Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - உந்து - 18

ஆண்டாளும் தோழிகளும் - உந்து - 18




(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நந்தகோபனுடைய திருமாளிகைக்குள் சென்று நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் என்று எல்லோரையும் எழுப்பியும் யாரும் எழுந்திருக்கவில்லை. 'ஏன் யாரும் எழுந்திருக்கவில்லை?' என்ற குழப்பத்திலும் வருத்தத்திலும் தோழிகள் நிற்கிறார்கள்.)

புல்லகலிகா: "கோதை! நாம் எவ்வளவு முயன்றும் யாரும் எழுந்திருக்கவில்லையே! காதல் மிகுதியால் இங்கு வந்தோம், ஆனால் நினைத்த காரியம் கைகூடவில்லையே!"

ஆண்டாள்: "காதல் மிகுதியால் ஏற்பட்ட மயக்கத்தில் நாம் முறை தவறிப் பெருமாளிடம் சென்றோம். அதனால் தான் பலன் கிடைக்கவில்லை. முறைப்படி நாம் நப்பின்னைப் பிராட்டியை அல்லவா முதலில் எழுப்பியிருக்க வேண்டும்! அருள் வடிவமாக இருந்து, கண்ணனுடன் நம்மை இணைப்பவளாக, நமக்காக அவனிடம் பரிந்துரைப்பவளாக இருப்பவள் அவளே! அவளை முன்னிட்டுச் செல்லாதது தான் நம் தவறு."

பத்மா: "கோதை! காதலுக்குக் கண் இல்லை என்பார்களே! காதலில் திளைக்கும்போது முறை பார்க்க முடியுமா?"

ஆண்டாள்: "என்னதான் காதல் இருந்தாலும், அவனை அனுபவிக்கும் போது வேண்டுமானால் முறையைப் பார்க்க வேண்டாம். ஆனால், நாம் வந்திருப்பதோ அவனின் அருளைப் பெற. அவனது அருளைப் பெறப் பிராட்டியின் பரிந்துரை அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். இதைத்தானே ராமாயணம் நமக்குக் காட்டிக் கொடுத்துள்ளது."

விசாகா: "கோதை! ராமாயணச் சம்பவங்களைக் குறிப்பிட்டு நீ எதை உணர்த்த வருகிறாய்? பிராட்டியைப் (சீதையை) புறக்கணித்துவிட்டு, ராமனை மட்டும் அடைய நினைத்த சூர்ப்பணகையின் கதியைச் சொல்கிறாயா?"

ஆண்டாள்: "அது ஒரு சான்றுதான் விசாகா! ஆனால் இன்னும் ஆழமான உண்மைகள் அதில் பொதிந்துள்ளன. பிராட்டியைப் பிரித்து, ராமனைத் தவிர்த்துவிட்டு அவளை மட்டும் அடைய நினைத்த ராவணனும் அழிவைத்தான் சந்தித்தான்.

ஆனால் விபீஷணாழ்வானைப் பார்! சீதையின் அருளைத் தூரத்திலிருந்து பெற்றாலும், ராமனிடம் சரணடைந்ததும் அவனைத் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார். அதேபோல், காட்டிற்கு வர வேண்டாம் என்று ராமன் தடுத்தபோது, லட்சுமணன் ராமன் காலில் விழுந்து வணங்கினான். ஆனால், அவன் கண்கள் சீதையை நோக்கி 'என்னை அழைத்துச் செல்லப் பரிந்துரை செய்' என வேண்டின! பிராட்டியின் பரிந்துரை இருந்ததால்தான் ராமனுக்குத் தொண்டு செய்யும் 'கைங்கரியச் செல்வம்' அவனுக்குக் கிடைத்தது.

சுக்ரீவனுக்கும் கூட, பிராட்டியின் ஆபரணங்கள் என்ற சம்பந்தம் கிடைத்த பின்னரே ராமரின் நட்பு கிட்டி, கிஷ்கிந்தைக்கு அரசனானான். அனுமன் முன்பே ராம-லட்சுமணர்களின் அன்பைப் பெற்றிருந்தாலும், அசோகவனத்தில் சீதையைச் சந்தித்து அவளது அருளாசியைப் பெற்ற பிறகுதான், ராமபிரான் அவனை நேரில் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டார்! எனவே, நப்பின்னை வழியாகச் செல்வதே கண்ணனை அடையச் சரியான வழி! ஒரே வழியும் கூட!"

