ஆண்டாளும் தோழிகளும் - அங்கண்மா - 22
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையுடன் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறார்கள். அப்போது ‘உன் வலிமைக்குத் தோற்றுப் போன பகைவர்கள் வேறு வழியின்றி உன் வாசலில் சரணடைவது போல, நாங்களும் எங்கள் அகங்காரம் உன் குணத்தால் தோற்கடிக்கப்பட்டு, உன் வாசலில் வந்து நிற்கிறோம்’ என்று தங்கள் நிலையைச் சொன்னார்கள். இப்போது மேலும் "உன் பள்ளிக்கட்டிலின் கீழே எப்போதும் உன்னை விட்டுப் பிரியாமல் உனக்கே உரித்தான அடியவர்களாய் உன் திருவடி நிழலில் வந்து சேர்ந்துவிட்டோம்" என்று தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தைப் பேசுகிறார்கள்.)
நப்பின்னை: "கோதை! நாம் வேறொருவருக்கும் அல்லாமல் கண்ணன் ஒருவனுக்கே உரியவர்கள், அவனுக்கே அடிமைப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தீர்க்கமாக அவனிடம் சொல்ல வேண்டும்."
ஆண்டாள்: "நப்பின்னை நங்காய்! அப்படியே செய்கிறேன்."
(ஆண்டாள் கண்ணனை நோக்கிப் பேசுகிறாள்)
[அங்கண் மா ஞாலத்து]
ஆண்டாள்: "கண்ணா! இந்தப் பரந்த அழகிய உலகில் உன் படைப்பின் சிறப்புத்தான் என்னவென்று சொல்வது! பிரம்மா கூட ஆனந்தமாக அனுபவிக்க இங்கே இடமிருக்கிறது. ஒரு சிறிய எறும்பு கூடத் தன் ஒரு சிறு நெல்லைப் பொறுக்கிக்கொண்டு… தன் வாழ்வாதாரத்தைத் தேடி மகிழவும் இங்கே இடம் இருக்கிறது. சகல ஜீவராசிகளும் தமக்கு வேண்டிய போகப் பொருட்களுடன் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால்… பிறப்பதற்கு முன்னர் இவை அவனுடையன அல்ல, இறந்துபோன பின்னரும் அவனுடையன அல்ல. ஆனால், வாழும் ஒரு சிறு காலத்தில் இவை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று இங்குள்ளவர்கள் மயங்கிக் கொண்டிருக்கிறான்."
புல்லகலிகா: "சரியாகச் சொன்னாய்! எறும்பு முதல் அரசர் வரை ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு பூமி முழுவதற்கும் தானே அதிபதி என்று அந்தப் பௌண்டர வாசுதேவனைப் போல் அல்லவா நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!"
[அரசர்]
விசாகா: "இந்த உலகில் பதவிகளில் அரசர் பதவிதானே உயர்ந்த பதவி? பதவி உயர உயர அபிமானம் அதிகரிக்கிறது அல்லவா?"
[அபிமான பங்கமாய்]
ஆண்டாள்: "ஆம்! ஆனால் அப்படிப்பட்டவர்களும், தங்கள் எதிரிகளால் அடிபட்டு, தோற்று, ராஜ்யத்தை முழுவதும் இழந்து, ‘தான்’ என்ற அகந்தை அழிந்து காட்டில் திரிந்து அலையாமல், உய்வதற்கு ஏற்ற சரியான இடம் இதுதான் என்று உணர்ந்து உன்னிடத்தில் வருகிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? பெரியோர்கள் ஒரு கதை சொல்வார்கள்."
பத்மா: "என்ன கதை கோதை?"
ஆண்டாள்: "ஒரு காலத்தில் பல ராஜ்யங்களைத் தன் குடைக்கீழ் செங்கோல் ஆட்சி செய்த சக்கரவர்த்தி ஒருவன் இருந்தான். ஒரு நாள் எதிரி நாட்டு அரசன் இவனைத் தோற்கடித்து, அவனுடைய ராஜ்யத்தை முழுவதும் பறித்துக்கொண்டான். மிஞ்சியிருப்பது அவன் உயிர் மட்டும் தான். அதைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறான் அவன். பசி வாட்டுகிறது. கையில் ஒன்றும் இல்லை. பகலில் ஓடினால் மாட்டிக்கொள்வோம் என்று ஒரு காட்டில் பதுங்கிக்கொள்கிறான். அங்கே பிரேத ஊர்வலம் ஒன்று செல்ல, அதைத் தொடர்ந்து சென்று, அங்கே உடைபடும் மண் பானையின் பகுதி ஒன்றைப் பிச்சை எடுக்க உதவும் என்று எடுத்து வைத்துக்கொள்கிறான்."
