ஆண்டாளும் தோழிகளும் - உங்கள் - 14
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா) அடுத்ததாக, 'நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள், எல்லோரையும் நானே எழுப்புகிறேன்' என்று தம்பட்டம் அடித்தவளை எழுப்பப் போகிறார்கள். ஆனால், சொன்னதை மறந்துவிட்டு, வெட்கமே இல்லாமல் விடிய விடியத் தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள். அவளை எழுப்பப் போகிறார்கள். உறங்குபவர்களை எழுப்பலாம்; உறங்குபவர்கள் போல் நடிப்பவர்களை? கொஞ்சம் கஷ்டம் தான்! இவள் நன்றாகப் பேசக்கூடியவள். பக்தி, பண்பு, அறிவு என்று எல்லாவற்றிலும் சிறந்த பரிபூர்ணமானவள். அவள் பெயர் பூர்ணா. (நங்காய் - பரிபூர்ணமானவள்/குணபூர்த்தி).)
(காட்சி: பூர்ணாவின் வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டார்கள். பனி முழுவதும் விலகிவிட்டது. பூர்ணாவின் வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளும் செழித்து வளர்ந்த அடர்ந்த அழகிய தோட்டம், புழக்கடையில் (வீட்டின் பின்புறம்) அழகிய ஒரு சிறு குளம் ஒன்றும் இருக்கிறது. அதில் செங்கழுநீர், ஆம்பல் பூக்கள் நிறைந்து இருக்கிறது. ஆயர்பாடியில் உள்ள கோயில்களுக்கு இவள் வீட்டு வாசலைக் கடந்துதான் போக வேண்டும்.)
சுலோச்சனா: "இவள் வீட்டு முன் ரொம்ப நேரமாக நிற்கிறோம். நம்மை எல்லாம் மதிக்காமல் இப்படித் தூங்குகிறாளே!"
புல்லகலிகா: "இவள் உண்மையில் தூங்குகிறாளா? இல்லை தூங்குவது போல நடிக்கிறாளா?"
(ஆண்டாள் கதவைத் தட்டுகிறாள்)
ஆண்டாள்: "அடியே! நாங்கள் கால்கடுக்க நின்றுகொண்டு உன் வீட்டு வாசலில் பழியாகக் கிடக்கிறோம். இவ்வளவு நேரம் உனக்குத் தூக்கம் என்ன வேண்டியிருக்கிறது?"
(உள்ளிருந்து பூர்ணா சோம்பல் முறித்தபடி பேசுகிறாள்)
பூர்ணா: "ஏண்டி! இப்படி விடிவதற்கு முன் வந்து படுத்துகிறீர்கள்? விடிந்த பின் வாருங்களேன்!"
விசாகா: "பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வெளியே வந்தால் தானே தெரியும்!"
பூர்ணா: "அதற்குள் விடிந்துவிட்டதா ?
ஆண்டாள்: "அடியே! எங்கும் செங்கழுநீர் புஷ்பங்கள் உன் வாய் போல் பெரிசாக, நன்றாக மலர்ந்துவிட்டன!”
சுகந்தா: "அதுமட்டும் அல்ல, ஆம்பல் புஷ்பங்கள் (அல்லி மலர்கள்) எங்களைப் போல் வாயடைத்து, கூம்பிப் போய் இருக்கின்றன!"
பூர்ணா: "நீங்கள் என் அகத்துக்குத் தானே வரவேண்டும்? எதற்கு வயல்வெளி எல்லாம் சுற்றித் திரிந்து இங்கு வந்தீர்களோ? இரவெல்லாம் வயலில் உலாவி, என்னை ஏமாற்ற வேண்டும் என்றே, மொட்டாக இருக்கும் செங்கழுநீர் பூக்களை எல்லாம் உங்கள் கைகளால் ஒவ்வொன்றாகப் பிரித்து மலரச் செய்து, மலர்ந்த ஆம்பல் பூக்களைக் கையால் அழுத்தி மூடிவிட்டீர்கள் போலும்! இது நீங்கள் செய்த வேலை, இயற்கையாக நடந்தது அல்ல."
