Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29)

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29)




(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் 'பறை' என்று பலமுறை குறிப்பிட்டு அதைக் கண்ணனிடம் வேண்டினார்கள். ஊருக்காக நோன்பு நோற்கப் பறை வேண்டும் என்று முதலில் கேட்டாலும், இப்போது தாங்கள் வேண்டிய பறையின் உண்மையான உட்பொருள் என்ன என்பதையும், தங்களின் உண்மையான நோக்கம் கண்ணனுக்குத் தொண்டு செய்வதே என்பதையும் கூறி, ஒட்டுமொத்த திருப்பாவையின் கருத்தையும் இங்கே நிறைவு செய்கிறார்கள்.)

[சிற்றஞ் சிறுகாலே]

கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! இந்த மார்கழி குளிரில், அதுவும் மிக அதிகாலையில்... உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘சிற்றஞ்சிறுகாலையிலே’... பொதுவாகச் சிறுபெண்கள் விடியற்காலையில் எழுந்திருக்கத் தயங்குவார்களே, நீங்கள் மட்டும் எப்படி இத்தனை சீக்கிரம் வந்தீர்கள்?"

(வெட்டவெளிச்சம்' என்பது போல, 'சிற்றஞ்சிறுகாலை' என்பது எதார்த்தமான, அழகான இடைக்குலப் பேச்சு வழக்கு)

ஆண்டாள்: "கோவிந்தா! வேறு என்ன... உன்னை அடைய வேண்டும் என்கிற வேகம் தான் எங்களை இங்கே இழுத்து வந்தது."

புல்லகலிகா: "ஆமாம் கண்ணா! நாங்கள் நினைத்த மாத்திரத்தில் மார்கழி மாதம், முழு நிலவுடன் கூடிய நல்ல நாள், இந்தச் சிற்றஞ்சிறுகாலை என அனைத்துமே உன்னை வந்து சேர்வதற்கு மிகத் துல்லியமாக அமைந்தன!"

கண்ணன்: "சரி, சற்று விடிந்த பின் வந்திருக்கலாமே?"

ஆண்டாள்: "கோவிந்தா! மற்றவர்கள் உணரும் 'காலை' வேறு, எங்களுடைய 'காலை' வேறு. எங்களுக்குப் பொழுது விடிவது சூரியனால் அல்ல; உன்னைப் பிரிந்திருந்த அந்தப் பிரிவுத் துயர் என்கிற இருள் நீங்கி, உனது கதிர் மதியம் போன்ற முகத்தைப் பார்க்கும் போதே எங்களுக்கு விடியல் பிறக்கிறது. உன்னைக் கண்ட அந்த நிமிடம் தான் எங்களுக்கு உண்மையான விடியல்!"

பத்மா: "கண்ணா! நீ பிறக்கும்போதே உன் பேரொளியால் இருள் விலகியதால், அந்த அர்த்தராத்திரி கூட எங்களுக்குச் சிற்றஞ்சிறுகாலை தான்!"

கண்ணன்: "அடடா! எனக்காக இவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா?"

[வந்து ]

ஆண்டாள்: "கோவிந்தா! உண்மையில் நீயல்லவா எங்களைத் தேடி வரவேண்டும்? எங்களைப் போன்ற அடியவர்களிடம் நீயாக வருவதுதான் உனக்கு அழகு. ஆனால், உன்னைப் பிரிந்திருக்க முடியாத வருத்தத்தால் இருட்டில் தட்டுத் தடுமாறி வழியைத் தேடிக்கொண்டு நாங்களே உன்னிடம் வந்துவிட்டோம். உன்னை அடைய எங்களை எது வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் அந்த ஆற்றாமைதான் எங்களை இங்கே அழைத்து வந்தது.பார்க்கப் போனால் நாங்கள் உன்னைத் தேடி வந்ததற்கு நீ வருத்தப்பட வேண்டும்!

கண்ணன்: "இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?"