சுகந்தா: "கோதை! காகாசுரனை விட்டுவிட்டாயே! அவன் கதி அதோ கதியான சமயம், பிராட்டி அல்லவா அவனை ராமன் திருவடி பக்கம் திருப்பிக் காப்பாற்றினாள்!"

ஆண்டாள்: "ஆம்! சரியாகச் சொன்னாய்! காலைப் பற்றிக் காரியம் கொள்வதே புத்திசாலித்தனம். வாருங்கள் நப்பின்னையை எழுப்புவோம்."

(இப்போது சீதைக்குப் பிடித்த சொற்களைக் கொண்டே நப்பின்னையை எழுப்ப ஆண்டாள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள்.)

[உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன் நந்த கோபாலன் மருமகளே!]

ஆண்டாள்: "மதம் கொண்ட யானைகளை ஒருவரே மிடுக்குடன் விளையாட்டாகத் தள்ளும் நந்தகோபன் மருமகளே! எழுந்திராய்!"

ஹேமலதா: "நந்தகோபனின் பிள்ளையாக, ’நந்தகோபன் குமரன்’ என்பதால் தான் கண்ணன் குவலயாபீடம் என்ற யானையைக் கொல்ல முடிந்தது. அப்படிப்பட்ட நந்தகோபன் மருமகளே! எழுந்திராய்!"

ஆண்டாள்: "எதற்கும் பயப்படாத சூரன், தேஜஸ் உடையவன், எதிரியை எதிர்கொண்டு புறமுதுகு காண்பிக்கத் தெரியாதவன், தானத்தில் சிறந்தவன், மிடுக்கான தோள்களையுடைய தலைவனான நந்தகோபன் மருமகளே! எழுந்திராய்!"

தனநிஷ்டா: "கண்ணனும் நப்பின்னையும் கம்ச பயம் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவது, மத யானைப் போன்ற பலமும், யுத்தத்தில் பின்வாங்காத தோள் வலிமையும் உடைய நந்தகோபன் வாசலில் இருப்பதால்தான். அப்படிப்பட்ட நந்தகோபன் மருமகளே! எழுந்திராய்!"

(சீதை தன்னைத் தசரதனின் மருமகள் என்று சொல்லிக்கொள்வதில் ஆனந்தப்பட்டாள். அதை அறிந்த ஆண்டாளும் தோழிகளும் இவ்வாறு பிறந்த வீட்டைத் தவிர்த்துப் புகுந்த வீட்டுச் சம்பந்தம் சொல்லி எழுப்புகிறார்கள். ஆனால் கண்ணன் பிறந்ததற்குப் பின் கோகுலத்துப் பெண்கள் எல்லோரும் ஒருவகையில் மருமகள்கள் ஆனார்கள். அதனால் இந்த மருகளைச் சொல்லுகிறார்கள் என்று தெரியாமல் நப்பின்னை, நமக்கென்ன என்று பேசாமல் படுத்துக்கிடந்தாள்.)

[நப்பின்னாய்!]

ஆண்டாள்: (தன் தோழிகளிடம்) "கஜேந்திர யானை 'ஆதிமூலமே' என்று கதறிய போது, அது பிரம்மா, ருத்திரன், தேவர்கள் என்று எல்லோர் காதுகளிலும் விழுந்தது. ஆனால் அவர்கள் தங்களை அழைக்கவில்லை என்று பேசாமல் இருந்தார்கள். ஆதிமூலமான எம்பெருமான் உடனே தன்னைத்தான் கூப்பிடுகிறது என்று ஓடோடி வந்தார்."

சுலோச்சனா: "கோதை! எனக்குப் புரிந்துவிட்டது. 'மருமகள்' என்றால் இங்கே பொதுவாக எல்லோரையும் கூப்பிட்டது போல் ஆகிவிட்டது. நப்பின்னை என்று பெயர் சொல்லி அழைக்க வேண்டும்!"

ஆண்டாள்: "நந்தகோபன் மருமகளே! நப்பின்னாய்!"

