ஆண்டாளும் தோழிகளும் - முப்பத்து மூவர் - (பாசுரம் 20)
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நந்தகோபனுடைய திருமாளிகைக்குள் சென்று அனைவரையும் எழுப்பியும் யாரும் எழுந்திருக்கவில்லை. நப்பின்னையை 'வந்து திறவாய் மகிழ்ந்து' என்று அழைத்தார்கள். ஆனால் கண்ணன் அவளை விடவில்லை; நப்பின்னை கண்ணனை விடவில்லை. இதனால் சற்றே கோபமடைந்த ஆண்டாள், 'இது உன் சுபாவத்திற்கு ஏற்றது அல்ல' என்று நப்பின்னையைக் கடிந்து பேசினாள். உள்ளே அமைதி நிலவுகிறது. நப்பின்னையைக் கடிந்து பேசியதால் கண்ணனுக்குக் கோபம் வந்திருக்குமோ என்ற அச்சம் தோழிகளுக்கு எழுகிறது.)
புல்லகலிகா: "கோதை! என்ன இருந்தாலும் நமக்கு நப்பின்னை தானே ஒரே கதி. அவளை நாம் ரொம்பக் கடிந்து பேசிவிட்டோமோ? ஒரு தாய்க்குத் தெரியாதா எதை எப்போது செய்ய வேண்டும் என்று?"
ஆண்டாள்: "ஆமாம்! நீ சொல்லுவதும் சரிதான். ஆனால் ஒரு தாய் தன் குழந்தைகள் என்ன பேசினாலும், அதைத் தன் குழந்தைகள் தானே பேசுகிறார்கள் என்று பொறுத்துக்கொள்வாள், நம் மேல் அன்பு மாறாது."
பத்மா: "கோதை! நம்மைப் பற்றிக் கண்ணனிடம் எடுத்துக்கூற நப்பின்னை தகுந்த சமயம் பார்த்துக்கொண்டு இருக்கலாம் அல்லவா?"
விசாகா: "கோதை! அந்த கூந்தல் அழகியின் கண்ணழகிற்குக் கண்ணன் மயங்கிக் கிடக்கிறான். அப்படி இருக்க, அவளைப் பற்றி இப்படிப் பேசியதால் கண்ணனுக்கு நம் மேல் கோபமாகக் கூட இருக்கலாம். யார் கண்டது?"
ஆண்டாள்: "நீங்கள் எல்லோரும் கீழே நின்றுகொண்டு ஆளாளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். நான் எட்டிப் பார்த்துக்கொண்டு மேலே நின்று கஷ்டப்படுகிறேன். கண்ணன் கோபமாக இருந்தால், அவனைப் புகழ்ந்து பாடினால் கோபம் தணியும். அதனால் அவனை எழுப்புவோம்."
(ஆண்டாளும் தோழிகளும் கண்ணனை நோக்கிப் பேசுகிறார்கள்)
[முப்பத்து மூவர் ]
ஆண்டாள்: "கண்ணா! நீ எங்களை ரட்சிக்க (காக்க) வேண்டும் என்றால், உதவி கேட்க வருபவர்களுக்கு ஏதாவது எண்ணிக்கை கணக்கு வைத்திருக்கிறாயா? முப்பத்து மூவர் (கோடி) தேவர்களாக இருந்தால் தான் வருவாயா? நாங்கள் ஐந்து லட்சம் பெண்கள் வந்திருக்கிறோம், இந்தக் கூட்டம் உனக்குப் போதாதா?"
(ஏதாவது போராட்டம் என்றால் கூட்டம் கூடினால் தானே மதிப்பு, அது போலக் கேட்கிறாள் ஆண்டாள்.கோரம் (Quorum) போன்று குறைந்தபட்ச எண்ணிக்கை வேண்டுமா?)
சுகந்தா: "ஆண்கள் அதிகமாக இருந்தால் தான் உதவுவான் போலும், நம்மைப் போன்ற அபலைகளுக்கு உதவமாட்டானோ என்னவோ!"
சொர்ணலேகா: "அமுதம் உண்ட அமரர்களுக்குத் தான் நீ உதவுவாயா? 'நெய் உண்ணோம், பால் உண்ணோம்' எதையும் உண்ணாமல் வந்திருக்கும் இந்த ஆயர் சிறுமியர்களுக்கு உதவமாட்டாயா?"
