Skip to main content

நப்பின்னை சில குறிப்புகள்...

நப்பின்னை சில குறிப்புகள்...




ஒவ்வொரு வருடமும் திருப்பாவை 18-ஆம் பாட்டு வந்தவுடன் ‘யார் இந்த நப்பின்னை?’ போய் தேடுங்கள் என்று பலரை நப்பின்னை ஆராய்ச்சிக்கு ஆண்டாள் அனுப்பிவிடுகிறாள்.

கூகுள் இல்லாத 1938-இல் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் ‘கண்ணபிரானைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள்’ என்ற கட்டுரையில் நப்பின்னை பற்றி மிக அருமையான ஆராய்ச்சியைச் செய்துள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம், அறைத்த மாவையே அறைக்காமல் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, மேல் ஆராய்ச்சி செய்யலாமா என்ற முடிவுக்கு வரலாம். அந்த கட்டுரையில் குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்களுடன் அடியேனுடைய சில குறிப்புக்களையும் இங்கே தருகிறேன்.

முதலில் சில முக்கியமான விஷயங்கள்:
ஆண்டாள் சந்தேகத்திற்கு இடமில்லாமல், ”நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்” என்கிறாள். அதனால் நப்பின்னை கண்ணனை மணந்தவள் என்பதும், யசோதை அவளுக்கு மாமியார் என்பதும் தெரிகிறது.

ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இந்த நப்பின்னை பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. பெரியாழ்வார், “புழுதி படிந்த உன் திருமேனியை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாள்” என்கிறார். திருமழிசை, திருமங்கை, நம்மாழ்வார், பொய்கை ஆழ்வார் ஆகியோரும் இவரைப் போற்றுகின்றனர்.

பொய்கை ஆழ்வார் “திருமகளும், மண்மகளும், ஆய்மகளும்” என்கிறார். இங்கே ‘ஆய்மகள்’ என்பது நப்பின்னையே. நப்பின்னையை மணக்க ஏழு எருதுகளைக் கண்ணன் அடக்கினான் என்பது திவ்ய பிரபந்தங்களில் பல இடங்களில் காணப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர், திருப்பாவை தனியனான “நீளா துங்க ஸ்தன கிரி தடீ...” என்பதற்கு எழுதிய உரையில், ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர், “இவள் யசோதைப் பிராட்டியின் சகோதரரான கும்பரின் (கும்பகன்) மகள்” என்று உறுதிப்படுத்துகிறார். நப்பின்னையைப் பின்னை, பிஞ்ஞை, நீளை என்றும் வழங்குவர்.

இலக்கிய மற்றும் புராணக் குறிப்புகள்:
ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணங்களில், ஏழு எருதுகளை அடக்கி நாக்னஜித் என்ற அரசனின் மகள் நாக்னஜிதீயைக் கண்ணன் மணந்ததாக வருகிறது. இங்கே நாக்னஜிதீ க்ஷத்ரிய குலப் பெண்; நப்பின்னையோ ஆயர் குலப் பெண். இன்னும் அதிகமாக குழப்ப நெல்லிநகர் வரதராசர் பாகவதத்தில் நாக்னஜிதீயும் நப்பின்னையும் வெவ்வேறு மனைவியராகக் காட்டியுள்ளார்.

காப்பியங்களில், சிலப்பதிகாரம் நப்பின்னையை ‘பூமியை அளந்த திருமாலின் மார்பில் உறையும் பிராட்டி’ எனக் கூறுகிறது. மணிமேகலையில் கண்ணன் மற்றும் பலராமனுடன் நப்பின்னை ஆடிய ‘குரவைக்கூத்து’ பற்றிய குறிப்பு உள்ளது. சீவக சிந்தாமணி இவரை ‘நிலமகளின் தலைவனான கண்ணனுக்கு இனிய அமுதம் போன்றவர்’ எனப் புகழ்கிறது. சைவ இலக்கியங்களான திருக்கோவையார், தேவாரம் போன்றவற்றிலும் நப்பின்னை குறித்த குறிப்புகள் வருகின்றன.

திருவள்ளுவ மாலையில் ஒரு பாடலில் நப்பின்னை ‘உபகேசி தோள் மணந்தான்’ என்று வருகிறது. அந்த பாடலில் பொருள் ’உபகேசியை மணந்த கண்ணன் வட மதுரைக்கு ஆதாரம்; அதுபோல திருவள்ளுவர் தென்மதுரைக்கு ஆதாரம்’ என்கிறது.

