Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27)

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27)




(சூழல்: ஆலிலையில் துயின்ற உனக்கு முடியாதது எதுவுமில்லை என்று இடைச்சிறுமியர் வேண்டியதைக் கேட்டவுடன், கண்ணன் சங்குகள், பறைகள், விளக்கு, விதானம் என்று அவர்களுக்குத் தேவையான ஒவ்வொன்றாக வழங்கத் தொடங்கினான். இவை அனைத்தையும் பெற்றுக்கொண்ட சிறுமியரிடம், "இவ்வளவுதானே உங்களுக்கு வேண்டியது?" என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு அவர்கள், "கண்ணா! இதுவரை நாங்கள் கேட்டவை எல்லாம் நோன்பு செய்யப் போவதற்குத் தேவையான உபகரணங்கள் மட்டுமே. ஆனால், நோன்பு முடிந்த பிறகு உன்னிடம் சில பரிசுகளைப் பெறப்போகிறோம்" என்கிறார்கள்.)

கண்ணன்: "பெண்களே! என்னிடம் இருக்கும் உடமைகளை எல்லாம் கேட்டீர்கள். அதை எல்லாம் உங்களுக்குத் தந்துவிட்டேன். அதுமட்டுமா, 'ஆற்றாது உன் அடிபணிய வந்தோம்' என்று சொல்லி, என்னையே உங்களிடம் தோற்கச் செய்துவிட்டீர்களே! எல்லா உலகங்களையும் ஆட்சி செய்யும் அரசன் இப்படி உங்கள் முன் தோற்றுப்போய் நிற்கிறேன்!"

ஆண்டாள்: "கண்ணா! இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உனது இயல்பே அதுதானே!"

கண்ணன்: "என்ன சொல்லுகிறாய் கோதை?"

[கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா]

ஆண்டாள்: "கோவிந்தா! உன்னோடு சேர மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் (கூடாரை) நீ உனது வீரத்தைக் காட்டி அவர்களை வெல்வாய். ஆனால், 'உன்னோடு சேருவோம்' என்று ஆசையுடன் வருபவர்களிடம் நீ தோற்றுப் போவாய்! இது உனக்குப் புதிதா என்ன?"

புல்லகலிகா: "ராவணனை நீ வென்றது ஏன்? அனுமன், அங்கதன் எனப் பலரைத் தூது அனுப்பியும், 'இன்று போய் நாளை வா' என்று பல வாய்ப்புகள் கொடுத்தும் அவன் உனக்கு 'அடிபணிய மாட்டேன்' என்றதால்தான் அவனைப் போரில் வென்றாய். ஆனால் உன்னோடு சேர்ந்த சுக்கிரீவனுக்காக நீ தர்ம சங்கடமான நிலையிலும் வாலியை வதம் செய்தாய். அரக்கன் என்றும் பாராமல் விபீஷணன் சரணடைந்ததும் அவனை உடனே ஏற்றுக்கொண்டாயே! ஒருவேளை ராவணனே சரணடைந்திருந்தால் கூட அவனிடமும் நீ தோற்றுப் போயிருப்பாய்!"

விசாகா: "'21 தலைமுறை அரசர்களை வென்ற எனக்கு இந்தச் சிறுவன் ராமனா எம்மாத்திரம்?' என்று கர்வம் கொண்டு வந்தான் பரசுராமன். ஆனால் உன் முன்னால் நின்ற மாத்திரத்தில், தன் வில்லை உன்னிடமே கொடுத்துவிட்டு, 'நான் ஒரு அந்தணன்' என்று தலைவணங்கிப் போனானே!"

பத்மா: "துரியோதனனை நீ அழித்தது ஏன்? அவன் உன் காலடி திசையில் கூட உட்கார மறுத்தான். ஆனால், பாண்டவர்கள் 'நீயே கதி' என்று உன்னிடம் சரணடைந்தார்கள். நீ தூதுவனாகவும் தேரோட்டியாகவும் மாறித் உன்னையே அவர்களுக்கு எழுதிக்கொடுத்து அவர்களிடம் தோற்றுப் போனாயே!"

