Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - நாயகனாய் - 16

ஆண்டாளும் தோழிகளும் - நாயகனாய் - 16



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா, பூர்ணா, சுகபாஷிணி) ஆயர்பாடியில் உள்ள சிறுமியர்கள் எல்லோரையும் எழுப்பிவிட்டார்கள். யாரையெல்லாம் எழுப்ப வேண்டும் என்ற பட்டியல் அவர்கள் கையில் இருக்கிறது. இப்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நந்தகோபனுடைய திருமாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கே முதலில் அரண்மனையைக் காப்பவனையும், பிறகு வாசல் காப்பவனையும் எழுப்பி அனுமதி பெறச் செல்கிறார்கள்.)

(காட்சி: நந்தகோபன் இல்லம் அருகே வெளிச்சம் குறைவாக, பனி படர்ந்து இருக்கிறது. ஆண்டாளும் தோழிகளும், சற்றுத் தூரத்தில் கொடிகளுடன் கம்பீரமாகக் காணப்படும் அரண்மனையை நோக்கிப் போகிறார்கள். அரண்மனை வாசலில் ஒரு காவலாளியும், உள்ளே தோரணம் கட்டிய வாசலில் ஒரு காவலாளியும் கையில் வேலுடன் காவல் காக்கிறார்கள்.)

சுகபாஷிணி: "கோதை! நாம் கண்ணனைத் தானே எழுப்பப் போகிறோம்? அதற்கு முன் ஏன் இந்தக் கோயில் காப்பவர்களிடம் அனுமதி பெற வேண்டும்? நாம் பாட்டுக்கு உள்ளே சென்றால் அவர்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை!"

ஆண்டாள்: "அடியார்களை முன்னிட்டுக்கொண்டு கண்ணனைப் பற்றுவது தானே முறை! நம் பெரியோர்கள் செய்யாத செயல்களைச் செய்யமாட்டோம் என்று நாம் நோன்புக்கு முன் சங்கல்பம் செய்தோம் அல்லவா? அதனால் அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும். அது தான் முறை”

(ஆண்டாளும் தோழிகளும் மாளிகை வாசலை அடைகிறார்கள்)

[நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!]

புல்லகலிகா: "எங்கள் நாயகனான நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! மணிக்கதவைத் திறக்க வேண்டும்!"

(காவலாளி பதில் ஏதும் சொல்லாமல் இருக்க)

பத்மா: (எப்படிக் கூப்பிடக் கூடாது… என்று முணுமுணுத்தபடியே) "நந்தகோபன் அரண்மனைக்குக் காவலாய், எங்களுக்கு நாயகனாய் இருப்பவனே! கதவைத் திறக்க வேண்டும்!"

சுகந்தா: (முணுமுணுத்தபடி கேட்கிறாள்) "ஏண்டி! சர்வலோகத்துக்கும் நம்முடைய நாயகன், அந்தக் கண்ணன் தானே? அப்படி இருக்க நந்தகோபனை நாயகன் என்கிறாள் ஒருத்தி, இன்னொருவளோ காப்பவனை நாயகன் என்கிறாள். இது சரியா?"

ஆண்டாள்: "இருவர் சொன்னதும் சரி தான்! 'நந்தகோபனின் மகன்' என்று தன்னைச் சொல்லிக்கொள்வதில் தான் கண்ணன் பிரியப்படுகிறான். கண்ணன் என்ற மாணிக்கத்தை நமக்குக் கொடுக்கப் போகும் நந்தகோபன் நமக்கு நாதன் (நாயகன்) தானே! அதனால் தப்பில்லை. அதேபோல், கண்ணனை அடைய நமக்கு உதவுபவர்களும் நாயகர்கள் தான்! இந்த அரண்மனை மற்றும் தோரண வாயில் காப்பவர்களை நமக்கு நாயகன் என்று சொல்லுவதிலும் தவறில்லை."

சொர்ணலேகா: "மிகச் சரியான வார்த்தை! உயர்ந்த பெருமாள் என்ற ரத்தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும், அதை நமக்கு காட்டிக்கொடுக்கும் ஆசாரியனைக் கொண்டாடுவது போல் இது!"

ஆண்டாள்: "அதுமட்டுமல்ல, வாயில் காப்போரிடம் அனுமதி பெறாமல், நேரே சென்று ராமனை அடைய முயன்ற சூர்ப்பணகைக்கு என்ன கதி ஏற்பட்டது என்று நமக்கு எல்லாம் தெரியும் அல்லவா?"

ஹேமலதா: "கோதை! எனக்கு ஒரு சந்தேகம். நாம் அவர்களைக் 'கோயில் காப்பான்', 'வாசல் காப்பான்' என்று வேலைக்காரர்களைப் போல அழைப்பது மரியாதைக் குறைவு இல்லையா? இது தப்பில்லையா?"