‘உபகேசி தோள் மணந்தான்’ என்ற வாக்கியத்தில் ‘உபகேசம்’ என்பது ‘உபகேசத்தை’ (மயிரால் பின்னிய கூந்தல்) உடையவளான நப்பின்னையைக் குறிக்கும். (குண்டலகேசி, நீலகேசி என்பது போல், உபகேசி என்பதும் நப்பின்னையைக் குறிக்கும். நப்பின்னை என்பதில் உள்ள ‘ந’ என்பது சிறப்புப் பொருள் உணர்த்தும் ஓர் இடைச்சொல் (உதாரணம்: ந+கீரன்= நக்கீரன்).

திருமழிசை ஆழ்வாரின் “பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து” என்ற வாக்கியம், ‘உபகேசி தோள் மணந்தான்’ என்பதோடு ஒத்து இருப்பதைக் கவனிக்கலாம். “கந்தம் கமழும் குழலி” என்றும், “கொத்தலர் பூங்குழல் நப்பினை” என்றும் நப்பின்னையின் கூந்தலை இரண்டு இடங்களில் ஆண்டாள் புகழ்கிறாள்! இதிலிருந்து நப்பின்னை ஒரு ‘கூந்தல் அழகி’ என்று தெரிகிறது.

ராதையா? நப்பின்னையா?
தமிழ்நாட்டில் புடவை கட்டிய நப்பின்னை, வடக்கே லெஹெங்கா அணிந்த ராதை என்று ஒரு கருத்து நிலவுகிறது. தப்பில்லை. மதுரா, பிருந்தாவனம் அருகே பர்ஸானா என்ற இடத்தில் அவதரித்தாள் ராதை. நப்பின்னை பிறந்தது முதல் யசோதை வீட்டிலேயே வளர்ந்தாள். இருவரும் ஒருவரா, வேறா என்ற கேள்விக்குக் கண்ணன் தான் பதில் சொல்ல வேண்டும்!

தத்துவப் பின்னணி:
ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மி (பெரிய பிராட்டி), ஸ்ரீ பூமாதேவி (பூமிப் பிராட்டி), ஸ்ரீ நீளாதேவி (நப்பின்னை) — இந்த மூவருள் நாம் யாரைப் பற்ற வேண்டும் (சரணடைய வேண்டும்) என்ற சந்தேகம் வரலாம்.

“குற்றம் செய்யாதவர் ஒருவருமில்லை” என்பாள் பெரிய பிராட்டி.; குற்றத்தையே காணாமல் இருப்பாள் பூமிப் பிராட்டி.; “குற்றமா? அப்படி ஒன்று உண்டா?” என்பாள் நப்பின்னை என்கிற நீளாதேவி.நம்மாழ்வார், நப்பின்னை திருமகள் மற்றும் நிலமகளுக்கு நிழலாக இருப்பவள் என்கிறார்.

இந்த மூவருமே புருஷாகாரப் பிரபாவம் (பரிந்துரை செய்யும் குணம்) உள்ளவர்கள் என்பது பெரியோர் வாக்கு (நீளா ஸூக்தத்திலும் இது தெரிகிறது). சரணாகதி கத்யத்தில் எம்பெருமானார், “ஏவம் பூமி நீளா நாயக...” என்று மூன்று பிராட்டிகளையும் முன்னிட்டே சரணாகதி செய்கிறார் (no stones unturned).

கூரத்தாழ்வான், ‘சுந்தரபாஹு ஸ்தவத்தில்’, பிறந்த குலத்துக்காக ருக்மிணியையும், வளர்த்த குலத்துக்காக (ஆயர் குலம்) நீளாவையும் கண்ணன் மணந்தான் என்கிறார்.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி என்று அருளியவர் நீளாஸ்துதி என்று அருளாமல் கோதாஸ்துதியை அருளினார். நீளாஸ்துதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். கோதை அருளிய திருப்பாவை 18 ஆம் பாசுரமே நீளாஸ்துதி.

கடைசியாக ஒரு தகவல்: நப்பின்னைக்கு ‘ஸ்ரீதாமா’ என்ற சகோதரனும் உண்டு. இவனை யாரும் இதுவரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தவில்லை (பிழைத்தான் ஸ்ரீதாமா!).

-சுஜாதா தேசிகன்
3.1.2026

Comments