Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - ஏற்ற கலங்கள - (பாசுரம் 21)

ஆண்டாளும் தோழிகளும் - ஏற்ற கலங்கள - (பாசுரம் 21)




(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். அப்போது நப்பின்னை ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்க, ஆண்டாள் ‘எங்களுக்கு உக்கமும் தட்டொளியும் கொடுத்து, உன் மணாளனுடன் எங்களை நீ நீராட்ட வேண்டும்’ என்கிறாள். அப்போது நப்பின்னை, “என்னைப் பற்றின பின்பு உங்களுக்கு ஒரு குறையும் கிடையாது” என்று கூறி, மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள். ஆண்டாளும் தோழிகளும், நப்பின்னையை வணங்கி அவளை வரவேற்கிறார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம் குடிகொண்டுள்ளது.)

நப்பின்னை: "என் அருமைத் தோழிகளே! என்னைச் சரணடைந்த உங்களுக்கு இனி ஒரு குறையும் வராது; கிருஷ்ண அனுபவத்தைப் பொறுத்தவரை நானும் உங்களில் ஒருத்திதான். எனவே, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கண்ணனை எழுப்புவோம்."

ஆண்டாள்: "நப்பின்னை நங்காய்! எப்படி எழுப்புவது என்று நீங்கள் தான் இனி எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்."

நப்பின்னை: "கோதை! கண்ணனை விரும்பாத பகைவர்கள், அவனது வீரத்தைக் கண்டு பயந்து அவனிடம் தோற்றுப் போய் வந்து நிற்பார்கள். ஆனால் கண்ணனையே விரும்பும் நாமோ, அவனது எளிய குணத்தைக் கண்டு அவனிடம் தோற்றுப் போய் நிற்கிறோம்! இதைச் சொல்லி அவனை எழுப்பலாமே!"

புல்லகலிகா: "மிகவும் நல்ல யோசனை!"

(தோழிகள் எல்லோரும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனை எழுப்புகிறார்கள்)

[ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப]

ஆண்டாள்: "கண்ணா! உன் கருணை எத்தகையதோ, அத்தகையதே உன்னுடைய கரங்கள் பட்ட இந்தப் பசுக்களின் வள்ளல் தன்மையும்!

பால் கறப்பதற்காகக் கொண்டு வரப்படும் பாத்திரங்கள் (கலங்கள்) எத்தனையோ, அவை அத்தனையும் இப் பசுக்களின் மடியில் வைத்த மாத்திரத்திலேயே பொங்கி வழிகின்றன இங்கே பாத்திரம் கொண்டு வராதவர்களிடம் தான் குறை இருக்கிறதே தவிர, கொண்டு வந்த பாத்திரங்கள் எதுவும் நிறையாமல் திரும்புவதே இல்லை. அப்படி ஏதாவது ஒரு பாத்திரம் நிறையவில்லை என்றால், அது சுரக்கும் பாலின் குறையல்ல; வாங்குபவனின் தகுதிக் குறைவு (பாத்திரம் கொண்டு வராதது) தான்!”

[மாற்றாதே பால் சொரியும் வள்ளல்]

சுகபாஷிணி: ”இன்னும் சொல்லப்போனால், கொண்டு வந்த பாத்திரத்தின் அளவைப் பொறுத்து இந்தப் பசுக்கள் பால் சுரப்பதில்லை. சின்னப் பாத்திரமோ அல்லது ஒரு பெரிய கடலையே பாத்திரமாகக் கொண்டு வந்து எதிரே வைத்தாலும் சரி, உன்னைப் போல் தகுதி பாராமல், சிறியவர் பெரியவர் என்று பேதம் பாராமல், உனது எல்லையற்ற கருணையைப் போலவே இந்தப் பசுக்களும் இடைவிடாது அத்தனையையும் நிரப்பி, எதிர் பொங்கி நம்மீது பீறிட்டு அடிக்கும் படி பாலைக் கொடுக்கிறது. பாத்திரம் வைக்கவில்லை என்றாலும் தன் முலைக்கடுப்பாலே மேலே மேலே பாலைச் சொரிந்துக்கொண்டே இருக்கும் வள்ளல் தன்மை கொண்ட பெரும் பசுக்கள் இவை! இப்படிப் பால் மழையை வாரிச் சொரியும் மகா வள்ளல்களான பசுக்கள் நிறைந்த இடமன்றோ இது!"