ஆண்டாள்: "கோயிலில் பெருமாளுக்குக் அர்ச்சனை செய்பவர்களை ‘அர்ச்சகர்’ என்று கூப்பிட்டால் தானே அவர்களுக்குப் பிடிக்கும்? அதுபோல, கையில் கூர்வேலுடன் கண்ணனைக் காக்கும் நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவர்கள் இவர்கள். அதனால் அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால் தான் இவர்களுக்குப் பிடிக்கும். இப்படிக் கூப்பிடும் இந்தப் பெயர்களில் 'பகவானுடைய கைங்கரியச் செல்வம்' என்ற சம்பந்தம் ஒளிந்துகொண்டு இருக்கிறது!"

தனநிஷ்டா: "கோதை! நீ சொல்லுவது மிகச் சரி. எல்லா கைங்கரியங்களையும் செய்யும் அனந்தனை, கைங்கரியச் சிறப்பால் தானே 'ஆதிசேஷன்' என்று அழைக்கிறோம்!"

ஆண்டாள்: "சரி வாருங்கள், நாம் எங்கோ நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் அனுமதி கேட்டது அந்த அரண்மனை வாயில் காப்பான் காதில் விழவில்லை போலும்!"

(ஆண்டாளும் தோழிகளும் சற்று அருகே சென்று குரல் கொடுக்கிறார்கள்)

தனநிஷ்டா: "அரண்மனையைக் காப்பவனே! தகுதியற்றவர்களைத் தடுக்கவும், தகுதியுள்ள எங்களை உள்ளே விடவும் தானே நீ காவல் இருக்கிறாய்? எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டுகிறோம்!"

(அரண்மனை காப்பவன் ‘நீங்கள் செல்லலாம்’ என்று கண்ணால் சைகை செய்ய, சிறுமியர்கள் எல்லாம் சந்தோஷமாக உள்ளே புகுந்தார்கள். உள்ளே இருட்டாக இருக்கிறது.)

[கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே!]

சுலோச்சனா: "ஏண்டி! இங்கே ஏகப்பட்ட வாசல் இருக்கிறது. எல்லாவற்றிலும் காவலுக்கு ஆளும் இருக்கிறார்கள். நாம் எந்த வாசலுக்குள் நுழைய வேண்டும்?"

ஆண்டாள்: "கோடையில் தண்ணீர் பந்தல் என்று அடையாளப்படுத்தக் கொடியும் தோரணமும் கட்டி வைப்பது போல, நாம் இருட்டில் வந்து தடுமாறக் கூடாது என்று நந்தகோபன் கொடியும் தோரணமும் கட்டி வைத்திருக்கிறார்! அதோ அந்த வாசல் தான்!"

[மணிக்கதவம் தாள் திறவாய்]

ஹேமலதா: "அந்தக் கதவு இருட்டில் கூட அதன் மணிகளால் என்ன அழகாக ஜொலிக்கிறது! இந்தக் கதவைத் திறக்கவே வேண்டாம், அதன் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் அல்லவா இருக்கிறது!"

ஆண்டாள்: மணிக் கதவு உள்ளே போகாமல் தடுக்கிறது; ஆனால், உள்ளே சென்றவர்களை வெளியேற விடாமல் தடுப்பவனோ மணிவண்ணன்!

(ராமனைத் தேடிக்கொண்டு சென்ற பரதன், மரவுரி மற்றும் புகையைக் கொண்டு ராமன் இருக்கும் இடத்தை அடைந்தது போல், ஆண்டாளும் தோழிகளும் அந்தக் கொடியும் தோரணமும் கட்டிய வாசல் அருகே சென்றார்கள். வாசல் காப்பவன் உருவம் தெரிந்தது. இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லை.)

பூர்ணா: "கொடியும், தோரணமும் கட்டியிருக்கும் வாசலைக் காப்பவனே! உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி வேண்டும்! இந்த அழகிய மணிக் கதவை எங்களுக்குத் திறந்துவிட வேண்டும்!"

வாயில் காப்பவன்: "யார் அங்கே? பயம் நிறைந்த இந்த நாட்டில் நடுராத்திரி இப்படி வந்து கதவைத் திறக்கச் சொல்கிறீர்களே! நீங்கள் எல்லாம் யார்?"

(அவனுக்கு இன்னும் விடியவில்லை, அதனால் நடுராத்திரி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான். இருட்டில் யார் என்றும் தெரியவில்லை).

சுகபாஷிணி: "வாயில் காப்பானே! பயத்தை எல்லாம் போக்கும் இடத்தில் (கண்ணன் இருப்பிடத்தில்) வந்து நின்று பயம் என்று சொல்லுவது விந்தையாக இருக்கிறதே!"

