Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - ஆழி - 4

ஆண்டாளும் தோழிகளும் - ஆழி - 4




ஓங்கி உலகளந்த உத்தமனை ஆசையுடன் பாடினால், நாடு செழிக்கும், நிலையான கைங்கரியச் செல்வமும் கிட்டும் என்று ஆண்டாளும் அவள் தோழியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இருட்டில் யாரோ வருவது போல் தெரிந்தது. அவர்கள் இருவரும் கூர்ந்து கவனித்தனர்.

தோழி: "வருவது யாராக இருக்கும்? ஆயர் சிறுமிகள் மாதிரி தெரியவில்லை. நடையைப் பார்த்தால் அது இடையர் மாதிரியும் இல்லை. அருகில் வரட்டும், யார் என்று பார்க்கலாம். நமக்காகத் தாழ்த்திக்கொண்டு, கையாளாக இருக்கும் கண்ணன் தானா வருகிறானா ? ”

ஆண்டாள்: "அந்த உருவத்துடன் குளிமையும் சேர்ந்து வருகிறது. பார்க்க, கண்ணன் மாதிரி கருமையாகத்தான் இருக்கிறான். ஆனால் அது கண்ணன் இல்லை. அவன் வாசனை எனக்குத் தெரியும்."

அருகில் வந்த அந்த உருவம் இவர்களை வணங்கி நின்றது.

வருணன்: "ஆயர் சிறுமிகளே, அடியேன் மழைக்கு அதிபதியான வருணன். எம்பெருமானின் அடியவர்களுக்குத் தொண்டு செய்வதே என் போன்ற தேவர்களின் கடமை என்று சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. கண்ணனின் பக்தர்களுக்கு இடைவிடாமல் எமன் கூட நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படிப்பட்ட கண்ணனே உங்களுக்கு ஏவலாளியாக இருப்பதை அறிந்து வியந்தேன். ஆகையாலே, பரம பாகவதைகளான உங்களுக்கு என் வந்தனங்கள். உங்களுக்கு ஒரு சிறு கைங்கரியம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளவே கீழே வந்துள்ளேன். இந்த அடிமை என்ன செய்ய வேண்டும் என்று 'இன்னபடியும் இன்னபடியும் என்று கையோலை' பணித்தருளுமாறு வேண்டுகிறேன்."

(ஆழி மழைக்கண்ணா)

ஆண்டாள்: "மழைக்குக் கண்ணாக இருந்து நிர்வகிக்கும் மழைக்கண்ணா! கண்ணனுடன் நீ பழகிய வாசனையாலேயே உன்னைக் 'கண்ணா' என்று அழைத்தேன். கம்பீரமான சுபாவத்தை உடையவனே! படைத்தல், அழித்தல் போன்றவற்றை பிரம்மா, ருத்திரன் தலையில் கட்டிவிட்டார். இந்த ஜகத்தையே உன் ஈரக்கையாலே தடவி நோக்கவல்லவன் நீ என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், உன் நீர்மைக்கு ஏற்ற, எல்லோரையும் கண்ணனைப் போலவே குளிர நோக்கிக் காக்கும் செயலைச் செய்ய வந்திருக்கும் ஆழி மழைக்கண்ணாவுக்கு வந்தனங்கள்!"

தோழி: "மழைக்கண்ணா! நீ கண்ணனால் பெரிதும் மதிக்கப்பட்டவன். இவ்வூரின் சிறுமையைப் பாராமல், உன் பெருமைக்கு ஈடாக நீ மழை பொழிய வேண்டும். புண்ணியம் செய்யும் இடத்தில் பொழிவதும், பாவம் செய்யும் இடத்தில் நீரை அடக்கிக்கொண்டு பொழியாமல் இருப்பதும் உன் நியதி. ஆனால், எங்கள் விஷயத்தில் நீ அப்படி நடந்துகொள்ளக் கூடாது. பாவ புண்ணியம் பார்க்காமல் கருணைக் காட்டிப் பொழிய வேண்டும்."

ஆண்டாள்: "சீதை பிராட்டி அசோகவனத்தில் அனுமாரைப் பார்த்து, 'யார் தான் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள்?' என்றாள் அல்லவா? அதனால், பாவ புண்ணியம் பார்க்காமல் பிராட்டியைப் போல கருணைக் காட்ட வேண்டும்."

