Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - வையத்து - 2

ஆண்டாளும் தோழிகளும் - வையத்து - 2





ஆண்டாளும் அவள் தோழியும் மற்ற தோழிகளை எழுப்பச் செல்கிறார்கள். தோழி கையில் ஒரு தட்டி வைத்திருக்கிறாள். அதில் ‘நாராயணனே நமக்கே’ என்று எழுதியிருக்கிறது. அவர்கள் நடந்து செல்லும் போது பேசிக்கொண்டு செல்கிறார்கள்.

தோழி: "கோதை, கண்ணனை அடைய வெறும் ஆசை மட்டும் போதும் என்றாய். ஆனால், நாமோ இடக்கை வலக்கை தெரியாத ஆயர் குலச் சிறுமிகள். சாஸ்திர ஞானம் இல்லாததால், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என நீதான் எங்களுக்குச் சொல்ல வேண்டும்."

(வையத்து வாழ்வீர்காள்)
ஆண்டாள்: "இந்த உலகத்தில் உள்ளவர்கள் பகவானிடம் ஈடுபடாமல், கீழான மற்ற விஷயங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆனால், 'நெருப்புச் சட்டியிலே தாமரைப் பூப்பது போல,' இந்த உலகில் நமக்குக் கண்ணனை அனுபவிக்கும் பேறு கிடைத்துள்ளது. வைகுண்டத்தில் உள்ள நித்தியசூரிகளுக்கும் கிடைக்காத இந்த அரிய பாக்கியம், கலி ஆட்சி செய்யும் இந்த இருள் சூழ்ந்த உலகத்தில், கண்ணனுடைய குணங்களை அனுபவிக்கும் வடிவமாகக் கிடைத்திருக்கிறது."

இங்கு, கண்ணனின் எளிமையில் மயங்கியவர்கள் வைகுந்தத்தை விரும்புவார்களா? மேலும், நாம் ஆண்களாகப் பிறக்காமல் பெண்களாகப் பிறந்திருக்கிறோம். பெண்களாய்ப் பிறந்தும், நட்டு வைத்த நாற்றுப் போல வளைந்து போகாமல், அவனோடு ஒத்த பருவத்தையுடைய சிறுமீர்களாக இருப்பது நம் பாக்கியம் அன்றோ? கண்ணன் அவதரித்த அதே காலத்தில் பிறந்தது மட்டுமல்லாமல், ஆயர்பாடியிலேயே நாம் வாழ்வது எவ்வளவு பெரும் பாக்கியம்!

(நாமும் நம்பாவைக்கு)
கிருஷ்ணானுபவத்தை நாம் தனியே அனுபவிக்காமல், , பிறருடன் இணைந்து அனுபவிப்பதே நமக்கு உண்மையான இன்பத்தைத் தரும். 'அவனாலேயே அவனைப் பெற வேண்டும்' என்று விரும்பும் நாமும், அந்த விருப்பத்துடன் இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ளும் இந்த நோன்பு ஒரு யாகம் போன்றதாகும்.

தோழி: "கோதை, யாகம் என்றதும் எனக்கு இந்திரஜித் போன்றவர்கள் பிறரை அழிப்பதற்காக யாகம் செய்தது தான் நினைவுக்கு வருகிறது!"

ஆண்டாள்: "நாம் மேற்கொள்ளும் இந்த நோன்பு, கண்ணனையும் அவனுடைய அடியார்களை வாழவைப்பதற்காகச் செய்யப்படும் ஒரு யாகம். இந்திரஜித்தைப் போலல்லாமல், தசரத சக்கரவர்த்தி யாகம் செய்து நான்கு ரத்தினங்களைப் பெற்றதுபோல், நம் பாவை நோன்பும் ஒரு புனிதமான யாகம்."

தோழி: "ஆம் கோதை! நாம் கண்ணனை அடையும் வரை, நமக்கு பொழுதுபோக வேண்டுமே! அந்தப் பொழுதைக் கழிப்பதற்காக நாம் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று சொல்."

(செய்யும் கிரிசைகள் கேளீரோ)
ஆண்டாள்: நான் சொல்லப் போகும் செயல்கள்(கிரிசைகள்) மிக மிக முக்கியமானவை. அவற்றை 'பத்தும் பத்தாக' (அதாவது 100%) செவ்வனே செய்ய வேண்டும்! அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றை பற்றி வைசம்பாயனர், தன் சீடரான ஜனமேஜயனுக்கு ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதத்தை உபதேசித்த பின், 'இவற்றுள் நீ எதை அடைய வேண்டிய பலனாகக் கருதுகிறாய்?' என்று கேட்டார். அதற்கு ஜனமேஜயன் என்ன பதிலளித்தான்?

