Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - மார்கழித் திங்கள் - 1.2

ஆண்டாளும் தோழிகளும் - மார்கழித் திங்கள் - 1.2



கண்ணனிடம் அபிமானம் (ஆசை/இச்சை) உள்ளவர்களே வாருங்கள் (போதுமினோ) என்று ஆண்டாள் அழைத்தவுடன், உள்ளே இருந்த தோழி மனமகிழ்ச்சியில், அவள் வடிவே ஆபரணம் அணிந்தது போலப் பொலிவுடன் காணப்பட்டாள். அவள் சட்டென்று எழுந்து உட்கார, அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் ஒன்றுக்கொன்று மோதி, அந்த நிசப்தமான காலை வேளையில் சத்தம் போட்டன. இவற்றையெல்லாம் ஆண்டாள் சாளரம் (ஜன்னல்) வழியே பார்க்கிறாள்.

(நேரிழையீர்)

ஆண்டாள்: ”அடியே! நீயே ஆபரணம் போல இருக்கிறாய்! ஆபரணத்துக்கு ஆபரணம் தேவையா?”

தோழி: “கண்ணன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவன் திடீர் என்று வந்துவிட்டால், அதனால் தான் ஆபரணங்களால் அலங்கரித்துத் தயாராக இருந்தேன்!”

ஆண்டாள்: “சீக்கிரம் வெளியே வா! நாம் போகும் இடம் ஆயர்பாடி! அது வைகுண்டத்தை விடச் சிறப்பானது!”

தோழி: “அப்படியா?”

(சீர்மல்கும்)
ஆண்டாள்: “ஆம், சொல்கிறேன், கேள்! இந்த ஊரில் ஐஸ்வரியத்திற்குக் குறைவில்லை. பாலும், வெண்ணெயும், நெய்யும் வெள்ளம் போல வழிந்தோடும் சீர்மை மிகுந்த ஊர். கண்ணன் இங்கு வந்து பிறந்ததால் சீர்மை மிகுந்த ஊர். பரமபதத்தில் வசிக்கும் எல்லோரும் குறைவில்லாமல் இருக்கிறார்கள். கண்ணனின் குணங்கள் அங்கே வெளிச்சத்தில் ஏற்றிய தீபம் போலப் பிரகாசமாகத் தெரிவதில்லை. ஆனால் ஆய்ப்பாடியில் இருட்டில் ஏற்றிய தீபம் போலப் பிரகாசமாய்த் தெரிகிறது! சிறிய சிவந்த கையால் வெண்ணெயை எடுத்து உண்டு, அழகிய தாம்பாலால் அடிப்பதற்கு ஓங்க, அவன் சிவந்த வாயின் அழுகையும், அஞ்சி நோக்கும் அழகையும், இவை அனைத்தையும் வைகுண்டத்தில் யார் பார்த்திருக்கிறார்கள் ? அதை யசோதை அன்றோ நேரில் பார்த்தாள்? சீர்மல்கும் ஆய்ப்பாடியில்தான் அவனுடைய சௌசீல்யம், சௌலப்பியம், வாத்ஸல்யம் எல்லாவற்றையும் பார்க்க முடியும். அதனால் ஆய்ப்பாடி வைகுண்டத்தைவிட சீர்மல்கும் ஊர்! பரமபதத்தில் நாம் வேறு ஒரு உடலை எடுத்துக்கொண்டு கண்ணனை அனுபவிக்க வேண்டும். ஆனால் இங்கு இந்த உடலுடனேயே நாம் அனுபவிக்கலாம். சீக்கிரம் வா!”

தோழி: “அப்படி என்றால் அயோத்தியும் ஆய்ப்பாடி போலத் தானே?”

(ஆய்ப்பாடி)
ஆண்டாள்: “அயோத்தி... நல்ல ஊர்தான். ஆனால் அதைக் காட்டிலும் ஆய்ப்பாடி சீர்மல்கும்! சொல்கிறேன், கேள்! அயோத்தியில் வசிஷ்டர் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் நாமோ இடையர்கள். இடக்கை வலக்கை அறியாதவர்கள். அயோத்தி சக்கரவர்த்தி திருமகனின் குணங்களைக் கண்டு உகக்கும் ஊர். இங்கோ இடையனான கண்ணனின் குறும்பு கண்டு உகக்கும் ஊர். இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடுங்கள் என்றால், அதற்கும் இசையும் ஊர் அன்றோ! அங்கே இருக்கும் சிறுமிகள் செல்வச் சிறுமியர்கள். அவர்களுடன் நாமும் சேர்ந்துகொள்ளலாம்.”

