ஆண்டாளும் தோழிகளும் - குத்து விளக்கு எரிய - (பாசுரம் 19)
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நந்தகோபனுடைய திருமாளிகைக்குள் சென்று நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் என்று எல்லோரையும் எழுப்பியும் யாரும் எழுந்திருக்கவில்லை. நப்பின்னையை 'வந்து திறவாய் மகிழ்ந்து' என்று அழைத்தார்கள். உள்ளே சலசலப்பு கேட்கிறதே தவிரக் கதவு திறக்கப்படவில்லை. எனவே, அங்குள்ள சிறு ஜன்னல் (வெண்டிலேட்டர்) வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கத் தோழிகள் ஒருவரின் மேல் ஒருவர் ஏறி எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்டாள் மேலே இருக்கிறாள். எட்டிப் பார்த்து ஒரு ரன்னிங் கமெண்டரி கொடுக்கிறாள்).
புல்லகலிகா: "கோதை! உள்ளே என்ன நடக்கிறது? ஏதாவது தெரிகிறதா?"
ஆண்டாள்: "நப்பின்னைப் பிராட்டி கதவைத் திறக்க எழுந்திருக்க முயலுகிறாள். ஆனால் கண்ணனோ, 'எழுந்து போகாதே, அவர்கள் என்னைத் தேடி வந்த ஆயர் சிறுமியர்கள், அதனால் நான் தான் சென்று திறப்பேன்' என்று அவளை இறுக அணைத்துத் தடுக்கிறான்."
விசாகா: "அப்புறம்?"
ஆண்டாள்: "அடுத்த நொடி, கண்ணன் நமக்காகக் கதவைத் திறக்க முற்பட, நப்பின்னையோ அவனை விடாமல் அணைத்துக்கொண்டு, 'இல்லை, அவர்கள் என் கையால் வளை குலுங்க வந்து திறக்கச் சொன்னார்கள். நானே போவேன்' என்று அவனைப் போகவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறாள். இப்படியாக, 'உன்னைக் காட்டிலும் எனக்குத் தான் அவர்கள் மேல் அன்பு அதிகம்' என்று நமக்காகக் கதவைத் திறக்க இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!"
பத்மா: "இப்படியே அவர்கள் ஒருவரை ஒருவர் தடுத்துக்கொண்டு இருந்தால், நமக்கு யார் தான் வந்து கதவை திறப்பார்கள்? கோதை! நீ தான் சத்தம் போட்டுக் கதவை திறக்கச் சொல்ல வேண்டும்!"
[குத்து விளக்கு எரிய]
ஆண்டாள்: "சற்றுப் பொறுங்கள்! உள்ளே காட்சியே விசித்திரமாக இருக்கிறது. வெளியே நள்ளிருட்டில், கீழ்வானம் வெள்ளென்று, கீச்கீச் என்று ஆனைச்சாத்தன் கலந்து பேசிய பேச்சுகளை எல்லாம் கேட்டு நாம் ஓடோடி வந்தால்... உள்ளே பகலை இரவாக்கிக்கொண்டு, குத்து விளக்குகள் நாலாபுறமும் எரிந்து கொண்டிருக்கின்றன."
விசாகா: "கோதை! நப்பின்னைக்கு என்ன கவலை? நம்மைப் போல் அவளுக்கு ஊரார் சம்மதிக்க வேண்டுமா? இல்லை காலை எழுந்துகொள்ளத் தான் வேண்டுமா? கண்ணனையே எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருப்பவளுக்கு பகல் என்ன இரவு என்ன எல்லாம் ஒன்று தான். அவளுக்குப் பொழுது விடிந்தால் என்ன, விடியாவிட்டால் என்ன? கண்ணனைப் பிரகாசிக்கச் செய்யும் நப்பின்னை அங்கே இருக்கும்போது, அங்கே நாலாபுறமும் எதற்கு விளக்கு?"
