Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - நோற்று - 10

ஆண்டாளும் தோழிகளும் - நோற்று - 10



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா) நறுமணம் மிக்க சுகந்தாவை (பாசுரம் 9) எழுப்பிய பின், அவள் தாயாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவளுடன் அடுத்த பெண்ணை எழுப்பப் புறப்பட்டார்கள். கண்ணனுக்கு ஆபரணம் போன்றவள் அவள்; பெயர் சொர்ணலேகா.)

(காட்சி: பனி விலகி, எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவியிருக்கிறது. சொர்ணலேகாவின் இல்லம் கண்ணன் வீட்டுக்கு அடுத்த வீடு. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இவர்கள் இல்லம் அமைந்துள்ளது. இல்லங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் பொதுவான இடைச்சுவர் உள்ளது; அதில் ஒரு ரகசியக் கதவும் இருக்கிறது!)

சுகந்தா: "கோதை! அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?"

ஆண்டாள்: "வேறு யாரை! சொர்ணலேகா!"

புல்லகலிகா: "தாகம் எடுத்தால் 'தண்ணீர் தண்ணீர்' என்று தவிப்பது போல் நாம் 'கண்ணன் கண்ணன்' என்று தவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணனோ இவள் எப்போது கிடைப்பாள் என்று ஏங்கிக்கொண்டு இருப்பான்!"

பத்மா: "ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த பின் 'கம்பும் கற்றையும்' போல வளைந்து கொடுக்காத தடி ஆண்களுக்கும், வளைந்து கூன் விழுந்த கிழவிகளுக்குமே கிருஷ்ண சம்பந்தம் கிடைத்துவிட்டது. அப்படி இருக்க, இவளுக்கு என்ன சிறப்பு?"

விசாகா: "நாம் கண்ணனை அடைய வேண்டும் என்று செல்கிறோம். ஆனால் கண்ணனோ இவளை அடைய வேண்டும் என்று இங்கே வருகிறான்! அதுதான் இவள் சிறப்பு."

சுகந்தா: "இப்படிப் பேசிக்கொண்டு இருந்தால் இவளை எப்போது எழுப்புவது?"

(ஆண்டாள் சொர்ணலேகாவின் இல்லத்துக் கதவைத் தட்டுகிறாள்)

(நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!)

ஆண்டாள்: "அம்மா! நன்றாக நோன்பு நோற்றாய்! இது தான் நீ நோன்பு நோற்கும் அழகா? சீக்கிரம் எழுந்திரு!"

புல்லகலிகா: "அம்மா! இப்படி தூங்கிக்கொண்டு இருக்கிறாயே! நாம் எல்லோரும் நோற்றுப் பெற வேண்டிய பலனை நீ முன்னமே பெற்றுவிட்டாயோ?"

பத்மா: "இருக்கலாம்! போன ஜென்மத்தில் நோன்பு நோற்று, அதன் பயனாக இப்போது இடைச்சுவர் ரகசிய நடுவாசல் வழியாக இடைவிடாது கண்ணனுடன் கூடிச் சுவர்க்க அனுபவத்தை அனுபவிக்கிறாள் போலும்! எல்லோரும் கூடிப் பெற வேண்டிய சுகத்தை நீ ஒருத்தியே தனியாகப் பெறுவது நியாயமா? தாயே!"

ஆண்டாள்: "எங்களைக் காக்கும் தாயே! நம் ஆயர்சிறுமியர்களின் பெருங்கூட்டத்திற்குத் தலைவிக்கு இது அழகா? நீ மட்டும் கண்ணனுடன் பேரின்பத்தை அனுபவிப்பது உனக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்; ஆனால் நம் தோழமைக்கு இது அழகல்ல! தாய் தன் குழந்தையை அன்புடன் அணைத்துச் செல்வது போல், நீ எங்களைக் கண்ணனிடம் அழைத்துச் செல்ல வேண்டாமா? நீ எங்களைக் கைவிட்டாலும், நாங்கள் உன்னை விடப்போவதில்லை! சீக்கிரம் எழுந்து வெளியே வா!"

(இவ்வளவு சத்தமாகப் பேசியும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை).

புல்லகலிகா: "ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாள்?"