[உன்னைச் சேவித்து]

ஆண்டாள்: "கோவிந்தா! நீ அடியவர்கள் மீது கொண்ட அன்பினால், அவர்கள் உன்னைத் தேடி வந்து நாலடி நடந்தால் கூட உன் நெஞ்சு புண்படுமே! ராமபிரான், 'நான் அடைய வேண்டியவர்கள் என்னை வந்து அடைந்தார்களே' என்று வெட்கப்பட்டார். உலகிற்கெல்லாம் நாதனான ராமன், சுக்ரீவனைத் தன் நாதனாக (தலைவனாக) அடைய விரும்பியவன். அப்படிப்பட்ட குணம் உன்னிடம் இல்லையா? நீ, அடியவர்களுக்கு அடிமையாகி அவர்களின் காலில் விழக் காத்திருப்பவன் அன்றோ? அப்படிப்பட்ட நீ எங்களைச் சேவிக்க வைத்துவிட்டாயே!"

கண்ணன்: "சேவித்தீர்கள் சரி, அதற்கு என்ன இப்போது?"

ஆண்டாள்: "அதற்கு என்னவா? பாம்பு கடித்தவனுக்கு எப்படி 'கருட முத்திரை' விஷத்தை முறிக்குமோ, அதுபோல ஓர் 'அஞ்சலி முத்திரை' (கைகூப்புதல்) உன்னை இரங்க வைத்துவிடுமே கோவிந்தா! அப்படி இருக்க, நாங்கள் உன்னைச் சேவித்தே விட்டோமே! இத்தனை நேரம் நீ தான் எங்களைச் சேவித்திருக்க வேண்டும்!"

கண்ணன்: "சரி கோதை! இவ்வளவு சாதனைகள் செய்துவிட்டீர்கள்... என்ன வேண்டும்? 'பறை, பறை' என்று கேட்டுக்கொண்டிருந்தீர்களே, இதோ அந்த மேளத்தைக் கொண்டு வரச் சொல்லட்டுமா?"

[உன் பொற்றாமரை அடியே ]

ஆண்டாள்: "கோவிந்தா! என்றுமே உபாயம் (வழி) ரசிக்காது, பலன் (முடிவு) தான் ரசிக்கும். முப்பது நாள் ஒருவன் உழைக்கிறான் என்றால் அந்த உழைப்பு ரசிக்காது, அவனுக்குக் கூலி கிடைக்கும் கடைசி நாள் தான் இனிக்கும். ஆனால், சாதனக் காலத்திலேயே ரசிக்கும் ஒரே விஷயம் உன் திருவடியைப் பற்றிச் சேவிப்பது அன்றோ? உன்னை உபாயமாகப் பற்றும் காலத்திலேயே எங்களுக்குப் பலனும் கிடைத்துவிடுகிறது! உன் திருவடியை சேவிப்பதே எங்களுக்குப் பேரின்பம்!"

கண்ணன்: "பெண்களே! என் அழகிய திருமுகம் இருக்க, தோள்கள் இருக்க, ஏன் எப்போதும் என் திருவடிகளையே பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் ?"

[போற்றும் பொருள் கேளாய்]

ஆண்டாள்: "கண்ணா! உன் 'பொற்றாமரை அடி' என்பது எங்களுக்கு உயிர் (தாரகம்), உணவு (போஷகம்), இன்பம் (போக்கியம்) என எல்லாமே!"

விசாகா: "உன் திருவடிகள் பொன்னைப் போன்றது. தேவர், மனிதர் என யாவர்க்கும் பொதுவானது; கண்டால் விட முடியாது; விட்டால் உயிர் பிழைக்க முடியாத பொன்னான அடி அன்றோ!"

சொர்ணலேகா: "பொன் கடினமாக இருக்கும், ஆனால் உன் திருவடியோ தாமரை மலரைப் போல மிக மென்மையானது, நறுமணம் மிக்கது, தேன் ஒழுகும் தாமரை அடி அன்றோ!"

ஹேமலதா: "இளையபெருமாள் லட்சுமணன் முடிசூடும் அரசைத் துறந்து, உனது திருவடிகளையே தஞ்சமெனப் பற்றிக் காட்டினாரே, அதுபோல நாங்களும் உனது 'அடியே' போற்றுவோம், பற்றுவோம்!"

(ஆண்டாள் மற்றும் தோழிகளின் பேச்சிலும் பொலிவிலும் மயங்கி, அவர்கள் பேசுவதைக் கவனிக்காமல் மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறான் கண்ணன்.)