சுகந்தா: "அந்தோ பரிதாபம்! சக்கரவர்த்தியாக இருந்தவனுக்கு ஓடு ஏந்தும் நிலைமையா?"
ஆண்டாள்: "ஆம்! சில நாள் முன் எப்படி எல்லாம் வாழ்ந்தேன் என்று அந்த அரசன் நினைத்துக்கொள்கிறான். அரசனாக இருந்த காலத்தில் தங்கத் தட்டில், தங்கக் கிண்ணங்களில் விதவிதமான பதார்த்தங்கள் சாப்பிட்டதும், அவனுக்குப் பல்லிளித்துக்கொண்டு அழகான பெண்கள் சுற்றி இன்பத்தையும் அமுதத்தையும் ஊட்டிவிட்டதையும் நினைக்கிறான். இன்றோ அவன் ராஜ்ஜியத்தை இழந்து, மனைவிகளை இழந்து, கொளுத்தும் வெயிலில், ஏதோ ஒரு காட்டில் ஒளிந்துகொண்டு இருக்கும் நிலை வந்துவிட்டது."
சொர்ணலேகா: "பிறகு என்ன ஆயிற்று?"
ஆண்டாள்: "நல்ல பசி. அமாவாசை இருட்டு. எதிரிகள் வரும் சத்தம் கேட்க இருட்டில் வேகமாக ஓடுகிறான். பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தை அடைகிறான். அங்கே ஒரு சிறிய குழியில் கர்ப்பம் தரித்த கருப்பு நாய் ஒன்று உறங்கிக்கொண்டு இருக்கிறது. இருட்டில் கண் தெரியாமல், அந்த நாயின் வாலை அவன் மிதிக்க, அந்த அரசன் காலை அது கடித்துப் பதம் பார்க்கிறது."
ஹேமலதா: "ஐயோ!"
ஆண்டாள்: "சிம்மாசனத்தில் இருக்கும் போது, கப்பம் கட்ட வரும் சிற்றரசர்கள் அவனை வணங்கி, வணங்கி அவர்கள் கிரீடத்தில் இருக்கும் முத்தும், வைரமும் இவன் காலில் பட்டுப் பட்டு, காலில் தழும்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால் இன்று கருநாய் கவ்விய தழும்பு!"
தனநிஷ்டா: "விதி யாரை விட்டது?"
ஆண்டாள்: "நாய் துரத்த, கையில் வைத்திருந்த மண் பானையின் ஒரு பகுதியும் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது. சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் திருடன் என்று நினைத்து அவனை அடிக்க, ஒருவர் வெளிச்சம் கொண்டு வந்து யார் என்று பார்க்க, “அட! நம் அரசன்!” என்று வியந்து ‘அவருக்கா இந்த கதி!’ என்றார்கள்."
சுலோச்சனா: "பதவியும் கௌரவமும் நிலையில்லாதவை என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?"
[வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே]
ஆண்டாள்: "இது போன்ற அரசர்கள் எல்லாம் இழந்த பிறகு, யார் அவர்களை வென்றார்களோ அங்குச் செல்லாமல், மீண்டும் சிம்மாசனத்தில் வீற்றிருந்தால் கெட்டோம் என்று புரிந்துகொண்டு, இந்த அழகிய அகன்ற பூமியில் உள்ள எல்லா அரசர்களையும் ஒருசேரத் தோற்கடிக்கும் ஆற்றல் உன் ஒருவனுக்கே உண்டு என்று புரிந்துக்கொண்டு... கண்ணா! உன் சிம்மாசனத்தின் கீழே வந்து நிற்கிறார்கள்."
