Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - மாயனை - 5

 ஆண்டாளும் தோழிகளும் - மாயனை - 5



ஆண்டாளும் அவள் தோழியும் வருணனை அனுப்பிவிட்டு ஆயர்பாடி தெருவில் தங்கள் தோழியை எழுப்ப நடந்து சென்றனர். தோழி ஏதோ யோசனையுடன் நடக்க, அதை உணர்ந்த ஆண்டாள் அவளிடம்,

ஆண்டாள்: “அடியே! என்ன யோசனை?”

தோழி: “கோதை! ‘சார்ங்கம் உதைத்த சரமழை போல்’ மழை வேண்டும் என்று வருணனிடம் வேண்டினோம். ஆனால், அதைக் கேட்டதும் எனக்கு ராமாயணத்தின் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்து பயத்தைத் தருகிறது.
தசரத சக்கரவர்த்தி தன் புதல்வன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார். வசிஷ்ட மகரிஷியும் அதற்கு நல்ல நாள் குறித்தார். முடிசூடப் போகிறவனோ தர்மத்தின் வடிவமான சக்கரவர்த்தித் திருமகன்! ‘ராமன் வரப் போகிறான்’ என்று அயோத்தி மக்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர். இத்தனை மங்களங்கள் சூழ்ந்திருந்தும், அந்தப் பட்டாபிஷேகத்திற்கே தடை வந்ததே! நாமோ பல காலமாகப் பாவங்கள் செய்து வந்தவர்கள். அப்படியிருக்க, நம் நோன்பிற்கு ஏதாவது இடையூறு வந்துவிட்டால் என்ன செய்வது? இதை போக்கிக்கொள்ள ஏதாவது வழி உண்டா?” என்றாள் கவலையுடன்

ஆண்டாள்: ”தோழி, வருந்தாதே! நம் பாவங்களைப் போக்கிக் கொண்ட பிறகுதான் தொடங்க வேண்டும் என்பது முடியாத ஒன்று. ஆனால், நாம் இந்தப் பாவை நோன்பை அனுஷ்டிக்க, அந்தப் பகவானை முக்காரணங்களாலும் கொண்டாடினால், பால் குடித்தால் பித்தம் தானாகவே விலகுவது போல, நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டுத் தொலைந்து போகும். மாயக்காரன் இருக்க, நாம் பாவங்களைப் பார்த்து அஞ்ச வேண்டாம் அது மாயமாக மறைந்து போகும்!”

தோழி: “கோதை! எனக்கு இந்த மாயவித்தையை கொஞ்சம் விவரமாக சொல்லு!”

(மாயனை மன்னு வட மதுரை மைந்தனை)

ஆண்டாள்: “தோழி, அவன் 'மாயன்'. ஆச்சரியமான வேலைகளைச் செய்பவனுக்கும், தந்திரங்கள் செய்பவனுக்கும் இப்படியொரு பெயர் உண்டு. அவன் செய்யும் அந்த தந்திரமான வேலைகளைத்தான் உலகத்தில் 'பித்தலாட்டம்' என்று சொல்கிறார்கள்.
மதிப்பில்லாத பித்தளையை (பித்தலம்), விலை உயர்ந்த தங்கமாக (ஆடகம்) மாற்றிக் காட்டுவது எவ்வளவு பெரிய வித்தை! நித்தியசூரிகளுக்கெல்லாம் தலைவனான அவனை இங்கே ஒரு இடைச்சி சாதாரணத் தாம்புக் கயிற்றால் கட்டிப் போடுகிறாளே, அது ஆச்சரியம் அன்றோ? பரமபதத்தில் வீற்றிருக்கும் அந்த நாதன், தன்னைத் தாழ்த்திக்கொண்டு இங்கே இடையர்களோடும் பசுக்களோடும் கலந்து உறவாடி, அவர்களுக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பதுதான் மாயம் அன்றோ?"