ஆண்டாள்: "கண்ணா! உன்னிடம் இரண்டு ஆயுதங்கள் உள்ளன. ஒன்று சௌர்யம் (வீரம்), இன்னொன்று சௌசீல்யம். உன்னோடு கூடாதவர்களை உனது சௌர்யத்தால் வில் கொண்டு வெல்வாய். எங்களைப் போன்ற உன்னோடு கூடுவோரை உனது சௌசீல்யத்தால் (நீர்மையால்) வெல்வாய். அம்பு பட்ட காயத்திற்கு மருந்து போடலாம்; ஆனால், உனது தாமரைக் கண்களும், அழகும், நீர்மை குணத்தால் அடிப்பட்ட எங்களுக்கு மருந்து ஏது ?"

சுலோச்சனா: "இது எப்படி இருக்கிறது தெரியுமா? தாகத்தால் தவிக்கும் ஒருவன், தன் தாகத்தைத் தணிக்கக் கடகடவென்று நீரை குடிக்கும் போது, அவனுக்குப் 'புரை' ஏறி’ மயக்கத்தில் அவன் கீழே விழுகிறான். மயக்கத்தைத் தெளிவிக்க முகத்தில் நீரைத் தான் தெளிப்பார்கள். ஆனால், மயக்கத்திற்குக் காரணமே அந்த நீர் தான் எனும் போது, அங்கே பரிகாரமே விரோதியாகிவிடுகிறது.

சுகபாஷிணி: கண்ணா! உனது 'நீர்மை' அத்தகையது தான். உன் அழகையும் குணத்தையும் அநுபவிக்க ஆசைப்பட்டு நாங்கள் உன்னிடம் வருகிறோம். ஆனால், உன் குணங்களின் வெள்ளத்தில் மூழ்கிப் போகும்போது, அதுவே எங்களை மயக்கமடையச் செய்கிறது. எங்களைக் காக்க வேண்டிய உன் குணங்களே, எங்களை நிலைகுலையவும் செய்கிறது!"

கண்ணன்: "என்னிடம் தோற்பதுதான் என் சுபாவம் என்று சொல்லிவிட்டீர்கள். சரி, என்னை ஏன் 'கோவிந்தா' என்று அழைத்தீர்கள்?"

ஆண்டாள்: "கண்ணா! நீ 'கூடாரை வெல்லும்' குணத்தைக் கொண்டவன் என்பதற்கு உனது 'கோவிந்தன்' என்ற பெயரே சாட்சி! 'கூடுவோம்' என்று சொல்லத் தெரியாத, உனக்குத் திரும்ப உபகாரம் செய்யத் தெரியாத அந்தப் பசுக்களையும் கன்றுகளையும் நீ காக்கிறாயே... அதுவே உன் பெருமை! பசுக்களைப் போல் கூடியிருப்போம் என்ற எண்ணமும் நிர்பந்தமும் இல்லை, ஆனால் கூடமாட்டோம் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் அதுவே போதும்!"

கண்ணன்: "பசுக்களை மேய்ப்பது ஒரு சாதாரணத் தொழில் தானே? இதில் என்ன விசேஷம்?"

ஆண்டாள்: "அப்படிச் சொல்லாதே கண்ணா! உனது அன்பு எங்கே கரைபுரண்டு ஓடுகிறது தெரியுமா? யாரிடம் ஒன்றுமில்லையோ, யார் உனது கைகளையே எதிர்பார்த்து நிற்கிறார்களோ, அவர்களிடம்தான் உனது கருணை பொங்குகிறது. நித்திய சூரிகள் வாழும் பரமபதத்தை விட, உனக்கு அந்தப் பசுக்கூட்டங்களை மேய்ப்பதில்தான் அதிக மகிழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாதா?"

தனநிஷ்டா: "இன்னும் சொல்லப்போனால், தானாகப் புல் மேயத் தெரிந்த பசுக்களைக் காப்பதை விட, புல் மேயக்கூடத் தெரியாத அந்தச் சிறு கன்றுகளைக் காப்பதில் உனக்கு அதிக உகப்பு. அறிவு இல்லாத பசுக்களிடம் நீ தோற்றுப் போய் நிற்கும் அழகே அழகு! அந்தப் பேரன்புதான் உன்னை 'கோவிந்தன்' ஆக்கியது. அத்தகைய கோவிந்தனைப் பாடி, பறைகளை பெற்று, மேலும் பல பரிசுகளைப் பெற வந்திருக்கிறோம்!"

கண்ணன்: "பெண்களே! நீங்கள் பாடுவதற்கு ஒரு அளவே இல்லையா? 'வாயினால் பாடி', 'கேசவனைப் பாட', ‘முகில்வண்ணன் பேர்பாட’, ‘மனத்துக்கினியானைப் பாட', 'மாயனைப் பாட', ’மைத்துனன் பேர்பாட’ என்று பாசுரம் தோறும் பாடிக்கொண்டே இருக்கிறீர்களே? இப்போது மீண்டும் 'உன் தன்னைப் பாடி' என்கிறீர்களே?"