[கோட்டுக் கால் கட்டில் மேல்]
ஆண்டாள்: "விலையுயர்ந்த பொன்னாலும் மணியாலும் செய்த கட்டில் தெரிகிறது. குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளைப் பறித்து, அதையே கட்டில் கால்களாக அமைத்திருக்கிறார்கள். அதன்மேல் மெத்தென்ற மென்மையான பஞ்சாலே செய்த படுக்கை விரிக்கப்பட்டுள்ளது."
[மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறி]
சுகந்தா: "இவளை மணம் புரியத் தானே கண்ணன் ஏழு காளைகளை அடக்கினான்! அந்த வீரப்பத்தினிக்கு ஏற்ற அழகு, வெண்மை, மென்மை, குளிர்ச்சி, பரிமளம் கொண்ட ஐந்து வகையான தன்மையும் (பஞ்ச சயனம்) கொண்ட கட்டில் போலும்!.. வேற என்ன தெரிகிறது?"
ஆண்டாள்: "கண்ணன் அந்தக் கட்டிலின் மேல் ஏறி …( என்று சொல்லி முடிப்பதற்குள்)
சொர்ணலேகா:: "பெற்ற பிள்ளைகள் மேலே ஏறி மிதித்து விளையாடாத படுக்கை ஒரு படுக்கையா? தாய் தந்தையருக்கு அதில் தானே மகிழ்ச்சி! ஒரு தாய் அதை எப்படி சகித்துக்கொள்வாள் ?"
ஹேமலதா: "வெளியே குளிரிலும் பனியிலும் நாம் வாடிக்கொண்டிருக்க, இந்த மென்மையான படுக்கை கூட அவர்களுக்கு எரியும் வெம்படுக்கையாக அல்லவா இருக்க வேண்டும்? நம்மைப் பிரிந்து அவர்களுக்கு மட்டும் எப்படி இது குளிர்ச்சியான தண் படுக்கையானதோ!"
தனநிஷ்டா: "பரமபதத்தில் ஆதிசேஷன் படுக்கையை விட்டுவிட்டு, இங்கே பூலோகத்திற்கு வந்து இந்தப் படுக்கையில் நீ அமர்ந்ததே எங்களைப் போன்ற ஏழை உயிர்களைப் பெறுவதற்காகத் தானே! அப்படி இருக்க, எங்களை வெளியே நிற்க வைத்துவிட்டு நீ மட்டும் உள்ளே துயில்வது அழகோ? கோதை வேறு என்ன தெரிகிறது?"
[கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்]
ஆண்டாள்: "நப்பின்னை கூந்தலில் சூடிய கொத்துக் கொத்தாகப் பூக்கள் அவள் தலையில் பட்டவுடன் காலம் கருதாது மலர்ந்திருக்கின்றன... நப்பின்னைப் பிராட்டியின் திருமார்பைத் தன் மார்பின் மேல் தாங்கிக் கொண்டு கண்ணன் கிடக்கிறானா, அல்லது அவளது அணைப்பிற்குள்ளே தன்னை முழுவதுமாக ஒப்படைத்து, அவள் மார்பின் மேல் சாய்ந்து கிடக்கிறானா என்று தெரியவில்லை."
சுலோச்சனா: "கோதை! நீ சொல்வதைப் பார்த்தால் சித்திரகூடத்தில் சீதை ராகவனுடைய மடியில் வெகுநேரம் தூங்கினாள், பிறகு ராகவனும் அப்படியே சீதையின் மடியில் மாறிமாறித் தூங்கியது போல் அல்லவா இருக்கிறது!"
[வைத்துக் கிடந்த மலர் மார்பா]
பூர்ணா: "இவனுக்கு அரண் இவள் திருமார்பு; இவளுக்கு இருப்பிடம் அவன் மலர் மார்பு!"
ஆண்டாள்: நப்பின்னையுடன் செர்ந்திருப்பதால் அவன் மலர் மார்பு அகன்ற மலர் மார்பாக தெரிகிறது!