பூர்ணா: "அப்போது கண்ணன், இழந்த ராஜ்யத்தை மீண்டும் கொடுக்கிறேன் என்றாலும், எங்கே மீண்டும் தங்களுக்கு அகங்காரம் வந்துவிடப் போகிறது என்று அஞ்சி ‘வேண்டாம் வேண்டாம்’ என்று மறுத்து, உன் திருவடியின் கீழே ஒருவர் விடாமல்... திரள் திரளாக வந்து உனக்கு அந்தரங்க சேவை புரிய) காத்துக்கொண்டிருக்கிறார்கள்."
[சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்]
ஆண்டாள்: "பரம்பரையாகத் தாங்கள் ஆண்டுவந்த அரசையும், அதிகாரத்தையும், வீரத்தையும் இழந்த மன்னர்கள், போர்க்களத்தில் அம்புக்குத் தோற்று, வேறு வழியின்றி உன் பள்ளிக்கட்டிலின் கீழே சரணடைந்து கிடக்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையும் அகங்காரத்தையும் (Ego) முற்றிலும் இழந்து, மெய்யறிவைப் பெற்று, 'நாராயணனே நமக்குப் புகலிடம்' என்ற உறுதியான எண்ணத்தோடு ஏகாந்தமாக நீ இருக்கும் இடத்தில் வந்து விழுந்து கிடக்கிறார்கள்.
நாங்களோ உனது கல்யாண குணங்களுக்குத் தோற்றுப் போய், பெண்களுக்குரிய இயல்பான குணங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற செல்வங்களையும், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, எங்களது அனைத்து உலகியல் சுகங்களையும் துறந்து, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சென்று மன்றாடி, உன்னிடம் தஞ்சம் புகுந்துள்ளோம். அநாதிகாலமாக எங்களை இந்த உடலோடு அடையாளப்படுத்திக் கொண்டிருந்த அறியாமையை (தேகாத்மாபிமானம்) விட்டுவிட்டு, எங்களை முழுவதும் உனக்கே அர்ப்பணித்து, எந்த ஒரு கைம்மாறையும் எதிர்பார்க்காமல் உன்னையே சரணடைந்து நிற்கிறோம்."
சுகபாஷிணி: "அந்த மன்னர்கள் நாட்டைத் துறந்தது போல வேறு புகலிடம் இல்லாமல் வந்தார்கள். நாங்களோ உனக்கு அந்தரங்க கைங்கரியம் செய்ய வந்துள்ளோம்!"
ஆண்டாள்: "ஒரு அரசனுடைய குழந்தை இளமைக் காலத்தில் ஒரு வேடவனுடைய இல்லத்தில் அகப்பட்டு, அவனுடைய பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வந்த காலத்தில், யாரோ ஒரு புண்ணியவான் இதைக் கண்டுபிடித்து, அரண்மனையில் அவனுடைய மாதா பிதா முன் நிறுத்தியது போலே... நாங்களும் அந்த இளவரசன் போல் சம்பந்த ஞானம் பெற்று (நீயே தந்தை, நீயே தாய் என்று) உன் முன் நிற்கிறோம்."
கண்ணன்: "ஆயர் சிறுமியர்களே! நீங்கள் வந்த காரியம் முடிந்துவிட்டது போலிருக்கிறதே! இனி எந்தக் குறையும் உங்களுக்கு இல்லையே!"
[கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே]
ஆண்டாள்: "நாங்கள் உன்னை அடைந்தோம். ஆனால் அடைந்து அனுபவிக்க வேண்டிய பலனைப் பெற வேண்டாமா? அதைத் தந்தருள வேண்டும்."
கண்ணன்: "அது என்ன?"
ஆண்டாள்: "உன்னை அடைந்தவுடன் உன்னை உன்னடியார் அனுபவிப்பது உன் தாமரைக் கண்களை அன்றோ?"
[செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?]
புல்லகலிகா: "எப்படிச் சூரியனைக் கண்டால் தாமரை மலருமோ, அதுபோல ஆற்றாமையால் கையேந்தி வந்து நிற்கும் எங்களைப் பார்த்து உன் கண்கள் அலர்ந்துவிட வேண்டும் "
பத்மா: "அப்படி மலரும் போது, கிங்கிணி (சிறிய மணி) போல் பாதி மூடியும், பாதி மலர்ந்தும் இருக்கும் அழகிய கண்களைக் காண வேண்டும்."
