Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - தூமணி - 9

ஆண்டாளும் தோழிகளும் - தூமணி - 9



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் கண்ணனால் பெரிதும் விரும்பப்பட்ட விசாகா என்ற பெண்ணை எழுப்பிய பின், சூரியன் புறப்பட்டு விட்டான் என்று வேகமாக நடந்து மாட வீதிக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்டாளின் மாமான் மகளை எழுப்பப் போகிறார்கள். அவள் பெயர் சுகந்தா. பெயருக்கு ஏற்றபடி நறுமணம் கொண்டவள். கண்ணனுக்காக சந்தனம் அரைத்தல் மற்றும் நறுமணப் பொடிகளைத் தயாரிப்பதில் வல்லவள். அவள் வீட்டு வாசலை அடைகிறார்கள்.)

(மாமான் மகள் குறிப்பு: ஆயர்பாடியில் மாலாகாரின் மகள் இவள்.பெரியாழ்வாரும் புஷ்ப கைங்கரியம் செய்பவர் என்பதால், அந்தத் தொடர்பைக் கொண்டு ஆண்டாள் இவளை 'மாமான் மகள்' என்று உறவு முறை பாராட்டி அழைக்கிறாள். உடலால் வரும் உறவு அழியும்; ஆத்ம உறவு அழியாதது)

(காட்சி: பனிமூட்டத்தின் ஊடாக இளம் சூரியக் கதிர்கள் ஊடுருவிச் செல்கின்றன. சூரிய ஒளி பட்டு அந்த வீட்டின் சுவர்களில் பதிக்கப்பட்ட மாணிக்கங்கள் வர்ணஜாலமாகக் காட்சி தருகின்றன. முகப்பில் எங்கு பார்த்தாலும் மாணிக்கக் கற்கள் மின்னுவதால், கதவு எது சுவர் எது என்று தெரியாமல் ஆண்டாளும் அவள் தோழிகளும் வியக்கிறார்கள். உள்ளே சுகந்தா படுத்திருந்தாலும் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

விசாகா: "கோதை! உன் மாமான் மகளின் மாடத்தைப் பார்த்தாயா? பெருமாள் வீதி உலா வரும் போது ஜொலிப்பதைப் போல் ஜொலிக்கிறதே!"

(தூமணி மாடத்து)
ஆண்டாள்: "இது இயற்கையான ரத்தினங்களாலே கட்டப்பட்ட 'தூமணி மாடம்' (குற்றமற்ற ரத்தினங்கள்). தொலைவில்லி மங்கலம் போல் இது அழுக்கடைந்த பின் அழுக்கு நீக்கிய 'துவளில் மணி மாடம்' இல்லை;

தோழி: "அதாவது தொலைவில்லி மாளிகை என்பது முக்தர்கள் போல; சில காலம் சம்சார சாகரம் என்ற அழுக்கில் உழன்று, பின் அழுக்கு நீக்கப்பெற்று முக்தி அடைந்த ஜீவாத்மாக்கள் போல. ஆனால் உன் மாமான் மகளின் திருமாளிகையோ நித்தியசூரிகள் போல் ஒரு நாளும் சம்சார சம்பந்தமே இல்லாத பரிசுத்தமானது!"

பத்மா: "ராஜாக்கள் மாளிகை கட்டும் போது, நல்ல மணிகளைக் கொண்டு முதலில் அந்தப்புரத்தைத்தான் கட்டுவார்களாம்! உன் மாமான் மகள் மாடமும் அது போல தான் போலும்!

(சுற்றும் விளக்கு ஏரிய தூபம் கமழ)
ஆண்டாள்: "என் தந்தை பட்டர் பிரான் எப்போதும், 'ஒரு வைஷ்ணவனின் இல்லத்துக்குச் செல்வதே ஒரு புனித யாத்திரை' என்பார். ஆகா! என்ன அருமையான நறுமணம் (பரிமளம்) வருகிறது!"

விசாகா: "சூரியன் எட்டிப் பார்த்த பின்பும் உள்ளே எல்லா இடங்களிலும் விளக்குகள் மின்னுகிறதே! இன்னும் சுகந்தா எழுந்துகொள்ளவில்லையோ?"

புல்லகலிகா: "மாணிக்கக் கற்கள் மின்னும் போது இவள் வீட்டுக்கு விளக்குகள் எதற்கு?"