ஆண்டாள்: "கண்ணா! எங்களுக்குப் பாடுவதே உயிர் மூச்சு. நாக்கு படைத்ததன் பயனே உன்னைப் பாடுவதுதான். முன்பெல்லாம் உன்னைப் பாட முடியாமல் தவித்த அந்தத் துயரம் எல்லாம் தீரும்படி இப்போது உன்னை நேரில் கண்டு பாடுகிறோம். உண்மையில், எங்கள் அழகைப் பார்த்து நீயல்லவா எங்களைப் பாட வேண்டும்? ஆனால் நிலைமை தலைகீழாகி, உன்னைத் தேடி வந்து நாங்கள் பாடுகிறோம் பார்த்தாயா! உன் வேலையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."

[உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்]

கண்ணன்: "கோதை! சரி, ஊரார் கேட்ட 'பறை முதலியவைகளை வாங்கிக்கொண்டீர்கள். அதற்கு மேல் இப்போது புதிதாகக் கேட்கும் அந்த 'சம்மானம்' என்ன?"

ஆண்டாள்: "கண்ணா! ஊராருக்காகப் பறை வாங்கியது ஒருபுறம் இருக்கட்டும். உன்னை அடைந்த எங்களுக்கு நீயாகத் தரும் தனிப்பட்ட ’சம்மானம்’ வேண்டுமே!"

கண்ணன்: "சம்மானம்... எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது!"

ஆண்டாள்: "கண்ணா! உனக்குத் தெரியாத சம்மானமா? ராமபிரானைப் பின்தொடர்ந்து வந்த சீதாப்பிராட்டிக்கு ராமன் ஒரு சம்மானம் அளித்தார்.. அது என்ன தெரியுமா? ராமர் தன் தோளில் இருந்த மாலையை எடுத்து சீதையின் கழுத்தில் சூட்டினார். அப்படிப்பட்ட நெருக்கமான, அன்பான பரிசுகளைத்தான் நாங்களும் உன்னிடம் எதிர்பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல கண்ணா! காலங்காலமாக எங்களை இந்த உலகம் ஏளனம் செய்திருக்கலாம். ஆனால், நீ எங்களுக்குப் பரிசு தரும்போது, 'கொடுத்தால் இப்படி கொடுக்க வேண்டும்! பெற்றால் இந்தச் சிறுமிகளைப் போலப் பெற வேண்டும்!' என்று ’நாடு புகழும் பரிசாக' இருக்க வேண்டும்!"

கண்ணன்: "கோதை! 'நாடு புகழும் பரிசு' என்றால் எப்படி? இதற்கும் ஏதாவது கைவசம் உதாரணம் வைத்திருப்பாயே!"

ஆண்டாள்: "கண்ணா, அன்று பாரதப் போரின்போது நீயும் சத்தியபாமையும், அர்ஜுனனும் திரௌபதியும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக, மிகுந்த அன்யோன்யத்துடன் அமர்ந்திருந்தீர்கள். அந்தச் சமயம் உன்னைப் பார்க்க சஞ்சயன் வந்தான்."

கண்ணன்: "ஆமாம் வந்தான்."

ஆண்டாள்: "அப்போது நீ மற்றவர்களிடம், 'நாம் இப்படி மிக நெருக்கமாக இருப்பதை சஞ்சயன் பார்க்கட்டும். இதை அவன் துரியோதனனிடம் போய்ச் சொன்னால், அவன் பொறாமையில் மண்ணைக் கவ்வுவான். அதனால் சஞ்சயனை உடனே உள்ளே விடுங்கள்' என்றாய். நீ நினைத்தபடியே, சஞ்சயனும் உங்கள் ஒற்றுமையைக் கண்டு மிரண்டுபோய், துரியோதனனிடம் ஓடினான். 'துரியோதனா, நீ அழியப்போகிறாய்! உன் கதை முடிந்தது. கண்ணன் பாண்டவர்களோடு அத்தனை நெருக்கமாக இருக்கிறான்; அவர்களை இனி யாராலும் பிரிக்க முடியாது' என்று எச்சரித்தான் அல்லவா?"

கண்ணன்: "ஆமாம்."