ஹேமலதா: "கண்ணா! உனக்கு உபகாரமாக (கைமுதல்) ஏதாவது கொடுத்தால் தான் நீ எங்களைக் காப்பாயா? எங்கள் கையில் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என்பதைப் பார்த்துத் தான் நீ ரட்சிப்பாயா?"
( உபகாரமாக - கோயிலுக்கு செல்லும் போது கையில் பூ, பழம் என்று கொண்டு செல்வது போல)
தனநிஷ்டா: "எங்கள் கையில் எதுவும் இல்லை, துக்கப்பட்டவன் தன் துக்கத்தையே கைமுதலாகக் கொண்டு வந்தால் ரட்சிப்பவன் அல்லவா நீ?"
[அமரர்க்கு முன் சென்று]
ஆண்டாள்: "கண்ணா! சாகாவரம் பெற்ற அந்த முப்பத்து மூவர் எதற்கு உன்னிடம் வந்தார்கள்? தங்கள் சுயநலத்துக்குத் தானே? அவர்களுக்குப் பகைவர்கள் பயம் வரும்போது முன் சென்று உதவுகிறாய். ஆனால், உன்னை ஒரு கண நேரம் பிரிந்தாலும் மரணம் சம்பவித்தது போலத் துடிக்கும் எங்களுக்கு ஏன் உதவ மறுக்கிறாய்? உப்புச் சாறு போன்ற அமுதத்தை விரும்பாது, வேறெந்தப் பலனையும் கேட்காமல், தெவிட்டாத நீயே எங்களுக்கு ஆராவமுதமாக வேண்டும் என்று இருக்கும் எங்களுக்கு உதவமாட்டாயா?"
பூர்ணா: "நோவு படுவதற்கு முன்பே சென்று குணப்படுத்தும் மருத்துவனாய் இருக்கும் நீ, உன் பிரிவால் நோவு பட்டு வந்துள்ள எங்களை ஏன் இப்படித் தவிக்க விடுகிறாய்?"
சுகபாஷிணி: "உன்னைப் பற்ற வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று ரட்சிக்கிறாய்! ஆனால் உன்னையே நினைத்து நினைத்து உருகி, உன் வீட்டு வாசலில் வந்து பழியாக நிற்கும் எங்களை இப்படிக் காக்க வைக்கலாமா?"
புல்லகலிகா: "கஜேந்திர யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிச் சென்றாய்! விபீஷணன் உன்னையே சரணம் என்று வந்த போது, அவனைக் காக்க வைத்துவிட்டோமே என்று வருந்தினவன் அல்லவா நீ?"
[கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்]
ஆண்டாள்: "ஹிரண்யன் போன்றவர்களின் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்த தேவர்களின் நடுக்கத்தைப் போக்கின்றவனே! நாங்கள் உன் வீட்டு வாசலில் நடுங்கிக்கொண்டு இருக்கிறோம்! இது மார்கழிக்குளிர் நடுக்கம் இல்லை, நீ எழுந்திருக்கும் அழகைக் காணாமல் வந்த நடுக்கம்! எங்கள் நடுக்கத்தை அல்லவா நீ முதலில் தீர்க்க வேண்டும்? துயில் எழாய்!”
பத்மா: "நாகரீகமான தேவர்களின் நடுக்கத்துக்கும், நாட்டுப்புறப் பெண்களான நம் நடுக்கத்துக்கும் அவன் வித்தியாசம் பார்க்கிறான் போலும்!"
(ஆண்டாள் எல்லாவற்றையும் தொகுத்துக் கண்ணனிடம் பேசுகிறாள்)
[செப்பம் உடையாய்! திறல் உடையாய்!]
ஆண்டாள்: "அறிதுயில் கொள்ளும் என் ஆருயிரே! தேவர்களுக்காக நீ அசுரர்களுடன் போரிட்டு மார்பில் அம்பு ஏற்க வேண்டும் என்றோ, அவர்களுக்குச் சொர்க்கத்தில் குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என்றோ நாங்கள் உன்னை எழுப்பவில்லை. நீ அருகில் இருப்பதே எங்களுக்குக் குடியிருப்பும் ஜீவனும் ஆகும்.