பத்மா: "திடீரென்று கண்ணன் எந்த நேரத்தில் வருவான் என்று தெரியாதே! அதனால் அவன் வரும்போது இருளாக இருக்கக்கூடாது என்று, முன் ஏற்பாடாகப் பகலிலும் எல்லா இடங்களிலும் மங்கள விளக்குகள் எரிகின்றன போலும்!"

விசாகா: "உள்ளே தூபப்புகை கமழ்ந்து புகைமூட்டமாக இருக்கிறது. கண்ணன் வந்தால் அவன் கைப்பிடித்து உலாவுவதற்கும் சௌகரியமாக இருக்கும்படி விளக்குகள் எரிகின்றன!"

ஆண்டாள்: "விடிந்துவிட்டதே என்று என் உள்ளம் இருண்டு புகைந்து கொண்டிருக்க, நீங்கள் என்னடா என்றால் உள்ளே எரியும் விளக்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே!"

புல்லகலிகா: "கோதை! உன் மாமான் மகளை நீ தான் எழுப்ப வேண்டும்!"

(துயில்-அணைமேல் கண்வளரும் மாமான் மகளே! )
ஆண்டாள்: "மாமான் மகளே! சுகந்தா! கண்வளர்ந்தது போதும் எழுந்திரு! விரகதாபத்தால் உள்ளே கமழும் நறுமணத்தை எங்களால் அனுபவிக்க முடியவில்லை; ஆனால் நீயோ அதை அனுபவித்துக்கொண்டு எப்படி உறங்குகிறாய்? உன் வீட்டு மெத்தென்ற மலர் சயனம் போன்ற படுக்கை, யார் படுத்தாலும் துயிலப்பண்ணும் படுக்கைப் போலும்! ஆனால் கண்ணனைப் பிரிந்த எங்கள் தாபத்தால் எந்தப் படுக்கையும் நெருப்புப் படுக்கை போலச் சுடும். நீ எப்படியம்மா அந்தத் துயிலணையில் கண் வளர்கிறாயோ!"

(உள்ளே இருந்து எந்தப் பதிலும் இல்லை. ஆண்டாளின் தோழி பேசுகிறாள்)

விசாகா: "ராமபிரானுக்குக் காவல் காக்க இளைய பெருமாள் (லட்சுமணன்) உறங்காமல் இருந்தது போல் நாங்கள் இருக்க, நீயோ எங்கள் உறக்கத்தை எல்லாம் சேர்த்து வைத்துத் தூங்குகிறாயே!"

ஆண்டாள்: "விசாகா! உள்ளே இருப்பவள் நம் தோழியாக இருந்தாலும் அவள் பரம பாகவதை. அதனால் 'தூங்கும்' என்ற வார்த்தையை உபயோகிக்காமல் 'கண் வளரும்' என்று கௌரவமாகச் சொல்ல வேண்டும்."

விசாகா: "கோதை! உன் தந்தை பட்டர் பிரான், பரம்பொருள் பைந்நாகணைப் பள்ளிக்கொண்ட அழகை அனுபவிப்பது போல், இவள் துயிலணை மேல் கண்வளர்வதை நீ அனுபவிக்கிறாய் போலும்!"

(உள்ளிருந்து சுகந்தாவின் குரல் கேட்கிறது)

சுகந்தா: "வெளியிலிருந்து கதவைச் சற்றே தள்ளினாலே திறக்கும், தள்ளிக்கொண்டு உள்ளே வாருங்கள்."

(மணிக்கதவம் தாள் திறவாய்)
ஆண்டாள்: "அப்படியா? பேசினேயே! மாணிக்கங்கள் எல்லா இடத்திலும் மின்னும் ஒளியால் உங்கள் வீட்டுக் கதவுக்கும் சுவருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கே கை வைப்பது என்று தெரியாததால், நீயே எழுந்து வந்து திறக்க வேண்டும்."

(இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சுகந்தாவின் தாய் சுகந்தாவிடம்.. )

சுகந்தாவின் தாய்: “என்னடி இது! அவர்கள் அவ்வளவு நேரமாக வீட்டு வாசலில் உன்னைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு இப்படி மனசில் இரக்கமே இல்லாமல் படுக்கையைவிட்டு எழுந்திருக்காமல் இருப்பது என்னவிதமான பழக்கமோ!