ஆண்டாள்: "அதேபோல ராமாயணத்தில், சுக-சாரணர்கள் என்ற ஒற்றர்கள் ராவணனிடம் சென்று, ராமன் எவ்வளவு எளிமையாகத் தன் தம்பி வீடணனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தான் என்பதையும், வானரங்கள் அதை எப்படிக் கொண்டாடின என்பதையும் சொல்லி அவனை நடுங்க வைத்தார்கள்.

கண்ணா! உன்னை அடைந்தவர்களை நீ உயர்த்தி வைக்கும் அந்த அழகைப் பார்த்து உகப்பவர்கள் மகிழ வேண்டும்; உகவாதவர்கள் வயிறெரிய வேண்டும்! அநாதிகாலமாக நாங்கள் பட்ட அவமானங்கள் எல்லாம் நீங்கும்படி, நீ எங்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடுவதையே நாங்கள் 'நாடு புகழும் பரிசு' என்கிறோம்! அதுமட்டுமல்ல, இந்த நாடு புகழும் பரிசு ‘நன்றாக’ இருக்க வேண்டும்!"

[நாடு புகழும் பரிசினால் நன்றாக]

கண்ணன்: "கோதை! 'நாடு புகழும் பரிசு' சரி, ‘நன்றாக’ என்றால் புரியவில்லை? அதற்கு ஒரு உதாரணம் சொன்னால் அதன்படி தருகிறேன்."

ஆண்டாள்: "கண்ணா! அந்தப் பரிசு சாமானியமாக இருக்கக்கூடாது. உன் அவதாரமான ராமபிரான், ராவண வதத்திற்குப் பிறகு அயோத்தியில் முடிசூட்டிக் கொண்டாரே, அப்போது வழங்கிய பரிசைப் போல இருக்க வேண்டும்!"

கண்ணன்: "அங்கே என்ன நடந்தது? எனக்கு மறந்துவிட்டது"

ஆண்டாள்: "அயோத்தி மாநகமே திரண்டிருந்தது. ராமபிரான் சுக்கிரீவன், அங்கதன் போன்றோருக்கெல்லாம் பரிசுகளை வாரி வழங்கினார். ஆனால், அனுமனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் 'நாடு புகழும் பரிசாக', ‘நன்றாக’ அமைந்தது.

கண்ணன்: அப்படியா ?

ஆண்டாள்: தேவேந்திரன் ஒரு தெய்வீகமான மாலையை ராமனுக்குப் பரிசளித்திருந்தான். ராமபிரான், 'சீதே! உனக்கு யாரிடம் அதிக அன்பு இருக்கிறதோ, அவனுக்கே இந்த மாலையை வழங்கு' என்றார். ராமனும் சீதையும் இணைந்து அனுமனுக்குப் பூட்டினார்கள். அதுபோல, நீயும் நப்பின்னைப் பிராட்டியும் சேர்ந்து, உங்கள் திருக்கரங்களால் எங்களுக்கு ஆபரணங்களை ’நன்றாக’ அணிவிக்க வேண்டும். இது ‘நாடு புகழும் பரிசு' மட்டுமல்ல, நாங்கள் பெறும் கௌரவம் கூட!"

கண்ணன்: "பெண்களே! உங்களுக்கு என்னென்ன ஆபரணங்கள் வேண்டும்? வரிசையாகச் சொல்லுங்கள், நானும் நப்பின்னையும் உங்களுக்கு அணிவிக்கிறோம்."

[சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே பாடகமே]

ஆண்டாள்: "கண்ணா! நீயும் நப்பின்னையும் சேர்ந்து முதலில் எங்கள் கையைப் பற்றுவீர்கள் அல்லவா? 'இந்தக் கை இனி உனக்கே சொந்தம்' என்பதற்கு அடையாளமாக, முதலில் எங்கள் மணிக்கட்டில் இந்த வளையல்களை (சூடகம்) அணிவி!"

கண்ணன்: "சரி, அடுத்து?"

ஆண்டாள்: "கையைப் பற்றியவுடன் எங்களை அணைத்துக்கொள்வாய். அப்போது எங்கள் தோள்களுக்கு 'தோள்வளை' வேண்டும். உன் பிரிவால் மெலிந்து போயிருந்த எங்கள் மூங்கில் போன்ற தோள்கள், இப்போது உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருக்கின்றன. அந்தத் தோள்களில் நீ அணிவிக்கும் தோள்வளைகள் கச்சிதமாகப் பொருந்த வேண்டும்! நீ எங்களை அணைக்கும் போது, எங்கள் பூவுடன் கூடிய காதணிகள் உன் தோள்களில் பட்டு உரசுவதையே உன் தோள்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும். நாங்கள் ஏற்கனவே 'பொற்றோடு' அணிந்திருந்தாலும், நீ உன் கையால் அணிவிப்பதே எங்களுக்கு உண்மையான அழகு!"

