Skip to main content

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம்

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம்



12வது பாசுரத்தில் ராமனை 'மனதுக்கினியான்' என்று ஆண்டாள் குறிப்பிட்டது, அவளுடைய கோஷ்டியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. இதனால் ஆண்டாளின் கோஷ்டி, கண்ணன் கோஷ்டி மற்றும் ராமர் கோஷ்டி என்று இரண்டாகப் பிரிந்தது.

கோஷ்டி என்றாலே சண்டை இருக்கத்தானே செய்யும்? ஸ்ரீவில்லிபுத்தூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு கோஷ்டியினரும் 'ராமன் வாழ்க', 'கண்ணன் வாழ்க' என்று முழக்கமிட, அங்கே ஒரு சிறிய 'பங்காளிச் சண்டை' ஆரம்பமானது. தோழியரை எழுப்ப எந்தக் கோஷ்டி முதலில் செல்ல வேண்டும் என்பதே அந்தச் சண்டை. விடியற்காலையில் எந்த நீதிபதியும் எழுந்திருக்காத அந்த காலத்தில், இரு கோஷ்டியினரும் பெரியாழ்வாரிடம் சென்று முறையிடலாம் என்று ஒருமனதாக முடிவு செய்து அவரிடம் சென்றார்கள்.

புஷ்பங்களைத் தொடுத்துக்கொண்டிருந்த பெரியாழ்வார், 'கேஸ்' ஓலைச்சுவடிகளைப் பார்த்தார். இதை 'அவுட் ஆப் தி கோர்ட் செட்டில்மெண்ட்' செய்யலாம் என்ற யோசனையில், "சிறுமியர்களே! தொண்டரடிப்பொடி ஆழ்வார் 'அயோத்தி எம்மரசே' என்று பெரிய பெருமாளை ராமராகப் பாடுகிறார்; அதே பெருமாளைத் திருப்பாணாழ்வார் 'கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்' என்று கண்ணனாகப் பாடுகிறார். இரண்டு பெருமாளும் ஒருவரே! உங்களுக்குள் எதற்கு வீண் சண்டை? சமாதானமாகச் செல்லுங்கள்" என்று அறிவுரை கூறினார். ஆனால், நீங்கள் நினைத்தது போலவே அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

"இந்த பஞ்சாயத்தை எப்படியாவது தீர்க்க வேண்டும்; இல்லையென்றால் வைணவக் கோயில்களில் பிற்காலங்களில் பெருமாள் கோஷ்டிகள் உருவாகி, அதுவே பெரும் சண்டையாக உருவெடுக்கும் அபாயம் வந்துவிடும்" என்று அவர் மனதிற்குள் தோன்றியது. "பரதத்துவத்தைப் பெருமாள் கிருபையால் நிறுவினேன், ஆனால் அதைவிட இது கடினமாக இருக்கிறதே!" என்று யோசித்து மேலே பார்க்க, கருடன் மீது தாயாருடன் வேகமாகச் சென்றுகொண்டிருந்த பெருமாளை ’பல்லாண்டு பாடி’ சேவித்தார். பெருமாள் ஆசீர்வதித்துவிட்டு, திரும்ப வருகிறேன் என்று எந்த பக்தனையோ காக்க வேகமாகப் பறந்துகொண்டிருந்தார்.

பெருமாள் ஆசீர்வாதம் பெற்ற பெரியாழ்வார், தன் தீர்ப்பை இப்படி எழுதினார்… .

"ஸ்ரீவில்லுபுத்தூரை கோகுலமாகவே நினைக்கும் ஆயர் சிறுமியர்களே! அடியேன் கொடுக்கவுள்ள தீர்ப்பை நீங்கள் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்திருந்தாலும், உங்கள் மொத்த கோஷ்டியும் இந்த இடத்தைத் திருவாய்ப்பாடியாகவும், உங்களைக் கோபியர்களாகவும் பாவித்தே பாவை நோன்பு நோற்கப் புறப்பட்டுள்ளீர்கள். நடுவில் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் இங்கே வந்துள்ளீர்கள். ஆயர்பாடியில் கண்ணனுக்கே முதலிடம்; அதுபோல அயோத்தியில் ராமனுக்கே முதலிடம். எனவே, கண்ணன் கோஷ்டி முன்செல்ல, ராமர் கோஷ்டி பின்னால் செல்ல வேண்டும்" என்று விடியற்காலையில் தீர்ப்பு வழங்கினார்.