(சுகந்தா வராததால், அங்கே இருக்கும் அவள் தாயிடம் ஆண்டாள் பேசுகிறாள்)

ஆண்டாள்: “நல்லா கேளுங்க மாமி! எங்கள் இவ்வளவு சொல்லியும் எழுந்திருக்காதவள் நீங்கள் சொல்லியா எழுந்துகொள்ள போகிறாள் ?

( உள்ளே இருக்கும் தாய் தன் மகளுடைய புருவநெறிப்புக்கு கட்டுப்பட்டு அவளும் அவளை எழுப்பாமல் இருக்க, ஆண்டாள் சற்று கோபத்துடன் )

(மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ?)
ஆண்டாள்: "மாமி! உங்கள் மகள் என்ன பேச முடியாத ஊமையா? பேசத் தெரியாவிட்டாலும் நாங்கள் பேசுவதைக் கேட்டு 'ஐயோ' என்று வந்து கதவைத் திறக்கலாமே! அல்லது காதில் துளையில்லா செவிடோ?"

(அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?)
பத்மா: "மாமி! அல்லது உங்கள் மகள் இரவெல்லாம் கண்ணனுடன் இருந்துவிட்டு, இப்போதுதான் களைப்பில் படுக்கையில் சாய்ந்து ஆழ்ந்த தூக்கத்தில் (அனந்தலோ) இருக்கிறாளோ?"

விசாகா: "மாமி! அல்லது உங்கள் மகளுக்கு யாராவது மந்திரித்த 'அம்மான் பொடி' தூவினார்களா? இப்படிப் பெருந்துயிலில் (ஏமப்பெருந்துயில்) இருக்கிறாளே!"

(குறிப்பு: 'அம்மான் பொடி' என்பது அந்தக் காலத்தில் குழந்தைகளை வசியம் செய்யவோ அல்லது மயக்கவோ கள்வர்கள் பயன்படுத்தும் ஒரு வகைச் சொக்குப்பொடி. இதைத் தூவினால் 'அம்மான் அம்மான்' என்று சொல்லிக்கொண்டு அவர்கள் பின்னே செல்வார்களாம்.)

(இந்தப் பேச்சுகளை எல்லாம் கேட்ட சுகந்தாவின் தாய், இனி மௌனமாக இருக்கக் கூடாது என்று பேசுகிறாள்)

(மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்)
சுகந்தாவின் தாய்: "கோதை! இவளுடைய சுபாவம் உங்களுக்குத் தெரியுமல்லவா? இவளை இப்படி எல்லாம் எழுப்ப முடியாது. மயக்கத்தில் இருப்பவருக்குச் சிறு துளி தண்ணீர் தெளித்து விசிறிவிடுவதைப் போல, இவளுக்குத் தென்றலும், சிறுதுளி தண்ணீரும் பட்டது போல் கண்ணனின் திவ்ய நாமங்களைச் சொல்லுங்கள்; சடக்கென்று எழுந்துவிடுவாள்."

ஆண்டாள்: "மாமி! நாங்கள் சொன்ன திருநாமங்களுக்குக் கணக்கில்லை."

சுகந்தாவின் தாய்: "அப்படியா? என்னவெல்லாம் சொன்னீர்கள்?"

ஆண்டாள்: "ஆச்சரிய குணங்களால் அபலைப் பெண்களை மயக்கித் தன் வசப்படுத்திய 'மாமாயன்'! கருணையின் வடிவான பிராட்டியைத் தன் மார்பில் எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் 'மாதவன்'. ஜகத்திற்கே அதிபதியான 'வைகுந்தன்'.

இப்படி அவன் மிக உயர்ந்தவராகவும் (பரத்துவமாகவும்) இருக்கிறான்; அதே சமயம் நம்மோடு எளிமையாகவும் (சௌலப்யமாகவும்) பழகுகிறான். இந்த இரண்டுக்கும் காரணம் அவரோடு இருக்கும் மகாலட்சுமித் தாயார் தான். அந்த உண்மையைச் சொல்லும் பகவானின் திருநாமங்களைக் கணக்கில்லாமல் நாங்கள் பாடினோம் மாமி! இனியும் தாமதிக்காமல் அவளை எழுப்பிவிடுங்கள்!"

நோற்று... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
24.12.2025

Comments