கண்ணன்: "வேறு ஏதாவது இருக்கிறதா?"

ஆண்டாள்: "எங்களிடம் தோற்றுப் போன நீ, எங்கள் திருவடிகளைப் பற்றிக் கீழே விழுவாய் அல்லவா? அப்படி நீ விழும்போது உன் கைகளுக்குச் சிக்கிய எங்கள் பாதங்களில் நீயே இந்தப் பாடகங்களை (தண்டை) அணிவிக்க வேண்டும்."

கண்ணன்: "கோதை! சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்று ஆபரணங்களைச் சொன்னீர்கள். வேறு ஏதாவது இருக்கா?"

[என்று அனைய பல்கலனும் யாம் அணிவோம்]

ஆண்டாள்: "கண்ணா! உன் காதலுக்கு இந்த நான்கு ஐந்து ஆபரணங்கள் போதுமா என்ன? மேலே சொன்ன ஆபரணங்கள் போல எண்ணற்ற, கணக்கற்ற பல ஆபரணங்களை நீ எங்களுக்கு அணிவிக்க வேண்டும். நீ எப்படி 'பலபலவே ஆபரணம்' பூண்டிருக்கிறாயோ, அதேபோல, உன்னைப் போலவே எங்களையும் நீ அலங்கரிக்க வேண்டும்."

கண்ணன்: "உங்களைப் பார்த்தால் ஏற்கனவே அழகு தேவதைகள் போல இருக்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு இத்தனை ஆபரணங்கள்?"

ஆண்டாள்: "உண்மைதான் கண்ணா! எங்கள் உடம்பே ஆபரணங்களுக்கு ஆபரணம் போன்றதுதான். எங்களை மேலும் அழகுபடுத்த ஆபரணங்களால் முடியாது. ஆனால், நீயும் நப்பின்னைப் பிராட்டியும் ஆசைப்பட்டு அணிவிக்கிறீர்கள் அல்லவா? அந்த அன்புக்காகவும், உனக்கு என்றுமே அடிமையான எங்கள் நிலைக்கு ஒரு பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் அணிந்து கொள்கிறோம்."

பத்மா: "கண்ணா! நோன்பின் தொடக்கத்தில் நீ எங்களோடு இல்லை; அந்தப் பிரிவால் 'மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்' என்று அடம் பிடித்தோம். ஆனால் இப்போது நீ இதோ எங்கள் முன்னால் நிற்கிறாய்! நீ இருக்கும்போது நாங்கள் அலங்கரித்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா? அதனால் இப்போது அணிவோம்!"

கண்ணன்: "நான் அணிவிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்பே, நீங்களாகவே 'அணிவோம்' என்று அவசரப்படுகிறீர்களே?"

ஆண்டாள்: "கண்ணா! உன் உள்ளம் எங்களுக்குத் தெரியாதா? 'இவர்கள் பூ முடிப்பார்களா, ஆபரணம் அணிவார்களா?' என்று நீ ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். உன்னைத் தவிக்க விடக்கூடாது என்பதற்காகவே, 'நீ அணிவிப்பதைக் கட்டாயம் அணிந்து கொள்வோம்' என்று எங்கள் சம்மதத்தை முன்கூட்டியே சொல்லி உன்னை மகிழ்விக்கிறோம்!"

கண்ணன்: "கோதை! உன்னிடம் பேசி என்னால் ஜெயிக்க முடியாது! ஆபரணங்களை அணிந்துகொண்டீர்கள். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?"

[ஆடை உடுப்போம்]

ஆண்டாள்: "கண்ணா! அடுத்து, என் தந்தை பட்டர்பிரான் ஆசைப்பட்டாரே, 'பீதக ஆடை உடுத்து' என்று... அதேபோல உன்னுடைய அந்தப் பீதாம்பரத்தையே நாங்களும் உடுத்திக்கொள்வோம். அலங்காரம் முடிந்த பிறகு..."

கண்ணன்: "கோதை! எவ்வளவு கொடுத்தாலும் ஆசை அடங்கவில்லையே?"