(எல்லாம் பகவானுடைய சொத்து, அதில் உங்களுடையது, எங்களுடையது என்று பிரித்துப் பேசத் தெரியாத ஆண்டாளும் தோழிகளும், இவள் எதிர்கொல்ள, ‘உங்கள்’ என்று பிரித்துப் பேசினாலாவது எழுவாளா என்று அப்படிப் பேச ஆரம்பிக்கிறார்கள்.)
சொர்ணலேகா: "அடியே! நாங்கள் வயல்வெளிக்கு எல்லாம் போகவில்லை. 'உங்கள்' வீட்டுப் புழக்கடைத் தோட்டம் இருக்கிறது அல்லவா? அதில் 'உங்கள்’' குட்டிக் குளம் (வாவி) இருக்கிறது அல்லவா? அதில் உள்ள 'உங்கள்' செங்கழுநீர் வாய் திறந்தும், 'உங்கள்' ஆம்பல் வாய் மூடியும் இருக்கிறது!"
பூர்ணா: "எங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? அது திருவல்லிக்கேணி ( திரு அல்லிக் கேணி ) போல் அடர்ந்த சோலைகள் நிறைந்த இடம். வெயில் கூட உள்ளே நுழையவே முடியாது. வெயில் படாமல் அவை எப்படி மலர்ந்தும், கூம்பியும் இருக்க முடியும்? நீங்கள் சொல்வது பொய்!"
ஆண்டாள்: "ஏண்டி! சூரியனே உள்ளே புகாத உங்கள் கொல்லைக்கு நாங்கள் எப்படிப் போக முடியும்? சரி, உன் வீட்டுத் தோட்டத்தில் வெயில் படாவிட்டாலும், மற்ற இடங்களில் எல்லாம் மலர்ந்தும், கூம்பியும் இருந்தால் உங்கள் வீட்டிலும் அப்படித் தானே இருக்கும்? அனுமானம் (Inference) உனக்குத் தெரியும் என்று நினைத்தே! போகட்டும். அறிவற்ற அந்தப் பூக்களுக்குத் தெரிந்த கால நேரம் கூட உனக்குத் தெரியவில்லையே!"
பூர்ணா: "ஏகாதசிக்குப் பட்டினி கிடந்தவன், துவாதசி அன்று சூரியன் வருவதற்கு முன்பே பசி துடிப்பால் இலைக்கு முன் உட்காருவது போல், உங்களுக்கு எல்லாம் கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு! அதனால் பூ மலர ஆரம்பிக்கும் போதே 'அலர்ந்தது அலர்ந்தது' என்று அலறுகிறீர்கள்! பூக்களை விடுங்கள், வேறு ஏதாவது உறுதியான அடையாளம் இருக்கிறதா?"
ஆண்டாள்: "ஏன் இல்லாமல்! ஊரார் ஏசுவார்கள், அரசன் தண்டிப்பான் என்று பயந்து, அவசர அவசரமாகச் செங்கல் பொடியைத் தடவி உடையைக் காவியாக்கி, வெற்றிலைக் கறையை நீக்கப் பல்லைத் தேய்த்து வெளுப்பாக்கி, போலிச் சந்நியாசி வேஷம் போடுகிற தமோ குணத்தவர்கள் கூட எழுந்துவிட்டார்கள். அவர்கள் கூட சங்கும் கையுமாக தங்கள் தேவதைகளை ஆராதிக்க புறப்பட்டுவிட்டார்கள்!”
பூர்ணா: "கோதை! போலிகளைக் கண்டு ஏமாறக் கூடாது என்று எனக்குத் தெரியாதா? தவறான வழியில் நடப்பவர்களைக் காட்டிப் பேசாதீர்கள்; சரியான அடையாளம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்."
ஆண்டாள்: "அடியே! அது மட்டுமல்ல, காவி ஏறிய துணியையும், காவி ஏறாத பற்களையும் உடைய உண்மையான துறவிகள் எப்போதோ எழுந்து எழுந்து திருக்காப்பு நீக்க திருக்கோயிலுக்கு சாவியுடன் புறப்பட்டுவிட்டார்கள்!"