விசாகா: "பசு தன் கன்றிடம் காட்டும் வாத்சல்யம் போல், நீ எங்களிடம் காட்டும் வாத்சல்யத்தால் சிவந்திருக்கும் செங்கண் அழகைக் காண வேண்டும்.."
சுகந்தா: "கண்ணா! உன்னுடைய கண்கள் 'செங்கண்'. பொதுவாகக் கண்களுக்குத் தாமரையை உவமையாகச் சொல்வார்கள். ஆனால், உன்னுடைய கண்களுக்குத் தாமரை ஒருபோதும் ஈடாகாது. இதற்கு முன் நாங்கள் சொன்னதை அழித்துவிடு! தாமரையோடு உன் கண்களை ஒப்பிடுவது, உன் கண்களின் பெருமையைக் குறைப்பது (அழுக்காக்குவது) போலாகும்."
சொர்ணலேகா: "ஆமாம்! 'தாமரையை விட உன் கண்கள் சிவந்து அழகாக இருக்கின்றன' என்று சொன்னால் கூட, அது தாமரைக்கு நீ கொடுத்த கௌரவமே தவிர, உன் கண்களின் உண்மைச் சிறப்பிற்கு அது ஈடாகாது. உன்னுடைய அந்தக் கண்கள் வாத்சல்யத்தால் கனிந்து சிவந்து கிடக்கின்றன!"
ஹேமலதா: "நீர் இல்லாமல், வறண்ட நிலத்தில் வெடிப்பு பல உண்டாகி இருக்கும். அப்போது அந்த நிலத்தில் நீரை மெதுவாக, சிறுகச் சிறுகப் பாய்ச்சுவார்கள். அப்போதுதான் நிலத்தில் நீர் தங்கும்; இல்லை என்றால் மொத்தமாக ஓடிவிடும். அது போல உன் கண்ணழகான வெள்ளத்தை எங்கள் மீது மொத்தமும் பாயவிடாமல் சிறுகச் சிறுக எங்களை நோக்கி விழிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அதை முழுமையாக அனுபவிக்க முடியும்."
பூர்ணா: "உன் விழி எங்கள் மீது நோக்கும் போது, கோடையில் வாடின பயிர் போல இருக்கும் எங்கள் மீது உன் கார்மேகம் கருணை மழை ஒரு பாட்டம் பொழிந்தார் போல் இருக்க வேண்டும்."
சுகபாஷிணி: "மழைத் துளியை எதிர்பார்க்கும் சாதகப் பறவைப் போல், உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது விழாதோ என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்."
[திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்]
ஆண்டாள்: "கண்ணா! உன்னை 'கதிர் மதியம் போல் முகத்தான்' என்று வர்ணித்தோம் அல்லவா? அந்தக் கண்ணழகைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதை நாங்கள் இப்போது பார்க்க வேண்டும்."
புல்லகலிகா: "பகைவர்களுக்கும், எங்கள் அஞ்ஞான இருளைப் போக்குவதற்கும் உன் கண்கள் கதிரவனைப் (ஆதித்தியனை) போல் இருக்க வேண்டும்."
பத்மா: "அடியவர்களுக்கும், எங்கள் விரகதாபம் போக்குவதற்கும் உன் கண்கள் சந்திரனைப் (திங்கள்) போல் குளிச்சியாக இருக்க வேண்டும்."
[அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்]
ஆண்டாள்: "கண்ணா! எங்களுக்கு வேறு உவமானம் தெரியவில்லை. அதனால் உன் அழகிய கண்களைச் சந்திர சூரியனுடன் ஒப்பிட்டுவிட்டோம். நீயாக உன் இரு கண்களாலும் முழுப் பார்வையும் எங்கள் மீது படும்படி நோக்க வேண்டும்."
கண்ணன்: "அப்படி நோக்கினால்?"
[எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் ]
ஆண்டாள்: "நாங்கள் ஏதோ சாபத்தால் துன்பப்படுவது போலே, உன் பிரிவால் துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தச் சாபம் நீங்க, உன் பார்வை ஒன்றே போதும்!."
மாரி மலை.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
6.1.2026
( ஒரு நாள் தாமதம் மன்னிக்கவும்).
Comments
Post a Comment