ஆண்டாள்: "சாதாரண மனிதர்களையோ, சிறு தெய்வங்களையோ அண்டினால் ஒரு சிறு பொருளைப் பெறுவதற்கே அநேக முயற்சிகள் செய்ய வேண்டும். ஆனால், அகில உலகிற்கும் அதிபதியான உன்னை அண்டிய பிறகு, நாங்கள் பெறும் பரிசுகளுக்குக் கணக்கு ஏது? ஒவ்வொன்றாகப் பெருகிக்கொண்டே போவதுதானே உனக்குப் பெருமை!"

கண்ணன்: "கோதை! அடுத்து?"

[அதன் பின்னே பாற் சோறு]

ஆண்டாள்: "இத்தனை நாட்களாக உன்னைப் பிரிந்திருந்த வருத்தத்தில் 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்று நோன்பு இருந்தோம். நாங்கள் உண்ணாததால், 'என் அடியவர்கள் உண்ணாத போது எனக்கென்ன நெய்?' என்று நீயும் உண்ணாமல் விரதம் இருந்தாய். அதனால் ஆய்ப்பாடியில் நெய்யும் பாலும் மிதமிஞ்சித் தேங்கிக் கிடக்கிறது!"

கண்ணன்: "ஓ அப்படியா?"

ஆண்டாள்: (சிரித்துக்கொண்டே) "ஆமாம்! அதனால்தான் இப்போது, பாலிலேயே சோற்றைச் சமைத்து, அந்தச் சோறு கண்ணுக்கே தெரியாதபடி அதன் மேலே நெய்யை ஊற்றப் போகிறோம். என் தந்தை பட்டர்பிரான் சொன்னாரே, 'நெய்யிடை நல்லதோர் சோறு' என்று... அதாவது நெய்க்கு நடுவே சோற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமாம்! அப்படி நெய் மிதக்க மிதக்கத் தயார் செய்த பாற்சோற்றை உன்னோடு சேர்ந்து உண்ணப் போகிறோம்."

[மூட நெய் பெய்து முழங்கை வழிவார]

விசாகா: "கண்ணா! அந்தப் பாற்சோற்றை உண்ணும் போது, அந்த நெய் எங்கள் முழங்கை வழியாக வடிய வேண்டும்."

கண்ணன்: "'நெய் முழங்கை வழியாக வழிகிறதே, ஏன் அது உங்கள் வாய்க்குள் செல்லாதா?'"

ஆண்டாள்: "கண்ணா! எங்கள் நெஞ்சையும் கண்ணையும் பறிகொடுத்துப் பித்தாகி நிற்கும் எங்களுக்கு, சோறு வாய்க்குள் சென்றால்தானே நெய்யும் உள்ளே செல்லும்! உன்னைப் பார்த்த மயக்கத்தில், கையில் எடுத்த சோறு வாய்க்குப் போகாமல் அப்படியே நிற்க, அதிலுள்ள நெய் முழங்கை வழியாக வடிகிறது கண்ணா! இதுதான் உன் மேலுள்ள எங்கள் காதலின் நிலை."

கண்ணன்: "கடைசியில் இந்தச் சோறு உண்பதுதான் உங்கள் நோன்பின் முடிவா?"

[கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்]

பூர்ணா: "என்ன கண்ணா இப்படி கேட்டுவிட்டாய்! வயிற்றுப் பசி தீர்ப்பது எங்கள் நோக்கமல்ல. எல்லோரும் 'கூடியிருந்து' - என்பதே எங்களின் உண்மையான நோக்கம், பலன்! 'எந்த நாள் உன்னுடன் கூடுவோம்?' என்று பிரிவில் தவித்த காலங்கள் போய், இப்போது உன்னுடன் ஒன்றிணைந்துவிட்டோம். பல வாசல்களில் ஏறி இறங்கி அலைந்த வருத்தம் தீர, இப்போது உன் அருகிலேயே அமர்ந்துவிட்டோம்."

ஆண்டாள்: "எங்கள் வாய் உன்னைப் பாட வேண்டும்; எங்கள் உடம்பு உன்னோடு கூட வேண்டும்; எங்கள் நெஞ்சு உன்னால் குளிர வேண்டும். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடுவோம்' என்று நாங்கள் பாடியதன் உண்மையான அர்த்தம் இப்போது புரிகிறதா கண்ணா! நாங்கள் கூடி இருந்து குளிர வேண்டும்!"

கறவைகள்.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
11.1.2026

Comments