ஆண்டாள்: "கோவிந்தா! பராக்கு பார்க்காதே (வேறு எதையோ பார்த்துக் கொண்டிருக்காதே). நாங்கள் சொல்லும்போது நீ கவனமாகக் கேட்க வேண்டும்! நாங்கள் விண்ணப்பம் செய்யும்போது, நீ எங்கள் அழகில் ஆழ்ந்து உனது இன்பத்தைப் பெறப் பார்ப்பது முறையா? எங்களது குறிக்கோளை நிறைவேற்றாமல், நீ உனது இன்பத்தைப் பெறலாமா? உன் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புவதற்காக உன் துடையைத் தட்டி, 'எழுந்து கேள்' என்று சொல்ல வேண்டியிருக்கிறதே!"

கண்ணன்: "சரி கோதை! உங்கள் அழகில் மயங்கியது தப்புதான். நான் கீதையை உபதேசிக்க எல்லோரும் கேட்டார்கள், இன்று நீ சொல்லும் ‘கோதை கீதை’யைக் கேட்க வேண்டியிருக்கிறது. நீ என்னவோ வேதாந்தம் பேசுவது போல் இருக்கிறதே? மேலே சொல்லுங்கள்!"

ஆண்டாள்: "சந்தேகமென்ன கோவிந்தா? வேதாந்தத்தின் சாரத்தை உலகிற்கு அறிவித்த என் தந்தை வில்லிபுத்தூர் விட்டுசித்தனின் மகள் நான். வேதங்களை ஓதிய உனக்கே, அந்த வேதத்தின் உண்மையான உட்பொருளைப் புகட்டும் ஆசிரியையாக நான் இன்று உனக்கு உபதேசிக்கிறேன், கேள்!"

[பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து]

ஆண்டாள்: "கோவிந்தா! நீ ஏதோ தெரியாமல் இங்கே வந்து பிறக்கவில்லை. 'பிறப்பிலி'யான நீ, உனது மேன்மையை விட்டுவிட்டு இங்கே வந்ததே எங்களைப் பெறுவதற்காகத்தான்! நாங்கள் எப்படிப்பட்டவர்கள்? பசுக்கள் வயிறு நிறைந்தாலன்றி உண்ணாத குலத்தவர்கள். அந்தப் பசுக்களுக்காவது மேய்க்க, காக்க நீ இருக்கிறாய். ஆனால், உன்னையன்றி வேறு கதியில்லாத எங்களைக் காக்க வேண்டியதும் உனது கடமையல்லவா?"

கண்ணன்: "சரி, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?"

[நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது]

ஆண்டாள்: "நீ எங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்; நாங்கள் உனக்கு 'குற்றேவல்' செய்ய வேண்டும், அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்!"

கண்ணன்: "குற்றேவலா? நல்ல சொல்லாக இருக்கிறதே... அப்படி என்றால் என்ன?"

ஆண்டாள்: "நாங்கள் எங்கோ தூரத்தில் இருந்துகொண்டு நீ ஏவும் வேலையைச் செய்ய விரும்பவில்லை. உனக்குக் குடை பிடித்தல், சாமரம் வீசுதல், உன் திருவடிகளை வருடுதல் போன்ற உன்னருகிலேயே இருந்து செய்யும் 'அந்தரங்க கைங்கர்யங்களை' செய்ய விரும்புகிறோம். என் தந்தை பட்டர்பிரான் சொன்னது போல, உனக்கு நிழல் போல எப்போதும் உன்னுடனேயே அணுக்கர்களாக (நெருக்கமானவர்களாக) இருக்க வேண்டும்!"

கண்ணன்: "சரி ஆயர் சிறுமியர்களே! நீங்கள் என் மேல் அத்தனை அன்பு வைத்திருப்பது புரிகிறது. இதுவரை நீங்கள் ஒன்பது முறை 'பறை, பறை' என்று கேட்டீர்களே... இப்போது ஏதோ புதுசாக 'அணுக்க கைங்கர்யம்' என்றெல்லாம் பேசுவது வியப்பாக இருக்கிறது. சற்று இருங்கள்..."