தோழி: கோதையே! எனக்குத் தெரியும்! 'நீங்கள் பகவானின் குணங்களைச் சொல்ல, நான் அதைக் கேட்டதையே பரம புருஷார்த்தமாக (உயர்ந்த பேறாக) நினைத்தேன்' என்றல்லவா சொன்னார்? சரியா?

ஆண்டாள்: ஆம்! பகவானுடைய திருக்குணங்களைக் கேட்கும்போது, அது தென்றல் போலவும், தென்றலில் கலந்து வரும் மழைத்துளி நம் மீது பட்டது போல் இனிமையாகவும் இருக்கும் அல்லவா? அதுபோல, நாமும் செவி படைத்ததன் பயனைப் பெற வேண்டாமா?

(பாற்கடலுள் பையத் துயின்ற )
தன் பயிரைக் காப்பதற்காக உழவன் வயலில் காவல் பரண் அமைத்து, தான் விதைத்த பயிரைப் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது போல, பரமபதத்தில் உள்ள அடியார்களை ரட்சிக்கும் சிந்தனையிலேயே, கவனத்துடன், 'நாராயணா! ஓ மணிவண்ணா!' என்று யாராவது அழைத்தால், உடனே குதிக்கத் தயாராக, பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் அனந்தாழ்வான் மீது பையத் துயில் கொண்டிருக்கிறார்.

(கணினிச் சேவையகங்கள் (சர்வர்களுக்கு) அதிகப்படியான வேலைப்பளுவால் சூடாகிவிடும் என்பதால், அவை குளிர்சாதன அறைகளில் வைக்கப்படுகின்றன. நாம் அதிகம் சிந்தித்தால் நம் தலை கூட சூடாகிவிடும். நம்மைப் பற்றியே எப்போதும் யோசிக்கும் சர்வேஸ்வரனுக்கும் ஓர் குளிர்சாதன அறை தேவைப்படுகிறது. அந்த சர்வேஸ்வரன் சர்வரின் குளிர்சாதன அறையே திருப்பாற்கடல் ஆகும்.)

(பரமனடி பாடி)
கைக்குழந்தை பிழைக்க தாயின் முலைப்பாலையே முதலில் நாடும் அல்லவா? அதுபோல, நமக்கு அவன் திருவடிகளே அடைக்கலம். என் தந்தை பெரியாழ்வார், 'சேவடி செவ்வி திருகாப்பு' என்று பாடியிருக்கிறாரே? அதனால், அந்தப் பரமனடியை முதலில் போற்றிப் பாடுவதுதான் முறை.

தோழி: கோதையே! நாம் கண்ணனின் திருவடியை அல்லவா பாட வேண்டும்? ஆனால் நீயோ திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனடியை போற்றி பாட வேண்டும் என்கிறாயே ?

ஆண்டாள்: அடியே! சற்று மெதுவாகப் பேசு. நாம் எல்லோரும் 'கண்ணன், கண்ணன்' என்று அவன் பின்னால் ஓடுவதை ஏற்கனவே இடையர்கள் சந்தேகிக்கிறார்கள். அதனால்தான், தந்திரமாக மாற்றிச் சொன்னேன். திருப்பாற்கடலில் பாம்பணையில் சயனித்திருப்பவன் தானே, இப்போது இந்த ஆயர்பாடிக்கு வந்திருக்கிறான்?

தோழி: கோதையே! இந்த நோன்பு இருக்கும் நாட்களில் நான் என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்?”

(நெய்யுண்ணோம் பாலுண்ணோம்)
ஆண்டாள்: கண்ணனின் அமுத மயமான குணங்களில் நாம் மூழ்கிவிட்டால், வேறு எந்த இன்பத்திலும் நாட்டம் கொள்ள மாட்டோம். வயிறு நிறைந்தவனுக்கு உணவு எதற்கு ? என் தந்தை பட்டர்பிரான், 'நமோ நாராயணா என்று சொல்லாத நாளே நமக்கு பட்டினி நாள்' என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். கண்ணனின் திருநாமங்களே நமக்கு உண்ணும் உணவும், பருகும் நீரும். அவனது கல்யாண குணங்களே நாம் இடைவிடாது உண்ணத் தகுந்தவை. இப்படி எல்லாமே கண்ணனாக இருக்க, அவன் திருவடிகளைப் பாடுவது நெய்யும் பாலும் உண்டது போன்ற திருப்தியை அளிக்குமல்லவா? நித்தியசூரிகளுக்கெல்லாம் தலைவனான கண்ணனே இங்கே வந்து நெய், பால் போன்றவற்றைத் திருட அவதரித்திருக்கிறான். அப்படி இருக்கும்போது, நாம் அவற்றை உண்ணலாமா?

(நாட்காலே நீராடி)
தோழி: சரி, நீராட வேண்டிய அவசியம் என்ன, அதுவும் எப்போது?