பத்மா: "உன்னைப் போல் இவை, ‘பிறர்க்குப் பால் கொடுத்தோம்’ என்ற அகங்காரம் இல்லாமல், ‘பால் கொடுப்பது தன் இயல்பு’ என்று நினைப்பவை."

[பெரும் பசுக்கள்]

விசாகா: "உன் கரங்கள் பட்டு வளர்ந்த இந்த வள்ளல் பெரும் பசுக்கள் எல்லாம் பார்ப்பதற்கு யானைக் குட்டி போல் பெரிதாக அல்லவா இருக்கின்றன! ஆனால் ஒரு பெண்ணோ, ஒன்றும் அறியாத சிறுசுகளோ மூக்கனாங் கயிற்றைப் பிடித்து இழுத்துக் கட்டினால், முரண்டு பிடிக்காமல், உன்னைப் போலவே பவ்யமாக இருக்கின்றன."

[ஆற்றப் படைத்தான் மகனே!]

சுகந்தா: "இந்த ஊரில் உள்ள நந்தகோபனின் பசுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவே முடியாது! திருநறையூர் வீதிகளில் கிடக்கும் முத்துக்களை எப்படிக் கணக்கிட்டுச் சொல்ல முடியாதோ, அதுபோல ஆயர்பாடியில் நந்தகோபனின் பசுக்களைக் கணக்கிட முடியாது!"

ஆண்டாள்: "கண்ணா! உன் தந்தை நந்தகோபன் சேகரித்த இந்த ஐசுவரியம் சாதாரணமானது அல்ல. நீ இங்கே வந்து பிறந்த பிறகுதான் இந்தச் செல்வத்திற்கே ஒரு முழுமை கிடைத்தது. உனக்கு வைகுண்டத்தில் இருக்கும் பரமபதச் செல்வத்தைக் காட்டிலும், இங்கே ஆயர்ப்பாடியில் நந்தகோபரின் மகனாகப் பிறந்து நீ பெற்ற இந்தச் செல்வமே மிக உயர்ந்தது.

உன் செல்வச் செழிப்பிலும், ஐசுவரியப் பெருக்கிலும் நீ திளைத்திருப்பதால் எங்களை நினைக்க உனக்கு நேரமில்லாமல் போய்விட்டது போலும். உனது அந்த ஐசுவரியச் செருக்கினால், வெளியே நின்று நாங்கள் எழுப்பும் இந்த அபயக்குரல் உன் காதுகளில் விழவில்லையோ? உன் செல்வத்தைப் பார்க்காதே கண்ணா... நீ பிறந்த இந்தக் குலத்தின் பண்பைப் பார்!

[அறிவுறாய்]

பூர்ணா: ”ஏற்கனவே உன்னிடம் அகப்பட்டுக் கொண்ட எங்களை உன் குணங்களையே முற்றிலும் உன் வசமாக்கிக் கொண்டாய். இப்போது எங்களை அப்படியே விட்டுவிட்டு, இன்னும் உன்னிடம் அகப்படாமல் இருப்பவர்களையும் உன் வசப்படுத்துவதற்காக, தூங்குவது போலச் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய் போலும்! அளவில்லாத செல்வத்தை உடைய நந்தகோபரின் மகனே! எழுந்திராய்!"

[ஊற்றம் உடையாய்!]

ஹேமலதா: "கண்ணா! நீ உறுதியானவன்! அதில் ஆச்சரியம் இல்லை, உன்னை அண்டியவர்களையும் காப்பாற்றுவதில் உறுதியோடு வைத்திருப்பவனே!"

[பெரியாய்! ]

தனநிஷ்டா: "கண்ணா! நீயே இவ்வுலகங்கள் எல்லாவற்றிலும் பெரியவன்! உன்னை வேதங்களாலும் காண முடியாத பெரியவன்! நான்மறைகள் உன்னை இன்னும் தேடிக்கொண்டு இருக்கின்றன என்று கேள்விப்பட்டோம்! அப்படிப்பட்ட பரம்பொருள் நீ!"

[உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்]

ஆண்டாள்: "உன் மேன்மை வெறும் வேதப் புத்தகங்களிலும் ஓலைச்சுவடிகளிலும் மட்டும் இருந்துவிடக் கூடாது என்று, எங்களைப் போல் சாதாரண ஆயர் குலத்தவர்கள் காணும்படி, எங்களைக் காக்க இங்கே வந்து பிறந்திருக்கிறாய்!

நாங்கள் பிறக்கும் போது முந்தைய வினைகள் (கர்மங்கள்) நம்முடன் ஒட்டிக்கொள்கின்றன. அதனால் குறையோடு பிறக்கிறோம். ஆனால் நீ அப்படி இல்லையே! எங்களைக் காக்க வேண்டும் என்ற உன் விருப்பத்தால் அவதரிக்கிறாய்! இங்கே பிறந்தாலும் உனக்கு எந்த தோஷமும் இல்லை! மாறாகச் சாணைக்கல்லில் தேய்க்கத் தேய்க்க மாணிக்கம் எப்படி ஒளிவீசுமோ, அது போலப் பிறக்கப் பிறக்க அதிக ஒளியுடன் திகழும் பிரகாசமானவனே! எங்களுக்காகத் துயில் எழுந்து வாராய்!

நப்பின்னை: "கண்ணா! நீ பிறந்து படைத்த செல்வமும், படாதபாடு பட்டுச் சேர்த்த குணங்களும் மழுங்கி விடும் போல இருக்கிறது! துயிலிருந்து வெளியே வா!"

(உள்ளிருந்து கண்ணன், மெதுவாகப் பேசுகிறான்)

கண்ணன்: "பெண்களே! நீங்கள் வந்தது எல்லாம் சரி. இதோ எழுந்து கொள்கிறேன். வந்த காரியம் என்ன?"

[மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்]

ஆண்டாள்: "கண்ணா! எதிரிகள் உன் மிடுக்குக்குத் தோற்று, போவதற்கு வேறு இடமில்லாமல் உன் திருவடிகளில் வந்து விழுவது போல, நாங்களும் வேறு புகலிடம் இல்லாமல் உன் வீட்டு வாசற்படியில் விழுந்து கிடக்கிறோம்!

கண்ணன்: "நீங்கள் எப்போது எனக்கு எதிரி ஆனீர்கள்? என்னை நாராயணன் என்கிறீர்கள். அனைத்துக்கும் இருப்பிடமாக இருக்கிறேன்; அனைத்தையும் என்னுள் கொண்டவன் என்கிறீர்கள். அப்படி இருக்க எனக்கு எப்படி எதிரிகள் இருக்க முடியும்?"

[ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே]

ஆண்டாள்: ”கண்ணா! உனக்கு தெரியாதது இல்லை. ’அடியாவர்களை நிந்தனை செய்வாரை பொறுக்க மாட்டேன்’ என்று நீ தானே சொன்னாய்! அவர்கள் உன் எதிர்கள் அன்றோ ? நேற்று வரை ஹிரண்யனைப் போலவும், ராவணனை போலவும் எதிர் அம்பு கோர்த்து நின்றவர்கள் கதியற்ற காக்கை போல் உன் வீரம் என்னும் வலிமையால் தோற்கடிக்கப்பட்டு, வலிமை இழந்து, வேறு வழியில்லாமல் உன் திருவடியில் வந்து விழுவார்கள். எதிரிகள் உன் அம்புக்கு தோற்று வந்தார்கள் ; நாங்கள் உன் பன்புக்கு (குணங்களுக்கு) தோற்று உன்னிடம் வந்திருக்கிறோம்.

தோழி: "உன் அம்பாவது உடனே கொன்று விடும். உன் குணங்களோ எங்களைச் சித்திரவதை செய்கின்றன."

[போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்]

ஆண்டாள்: "எங்கள் ஆற்றாமையால் உன்னைத் தேடி, எங்களைத் தோற்கடித்த உன் குணங்களைப் போற்றிக்கொண்டு, என் தந்தை பட்டர்பிரான் போல உனக்காகப் பல்லாண்டு பாட நாங்கள் வந்தோம்!"

அங்கண்மா.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
5.1.2026
( ஒரு நாள் தாமதம் மன்னிக்கவும்).

Comments