(கண்ணன் உள்ளே சென்று ஒரு பெரிய பறையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருகிறான்.)

கண்ணன்: "கோதை! இது சாதாரணப் பறை இல்லை, 'சாலப் பெரும் பறை'. உங்களுக்காகப் பரணிலிருந்து எடுத்து வந்திருக்கிறேன். இதை இன்று பெற்றுக்கொண்டு ஊர் போய் சேருங்கள். நீங்கள் கேட்ட மற்ற அந்தரங்க வேலைகளைப் பிறகு நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்."

(என்று அந்தப் பெரும் பறையை ஆண்டாளிடம் கண்ணன் கொடுக்க, ஆண்டாள் அந்தப் பறையைத் தள்ளிவிட்டுப் பேசுகிறாள்.)

ஆண்டாள்: "கோவிந்தா! ‘பறை’ என்பதற்குத் தமிழ் ஆசிரியர் போல அகராதி அர்த்தம் மட்டும் தான் உனக்குத் தெரியுமோ? ஆழ்வார்களைப் போல் அதற்கு உள்ளர்த்தம் புரியாதா? நாங்கள் சொன்ன 'பறை' என்ற சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டாய்; அதன் பின்னால் இருந்த எங்கள் கருத்தை உணரவில்லையே!, இல்லை… புரிந்து புரியாதது போல் நடிக்கிறாயா? ஊர் தூங்கும்போது உனது பள்ளியறைக்கே நாங்கள் ஓடி வந்தது ஒரு மேளத்தைப் பெற்றுக்கொண்டு உன்னை விட்டுப் போகவா வந்தோம்?"

பூர்ணா: "ஊர் உலகம் பேசிக் கொள்ளுமே என்பதற்காக 'பறை' என்று ஒரு வார்த்தையைச் சொன்னோம். தாகத்தில் தவிப்பவன் ஒருவன் தன் காதலியிடம் சென்று 'தண்ணீர்' என்று கேட்டால், அவள் வெறும் தண்ணீரையா கொடுப்பாள்? அவன் கேட்பது தண்ணீரை அல்ல, அவளது அன்பை என்பதை அவள் அறிய வேண்டாமா? அதுபோல, நாங்கள் 'பறை' என்று சொன்னால் அதன் உள்ளே வேறொரு பொருள் தொனிக்கிறது என்பதை நீ அறிய வேண்டாவோ?"

சுகபாஷிணி: "எங்களை மறந்துவிட்டாலும் பரவாயில்லை, எங்களைப் பெறுவதற்காக நீ எடுத்த இந்த எளிய 'கோவிந்த'ப் பிறவியை மறந்துவிட்டாயே!"

கண்ணன்: "என்னிடம் இவ்வளவு சினந்து பேசுகிறீர்களே?"

ஆண்டாள்: "கோவிந்தா! நீ பூமியைத் தூக்கிய வராகனோ, நிலம் அளந்த வாமனனோ, வேதம் மீட்ட வேதநாராயணனாகவோ இருந்துவிட்டுப் போ, நான் அவர்களை அழைக்கவில்லை. எங்களைப் போலவே மாடு மேய்க்கும் 'கோவிந்தனாக' இருக்கும் உன்னைத்தான் அழைக்கிறோம். அப்படி எங்களோடு கலந்த நீ, எங்களைக் குற்றேவல் கொள்ளாமல் இருக்கவே முடியாது!"

கண்ணன்: "அப்படி என்றால் நான் கஷ்டப்பட்டு பரணியிலிருந்து எடுத்து வந்த இந்தப் பறை வேண்டாமா?"

ஆண்டாள்: "நாள் முழுதும் பசுக்களின் பின்னே திரிந்ததால் உனக்கும் அந்தப் பசுக்களைப் போலவே அறிவு மழுங்கிவிட்டதோ என்ன? உன்னைத் தவிர வேறொன்றை நாங்கள் கொள்ளவே மாட்டோம் கோவிந்தா! எங்களுக்கு 'உண்ணும் சோறு, பருகும் நீர்' எல்லாம் நீதான் என்று எங்களை ஆக்கிவிட்டு, இப்போது வெறும் பறையைக் கொடுத்து அனுப்பிவிடப் பார்க்கிறாயோ? பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் உன்னை ஆணையிட்டுத் தடுத்தது போல, நாங்களும் உன்னை விடமாட்டோம். உன்னையே பருகி, உன்னையே அமுது செய்த பிறகு, உனக்கே நூறாயிரம் மடங்கு அடிமை செய்யவே நாங்கள் துடித்துக்கொண்டிருக்கிறோம்!"