சுகபாஷிணி: "ஏண்டி கோதை! இப்படி ஒருவருக்கொருவர் பிணைந்து கிடக்கிறார்கள். இவர்களை எழுப்பிப் பிரிப்பது கொடுஞ்செயல் அன்றோ?"
[வாய் திறவாய்]
ஆண்டாள்: (சற்று யோசித்து) "நீ சொல்வதும் சரிதான். அவனை எழுந்து வரச் சொல்ல வேண்டாம். (நப்பினையுடன் படுத்திருக்கும் கண்ணனைப் பார்த்து)கிடந்த இடத்திலிருந்தே, அன்று போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு ‘வருந்த வேண்டாம்!’ (மாசுச) என்று சொன்னது போல், எங்களுக்கும் உன் கம்பீரமான குரலில் வாய் திறந்து ஆறுதல் சொல்லலாமே! நாங்கள் என்ன கீதையையா கேட்கிறோம்? (சொன்னாலும் புரியாது - இடைச்சிகள்) ஒரு வார்த்தை தானே கேட்கிறோம்! உன் மலர் மார்பை அவளுக்குக் கொடுத்தால், பேச்சையாவது எங்களுக்குக் கொடுக்கலாமே!"
(கண்ணன் ’நமக்காக இந்தச் சிறுமிகள் என்ன பாடுபடுகிறார்கள்’ என்று வருந்தி ஏதோ பேச வாயைத் திறக்க, ’நம்மைச் சார்ந்தவர்களுக்கு நம் மணாளன் பதில் பேசுவது சரி அன்று என்று, அவனைத் தன் கண்ணாலேயே சைகை காண்பித்து பேசாமல் இருக்கச் சொன்னாள். கண்ணன் அவள் கண்ணழகில் மயங்கிப் பேசாமல் இருக்க, இதைக் கவனித்த ஆண்டாள் நப்பின்னையை நோக்கிக் கேட்கிறாள்.)
[மைத் தடங் கண்ணினாய்! ]
ஆண்டாள்: "மை தீட்டிய கருமையுடைய பெரிய கண்களை உடைய நப்பின்னையே! உன் கண்ணழகு எங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைத்து அல்லவா வந்தோம். ஆனால் அதுவே எங்களுக்குப் பாதகமான செயலை அல்லவா செய்கிறது! நாங்கள் கண்ணனை அடைய நோன்பிற்காக ’மையிட்டு எழுதோம்’ என்று வந்தோம். ஆனால் நீயோ மையிட்டு அவனை வசீகரித்த பின் அவன் எப்படி எங்களைத் திரும்பிப் பார்ப்பான்?"
விசாகா: "கோதை! நப்பின்னையின் சமுத்திரம் போன்ற அழகிலும், பரப்பிலும் கண்ணழகிலும் அகப்பட்டவன், அதை எப்படி நீந்திக்கொண்டு கரையில் இருக்கும் நம்மைப் பார்ப்பான்?"
[நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவு ]
ஆண்டாள்: "நப்பின்னையே! நீ உன் மணாளனை ஒரு கண நேரமும் படுக்கையை விட்டு எழவிட மறுக்கிறாய் அவனது பிரிவை உன்னால் பொறுக்க முடியாது, அதனால் தான் அவனைப் போகவிடாமல் தடுக்கிறாய்! புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுகிறாய்! நாங்கள் வெளியிலிருந்து படும் பாட்டை, நீ அவன் அருகில் இருந்தே படுகிறாய் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் நீ இப்படிச் செய்வது உன் சுபாவத்துக்கு ஏற்றது அல்ல. இது உனக்குத் தகுதியும் அன்று, தர்மமும் அன்று உன் புருவ நெறிப்புக்கு வளைந்து கொடுக்கும் அவனை எங்களுடன் சேர விடு!"
முப்பத்து... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
3.1.2026
Comments
Post a Comment