Skip to main content

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் பற்றிய குட்டிக் கதை

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் பற்றிய குட்டிக் கதை



பல வருடங்களுக்கு முன் ஒருவர், "குழந்தைகளுக்குக் கதை எழுதித் தர முடியுமா?" என்று கேட்டார். "அதற்கென்ன, செய்துவிடலாம்" என்று ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது, குழந்தைகளுக்கு எழுதுவது கஷ்டம் இல்லை; ரொம்ப கஷ்டம் என்று!

சுஜாதா தன் கடைசிக் காலத்தில் மிகவும் விரும்பி எழுதியவை - தினம் ஒரு பாசுரம் மற்றும் நீதிக் கதைகள். அவர் நீதிக் கதைகள் எழுதும்போது நான் உடனிருந்து கவனித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள ‘ஈசாப் கதைகள்’ புத்தகத்தில் ஏதோ ஒரு கதையை (Random) முதலில் படித்துவிட்டுப் புத்தகத்தை மூடிவிடுவார். பின் தமிழில் அதைத் தன் நடையில் எழுதுவார். பிறகு படித்துப் பார்த்துத் திருத்துவார், மீண்டும் திருத்துவார். இப்படி நான்கு ஐந்து முறை செப்பனிடுவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், குழந்தைகளுக்குக் கதை எழுதுவது அத்தனை சுலபமில்லை.

என் கதைக்கு வருகிறேன். சுலபமாகப் புரியும் வண்ணம் ஒரு கதை எழுதினேன். அது அக்ரூரருடைய கதை. "நன்றாக இருக்கிறது, இதுபோல் வேறு சில கதைகளையும் எழுத ஆரம்பியுங்கள்" என்றார் அவர். மந்திர பானம் குடித்த 'ஆஸ்டரிக்ஸ்' போல ஊக்கம் பெற்று, அடுத்து என்ன கதை எழுதுவது என்று திண்டாடினேன்.

நீதிக் கதைகள் என்றாலே உடனே ’ஆமையும் முயலும்’, ’விறகு வெட்டியும் தேவதையும்’ போன்ற கதைகள்தான் நம் நினைவுக்கு வரும். இவை முற்றுப்புள்ளிகளைத் தாராளமாக உபயோகித்து, ஒரு பக்கத்திற்கு மிகாமல், அழகிய படங்களுடன், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குழந்தைகளும் மூச்சுத் திணறாமல் வாசிக்கும் வகையில் சுலபமான வாக்கியங்களால் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்.

"நம் ஊரில் இப்படியான கதைகள் இல்லையா?" என்று தேட ஆரம்பித்தபோதுதான் ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்’ என்ற வைணவ நூல் கண்ணில் பட்டது. திருக்கோளூர் பெண்பிள்ளை, ஸ்ரீராமானுஜரைச் சந்தித்தபோது பேசிய வார்த்தைகளுக்குப் பின்னால் 81 சுவாரசியமான, பக்தியுடன் கூடிய நீதிக் கதைகள் இருந்தன. ஒரே பிரச்சினை, அவை ‘சேஷத்வம்’, ‘பாரதந்த்ரியம்’ போன்ற 'அவுட் ஆப் சிலபஸ்' மொழியில் இருந்தன.

இக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சுலபமாகப் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்று ஒரு நாள் இரவு முடிவு செய்தபோது, கோவிட் உச்சத்தைத் தொட்டிருந்தது. ‘திருக்கண்ணமுது’ என்பதைப் ‘பாயசம்’ என்று மாற்றி, நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைக் கொண்டு சிறுவர்களுக்காகத் தினமும் ஒரு கதை என்று எழுத ஆரம்பித்தேன். ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் ஓர் அந்தாதி போல ‘லிங்க்’ வைத்துச் சுவாரசியப்படுத்தினேன்.

இது முகநூலில் வந்தபோது, பலர் தங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காண்பித்து பாராட்டினார்கள். மழலைக் குரல்களில் கதை சொல்லி எனக்கு அதை அனுப்பவும் செய்தார்கள்.

இதைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். "சரி" என்றேன். "எல்லாம் முடிந்துவிட்டது, இன்னும் ஒரு வாரத்தில் புத்தகம் கையில் வரும்" என்றார். ஆனால் ஒரு வருடம் உருண்டோடியது. கோவிட் மறைந்து, முகக்கவசம் இல்லாமல் தைரியமாக வெளியே சென்று அவரைச் சந்தித்தேன். "ஓ அதுவா... அந்தப் புத்தகத்தைப் போட முடியவில்லை" என்றார். .

அடுத்து இன்னொருவர் கேட்டார், அவரிடமும் "சரி" என்றேன். ஆறு மாதம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை.

"சரி, நாமே போடலாம்" என்று முடிவு செய்தேன். குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரிப் படங்கள் வேண்டும் என்று தேடியபோதுதான் ரமணன் கண்ணில் பட்டார். அவர் வரைந்த படங்கள் எல்லாம் பேசும் படங்கள். அவர் படங்கள் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை என்று முடிவு செய்து அவரை அணுகினேன். வேலைப்பளு காரணமாகச் சற்று மெதுவாக, மூன்று வருடம் எடுத்துக்கொண்டு 80 படங்களை சில மாதங்கள் முன் வரைந்து முடித்தார். .

இந்த மூன்று வருட இடைவெளியில், என் கண்ணில் கிட்டத்தட்ட நான்கு 'திருக்கோளூர் பெண்பிள்ளை' புத்தகங்கள் தென்பட்டன. எல்லாம் அடியேன் எழுதியதைச் சிலர் அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றியும், சிலர் நான் செய்திருந்த எழுத்துப்பிழைகளுடன் அப்படியே பிரதி எடுத்தும், அந்தாதி போல நான் செய்த சுவாரஸியத்தை சுட்டும் வெளியிட்டிருந்தார்கள்.

சுஜாதா ஒருமுறை சொன்னார்: "நல்ல சரக்கைத்தான் காப்பி அடிப்பார்கள்" என்று!

பல வருடங்கள் கழித்து நான் எழுதியதை மீண்டும் படித்தபோது, அவற்றை மொத்தமாக ரிடைட் செய்து, மெருகேற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. இப்போது எல்லாவற்றையும் ஒரு டிராப்ட் எழுதி முடித்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, வண்ணப் புத்தகமாக விரைவில் (இன்னும் சில மாதங்களில்) வெளிவந்துவிடும்( என்று நினைக்கிறேன்).

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை உங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டி, அது அவர்களுக்குப் புரிந்துவிட்டால், அதுவே இந்த முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி. அது இந்தப் புத்தாண்டிலேயே நிகழ என் ஆண்டாளிடம் பிரார்த்திக்கிறேன்.

-சுஜாதா தேசிகன்
1.1.2026

Comments