பத்மா: "அசோகவனத்தில் அனுமன் சொன்ன இனிமையான வார்த்தைகளைக் கேட்ட சீதாப்பிராட்டி, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் அப்படியே திகைத்து நின்றாள் அல்லவா? அதுபோல இவளும் நம் இனிமையான சொற்களைக் கேட்டுப் பேசமுடியாமல் மயங்கிக் கிடக்கிறாள் போலும்!"

விசாகா: (மற்ற தோழிகளிடம், சற்று மெதுவாக) "நாம் அவளைத் தலைவி என்று சொன்னதை, கேலி செய்கிறோம் என்று நினைத்துக் கோபித்துக்கொண்டாளோ?"

புல்லகலிகா: (சற்று சத்தமாக) "அடியே! உனக்கு எங்கள் மீது கோபமா? கோபத்திலும் எங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னால் தான் என்ன?"

(மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?)

பத்மா: "அடியே! உன்னிடம் செல்வம் கொட்டிக் கிடக்கிறது, ஒத்துக்கொள்கிறோம். அதனால் உன்னை நம்பி வந்திருக்கும் நாங்கள் துன்பத்தில் தவிக்கும்போது, நீ 'ஏன்' என்று ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறாய்?"

(குறிப்பு: நாம் உறவினர் இல்லத் திருமணத்திற்குச் செல்லும் போது, அங்கே வாசலில் வரவேற்காமல் இருந்தால், 'வாங்கோ' என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை என்று வருந்துவோமே.. அது போல)

விசாகா: "செடி வாடிப் போனால் அதற்குத் தண்ணீர் ஊற்றி உயிர்ப்பிப்பது தானே முறை? அதுபோல, உன் பிரிவால் வாடிக் கிடக்கும் எங்களுக்கு உன் சொல்லால் உயிர் கொடுக்கக் கூடாதா?"

சுகந்தா: "அங்கே கண்ணன் உன்னுடன் இருக்கிறானா? சீதாப்பிராட்டியின் மதுரமான பேச்சுக்குக் கட்டுப்பட்ட ராமன் போல், அவனும் உன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறானோ? உன் உடம்பைக் கண்ணனுக்குக் கொடு பரவாயில்லை! எங்களுக்கு உன் பேச்சையாவது கொடுக்கக் கூடாதா?"

ஆண்டாள்: "வாசலை மூடினாய் சரி, உன் வாயையும் மூடவேண்டுமா?"

(வெளியே இருப்பவர்கள் 'கதவைத் திறக்கவில்லை, வாயைத் திறக்கவில்லை, கண்ணனை ஒளித்து வைத்திருக்கிறேன்' என்று பழி போட்டு இவ்வளவு பேசுகிறார்கள் என்று நினைத்த சொர்ணலேகா உள்ளிருந்து பேசுகிறாள்)

சொர்ணலேகா: "நீங்கள் எல்லாம் என் மீது வீண் பழி போடுகிறீர்கள். கண்ணனை நான் மறைத்தா வைத்திருக்கிறேன்?"

(நாற்றத் துழாய் முடி)

ஆண்டாள்: "அம்மா! நீ ரொம்ப நன்றாகப் பேசுகிறாய். உன் கள்ளத்தனத்திற்கு அவனும் துணை நின்று மறைந்து கொண்டிருக்கிறான்! இந்த மாளிகை முழுக்க அரசர் பூசிக்கொள்ளும் உயர்தரமான சந்தன வாசனை வருகிறதே! அதை உன்னால் மறைக்க முடியவில்லை போலும்!"

சொர்ணலேகா: "என்ன அநியாயம் இது! அவன் இங்கே இருந்தால் தான் வாசனை வருமா? அவன் எப்போதோ என்னை வந்து அணைத்துக்கொண்டான். அவன் ஒருமுறை அணைத்தாலே, அந்த நறுமணம் ஐந்தாறு நாள் குளித்தாலும் போகாமல் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?"

ஆண்டாள்: "சரி, ஒருவேளை அந்த வாசனை மாளிகையுடையது என்று நீ பொய் சொன்னாலும், அவன் சூடியிருக்கும் அந்தத் துளசியின் வாசனை அவன் உள்ளே இருக்கிறான் என்று எங்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டதே! அந்த மணத்தை உன்னால் மறைக்க முடியவில்லையே!"