வாயில் காப்பவன்: "என்னம்மா பண்றது! காலம் கெட்டுக் கிடக்கிறது! இது தசரதன் ஆண்ட, சமத்துப் பிள்ளைகளும், ‘வெல்ல முடியாத’ என்று பெயர் பெற்ற அயோத்தியாகவோ அல்லது திரேதாயுகமாகவோ இருந்திருந்தால் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நாம் இருக்கும் காலம் அப்படியா? இன்னும் சில காலத்தில் 'கலி' கதவைத் தட்டி நுழையப்போகும் துவாபரயுகம் அல்லவா? நந்தகோபர் சாது. இப்போது தான் அவர் துருப்பிடித்திருந்த தன் வேலைக்கு எண்ணெய் போட்டு, தீட்டி வைத்திருக்கிறார். பிள்ளைகளோ குரும்புச் சிறுவர்கள், ஊரோ இடைச்சேரி, தயிரைக் கடைவது தவிர வெறு ஒன்று அறியாதவர்கள். கம்சன் என்ற சத்ரு வேறு. பயம் இல்லாமல் இருக்குமா?"

[ஆயர் சிறுமியரோமுக்கு]

புல்லகலிகா: "வாயில் காப்பானே! நீங்கள் சொல்லுவது சரி தான்! ஆனால் நாங்கள் 'கலி' புருஷர்கள் இல்லை! சாதாரணப் பெண்கள்! நீங்கள் பயப்பட வேண்டாம்!"

வாயில் காப்பவன்: "அப்படிச் சொல்ல முடியாது. சூர்ப்பணகை யார்? அவளும் பெண் தானே?"

பத்மா: "வாயில் காப்பானே! நாங்கள் அரக்கி இல்லை! ஆயர் சிறுமியர்கள்! அஞ்ச வேண்டாம்!"

வாயில் காப்பவன்: "பூதனையும் இடைச்சி தானே! இப்போது எல்லாம் இடைச்சிகளைக் கண்டு தான் பயப்பட வேண்டியிருக்கிறது!"

சுகந்தா: "வாயில் காப்பானே! நாங்கள் ஐந்து லட்சம் சிறுமியர்கள் ஒன்றாக வந்திருக்கிறோம். பூதனைப் போல் தனியாக வரவில்லையே! எங்கள் முகத்தையும், பருவத்தையும் பார்த்தாலே நாங்கள் அப்பாவிகள் என்று புரியுமே!"

வாயில் காப்பவன்: "இருட்டில் உங்களை எல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இடைப்பெண்கள் தான் என்று எனக்கு எப்படித் தெரியும்?"

விசாகா: (சற்று அவன் அருகில் சென்று) "வாயில் காப்பானே! முகம் தெரிய வேண்டாம். எங்களிடமிருந்து வரும் பால், தயிர், மோர் போன்றவற்றின் வாசம் (முடைநாற்றம்) கூடவா உனக்குத் தெரியவில்லை?"

வாயில் காப்பவன்: "வாசனை வருகிறது தான்... இருந்தாலும் உங்களை எல்லாம் நம்ப முடியாது! சரி சரி, வந்த காரியம் என்ன?"

[அறை பறை]

ஆண்டாள்: "நாங்கள் நோன்புக்குச் சத்தம் போடும் 'பறை' வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று வந்தோம்."

வாயில் காப்பவன்: "அப்படியா? அதற்கு எதற்கு இந்த அவசரம்? கண்ணன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அவன் எழுந்த பிற்பாடு வாங்கித் தருகிறேன். அதுவரை இங்கே ஓரமாக நின்றுகொண்டு இருங்கள்! அல்லது போய்விட்டு விடிஞ்சா விட்டு வாங்க"

ஆண்டாள்: "வாயில் காப்பானே! உனக்குத் தெரியாதா? நேற்றே எல்லோரும் இருக்கும் சபையில் வைத்து இந்த நேரத்துக்கு வரச் சொல்லியிருக்கிறான். நாங்களும் வருகிறோம் என்று அவனுக்கு வாக்களித்துள்ளோம்!"

வாயில் காப்பவன்: "யார் வரச்சொன்னது?"

[மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்]

ஆண்டாள்: "வாயில் காப்பானே! உமக்கு விஷயமே தெரியாதா? இப்போது நாங்கள் உன் காலைப் பிடித்துக் கெஞ்சுவது போல, நேற்று அந்த மாயன், மணிவண்ணன், கண்ணன் எங்கள் கால்களைப் பிடித்து இந்த நேரத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சினான்!"