தோழி: "அரசன் அந்தப்புரத்தில் இருக்கும் ராணிகளுக்குச் சில கிராமங்களை எழுதி வைப்பதுண்டு (படுக்கைப் பற்று). அவர்களுக்கு வரிச் சலுகை உண்டு. அதுபோல, எங்களுக்குச் சலுகை தர வேண்டும். ('நாட்டுக்கு இட்ட நினைவைக்கொண்டு படுக்கைப் பற்றிலே செல்லாதேகொள்')"

(ஒன்று(ம்) நீ கை கரவேல்)

ஆண்டாள்: "எங்கள் கிராமத்தில் கொடை வள்ளலுக்கு 'கைபெரியன்' என்று வழக்கு உண்டு. நீயும் அதுபோல வாரி வழங்க வேண்டும். மற்ற தேவதைகள் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டுப் படி அளப்பார்கள். அவர்களை 'குசாண்டு' என்று பழிப்போம். அவர்களைப் பார்த்து நீயும் குசாண்டு போல் இருக்காதே! நாங்கள் செய்த பாபத்தையே காணிக்கையாகக் கொண்டு நீ பொழிய வேண்டும்!"

வருணன்: "கோதையே! உங்களுக்கு மழை பொழிவதற்கு நான் எங்கிருந்து ஜலம் கொண்டுவருவது? இங்கே இருக்கும் ஏரி, குளம் முதலியவற்றிலுள்ள ஜலம் போதாது. நீங்கள் உங்கள் ஆயர்பாடிக்கு மட்டும் கேட்காமல், நாடெல்லாம் பொழியக் கேட்கிறீர்களே! அயோத்தியை ஆண்ட ஸகரன் என்ற மன்னன் அசுவமேத யாகம் செய்தான். யாகக் குதிரையை இந்திரன் கவர்ந்து சென்று, பாதாள லோகத்தில் கபில முனிவரின் ஆசிரமத்திற்குப் பின்னால் கட்டி வைத்தான். குதிரையைத் தேடிச் சென்ற ஸகரனின் அறுபதாயிரம் புத்திரர்கள் (ஸகரபுத்திரர்கள்), பூமியைத் தோண்டிக் கொண்டே பாதாளத்திற்குச் சென்றனர். ஸகரபுத்திரர்கள் வெட்டிய சாகர ஜலம் கூடப் போதாது போலிருக்கிறதே! என்ன செய்வது என்று தெரியவில்லை."

(ஆழியுள் புக்கு, முகந்து, கொடு)

ஆண்டாள்: "மழைக்கண்ணா! கேட்டுக்கொள். நீ பெரிய சமுத்திரத்திலிருந்து கொண்டுவர வேண்டும். அதிலும் மேலாக, மொண்டுகொண்டு வராமல், கடல் நீர் முழுவதும், கடலின் அடியில் உள்ள மணல் தெரியும்படி முழுவதையும் மொண்டுகொண்டு வரவேண்டும்!"

வருணன்: "கோதை! குறித்துக்கொண்டேன். வேறு ஏதாவது இருக்கிறதா?"

ஆண்டாள்: "ஒரு கதை சொல்லுகிறேன் கேள். ஒரு குழந்தை தன் தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றது. எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து பசியுடன் சோறு கிடைக்குமா என்று இரவு ஒரு மடத்துக்குச் சென்றது. பெத்த மனம் பித்து அல்லவா? அந்தக் தாய் யாருக்கும் தெரியாமல் சோறு எடுத்துக்கொண்டு அந்த மடத்துக்குச் சென்று, 'என் பையன் வந்தால் நான் கொடுத்தேன் என்று சொல்லாதீர்கள், அவன் சாப்பிட மாட்டான். நீங்களாகக் கொடுப்பது போலக் கொடுங்கள்' என்று மறைந்து நின்று கொடுத்தாள். அந்தத் தாய் போல மறைத்தும், முகம்காட்டாமல் எம்பெருமான் செய்யும் செயல் போலவும் இருக்கக் கூடாது."

வருணன்: "சரி, கோதை! நான் எப்படி வர வேண்டும் என்பதையும் கட்டளையிடு!"

(ஆர்த்து)

ஆண்டாள்: "மழைக்கண்ணா! குறித்துக்கொள். சீதா பிராட்டியைத் தேடிச் சென்று ஆரவாரத்துடன் வந்த அனுமான் போலப் பெரிய ஆரவாரத்துடன், நாடு முழுவதும் மின்னல், வானவில், இடியுடன் கண்டும் கேட்கும்படி நீ முழங்கிக்கொண்டு வர வேண்டும்."

வருணன்: "கோதை! குறித்துக்கொண்டேன். அடுத்து என்ன?"