நீ எழுந்து வருவதால் என்ன லாபம் என்று நினைக்காதே! எங்களை அந்த முப்பத்து மூவர் தேவர்களாக நினைத்துக்கொள். ஆனால், அவர்கள் பயன் கருதி உன்னை அண்டுபவர்கள்; நாங்களோ எந்தப் பயனும் கருதாதவர்கள். அவர்கள் சாகாமல் இருக்க மருந்து (அமுதம்) தேடுபவர்கள்; ஆனால் நாங்களோ உன் முகத்தைக் காண்பதே மருந்தாகக் கொண்டு உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உன்னை ஒரு கருவியாக மட்டுமே நினைக்கிறார்கள்; நாங்களோ உன்னை அடைவதையே பெரும் பேறாக நினைக்கிறோம். உன்னைக் காணாத எங்கள் நடுக்கத்தைப் போக்கும் மிடுக்குடையவனே! (கலியே!) அதற்காகவேனும் நீ துயிலெழுந்து வரவேண்டும்! விரோதிகளை அழித்து அடியவர்களைப் பாதுகாப்பவனே! நேர்மையானவனே! (செப்பம் உடையாய்!)."
சுகந்தா: "உன் 'செப்பம்' (செம்மை/நேர்மை) எத்தகையது? பாரதப் போரில் தன்னைச் சரணடைந்த பாண்டவர்களுக்கு எளியவனாகவும், அவர்களுக்குத் தேரோட்டியாகவும் இருந்து அவன் காட்டிய அந்த நேர்மை எங்களிடமும் காண்பி.. அதுதான் செப்பம்!"
சொர்ணலேகா: "உன் 'திறல்' (வலிமை) எத்தகையது? அதர்ம வழியில் நின்ற துரியோதனாதியரை வேரோடு அழிக்கும் உன் பேராற்றல் தான் அந்தத் திறல்! 'யுத்தத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று வாக்குக் கொடுத்தும், தன் அடியவர்களுக்காகச் சக்கரம் ஏந்தியதும், கதிரவனை மறைத்துப் பகலை இரவாக்கியதும் … உன் திறலுக்கு இது அன்றோ சான்று!"
[செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்]
ஆண்டாள்: "கண்ணா! உன் திறலை இந்த அபலை ஆயர் சிறுமியர்களிடமா காண்பிப்பது? பரிசுத்தனே! (விமலா!) பகைவனைச் சுட வேண்டிய உன் கோப நெருப்பை (வெப்பம்), ஏன் உன் அன்பிற்குரிய எங்களைச் சுடப் பயன்படுத்துகிறாய்? நாங்கள் உன்னைத் தேரைச் செலுத்தி, வில்லை வளைத்து அம்பு விடவா சொல்லுகிறோம்? தூக்கம் கலைந்து எழுந்திருக்கத் தானே சொல்லுகிறோம்?"
(இப்படிக் கண்ணனைக் கூப்பிட்ட பிறகும் அவன் எழுந்துக்கொள்ளாமல் இருக்க, அவன் நப்பின்னையின் அழகில் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்ந்து, மறுபடியும் நப்பின்னையை எழுப்ப ஆரம்பிக்கிறார்கள். இமுறை அவளைக் கோபிக்காமல் கொஞ்சுகிறார்கள்.)
[செப்பு அன்ன மென் முலை]
ஆண்டாள்: "நப்பின்னாய்! கண்ணனை நாங்கள் இவ்வளவு கூப்பிட்டும் அவன் எழுந்திருக்கவில்லை என்றால், அவன் உன் அழகு என்ற ஆற்றின் சுழிகளில் ஆழமாகச் சிக்கியிருக்கிறான்! எங்கள் அழுகுரல் அவன் செவியில் விழாதபடி நீ அவனை மயக்கியிருக்கிறாய்!
உன்னுடைய 'கலசம் போன்ற மென்மையான மார்பகங்கள்' (செப்பன்ன மென்முலை) எப்படி இருக்கிறது தெரியுமா? விலைமதிப்பற்ற ஆபரணங்களைப் பொதிந்து வைக்கும் ஒரு 'செப்புப் பெட்டி' (தங்கக் கலசம்) போல இருக்கிறது. பெட்டிக்குள் இருக்கும் நகையை நாம் நினைத்த மாத்திரத்தில் எடுத்து அணிய முடியாது அல்லவா? அதுபோல, இந்தச் செப்புப் பெட்டிக்குள் புகுந்து கொண்ட எங்கள் கண்ணன், இப்போது எங்களுக்குக் கிடைக்காதபடி அங்கே மறைந்து கிடக்கிறானோ?