(இதைக் கேட்டுக்கொண்டு இருந்தும் நப்பின்னை பேசாமல் கிடந்தாள்.)

[கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்]

ஆண்டாள்: "பரிமளம் என்ற வஸ்து உன் கூந்தலில் சேர்ந்த பிறகுதானே பரிமளத்தையே பெறுகிறது? நீ உள்ளே இருப்பது எங்களுக்குச் சுகந்தம் கமழும் உன் கூந்தல் வாசனையே காட்டிக் கொடுத்துவிட்டது! சர்வகந்தனாய் இருக்கும் கண்ணனுக்கே நீதான் வாசனையைக் கொடுக்கிறாய் போலும்! அந்த வாசனையைத் தேக்கி நிற்கும் கதவைத் திறக்க வேண்டும் நப்பின்னாய்!"

(வாசனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால், நப்பின்னை உள்ளிருந்து பேசுகிறாள்.)

[வந்து எங்கும் கோழி அழைத்தன காண்]

நப்பின்னை: "பெண்களா! இப்படி நடுநிசியில் வந்து எழுப்பி ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? பொழுது விடிந்தது என்கிறீர்கள், அதற்கு என்ன அடையாளம்?"

ஆண்டாள்: "கோழி கூவியது!."

நப்பின்னை: "அது கண்ணனின் சாமக் கோழியாக இருக்கும். ஒவ்வொரு சாமத்துக்கும் கூவும். பிறகு தூங்கப் போய்விடும்."

ஆண்டாள்: "இல்லை நப்பின்னாய்! எங்கும் கோழிகள் அழைத்தன."

நப்பின்னை: "ஒரு கோழி கூவினால், அதைக் கேட்டு மற்றவைகளும் கூவும். எனக்குக் கேட்கவில்லை."

ஆண்டாள்: "நீ கண்ணனை எப்போதும் பிரியாமல் இருக்கிறாய், அதனால் உனக்குக் கேட்கவில்லை. கண்ணனுடைய பிரிவைப் பொறுக்க முடியாத எங்களுக்கு, நம் தொடையைத் தட்டி எழுப்புவது போல, அவன் பிரிவை உணர்த்தும் கோழி அழைப்பது நன்றாகக் கேட்கிறதே!"

[மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்]

நப்பின்னை: "முன்பே சொல்லிவிட்டேனே, ஒரு கோழி கூவினால் மற்றவையும் கூவும். வேறு ஏதாவது பலமான அடையாளம் இருக்கிறதா?"

ஆண்டாள்: "சாதாரணமாக எழுந்திருக்காத குயில் கூவியது."

நப்பின்னை: "ஒரு குயில் ஒரு முறை கூவியது எப்படி அடையாளமாகும்?"

ஆண்டாள்: "நப்பின்னையே! ஒரு குயில் இல்லை. குயில் கூட்டம் திரளாகக் கூவியது "

நப்பின்னை: "அதுங்களுக்கும் உங்களைப் போல் தூக்கம் இருந்திருக்காது. உங்களைப் போல் அவையும் எல்லோரையும் கூவி எழுப்பிவிட்டிருக்கும்!"

ஆண்டாள்: "குருக்கத்திக் கொடிகளான பந்தல் மேல் குயிலினங்கள் திரளாகக் கூவின."

சுகந்தா: "குருக்கத்திப் பந்தலின் மேலே படுத்திருக்கும் போது குயில்களுக்கு உறக்கமில்லாமலா இருக்கும்? உன் வரவையும், ஸ்பரிசத்தையும் எதிர்பார்த்துக் குயில்கள் உன் வரவுக்கு ஏங்கி, கூவிக்கொண்டு இருக்கின்றன. அவை பொழுது விடிந்துவிட்டது என்று கூவவில்லை, விடிந்த பின்பும் ஏன் நப்பின்னையைக் காணவில்லை என்ற ஏக்கத்தில் கூவுகின்றன!"

நப்பின்னை: "நீங்கள் அவைகளைப் பயமுறுத்திக் கூவச் செய்திருப்பீர்கள்!"

[பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட]

ஆண்டாள்: "கண்ணனுடன் பந்தாடி அவனையே தோற்கடிக்கும் உன்னிடம் பேசி ஜெயிக்க முடியுமா? அவனை ஒரு கையாலும், பந்தை ஒரு கையாலும் அணைத்துக்கொண்டு இருக்கும் நப்பின்னையே! கதவைத் திறக்க வேண்டும்!"

சுலோச்சனா: "அறிவற்ற பந்து உன் கையில் அழகாகப் பொருந்தியிருக்கிறது. நாங்களும் அறிவற்ற பந்தாய் இருந்திருந்தால் உன் கைக்குள் அடங்கியிருக்கும் பாக்கியம் கிடைத்திருக்குமே!"

ஆண்டாள்: "நப்பின்னையே! உன் மௌனத்துக்குக் காரணத்தை நான் அறிவேன்! உன் அணைப்பில் இருக்கும் அந்தப் பந்து உனக்கு விளையாட்டுப் பொருள். உன்னுடன் விளையாடித் தோற்று உன் அணைப்பில் இருக்கும் கண்ணனோ உனக்கு இன்பப் பொருள்!

விசாகா: ஒரு கையில் இந்தப் பிரபஞ்சமாகிய பெரும் செல்வத்தைப் பந்துப் போல வைத்திருக்கிறாய். மறுகையில் அந்தச் செல்வங்களுக்குச் சொந்தக்காரனான கண்ணனைச் சிறைபிடித்து வைத்திருக்கிறாய்!

பத்மா: ஒரு கையில் இந்த உலகத்தையே ஆளும் 'நாராயணனை' அணைத்துக் கொண்டிருக்கிறாய்; மறுகையில் இந்த உலகத்து உயிர்களாகிய 'நாரங்களை' ஒரு பந்தைப் போல அணைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஆண்டாள்: இருதரப்புத் தொடர்பையும் (உபய சம்பந்தம்) உன் இரு கைகளுக்குள் அடக்கி வைத்திருக்கும் செருக்குத் தானே உன்னை எங்களைப் பாராமல் இருக்கச் செய்கிறது?"

நப்பின்னை: "கோதை! நீங்கள் எல்லோரும் எதற்கு வந்தீர்கள்?"

ஆண்டாள்: "என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்! நீயும் அவனும் (உன் மைத்துனன்) ஒருவருக்கொருவர் விளையாடும் போது நீ ஜெயித்தால் உன்னைக் கொண்டாடவும், அவன் தோற்றால் அவனை வசைபாடவும் உனக்கு ஆள் வேண்டாமா? அவன் பெருமைக்கு ஓராயிரம் நாமங்கள் இருப்பது போல, அவன் உன்னிடம் அடையும் தோல்விக்கு ஒரு ஆயிரம் நாமங்கள் நாங்கள் பாட வேண்டாமா?"

( 'சியர் லீடர்ஸ்' போல இவர்கள் உற்சாகப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.)

நப்பின்னை: "சரி, நீங்களே திறந்து கொண்டு உள்ளே வாருங்கள்."

[செந்தாமரைக் கையால்]

ஆண்டாள்: "நப்பின்னையே! நீயே வந்து திறந்தால்தான், கண்ணனை அணைத்துக்கொண்டு இருக்கும் கண்ணனே விரும்பும், அந்தக் கருணை மிகுந்த உன் செந்தாமரைக் கையை நாங்கள் பார்க்க முடியும்?"

(.பெண்கள் ஏதாவது வேலை செய்யும் போது சௌகரியத்துக்கு வலையல்களை மேலே எழுத்து இறுக்கிக்கொள்வார்கள். அது போல, நப்பின்னை, வளையை ஒதுக்கி இறுக்கிக்கொண்டு எழுந்துவர முயல்கிறாள் அதனால் வளையோசை கேட்கவில்லை)

[சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்]

ஆண்டாள்: "நப்பின்னை! நாங்கள் உன் வளையோசையை எதிர்பார்த்திருக்கிறோம்! அதனால் நீ 'சீார் ஆர் வளை ஒலிப்ப' நடந்து வந்து, ’ஏதோ கதவைத் திறக்க வேண்டுமே’ என்று திறக்காமல், நீ மகிழ்ந்து வந்து திறக்க வேண்டும்! அதனால் நாங்களும் மகிழ்வோம்!"

குத்துவிளக்கு... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
2.1.2026

Comments