கண்ணன்: "சரி பெண்களே! நீங்கள் கேட்ட அந்த அந்தரங்கக் குற்றேவலை ஏற்றுக்கொள்கிறேன். இன்றைய பொழுதை உங்களோடு கழிக்கிறேன், போதுமா?"

[இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்]

ஆண்டாள்: "கோவிந்தா! 'இற்றைப் பொழுதுடன்' முடிந்துவிடுவதல்ல எங்கள் ஆசை. 'எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்', நீ அவதாரம் செய்யும்போது பெரிய பிராட்டியார் கூடவே ஏற்ற உருவம் கொள்வது போல, நாங்களும் உன்னோடு உடன் பிறந்து உன்னை விடாது திரிய வேண்டும். நீ எத்தனை பிறவி எடுத்தாலும், அங்கெல்லாம் உன்னோடு நாங்கள் பிரியாமல் இருக்க வேண்டும்."

[உன் தன்னோடு உற்றோமே ஆவோம்]

சுகந்தா: "நீ தேவனாகப் பிறந்தால் நாங்கள் தேவதைகளாகவும், நீ மனிதனாகப் பிறந்தால் நாங்கள் மனிதர்களாகவும் உன்னைத் தொடர்ந்து வந்து அடிமை செய்ய வேண்டும். இது ஒரு நாள் நோன்பல்ல; இது காலமெல்லாம் தொடர வேண்டிய காதல்!"

கண்ணன்: "சரி, பிறவிதோறும் என் உறவினராகப் பிறந்தால் மட்டும் போதுமா?"

[உனக்கே நாம் ஆட்செய்வோம்]

ஆண்டாள்: "இல்லை கண்ணா! உறவிருந்தால் மட்டும் போதாது; நாங்கள் செய்யும் கைங்கர்யம் எங்களது மகிழ்ச்சிக்காக அல்ல; உனது திருமுகம் மலர்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். அந்தத் தொண்டைக் கண்டு நீ அடையும் மகிழ்ச்சியைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். 'எனக்காகச் செய்தேன்' என்ற எண்ணம் கூட எங்களுக்கு வரக்கூடாது; 'உனக்காகவே செய்தோம்' என்ற அந்தத் தூய தொண்டே எங்களுக்கு வேண்டும்."

ஆண்டாள்: "சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பரதாழ்வான் போல உனக்கு எது பிடிக்குமோ அதை நாட்டிலோ, காட்டிலோ, படை வீட்டிலோ திரிந்து செய்த இளையாழ்வார் (லட்சுமணன்) போல தொண்டு செய்ய வேண்டும்."

கண்ணன்: "வேறு ஏதாவது ஆசைகள் உண்டா?"

[மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்]

ஆண்டாள்: "உன்னைத் தவிர வேறு எதன் மீதாவது எங்களுக்கு ஆசை வந்தால், அந்த ஆசையை நீயே வேரறுக்க வேண்டும். உனக்கு குற்றேவல் புரியும்போது 'நான் செய்கிறேன்' என்ற அகந்தையை மாற்றி, 'நீயே செய்விக்கிறாய்' என்ற எண்ணத்தைத் தா! உனக்குத் தொண்டு செய்யும்போது, உனது வடிவழகில் மயங்கி எங்கள் கடமையை மறந்துவிடாதபடி எங்களைக் காத்திடு. கடைசியாக, நாங்கள் ‘எங்களுக்கு’ என்று இருக்கக் கூடாது; அதே போல் நீ ’இவர்களுக்கு’ என்று இருக்கக்கூடாது! நாங்கள் உனக்கே சொந்தமாக வேண்டும்!"

வங்கக் கடல்.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
13.1.2025

Comments