ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை
சென்ற ஆண்டு கார்த்திகை கடைசி நாள் அடியேனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரியவாச்சான் பிள்ளையின் 'மூவாயிரப்படி' வியாக்கியானத்தை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு, திருப்பாவையை ஒரு நாடகம் போல எழுத வேண்டும் என்பதுதான் அது.
ஆண்டாள் தன் திருப்பாவைக்கு இட்ட பெயர் கோதையின் ’சங்கத் தமிழ் மாலை’. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று பாடபுத்தகத்தில் படித்திருக்கிறோம். அந்த மூன்றும் திருப்பாவையில் பொதிந்துள்ளன. இயல் மற்றும் இசையை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கிறோம்; ஆனால் அதில் 'நாடகம்' ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது தான் அடியேனின் நோக்கம்.
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற பொக்கிஷத்தைக் கட்டிக்காத்தது நம் முன்னோர்களின் வியாக்கியானங்கள். இந்த வியாக்கியானங்கள் இல்லையென்றால், ஆழ்வார் பாசுரங்களை நாம் வெறும் பாடல்களாக மட்டுமே ஓதிக்கொண்டிருந்திருப்போம். சில 'கோனார் நோட்ஸ்' போன்ற உரைகளைப் படித்தால் கொட்டாவிதான் வரும்; சுவைத்து ரசித்திருக்க முடியாது. அதிலிருந்து முழுவதும் மாறுபடுகிறது பெரியவாச்சான் பிள்ளையின் உரை.
பெரியவாச்சான் பிள்ளையின் உரைகள் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷங்கள். அவருக்குத் தமிழும் சமஸ்கிருதமும் மிகச்சிறப்பாகத் தெரிந்திருந்தன. முன்னோர்கள் உபதேசித்த தத்துவங்கள், இலக்கியம் மற்றும் நாட்டு நடப்புகளைத் தன் அபாரமான கற்பனைத் திறனுடன் கலந்து நமக்கு வழங்கியிருக்கிறார். ஆண்டாளின் மனோபாவம் கைவந்தால் ஒழிய இதனை எழுதியிருக்க முடியாது; அதை உணரவில்லை என்றால் நம்மால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியாது.
சில உதாரணங்கள்:
”தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்பது ஆண்டாள் வாக்கு. இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதும்போது, ”ஊறெண்ணெய் விட்டாற்போலே யிருக்கை; ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்” என்று போகிற போக்கில், மிக இயல்பாகச் சொல்லிச் செல்கிறார்.
அதாவது, அக்காலத்தில் நம் பாட்டியோ, அம்மாவோ தலையில் எண்ணெய் வைக்கும்போது மொத்தமாக தலையில் கொட்ட மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, தலையில் ஊற ஊறத் தேய்ப்பார்கள். அதுபோல நிலத்தில் நீர் நன்றாகச் செரிந்து ஊறும்படி மழை பெய்ய வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார்!
’புள்ளும் சிலம்பினகாண்’ என்பதற்கு உரை எழுதினால் ‘பறவைகள் சத்தம் ஒலித்தன பார்’ என்று எழுதலாம். ஆனால் அங்கே புள்ளு’ம்’ என்று ’உம்’ ஏன் வந்தது என்று ஆராய்கிறார். அப்படி என்றால், அதற்கு முன் அவர்கள் ஏதோ பேசியிருக்க வேண்டும் என்று நமக்கு ஓர் உரையாடலை பெரியவாச்சான் பிள்ளை கற்பனையாக எடுத்துக் கொடுக்கிறார். அவர் உரையைக் கொண்டு அடியேன் நாடக வடிவில் இப்படி அமைத்தேன்:
தோழி: "நன்றாக விடிந்துவிட்டது, எழுந்திரு! நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்."
புல்லகலிகா: "நீங்கள் விடிந்துவிட்டது என்கிறீர்கள். உங்களை எப்படி நம்புவது? அதற்கு என்ன அடையாளம்?"
ஆண்டாள்: "அடியே! நாங்கள் எழுந்து வந்ததே உனக்கு அடையாளமாகத் தெரியவில்லையா?"
புல்லகலிகா: "நீங்கள் எல்லோரும் தூங்கினால்தானே எழுந்திருப்பதற்கு? கண்ணனைக் காதலிப்போருக்கு ஏது தூக்கம்? அதனால் நீங்கள் எழுந்து வந்தது விடியலுக்கு அடையாளமாகாது."
