Skip to main content

ஆண்டாளும் தோழிகளும்..

ஆண்டாளும் தோழிகளும்..




இன்று 15.12.2025, திங்கட்கிழமை காலை. பெரியவர்கள் அலுவலக அவசரத்திலும் குழந்தைகள் பள்ளிப் பரபரப்பிலும் இருக்கும் ஒரு சாதாரண நாள்..

'ரீல்ஸ்' குழந்தைகளுக்கும்; 'எக்ஸ்' பெரியவர்களுக்கும், பரமகாருணிகரான ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அருளிய திருப்பாவையின் "மூவாயிரப்படி" உரை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த விச்வாவஸூ மார்கழி ஏ.ஐ. யுகத்தில் பெரியவாச்சான் பிள்ளை உரையை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக, 'ஆண்டாளும் தோழிகளும்..' என்ற தலைப்பில் திருப்பாவையை எடுத்துரைக்க எண்ணம். இதற்கு பெரியவாச்சான் பிள்ளை திருவடியையும் ஆண்டாள் துணையையும் நாடுகிறேன்.

தோரணவாயில் கட்டுவதற்கு முன்னர், ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையைப் பற்றி சில வரிகள்: இவர் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்னர் ஆவணி மாதம் தஞ்சைக்கு அருகிலுள்ள சங்கநல்லூரில் அவதரித்தார்(1167-1262)). சங்கநல்லூரில் இவரைப் பற்றிய வரலாறு அதிகம் கிடைக்கவில்லை.

இவர் திருமலைக்கு யாத்திரை சென்றபோது, அங்கே பெருமாள் இவருக்கு திருவேங்கடமுடையான் விக்ரஹத்தைக் கொடுக்க, அதை சங்கநல்லூரில் பிரதிஷ்டை செய்தார். தாய், தந்தையர் பரமபதம் அடைந்த பிறகு, திருமாலின் கைப்பிடித்து திருவரங்கம் வந்து, நம்பிள்ளையின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்.

நம் ஸ்ரீவைஷ்ணவம் பரவி, இன்று பல உபன்யாசங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் இவரே என்றால் அது மிகையாகாது. மொத்த நாலாயிரத்துக்கும் வியாக்கியானம் அருளியவர் இவரே. அதனால்தான் இவர் 'வியாக்கியான சக்ரவர்த்தி' என்று போற்றப்படுகிறார். பரமகாருணிகர் என்பதைக் காட்டிலும் இவர் பரமரசிகர். சகல சாஸ்திரங்களையும், நாட்டு நடப்புகளையும் உள்ளிணைத்து நமக்கு உரைகளை அருளியுள்ளார்.

பெரியவாச்சான் வாழ்ந்த காலம் வைஷ்ணவத்துக்கே பொற்காலம் எனலாம். இவருக்கு பின் பிள்ளை லோகாசாரியார், வேதாந்த தேசிகன் காலத்தில் துருஷ்கர்களின் படையெடுப்புகளால் பேராபத்துக்கள் நிகழ்ந்தது. ’கிளவுட் ஸ்டோரேஜ்’, ‘கட் & பேஸ்ட்’ இல்லாத அந்த காலத்தில் இந்த ஓலைச்சுவடி வியாக்கியானப் பொக்கிஷங்கள் இன்று நமக்கு கிடைப்பதற்கு காரணம் நம் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களும் அவர்கள் பெருமாளிடம் கொண்ட திட பக்தியும், திடநம்பிக்கையுமே காரணம். நாம் போன ஜென்மத்தில் ஏதோ சில தெருநாய்களுக்கு ஊட்டி வர்க்கியை ஊட்டி விட்டிருக்க வேண்டும் இல்லையேல் இன்று நாம் இந்த உரைகளை ‘ஐ-பேட்டில்’ படித்திருக்க முடியாது.

ஓர் உதாரணம். ஆண்டாளுக்கு ஏன் ஏற்றம் என்பதை பெரியவாச்சான் இப்படி கூறுகிறார் ‘புருஷன் புருஷனைக்கண்டு ஸ்நேஹிப்பதைக்காட்டில் ஸ்திரீ புருஷனைக்கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலே’ என்கிறார். இதில் ’பள்ளமடையாகையாலே’ என்று ஒரு வார்த்தை வருகிறது. அதாவது, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை கூறுவது, ஒரு பெண் ஆடவரைக் காமுறுதல் பள்ளத்தை நோக்கி நீர் பாய்வது போல இயற்கையானது. மற்ற ஆழ்வார்களின் காமம் ( பரகால பராங்குச நாயகி ) மேட்டு மடையாக பெண்ணுடை உடுத்திப் பேசியது. ஆண்டாளின் காமம் இயல்பான பள்ளமடையாகும்.