அவன் பிறந்த அந்த வடமதுரையின் பெருமையைக் கேள். முன்பு வாமனனாக எம்பெருமான் தவம் புரிந்த இடம் அது. பின்னாளில் சத்துருக்னன் அரசாண்ட பெருமை மிக்கத் தலம். அப்படித் எப்போதும் பகவத் சம்பந்தம் நிலைத்திருக்கும் அந்த வடமதுரையிலே, கண்ணனாக வந்து அவதரித்த பிறகுதான் அந்த வைகுண்டநாதனே தனி ஒளி பெற்றுத் திகழ்ந்தான்! அவன் பிறந்த பின் பரமபததைவிட புகழ் பெற்ற ஊரானது இந்த வடமதுரை!

அது மட்டுமா ? பிறந்தவுடனேயே தன் தாய்-தந்தையரின் கால் விலங்கை முறித்த அந்த வீர மைந்தன், வடமதுரையில் உள்ளவர்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாகவும், தன் மிடுக்குடன் தன் வடிவழகால் அவர்களை வசப்படுத்திய வடமதுரை மன்னனாகவும் (மைந்தனாகவும்) விளங்குகிறான்!”

தோழி: தோதை! யமுனையை வீட்டுவிட்டாயே!

(தூய பெருநீர் யமுனைத் துறைவனை)
ஆண்டாள்: “அடியே! அது வெறும் யமுனை இல்லை; 'தூய பெருநீர்' ! வைகுண்டத்தில் ஓடும் விரஜை நதியைப் போல, அவன் அவதரித்த இடத்து விரஜை இது. அன்று வசுதேவர் குழந்தைக் கண்ணனைச் சிறையிலிருந்து மறைத்து எடுத்துக் கொண்டு சென்றபோது, அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத் தன் வெள்ளத்தை முழங்கால் அளவு வற்றச் செய்து வழிவிட்ட நதி இது.
அதுமட்டுமா? கண்ணனும் கோபிகைகளும் ஒருவருக்கொருவர் நீர் தெளித்தும், மாறி மாறி நீர் கொப்பளித்தும் விளையாடினார்களே! அதனால் அந்த யமுனை நீர் முழுவதுமே 'பிரசாதமாகி' தூய்மையாக விளங்குகிறதே!”

தோழி: “கோதை! அது மட்டுமா ? ஐந்து லட்சம் பெண்களும் ஒரே நேரத்தில் நீராடினாலும் குறையாத நீர். கண்ணனைப் பிரிந்திருக்கும் நம் போன்றவர்களின் தாபத்தைத் தணிக்கும் குளிர்ந்த நீரும் இதுவே. அளவிலும் உபகாரத்திலும் 'பெருநீர்' என்பது மிகப்பொருத்தமே!"

(யமுனைத் துறைவனை)
ஆண்டாள்: "தோழி, கடலில் முத்துக்களும் ரத்தினங்களும் விளைவதை 'முத்துப்படுந்துறை' என்பார்கள் அல்லவா? அதுபோல, கண்ணனுக்குப் பிடித்தமான 'பெண்மணிகள்' அனைவரும் வந்து சேரும் பெண்கள் படுத்துறையாக யமுனை இருக்கிறது. தன் மாயத்தால் யமுனைத் துறையைத் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அந்த மைந்தனே யமுனைத் துறைவன்!”

தோழி: ”கோதை! துறை என்றவுடன், இருள் சூழ்ந்த கடலில் கப்பல்களுக்கு வழி காண்பிக்கும் 'கலங்கரை விளக்கம்' தான் எனக்கு நினைவுக்கு வருகிறது!”

ஆண்டாள்: ”உண்மைதான் தோழி! நம் யமுனைத் துறைவனும் அப்படித்தான். கம்சனின் சிறைச்சாலை எனும் இருட்டில் அவன் அவதரித்தபோது, இருளைக் கிழித்துக்கொண்டு தோன்றும் ஒளிவிளக்கைப் போலவே அவன் தோன்றினான்.