ஆண்டாள்: "உங்கள் வீட்டு மரங்களில் உள்ள அறிவற்ற பறவைகள் ஆரவாரத்துடன் இரை தேடச் செல்ல, அறிவுள்ள நாம் ஆர்வத்துடன் இறை தேடச் செல்ல வேண்டாமா? பறவைகளின் ஆரவாரம் உனக்கு அடையாளமாகத் தெரியவில்லையா? சீக்கிரம் வா."
இன்னொரு உதாரணம் கொடுக்கிறேன். ”கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்” என்ற வரியை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு ’எல்லா இடங்களிலும் ஆனைச்சாத்தன் குருவிகள் கீசு கீசு என்று ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன’ என்று எளிமையாக எழுதிவிடலாம். ஆனால் இங்கே பெரியவாச்சான் பிள்ளை ஒரு துப்பறிவாளர் போல ஆண்டாள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று நமக்குக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்.
இதற்கு பெரியவாச்சான் பிள்ளை இப்படி எழுதியிருக்கிறார்:
“போது விடிந்தது, எழுந்திராய்" என்ன, 'விடிந்தமைக்கு அடையாளம் என்?' என்ன; ஆனைச்சாத்தன் கீசு கீசு என்னாநின்றது - (கீசு) அநக்ஷரரஸமாயிருக்கை; "ஓரானைச்சாத்தன் பேசுங்காட்டில் போதுவிடிந்ததாக வேணுமோ?" என்ன, 'எங்கும் பேசாநின்றது' என்ன, அவற்றைக் கலக்குகைக்கு நீங்களுண்டே' என்ன, ‘எங்களாலன்று. தாமே உணர்ந்தன’ என்ன; ’அதுக்கு அடையாளம் என்?' என்ன; (கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ' 'கலந்து பேசினபடி அறிந்தபடியென்?' என்ன. -பிரிந்துபோனால் பகலெல்லாம் தரிக்கும்படி கலந்து 'பிரியப் புகாநின்றேம்' என்னும் தளர்ச்சி தோற்றப் பேசுகிற மிடற்றோசை கேட்டிலையோ? 'கேளாமைக்கு அங்கே ஆரவாரமுண்டாயாகாதே செல்லுகிறது' என்று மர்மம் சொல்லுகிறார்கள். 'கேட்டிலையோ') என்று.....
ஏன் ‘எங்கும்’ என்ற வார்த்தையை ஆண்டாள் பயன்படுத்தினாள்? வெளியே இருப்பவர்கள் 'விடிந்துவிட்டது' என்று சொல்ல, உள்ளே இருக்கும் பெண் "ஏதோ ஒரு ஆனைச்சாத்தன் கத்தியிருக்கும்" என்று அலட்சியமாகப் பதில் சொல்கிறாள். அதற்கு வெளியே இருப்பவர்கள், "ஒன்று அல்ல, எங்கும் ஆனைச்சாத்தன் சத்தம் கேட்கிறது" என்று பதில் சொல்வதாகப் பெரியவாச்சான் பிள்ளை விளக்கமளிக்கிறார். இங்கே ஆண்டாளின் சொல்லாட்சியை வியப்பதா அல்லது பெரியவாச்சான் பிள்ளையின் நுண்ணறிவை வியப்பதா என்று தெரியவில்லை! ஆனைச்சாத்தன் பசுக்களின் மீது உட்காரும் என்ற எங்கோ படித்த விஷயத்தையும் கலந்து இப்படிக் கொடுத்தேன்.
பத்மா: "விடிவதற்கு முன்பே ஏன் வீட்டுக் கதவை இப்படித் தட்டுகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் தூக்கமே கிடையாதா?"
ஆண்டாள்: "இப்படி எதிர் கேள்வி கேட்கும் நீயும் தூங்கவில்லை என்பது எனக்குத் தெரியும். விடிந்துவிட்டது, வெளியே வா!"
பத்மா: "அது கிடக்கட்டும் கோதை! விடிந்துவிட்டது என்று எப்படிச் சொல்லுகிறாய்? என்ன அடையாளம்?"