வாசகர்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைக்கிறேன்.

வடபெருங்கோயில் சுற்றிய ஒரு மாட வீதி. மாலை சூரியன் மெதுவாக மறையத்தொடங்கும் வேளை. கிளிகள் ‘கீச்கீச்’ அங்கும் இங்கும் பறந்து சென்று கோபுரத்தில் உட்கார்ந்துகொள்கிறது.
ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

ஆண்டாள், “நாமும் கோகுலத்தில் கோபிகைளுடன் பிறந்திருக்கலாம்!”

தோழிகளில் ஒருத்தி, “ஆமாம்! கண்ணனை சுலபமாக அடைந்திருக்கலாம்!”

ஆண்டாள், ”சீதைக்கு ஆறு வயதாகும் போது ஜனக மஹாராஜா கவலைப்பட்டது போல, என் தந்தை திருமணத்துக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.. ”

“பூங்கொடி படர்வதற்கு கோலைத் தேடுகிறார் போலும்!”

”ஆண்டாள் யார் அந்த அதிர்ஷ்டகாரன் ?”

“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் என்னால் வாழமுடியாது என்பது உனக்குத் தெரியாதா? கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் என் மனம். சாதாரண கொடி கோல் தேடி ஓடுகிறது. ஆனால் என்னால் கண்ணனைத் தேட முடியவில்லையே! கண்ணனை அடைய வேறு வழியே இல்லையா?”

“தெரியவில்லையே! நம் வடபெருங்கோயிலுடையானிடம் தான் வழி கேட்க வேண்டும்” என்று கோயிலுக்குள் நுழைகிறார்கள்.

இடம் வடபெருங்கோயில் ஓர் மண்டபம். சற்று உயரமான இடத்தில் வயதான உபன்யாசகர் பாகவதத்திலிருந்து கண்ணனை குறித்து மனம் உருகி பேசிக்கொண்டு இருக்கிறார். கண்ணனை அடையத் தான் முடியவில்லை. அவன் கதைகளையாவது கேட்போம் என்று ஆண்டாளும் தோழிகளும் ஆர்வமாக உட்கார்ந்து கேட்க ஆரம்பிக்கிறார்கள். நாமும் ஆண்டாள் அருகில் அமர்ந்து என்ன நடக்கிறது என்று கேட்கலாம்.

உபன்யாசகர், “..... பெண்பிள்ளைகள் தங்கள் விரும்பியபடி கண்ணனை ராஸக்கிரீடையில் அனுபவித்தார்கள். தன் சரீரத்தை கோபிகைகளுக்கு அப்படியே அளித்தான் கண்ணன்….”

ஆண்டாள் தன் தோழிகளிடம் மெதுவாக, “துவாபர யுகத்தில் பிறந்திருந்தால் அந்த கோபிகைகளுடன் நாமும் கண்ணனுடன் சேர்ந்து இருந்திருக்கலாம். ஆனால் என் செய்வது, கலி பிறந்துவிட்டதே!”

அருகில் இருந்த தோழி, “அவன் விளையாடிய திருவடிப் பட்ட இடங்கள் இருக்கிறதே!”

இன்னொருத்தி “அவன் பெண்களுடன் திளைத்த யமுனையும் இருக்கிறதே!”

மற்றொருத்தி, “அவன் எடுத்த கோவர்த்தன மலையும் அங்கே கிடக்கிறது! அதையாவது தரிசிப்போம்!"

ஆண்டாள், “அந்த இடங்கள் எல்லாம் எங்கோ இருக்கிறது என்று எனக்கு என் தந்தை பட்டர்பிரான் சொல்லியிருக்கிறார். நாம் சின்னப் பெண்கள். அங்கே செல்ல நமக்கு ஏது பலம்! ராமனைக் கைபிடிக்க சீதைக்கு ஒரு வில் இருந்தது. நப்பின்னைக்கு ரிஷபங்கள் இருந்தது. நமக்கு என்ன இருக்கிறது!” என்று வருந்தியபோது ஆண்டாளின் துக்கம் கண்களில் தெரிந்தது.

உபன்யாசகர்,
“... திருவாய்ப்பாடியில் கண்ணன் பல கண்ணனாக உருக்கொண்டு ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாக நின்று பெண்களின் கையைப் பற்றிக்கொண்டு அதிரசமான ராசக்ரீடை என்ற குரவைக்கூத்தில் ஈடுபட்டான்! யமுனை நதியின் ஆழத்தில் அழுந்தி இன்பத்தை அனுபவிக்கும் போது… அன்பான கண்ணனின் இணைப்பால் அவர்கள் ஆனந்தம் கொண்டு இருக்கும் வேளையில்… இவர்களுக்கு இன்ப மிகுதியாலே அழிவு ஏற்பட்டுவிடப் போகிறது என்று அஞ்சியக் கண்ணன், அந்த அதிகமான சந்தோஷத்தைக் கலைப்பதற்காக திடீரென்று மறைந்துப் போனான்!...”