வாயில் காப்பவன்: "கண்ணன் உங்களுக்கு உதவி செய்யட்டும். ஆனால், எங்களை இங்கே காவலுக்கு வைத்திருப்பதே யாரையும் அவ்வளவு எளிதாக உள்ளே விடக்கூடாது என்பதற்குத் தானே? உங்களை நான் தீர விசாரிக்க வேண்டும் என்பது என் பணி அல்லவா? 'பறை' என்று சொல்லிக்கொண்டு வேறு ஏதாவது காரணங்களுக்காக உள்ளே நுழைந்துவிட்டால்?"

[தூயோமாய் வந்தோம்]
ஆண்டாள்: "எங்கள் மனதில் எந்தக் கெட்ட எண்ணமும் இல்லை. நாங்கள் வஞ்சகம் இல்லாத பரிசுத்தமான ஆய்ச்சிறுமிகள். நாங்கள் எங்களது சுயநலத்திற்காக இங்கு வரவில்லை. கண்ணனைத் தவிர வேறு எதையும் நாங்கள் அடையப் போவதும் இல்லை. எங்களுக்கு அவனே தஞ்சம் என்று விபீஷணன் போல் வந்திருக்கிறோம். எனவே, எங்களைச் சந்தேகப்படாமல் உள்ளே அனுப்ப வேண்டுகிறோம்!"

வாயில் காப்பவன்: "நான் எப்படி நீங்கள் எந்தப் பயனும் கருதாமல் வந்தீர்கள் என்று நம்புவது?"

[ துயிலெழப் பாடுவான்]
ஆண்டாள்: "வாயில் காப்பானே! இது என்ன வம்பா போச்சு! விடியற்காலையில் சீதை ராமன் துயிலைக் கண்டு ஆனந்தப்பட்டது போல், நாங்களும் கண்ணனின் உறக்கத்தைக் காண வந்திருக்கிறோம்! அவனுக்கு இனிமையாகத் திருப்பள்ளியெழுச்சி பாடி அவனை எழுப்ப வந்திருக்கிறோம்!"

வாயில் காப்பவன்: "நள்ளிரவில் பெண்களாகிய நீங்கள் ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? தள்ளிப் போங்கள்!" (இங்கிருந்து கிளம்புங்கள் என்ற தோரணையில் பேசுகிறான். இவன் எங்காவது முடியாது என்று சொல்லிவிடுவானோ என்று பயந்து..).

[வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!]
ஆண்டாள்: "வாயில் காப்பானே! எங்களை உள்ளே விட முடியாது என்று உன் வாயால் சொல்லிவிடாதே! உன் மனதுக்குள் எங்களைத் தடுக்க வேண்டும் என்று எண்ணங்கள் இருந்தாலும், அவற்றை உன் வாயால் நெருப்புப் போன்ற சொல்லாகச் சொல்லிவிடாதே. கண்ணனை நாடி வந்த எங்களை நீ இப்படித் தடுத்து நிறுத்தலாமா? எங்களுக்குத் தலைவன், தோழன் எல்லாமே கண்ணன் என்பது தெரியும். ஆனால் அவனிடம் எங்களை அழைத்துச் செல்லும் முதலாவது வாசலே நீதான். அவன் எங்களுக்குத் தருகிறேன் என்று சொன்னாலும், நீ கதவைத் திறந்தால் தானே நாங்கள் உள்ளே போய் அதைப் பெற முடியும்? அந்த அதிகாரமும், எங்கள் வாழ்நாள் உயிரும் உன் கையில் தான் இருக்கிறது! அம்மா!

(அம்மா/அம்ம என்றால் தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்)

விசாகா: "உள்ளே இருப்பவன் எங்களுக்கு நாதன் இல்லை, நீயே எங்களுக்கு நாதன்!"

(இதைக் கேட்ட வாயில் காப்பவன், இனி இவர்களைத் தடுத்தால் அது 'பிராண ஹிம்சை'என்று நினைத்து, கருணையுடன் இரங்கி வருகிறான்.)

வாயில் காப்பவன்: "சிறுமிகளே! நான் உங்களைத் தடுக்கவில்லை, நீங்களே கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்லுங்கள்!" (என்று சைகை காட்டுகிறான்).

[நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்]

ஆண்டாள்: "வாயில் காப்பானே! நீ அனுமதித்தது கூடப் பரவாயில்லை. ஆனால் இந்த இரட்டைக் கதவுகள் கண்ணனிடம் கொண்ட மிகுந்த நேசத்தால் அழுத்தமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அனுமதிக்காது போல இருக்கின்றன!. நாங்கள் அபலைகளான சிறுமிகள். எங்களுக்கு இதைத் திறக்கும் திராணி இல்லை. நீயே உன் திருக்கைகளால் திறப்பாயாக!"

அம்பரமே... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
31.12.2025

Comments