இரு கோஷ்டியினரும் அவர் திருவடிகளில் விழுந்து ஆசி பெற்றனர். "பெரியாழ்வாரே சொல்லிவிட்டார், இனி இதற்கு மேல் நமக்கு சுப்ரீம் கோர்ட் எல்லாம் கிடையாது" என்று கூறி, மேல்முறையீடு செய்யும் யோசனைகளை நிராகரித்தனர். பிறகு, "பட்டர்பிரான் அவர்களே! நீங்களே எங்கள் கோஷ்டிக்கு உங்கள் கையால் கோஷம் எழுதிக்கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

"அதற்கென்ன, செய்துவிட்டால் போச்சு!" என்று பெரியாழ்வார் திருமொழியில் (3.9.1 முதல் 3.9.11 வரை) கண்ணன், ராமன் என மாறி மாறி (Alternative) அமையும்படி ’பாடிப் பற’ என்று பாடிக்கொடுத்தார். கோகுலம் என்பதால் கண்ணனில் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் 50% கிருஷ்ண நாமம், 50% ராம நாமம் இருப்பதாகவும் கூறியவர், சிறுமியர்களே, கண்ணன், ராமன் என்று இரண்டையும் சேர்த்துப் பாடினால் உங்களுக்கு ஏற்படும் நன்மையை 11-ஆம் பாசுரத்தில் பாடியிருக்கிறேன்" என்று கூறி, தீர்ப்புக்குப் பின் 'இணை ஆவணங்கள்' என்ற பகுதியில் அதைச் சேர்த்துக் கொடுத்து, அந்தப் பாசுரத்தைப் படித்துக் காண்பித்தார்:

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென்புதுவை விட்டுசித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே.

(பொருள்: நந்தகோபன் மகனான கண்ணனையும், தசரதன் மகனான ராமனையும் ஒளிவீசும் ஆபரணமணிந்த பெண்கள் மாறி மாறி புகழ்ந்து பேசியதைப் பெரியாழ்வார் அருளிச் செய்த இந்தப் பத்து பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குத் துன்பம் இல்லை).

"Sd/- விட்டுசித்தன் alias பட்டர்பிரான்" என்று கையொப்பமிட்டு தீப்பு ஓலைகளைக் கட்டுக் கொடுத்தார்.

அவர்கள் கிளம்பும்போது ஆண்டாளை தனியாக அழைத்து, "அம்மா கோதை! 12-ஆம் பாசுரத்தில் 'மனதுக்கினியான்' என்று பாடிப் பிரச்சினையாகிவிட்டது, அடுத்த 13-ஆம் பாசுரம் என்ன?" என்று கேட்டார். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான ஆண்டாள் ( 8’, 16’ ) சற்று யோசித்து:

“புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப்போய்”

என்கிறாள்.

இதைக் கேட்ட பெரியாழ்வார், "அடடா கோதை! பறவை உருவில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த கண்ணனைக் குறிப்பது போலவும் இருக்கிறது; அதே சமயம் ஜடாயு என்ற பறவையை வதைத்த பொல்லா அரக்கனான ராவணனை அழித்த ராமனைப் புகழ்வது போலவும் இருக்கிறது! உன் சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டாய்!" என்று வியந்தார்.

“பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரானான என் தந்தையும் ஆசாரியருமான உங்கள் ஆசீர்வாதம் தான்!” என்று வணங்கிவிட்டு கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டாள்.

சிங்கிள் நீதிபதியை மதிக்கத் தெரிந்த அந்தச் சிறுமியர்கள், 'பெஞ்சுக்கு' எல்லாம் போக விரும்பாமல், அடுத்த தோழியை எழுப்ப வேகமாகச் சென்றார்கள்.

-சுஜாதா தேசிகன்
28.12.2025

Comments