலைத் திணித்து ஒரு 'தோற்கன்றை' (Dummy Calf) உருவாக்கிப் பசுவின் முன்னே நிறுத்துவார். பசு தன் கன்று என்று நினைத்து, அதன் மீதுள்ள வாசனையால் ஈர்க்கப்பட்டுப் பாசத்தால் பால் சுரக்கும்."
நாங்களும் அந்த ஆய்ச்சியர்களைப் போலத் தூய்மையான அன்பு கொண்டவர்கள் அல்ல என்றாலும், அந்தச் சிறுமியரின் பாவனையில் உருவான இந்தப் பாசுரங்களை (தோற்கன்றை) உன்னிடம் கொண்டு வந்தால், நீயும் எங்களிடம் இரங்கி உனது அருள் மழையைப் பொழிந்தாய்! இதைப் பாடுபவர்களுக்கும் அதே மாதிரி பொழுவாய்! இதுவே இந்தச் சங்கத் தமிழ் மாலையின் ரகசியம்!"
அதனால் இந்த முப்பது பாசுரங்களையும் பாடுபவர்கள், பிராட்டியுடன் சேர்ந்த உன் திருவடிகளில் நித்திய அணுக்கக் கைங்கரியம் என்ற அந்த நீங்காத செல்வத்தைப் பெறுவார்கள். இவ்வுலகிலும் அவ்வுலகிலும் உனது பேரருளைப் பெற்று எங்கும் எப்போதும் இன்புறுவார்கள்!"
கண்ணன், நப்பின்னை இருவரும் சேர்ந்து: "கோதை! அப்படியே ஆகட்டும்!"
(நிறைவு; சுபம்)
ஆண்டாள் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்
ஆண்டாள் அடியார்கள் திருவடிகளே சரணம்
-சுஜாதா தேசிகன்
( 16.1.2026)
Comments
Post a Comment