சொர்ணலேகா: "இது என்ன வம்பாய் போச்சு! நேற்றுச் சாயங்காலம் உங்களுடன் இருந்தேன் அல்லவா? அதற்குப் பிறகு படுக்கையில் வந்து சாயத் தொடங்கியதிலிருந்து, நீங்கள் காவலாக வீட்டு வாசலிலேயே இருக்கும் போது கண்ணன் எப்படி உள்ளே நுழைய முடியும்? இதை எல்லாம் யோசிக்காமல் என் மீது வீண் பழி சுமத்துவது நன்றாகவா இருக்கிறது?"

சுகந்தா: "அடியே! அவன் என்ன எங்களைப் போல் கதவு திறக்கட்டும் என்று காத்திருந்து உள்ளே வர வேண்டுமா? அவன் நாராயணன்! அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் உன்னிடம் வந்தால், வெளியே போவதற்கு வேண்டுமானால் அவனுக்கு வழி தெரியாது! ஆசைப்பட்டோரை அணைக்கும் 'சுந்தரத் தோளுடையான்' அவன் அன்றோ? நம்மைப் போன்ற எளிய ஆயர்சிறுமியர்களுக்கும் அவனைச் சுலபமாகச் சென்றடையும் வகையில் எளிமை மிக்கவன். அவன் மீது உள்ள ருசியினால் (அன்பினால்) அவனைப் போற்றுகிறோம்."

ஆண்டாள்: "தாகம் எடுத்தவன் எப்படி ஒரு ஏரியைப் பார்த்தால் அதில் பாய்ந்து தாகம் தீர்த்துக்கொள்வானோ, அப்படிப்பட்ட புண்ணிய தீர்த்தம் அவன்! தாகத்தை மட்டும் தீர்க்காமல், நமக்கு வேண்டிய பறையைக் கொடுத்து, நற்கதிக்கு அழைத்துச் செல்லும் நாராயணன் அவன்!"

(இதை எல்லாம் கேட்ட சொர்ணலேகா, எது பேசினாலும் பதில் கூறுகிறார்கள் என்று பேசாமல் கிடந்து உறங்குபவள் போலப் பாவனை செய்தாள். அவர்களைக் கோபப்படுத்தக் குறட்டையும் விட்டாள்!)

(கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?)

ஆண்டாள்: "ஏண்டி! முன்பு உன்னைப் போல இப்படிக் குறட்டை விட்டுத் தூங்குபவன் ஒருவன் இருந்தான் (கும்பகர்ணன்). அவன் தண்ணீர் குடிக்க வெட்டப்பட்ட ஏரியில் கல்லைக் கட்டிக்கொண்டு தலைகீழாக விழுந்து சாவாரைப் போலே, ராமபாணத்தால் எமன் வாயில் தானாக விழுந்து மடிந்தான். அவன் மடிவதற்கு முன் உன்னிடம் உறக்கத்தில் தோற்று, தன் துயிலைப் பரிசாக உன்னிடம் தந்துவிட்டுப் போனான் போலும்! அவனது துயில் என்றால் உன்னுடையது பெருந்துயில்!"

(இதை எல்லாம் கேட்ட சொர்ணலேகா, புலம்பியவாறு சோம்பல் முறித்து எழ முயன்றாள்)

(ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!)

சொர்ணலேகா: "'கிருஷ்ண கிருஷ்ணா!' இது என்ன கொடுமை!"

(ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆண்டாளும் தோழிகளும் அவள் அழகைக் கண்டு வியக்கிறார்கள்)

ஆண்டாள்: "அருங்கலமே! (அரிய அணிகலனே!) நவரத்தின மாலையில் நாயகக் கல் போன்றவள் நீ! நாயக மணி இல்லாத எங்கள் கோஷ்டியில் சேர்ந்து நீ எங்களை அலங்கரிக்க வேண்டும்! நாங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து போய்க் கண்ணனை எழுப்ப வேண்டியதில்லை. நீ விழிப்பதைக் காண்பதே எங்களுக்குப் போதும்!"

(தேற்றமாய் வந்து திற)

(இதைக் கேட்ட அவள் துணுக்குற்று எழுந்தாள். இதைக் கண்ட ஆண்டாள் சொல்லுகிறாள்)

ஆண்டாள்: "அடியே! தடுமாறாமல் நிதானமாக வந்து கதவைத் திற !"

கற்று... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
25.12.2025

Comments