தோழி: “ஏன் அவர்கள் செல்வச் சிறுமியர்கள் என்கிறாய்? அவர்களிடம் என்ன செல்வம் இருக்கிறது?”

(செல்வச் சிறுமீர்காள்)
ஆண்டாள்: “கண்ணனின் சம்பந்தமே நமக்குச் ‘செல்வம்’. எல்லாவற்றையும் விட்டு ராமனுடன் வெறுங்கையோடு அவனைப் பின்தொடர்ந்து சென்ற லக்ஷ்மணனை ‘லக்ஷ்மி சம்பத்’ பெற்றவன் என்கிறோம். ராவணனுடைய செல்வங்களை வெறுத்து, தன் மனைவி மக்களை விட்டு வந்த விபீஷணனை வால்மீகி ‘ஸ்ரீமான்’ என்கிறார். எம்பெருமானையே கதி என்ற கஜேந்திரன் என்ற யானையையும் ‘ஸ்ரீமான்’ என்கிறாரே சுகர். அதனால் நம் வில்லிபுத்தூர் இப்போது ஆயர்பாடியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியது.

ஆய்ப்பாடியில் அனைவரும் கண்ணனைத் தொட்டுள்ளார்கள். அவனும் அவர்களைத் தீண்டியிருக்கிறான். அயோத்தியில் ராகவனுக்குத் தகுந்தவள் வைதேகி என்று இருக்க, ஆய்ப்பாடியில் பருவம் நிரம்பிய அனைவரும் கண்ணனை அடைய எண்ணினார்கள். கண்ணன் சம்பந்தம் பெற்ற அவர்கள் செல்வச் சிறுமியர்கள்!”

தோழி: “எல்லாம் சரி, நாம் கண்ணனைத் தேடிச் சென்றால் அங்கே ’கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்’ இருப்பாரே!”

ஆண்டாள்: “நந்தகோபன் மிக நல்லவர். எறும்புகளை மிதித்துவிடப் போகிறோமே என்று பசும்புல்லைக்கூட காலால் மிதிக்காமல் நடந்து செல்வார். ஆனால் கண்ணனை மகனாகப் பெற்றபின் அவன் மீதுள்ள பொங்கும் பரிவால், கண்ணன் படுத்து உறங்கும் கட்டிலுக்குக் கீழே ஒரு சிற்றெறும்பு ஊர்ந்தாலும் அதனைக் கொல்வதற்கு வேலைச் சாணைப் பிடித்து வைத்திருக்கிறார்.”

தோழி: “ஒரு சின்ன எறும்பைக் கொல்வது பாவம் அன்றோ?” என்று குறுக்கிட்டாள்.

ஆண்டாள்: “எனக்காகச் செய்யப்பட்ட பாவமும் புண்ணியமாகவே ஆகிறது என்று சொல்லியிருக்கிறார்களே!”

தோழி: ‘இருந்தாலும் கொடுந்தொழிலன்…’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

ஆண்டாள்: ”நந்தகோபன் கொடுந்தொழில் செய்பவர் இல்லை. அந்தக் கூர்வேல் தான் கொடுந்தொழில் செய்கிறது, அதை நந்தகோபன் கையில் பிடித்துள்ளார் அவ்வளாவு தான்! தந்தைக்கு அடங்கிய பிள்ளை போல, கண்ணன் அவருக்கு அடங்கி அருகில் நிற்கிறான். அதனால் சீக்கிரம் வா!”

தோழி: “உன் பேச்சுச் சாமர்த்தியத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. நந்தகோபன் சரி, யசோதை...?”