பூர்ணா: "கோதை! எப்போதும் பகவத் ஆராதனம் செய்யும் அவர்களுக்குத் தூக்கம் ஏது? அவர்கள் தூங்கினால் தானே விடிந்ததும் எழுவதற்கு? இதுவும் எனக்குப் பலமான அடையாளமாகத் தெரியவில்லை. வேறு அடையாளமே இல்லையா?"
(இப்படி ஒவ்வொன்றிற்கும் மறுத்து (Counter) பேசும் இவளை என்ன செய்யலாம் என்று யோசித்த ஆண்டாளும் தோழிகளும், அவளுக்குத் தக்க பதில் கூற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.)
சுகந்தா: "அடியே! நேற்று என்ன பேச்சு பேசினாய்! 'நான் தான் முதலில் எழுந்திருப்பேன்; நான் தான் எல்லோரையும் எழுப்புவேன்' என்று வாய்கிழியப் பேசினாயே! இது தான் நீ எழுப்பும் லட்சணமா? பேசுவது ஒன்று செய்வது வேறொன்று... இது தான் உன் குணமா? நங்காய்! (குணபூர்த்தியே!)."
(பொய் பேசுபவன் வரும் போது 'வந்துவிட்டான் ஹரிச்சந்திரன்' என்று கிண்டலாகச் சொல்லுவது போல 'நங்காய்' என்று அழைக்கிறார்கள்.)
சொர்ணலேகா: "கண்ணனுடன் பழகிய அவளுக்கு இந்த மாதிரிப் பொய் பேசுவது எல்லாம் கைவந்த கலை! "
ஹேமலதா: "அடியே! சீக்கிரம் எழுந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. 'சீக்கிரம் எழுந்திருக்கிறேன்' என்று வாக்குக் கொடுத்துவிட்டுத் தூங்குகிறாயே, அதற்காகக் கொஞ்சம் வெட்கம் கூட உனக்கு இல்லையே! உங்கள் வீட்டில் காய்க்கும் பூசணிக்குக் கூடச் சுனை இருக்காது போலிருக்கிறதே!"
(குறிப்பு: பூசணிக்கு மேல் சாம்பல் போல் இருப்பது சுனை ; சுனை வெட்கம் என்று ஒரு பொருள் உண்டு)
பூர்ணா: "என்னை இப்படிப் பழித்துப் பேசும் நீங்கள், என்னை ஏன் தேடி வந்தீர்கள்? போய்விட வேண்டியதுதானே?"
தனநிஷ்டா: "ஏண்டி! அனுமன் 'சொல்லின் செல்வன்' என்று பெயர் வாங்கியது போல், உன் பேச்சு! நீ எப்படிப் பேசினாலும், அது செவிக்கினிய செஞ்சொல்லுக்கு நாங்கள் அடிமை! நீ ‘நாவுடயாய்’ அதனால் உன் வீட்டு வாசலில் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்திருப்போம்."
(மார்கழி சிசன் கச்சேரியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் நின்றுகொண்டு கேட்பது போல்; உள்ளே இருப்பவள் அனுமனுடைய வார்த்தையைக் கேட்ட பிராட்டி போல் மகிழ்ச்சியில் பூர்ணா பேசுகிறாள்.)
பூர்ணா: "தோழிகளே! நீங்கள் எனக்காகக் காத்திருக்கிறீர்கள். இதோ எழுந்து வருகிறேன். வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"
ஆண்டாள்: "கண்ணனுடைய திருநாமங்களை எங்களுடன் பாட வேண்டும்."
பூர்ணா: "பால் குடிக்கக், கால் பிடிக்க வேண்டுமா? (அந்தக் காலத்துக் கரும்பு தின்னக் கூலியா?). எப்படி பாட வேண்டும்?
ஆண்டாள்: "சங்கோடு சக்கரம் ஏந்தி, அந்த ஆனந்தத்தால் பூரித்துப் பருத்திருக்கும் திருக்கைகளை உடைய தாமரைக் கண்ணனை வைகுண்டத்தையும் எட்டும் அளவுக்குப் நீ பாட, அதைக் கேட்டு நாங்கள் ஆனந்தப் பட வேண்டும்! சீக்கிரம் எழுந்து வா!"
எல்லே... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
29.12.2025
Comments
Post a Comment