தோழி: “கோதை! அது மட்டுமா? அந்தப் பரமபதத்தில் காலையில் ஏற்றிய விளக்கு போல் அவன் ஒளி மங்கி தானே இருந்தது? ஆனால், இந்த ஆயர்ப்பாடியில் எளிமையாகப் பழகியபோதுதானே அவனது கருணை, வாத்ஸல்யம் போன்ற குணங்கள் எல்லாம் முழுமையாகப் பிரகாசித்தன!”

ஆண்டாள்: “அளவற்ற ஒளி பொருந்திய ராமனைத் தன் வயிற்றில் சுமந்ததற்காகக் கௌசல்யையை உலகம் கொண்டாடியது அல்லவா? அதுபோல, கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியின் வயிற்றை விளங்கச் செய்த அவனை, எவராலும் கட்ட முடியாத அவனையே சிறுத்தாம்புக் கயிற்றினால் கட்டிப் போட்ட யசோதையின் வயிற்றையும் விளங்கச் செய்த தாமோதரன் அவன்!”

தோழி: “நமக்கும் அவனுக்கும் ஆன பந்தம் நம்மாலும் அவனாலும் அவிழ்க்க முடியாதபடி இறுகக் கட்டப்பட்டுள்ளது!”

ஆண்டாள்: ”ஆம்! நமக்கும் அவனுக்கும் உண்டான இந்தச் சம்பந்த உணர்வே நம் ஆன்மாவுக்குத் தூய்மையைக் கொடுக்கும். விபீஷணன் கடலில் மூழ்கிவிட்டு வந்தா ராமனிடம் சரணடைந்தான்? அர்ஜுனன் யுத்தத்தின் நடுவில் குளித்துவிட்டா கண்ணனிடம் சரம ஸ்லோகத்தைக் கேட்டான்? மாதவிலக்காக இருந்த சமயத்தில்தானே திரௌபதி சரணாகதி செய்தாள்? நாமோ தலையிருக்க உடம்பு குளித்தும், உடம்பு இருக்கத் தலை குளித்தும் திரிபவர்கள் பரபக்திக்குச் சுத்தத்தையும் அசுத்தத்தையும் தேட வேண்டாம். நின்ற இடத்திலிருந்தே ’நாம் வந்தோம்’ என்றால் நம் மனதில் புக அவன் காத்திருக்கிறான்!”

தோழி: “கோதை! யோக்கியன், அயோக்கியன் என்று பாராமல் மலர் எல்லோர் கண்களுக்கும் அழகாகத் தெரிகிறது அல்லவா? அது போலத்தான் அவன் கருணையும்!”

ஆண்டாள்: “ஆம்! அவனுக்குச் சமர்ப்பிக்கும் மலர்களை எந்தப் பயனும் கருதாமல் அவன் திருவடிகளில் தூவினால் கூட, அந்த மலர்களை அவன் தூய மலர்களாக உகந்து ஏற்றுக்கொள்கிறான்! ஒருவன் மனத்தினால் எதை நினைக்கிறானோ, அதை வாக்கினால் சொல்லுகிறான்; மனத்தினால் தியானிப்பதை உடலால் செய்கிறான். அதனால் அவனைத் தொழுது, பாடி, சிந்தித்தாலே போதும்! பால் குடித்தால் பித்தம் தானாகத் தெளிவது போல, நம் பாவங்கள் அனைத்தும் நெருப்பில் இட்ட பஞ்சு போல உருக்குலைந்து போகும். இனி நாம் அறியாமல் செய்யப்போகும் பாவங்கள் கூடத் தாமரை இலையில் பட்ட தண்ணீர் போல நம்மிடம் ஒட்டாது!”

தோழி: “கோதை! நம் ஆயர் குலத்தவர்கள் கடினமான சாதனங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவனிடம் உள்ள விருப்பத்தின் மிகுதியால், இருந்த இடத்திலிருந்தே அந்த 'மாயனை', 'வடமதுரை மைந்தனை', 'யமுனைத் துறைவனை', 'தாமோதரனை' என்று அவன் திருநாமங்களைச் சொன்னாலே போதுமானது!

புள்ளும் தொடரும்..
-சுஜாதா தேசிகன்
20.12.2025

Comments