ஆண்டாள் செவிகளைத் தீட்டி ஆர்வமாகக் கேட்க, உபன்யாசகர் தொடர்ந்தார்,
“.... கண்ணனை விட்டுப் பிரிந்த ஆயர் சிறுமியர் மனம் கலங்கித் தவித்தனர். கண்ணனைத் தேடிச் சென்றார்கள். அவன் பாத சுவடுகள் தெரிந்தது. ஆனால் கண்ணனைக் காணவில்லை. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தார்கள். அவனைப் பிரிந்து க்ஷண நேரமும் வாழ முடியவில்லை இவர்களால்… இந்நிலையில் என்ன செய்தார்கள் தெரியுமா ?...” என்று உபன்யாசகர் சற்று நிறுத்தி அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்தார்.

ஆண்டாளும் தோழிகளும் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக இருக்க, உபன்யாசகர்,
“.. அச்சிறுமியர் தங்கள் உயிர் தரிக்க நினைத்தார்கள். கண்ணன் செய்த லீலைகளை தாமும் செய்ய நினைத்தார்கள். இதைத்தான் அனுகாரம் என்பார்கள். பிரிவுத் துயரால் தவிக்கும் தலைவி, தலைவன் செய்த செயலைத் தானும் செய்து, பிரிவைப் பொறுத்துக்கொள்ளக் கைக்கொள்ளும் செயல் இது.

ஒருத்தி, “நான் தான் கண்ணன்! அவனைப் போலவே புல்லாங்குழல் ஊதுகிறேன் என்று கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்து புல்லாங்குழல் ஊதுவது போல பாவனைச் செய்தாள்”

இன்னொருத்தி, “நான் அவனைப் போலவே நடக்கிறேன் பார்” என்று நடந்து காட்டினாள்.

மற்றொருத்தி தன்னை கண்ணனாகவும் அருகில் இருந்த தோழியை காளியனாகவும் கொண்டு “ஏய்! காளியனே ஓடாதே நில்!” என்று அவளை விரட்டிச் சென்று அவளுடைய பாம்பின் வாலைப் போல அவளின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவள் மீது நின்று உதைத்து மிதித்தாள். துஷ்ட காளியனாக நடித்த அப்பெண் சந்தோஷமாக உதைகளையும், மிதிகளையும் வாங்கிக்கொண்டாள். காரணம், பரம பாகவதையான கண்ணனாக நிற்கும் கோபியின் திருவடித் தூள் தீண்டப் பெறலாமே என்ற ஆசைதான்... இப்படி கோவர்த்தனோத்தாரணம், அசுர வதங்கள் போன்ற லீலைகளை அவர்கள் உற்சாகத்துடன் அனுகரித்து, பிருந்தாவனம் முழுவதும் சுற்றித் திரிந்தனர் கோபியர்…” என்று கூறியதைக் கேட்ட ஆண்டாள், சட்டென்று வழி கிடைத்துவிட்டது என்று உள்ளம் பூரிப்படைந்து.

நினைத்த மாத்திரத்தில் அவள் இடைச்சியாக மாறினாள். பிராமணப் பாஷை இடைப்பேச்சாக மாறிக்கொண்டது. கூந்தலை முடிந்து இடைச்சிக் கொண்டையாகக் கட்டிக்கொண்டாள். இடைநடை, இடைஉடை இடைபாவனையுடன் வெண்ணெய் உண்ட வாயனின் முடைநாற்றமும் அவளிடம் தொற்றிக்கொண்டது!

அவளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாகவும், வடபெரும்கோயில் நந்தகோபனின் திருமாளிகைப் போலவும், வடபத்ரசாயி கண்ணனாகவும், தோழிகள் கோபிகைகளாகவும் தெரிந்தார்கள். சூடிக்கொடுத்த ஆண்டாளின் கால்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்க அவள் மனமோ திருவாய்ப்பாடியில் குடிக்கொண்டது.

ஆண்டாளின் அனுகாரம் முற்றி, அவள் உள்ளம் முழுவதும் கண்ணனின் பக்தி நிறைந்து, அது பொங்கி வழிய இடமில்லாமல் அவள் திருவாக்கில் திருப்பாவையாக வெளியேறியது.

அதை நாளையிலிருந்து பார்க்கலாம்.

இன்றைய கேள்வி : திருப்பாவையில் முடைநற்றம் எங்கு வருகிறது ?

ஆண்டாள் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் திருவடிகளே சரணம்

-சுஜாதா தேசிகன்
15.12.2025

#திருப்பாவை2025-2026 

Comments