ஆண்டாள்: ”தகப்பன் ஒரு வேலைக்கொண்டு கண்ணனைப் பாதுகாத்தால், தாயாகிய யசோதை முகத்திலோ இரண்டு அம்பு கொண்டு காவல் புரிகிறாள். அம்பன்ன கண்ணாள் யசோதை அன்றோ? யசோதை கண்ணனின் அழுகையையும், அஞ்சி நிற்கும் செயலையும், சிரிப்பையும், குறும்பையும் பார்த்த கண் அல்லவா? அவள் அவ்வாறு கண்ணனைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், பரமபதத்தில் கிடைக்கும் இன்பத்தைப் ஆயர்பாடியிலேயே பெற்று, அது கண்ணழகாகப் பிரதிபலிக்கிறது. ராமர் முன் அனுமார் பவ்வியமாக இருப்பது போல, கண்ணன் நந்தகோபன் முன் இருப்பான். ஆனால் யசோதை முன் செருக்குடன் சிங்கக் குட்டி போல துள்ளிக் குதிப்பான்.

தோழி: "சிறுமியர் என்றால் இளம்சிங்கம் தான் ஒத்த பருவமாக இருக்கும் அல்லவா?" என்றவள், கண்ணனைப் பற்றி மேலும் கேட்க வேண்டும் என்று ஆவலில் "கண்ணனைப் பற்றி மேலும் சொல்லு" என்று கேட்க, ஆண்டாள் தொடர்கிறாள்,

ஆண்டாள்: “நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான கார்மேனி வடிவழகன். வாத்ஸல்யத்தைத் தெரிவிக்கின்ற செங்கண்!” என்று சொல்லும் போது தோழி வெளியே வந்து ஆண்டாளுடன் சேர்ந்துக்கொண்டு,

தோழி: “ஒரு கார்மேகத்தில் இரண்டு தாமரைப் பூத்தாற்போல என்று சொல்லு!” என்றவள், “கண்கள் ஏன் சிவப்பாக இருக்கிறது?” என்று கேட்க, .

ஆண்டாள்: ”இரவில் நடைபெறும் உற்சவத்தின் போது பெருமாளைக் கண்குளிரச் சேவிக்கும் நம் கண்கள் சிவக்காதா? அதுபோலத்தான்! அவன் திருமுகத்தின் பிரகாசத்தைப் பார்த்தால் சூரியனைப் போலவும், குளிர்ச்சியைப் பார்த்தால் சந்திரனைப் போலவும் இருக்கும். கம்சனைப் போல விரோதிகளுக்குச் சூரியனைப் போலவும், நமக்குச் சந்திரனைப் போலவும் இருப்பான்.”

தோழி: “ஆண்களுக்குச் சூரியன் போலவும், நம்மைப் போலச் சிறுமிகளுக்குச் சந்திரன் போல என்று சொல்லு”.

ஆண்டாள்: (சிரித்துக்கொண்டு) “இவன் வடிவழகைப் பார்த்தால், வேறொரு விஷயத்தைப் பற்ற வேண்டாம், என்னையே சரணமாகக் கொள் என்று சொல்லும். இந்தக் கண்ணனே நாராயணன். அவனே உலகுக்கெல்லாம் நாதன். என் தந்தை பட்டர்பிரான் இடைவிடாது 'நமோ நாராயணா' என்று சொல்வதைத் தவிர எனக்கு நன்மை தீமைகள் ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறாரே! போக்கற்றவனுக்குத் திறந்து கிடக்கும் வாசலிலே கதி. ராமாயணக் காகமும், மகாபாரத சிசுபாலனும் அதைத் தானே செய்தார்கள்? அதனால் நாராயணனே உபாயம். நாம் அவனிடம் ஆசைப்பட்டுச் செல்கிறோம், அதனால் நாராயணனே நமக்குப் பறை தருவான்!”

தோழி: “கோதை! பறை என்றால் என்ன?”

ஆண்டாள்: “அதை பிறகு சொல்கிறேன்! நம்மை கண்ணனிடம் சேர விடாமல் தடுத்த இடையர்கள் கொண்டாடும்படி நாம் நோன்பு நோற்க, மற்றவர்களை எழுப்பி, நீராடச் செல்லும் யாத்திரையைத் தொடங்கலாம்.”

· · ─ ·✶· ─ · ·

திருப்பாவையில் முடைநற்றம் எங்கு வருகிறது ? விடை : நாயகனாய் நின்ற நந்தகோபன் பாசுரத்தில் வருகிறது.
(முழு விளக்கம் நாளை தருகிறேன்)

இன்றைய கேள்வி: திருப்பாவையில் எங்கு எல்லாம் மணம் வருகிறது.

வையத்து தொடரும்..
-சுஜாதா தேசிகன்
17.12.2025
#திருப்பாவை2025-2026

Comments