ஆண்டாள்: "உங்கள் வீட்டு வாசலில் உள்ள பசுக்களின் மீது உட்கார்ந்திருக்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் செவிக்கு இனிய 'கீசு கீசு' என்ற ஒலி உனக்குக் கேட்கவில்லையா? ரிஷிகளும் முனிவர்களும் 'ஹரி ஹரி' என்று சொல்லுவதைப் போல், இவைகள் 'கிருஷ்ண கிருஷ்ண' (கீசு கீசு) என்று பேசிக்கொள்கின்றன. இது விடிந்ததற்கான அடையாளம் தானே?"
பத்மா: "கோதை! உனக்கு எல்லாமே கிருஷ்ணன் தான். கீசு கீசு என்பது கூட உனக்கு கிருஷ்ணா கிருஷ்ணா என்றுதான் கேட்கும். தினமும் எங்கள் வீட்டுப் பசுவைத் தேடி வரும் இந்த ஓர் ஆனைச்சாத்தன் கத்தினால் விடிந்துவிட்டதாக அர்த்தமாகுமா?"
ஆண்டாள்: "அடியே! வெளியே வந்து பார்! ஓர் ஆனைச்சாத்தன் அல்ல, எங்கும் ஆனைச்சாத்தன் போடும் கீசு கீசு சத்தம் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா?"
பத்மா: "என்னை எழுப்ப வரும் வேகத்தில், நீங்கள் தான் அவைகளை 'எங்கும்' எழுப்பிவிட்டிருப்பீர்கள். உங்களுக்குத் தான் யாரும் தூங்கினால் பிடிக்காதே!"
ஆண்டாள்: "மறுபடியும் ஆரம்பித்துவிட்டாயா? அவை உன்னைப் போல் அல்ல, தானாகவே எழுந்து ஒன்றோடு ஒன்று கலந்து பேசுவது (பேச்சரவம்) உனக்குக் கேட்கவில்லையா?" பத்மா: "இரவெல்லாம் தூங்கிவிட்டு, அவை பொழுது விடியும் போது ஏன் கலந்து பேசிக்கொள்ள வேண்டும்? அப்படி என்னதான் பேசிவிடப் போகிறது? அப்படியே பேசினாலும் உனக்கு அதில் என்ன புரிந்துவிடப் போகிறது?"
ஆண்டாள்: "அடியே! மரக்கலத்தில் ஏறிக் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், மீண்டும் கரை திரும்பும் வரை தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்வதைப் போல, பகல் பொழுது முழுவதும் நீடிக்கப் போகும் பிரிவைத் தாங்குவதற்குத் தேவையான மனவலிமையை, இப்பறவைகள் இப்படித் தங்களுக்குள் கலந்து பேசித் திரட்டிக் கொள்கின்றன. பிரிவின் ஏக்கத்தில் அவற்றின் குரல்வளையிலிருந்து வரும் அந்த 'மிடற்றோசையை' நன்றாகக் கேள் பெண்ணே! இது விடியலுக்கான அடையாளம் தானே? அவை என்ன பேசுகின்றன என்று உனக்குப் புரிய வேண்டாம்; ஆனால் அவற்றின் ஏக்கக் குரலைக் கேட்டவுடனேயே, தாமதிக்காமல் கண்ணனிடம் சென்று அவன் அருகில் நிற்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?"
இன்றைய 'ரீல்ஸ்' குழந்தைகளுக்கும்; 'எக்ஸ்' பெரியவர்களுக்கும், பரமகாருணிகரான ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அருளிய திருப்பாவையின் "மூவாயிரப்படி" உரையை படிப்பார்களா என்று தெரியவில்லை. இன்று இதை எழுதுவதற்கு காரணம், உங்களில் சிலராவது பெரியவாச்சான் பிள்ளை உரைகளை தேடி, காலட்சேபம் கேட்டு பயன் பெற வேண்டும் என்பது தான். நிச்சயம் அது வேறு அனுபவமாக இருக்கும்.
அடியேன் இந்த முப்பது நாளும் ‘ஆண்டாளும் தோழிகளும்’ என்ற தலைப்பில் எழுதியதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் பொறுத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
சிலர் புத்தகமாக போடுங்கள் என்கிறார்கள். சில பிரதிகளாவது போடும் எண்ணம் இருக்கிறது. ஆண்டாள் மனது வைத்தால் நடக்கும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் திருவடிகளே சரணம்
-சுஜாதா தேசிகன்
17.1.2026
Comments
Post a Comment