(ஏறி)
ஆண்டாள்: "ஆகாயம் முழுவதிலும் இடமே இல்லாமல் அடையும்படி உன் வடிவமான திரண்ட மேகங்கள் நீல நிற மேலாப்பு விரித்ததுப் போல நிறைந்திருக்க வேண்டும். மதயானைகள் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு வருவது போல மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு, அதே சமயம் கர்ப்பிணிப் பெண் யானைகள், நீர் நிலையில் மூழ்கி நீரைப் பருகிவிட்டு மெல்ல மெல்லக் கரை ஏறி வருவது போல வர வேண்டும்."

வருணன்: "கோதை! குறித்துக்கொண்டேன். மேலும் என்ன வேண்டும்?"

(ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து)
ஆண்டாள்: "மழைக்கண்ணா! அது மட்டுமல்ல, மிக முக்கியமானது... பிரளயகாலத்தில் உலகங்களை எல்லாம் தோற்றுவிக்க வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் பகவானின் வடிவம் கறுத்தது போல வரவேண்டும்!"

தோழி: "மழைக்கண்ணா! கருவடைந்த பயிர் பச்சை நிறத்திலிருந்து கரும்பச்சையாக மாறுவது போல்!"

வருணன்: "கோதை! நான் குளிர்ந்த நீரைக்கொண்டிருந்தாலும், கண்ணனின் நீர்மையுடன் ஒப்பிட்டால் அது நெருப்பாகும். என் கருமேகங்கள் மழையைப் பொழிந்துவிட்டால் அவை வெளுத்துவிடும். அதனால் கண்ணனைப் போல் மெய்யாகவே கறுக்க முடியாதே!"

(பாழி அம் தோள் உடைப் பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி )
ஆண்டாள்: "மழைக்கண்ணா! பரவாயில்லை. உன்னால் முடிந்த அளவு செய். ஆனால் இதைக் கேட்டுக்கொள். நாபிகமலத்தில் நான்முகன் பிறந்ததைக் கண்டு பூரித்து, பிறந்த குழந்தையைக் காக்கும் தந்தையைப் போலத் தன் சுந்தரத் தோள்களாலே காத்த பத்மநாபன் கையில் உள்ள ஆழி போல நீ மின்ன வேண்டும்."

(வலம்புரி போல் நின்று அதிர்ந்து)
தோழி: "அதுமட்டுமல்ல, பாரதப் போரில் பாஞ்ச சன்னியத்தின் சங்கு ஒலி போல் எதிரிகள் நெஞ்சு பிளக்கும்படி விடாமல் முழங்க வேண்டும். அதைக் கேட்டு நாங்கள் ஆனந்தப்பட வேண்டும்."

வருணன்: "கோதை! குறித்துக்கொண்டேன். அடுத்து...?"

(தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய்)
கோதை: "பாம்பு போலப் பதுங்கியிருக்கும் சக்கரவர்த்தித் திருமகனின் சார்ங்கம், அவன் கடைக்கண்ணால் பார்த்த மாத்திரத்தில் நூறாயிரம் சரமழை போல் புறப்படும் அம்புகளை யாரும் தடுக்க முடியாதபடி, நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் இந்த உலகம் உய்ய அனுகூலமாக நீ சரமழை பொழிந்து கொண்டிருக்க வேண்டும்."

வருணன்: "கோதை! மழை பெய்வது எனக்கு இயற்கையான காரியம். இது கண்ணன் எனக்கு இட்ட கட்டளை. கண்ணனின் ஆணையை நிறைவேற்றுவது என் கடமை. உங்களுக்கு என்ன கைங்கரியம் செய்ய வேண்டும்?"

(நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து )
கோதை: "மழைக்கண்ணா! நாங்கள் நோன்பு நோற்றோம், அதனால் மழை வந்தது என்று ஊரே மகிழ்ந்து கொண்டாடும். நாங்களும் கண்ணனுடன் மகிழ்ந்து நீராடுவோம். எங்கள் தாபத்தைப் போக்கி எங்களை மகிழ்விப்பது உனக்குப் பேறு அல்லவா? நோன்பினால் வாடியிருக்கும் எங்கள் வடிவைக் கண்ட பின்பும் நீ தாமதிக்கலாமோ? உடனே புறப்படு!"

வருணன்: "கோதையே, இதோ புறப்பட்டேன்!" என்று மின்னல் வேகத்தில் வருணன் புறப்பட்டான்.

மாயனை தொடரும்..
-சுஜாதா தேசிகன்
20.12.2025

Comments