பஞ்சக் காலத்தில் வாடுபவர்கள் எப்படியாவது பிழைக்க வேண்டுமே என்று கடலையும் மலையையும் தஞ்சம் புகுவார்களே, அதுபோலத்தான் உன் மணாளனும்! உன்னுடைய அந்தப் 'பருத்த மலை' போன்ற மார்பும், 'பாற்கடல்' போன்ற குளிர்ச்சியுமே அவனுக்கு இப்போது தஞ்சம்! அதனால்தான் அவன் எங்களை மறந்து உன்னிடமே தஞ்சமடைந்து உறங்குகிறான்.
[செவ்வாய்]
அந்த மலையில் இருந்து உன் 'செவ்வாய்' என்னும் செங்கனியையும், அதிலிருந்து வரும் தேனையுமல்லவா அவன் பருகிக் கொண்டிருக்கிறான்!
[சிறு மருங்குல்]
மார்பு எனும் மலையில் ஏறி, செவ்வாய் எனும் கனியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் உன் மணாளன் கண்ணன், அப்படியே தற்செயலாகக் கீழே உன் இடையைப் பார்த்தால், 'ஐயோ! தரை தெரியவில்லையே, இது அதலபாதாளமாக இருக்கிறதே! நாம் எங்கே விழுந்துவிடுவோமோ' என்று அந்த பயம் தான் உன் இடையைப் பார்க்கும்போதும் அவனுக்கு ஏற்படுகிறது! அப்படி பயந்து விழுந்துவிடாமல் இருக்க, உன்னை இன்னும் இறுக அணைத்துக் கொள்கிறான்."
சொர்ணலேகா: "அடியே நப்பின்னாய்! உன்னிடம் அழகும், கருணையும் நிறைந்து வழிகிறது! சீதை அசோகவனத்தில் பத்து மாதங்கள் தன்னை அடைக்கலம் புகுந்தவர்களை ரட்சிக்க, பத்து மாதம் அசோகவனத்தில் தூக்கம் இல்லாமல் இருந்தாள். உனக்கும் அந்தப் பண்பு இருக்க வேண்டும் அல்லவா?"
[நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்]
ஆண்டாள்: "இப்படிச் சொல்லிய (மென்முலை, செவ்வாய், சிறுமருங்குல்) மற்றும் சொல்லாத (மற்ற அவயவங்கள்) சௌந்தரியங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் நப்பின்னையே! நீயே எங்களுக்குத் திருமகள் போல விளங்குகிறாய்! துயில் எழாய்!
(இப்படி ஆயர் சிறுமியர்கள் புகழ்ந்து எழுப்பியவுடன், உள்ளிருந்து மெல்லிய இதமான குரல் கேட்கிறது.)
நப்பின்னை: "கோதையுடன் வந்திருக்கும் ஆயர் சிறுமியர்களே! நான் உறங்கவில்லை, எழுந்திருந்து உங்களுக்கு என்ன தரலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்?"
[உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்]
ஆண்டாள்: "எங்கள் நோன்புக்கு வேண்டிய விசிறியும் (உக்கம்), கண்ணாடியும் (தட்டொளி) தந்து... அன்று தண்டகாரண்யத்து ரிஷிகள் அசுரர்களால் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களை ராமனிடம் காட்டி அழுதது போல, இதோ... விரகத்தினால் எங்கள் உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளைப் பார்... உன் புருவ நெறிப்பைக் கண்டே, நீ என்ன நினைக்கிறாய் என்பதை உணர்ந்து அதற்கேற்பக் காரியம் செய்யும் உன் மணாளனை இப்போதே எங்களுக்குத் தந்து, எங்கள் விரக தாபம் போக்க எம்மை நீராட்ட வேண்டும்! நீர் (அவனும் நீயும்) ஆட்கொள்ளும்(ஆட்டேலோர்) திருவருளில் நாங்கள் மூழ்க வேண்டும்!"
ஏற்ற கலங்கள்.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
4.1.2026

Comments
Post a Comment