ஆண்டாள்: சொல்கிறேன் கேள். நாம் நோன்புக்காக நீராட வேண்டும். கண்ணனைப் பிரிந்ததால் ஏற்பட்ட விரகதாபத்தைப் போக்கிக் கொள்ளவும் குளிக்க வேண்டும். கண்ணன் வந்துவிட்டால் நம்மால் குளிக்க முடியாமல் போகலாம். அதனால், நாம் விடியற்காலை (நாட்காலே) நீராட வேண்டும்!

தோழி: நீ சொல்வதைக் கேட்டால், சக்கரவர்த்தித் திருமகன் ராமர் நாடு துறந்து சென்றபோது, பரதாழ்வான் ஊர் பழிக்கு அஞ்சி, பொழுது விடியும் முன்பே யாருடைய கண்ணிலும் படாமல் சரயூ நதியில் நீராடியது போல, நாமும் கண்ணனின் பிரிவைத் தாங்காமல், விரகதாபத்தைப் போக்கிக் கொள்ள, 'நோன்பு' என்று ஒரு காரணத்தைச் சொல்லி குளிக்க வேண்டும் போலிருக்கிறதே!

(மையிட்டு எழுதோம் )
ஆண்டாள்: அடுத்ததாக, கண்ணில் மை இடக் கூடாது.

தோழி: நீ இயற்கையிலேயே மை போன்ற கருங்கண்ணை உடையவள் ’மைக் கண்ணாள்’ அல்லவா? உன் அழகுக்கு மை இட்டுக்கொள்வது தேவை இல்லைதான்!

(மலரிட்டு நாம்முடியோம்)
ஆண்டாள்: “கண்ணனைக் கண்டாலே கண்கள் அழகு பெறும்; அதனால் கண்களை அலங்கரிக்க வேண்டாம். கூந்தலில் மலர் சூடவும் கூடாது.”

தோழி: “உங்கள் தந்தை பட்டர்பிரான், 'சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்' என்று கூறியதால், அவன் அணிந்த மாலைகளையே நாம் சூடிக்கொள்வோம்.”

(செய்யாதன செய்யோம்)
ஆண்டாள்: “அப்புறம் முக்கியமாக, நம் முன்னோர்கள் செய்யாதவற்றை நாம் செய்யக்கூடாது. நம் குலத்தில் உள்ள ஐந்து லட்சம் பெண்களும் ஒருவரை ஒருவர் எழுப்பி, எல்லோரும் சேர்ந்து கண்ணனைப் பற்றிப் பாட வேண்டும்.”

தோழி: “மீண்டும் பரதாழ்வான் நினைவுக்கு வருகிறார். பரதாழ்வானை முடிசூடச் சொன்னபோது, இந்தக் குலத்தில் இதுவரை செய்யாத ஒன்றை நான் செய்ய மாட்டேன் என்றாரே!”

(தீக்குறளைச் சென்றோதோம்)
ஆண்டாள்: “ஆமாம்! அப்புறம் இது மிக முக்கியம்: 'பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் பொய் வார்த்தைகளைப் பேசக்கூடாது!'”

தோழி: “அதாவது, கோள் சொல்லுதல், பழித்தல், வம்புப் பேசுதல், பொய்யுரைத்தல்…”

ஆண்டாள்: “ஆமாம்! அசோகவனத்தில் அரக்கிகள் பல கொடூரமான செயல்களைச் செய்த போதிலும், சீதை அவற்றைப் பற்றி இராமரிடம் கூறவில்லையே!”

தோழி: “இது பிராட்டிக்கு மட்டுமே உரிய குணம் அல்லவோ!”

(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி)
ஆண்டாள்: “கடைசியாக ஆசாரியரிகள், தகுதியுள்ளவர்களுக்கு குறிப்பறிந்து ஐயமும், யாசகம் கேட்பவர்களுக்கு நம்மால் இயன்ற பிச்சையையும் வழங்க வேண்டும். எவ்வளவு கொடுத்தாலும், 'நாம் கொடுத்து விட்டோம்' என்று நினைக்காமல், உய்யும் வழியைச் சிந்தித்து, நான் சொன்னவற்றை எல்லாம் மகிழ்ச்சியுடன் (உவப்புடன்) செய்ய வேண்டும்!”

(உய்யுமா றெண்ணி உகந்தேலோர்)
தோழி: “அதாவது, கடமை என்று செய்யாமல், எல்லாவற்றையும் விருப்பத்துடனும் (பிரீதியுடனும்) செய்ய வேண்டும் என்கிறாய், சரிதானே கோதை?”

ஆண்டாள்: “ஆம்! வா, அடுத்த வீட்டுக்குச் செல்லலாம்.”

ஓங்கி தொடரும்..
-சுஜாதா தேசிகன்
18.12.2025
#திருப்பாவை2025-2026

Comments