Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - மார்கழித் திங்கள் - 1.1

 ஆண்டாளும் தோழிகளும் - மார்கழித் திங்கள் - 1.1



(நேற்று.. ) ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாகவும், வடபெரும்கோயில் நந்தகோபனின் திருமாளிகைப் போலவும், வடபத்ரசாயி கண்ணனாகவும், தோழிகள் கோபிகைகளாகவும் தெரிந்தார்கள். சூடிக்கொடுத்த ஆண்டாளின் கால்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்க அவள் மனமோ திருவாய்ப்பாடியில் குடி கொண்டிருந்தது.... அச்சமயம் உபன்யாசகர்,

“... வைகுண்டத்தில் எல்லா ஆசைகளையும் நிரம்பப் பெற்றவனாய், பரமபதத்தில் திருமகள் கேள்வனாய் வீற்றிருக்கிற நாராயணன் கண்ணனாக அவதரித்து இடைச்சேரியில் கண்ணனாக வளர்ந்து வந்தான். அங்கே உள்ள ஐந்து லட்சம் குடிப் பெண்களும் கண்ணனை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதை அறிந்த அவ்வூரில் உள்ள பெரியவர்கள், 'கண்ணனுக்கு யௌவன வயது எட்டிப் பார்க்கிறது,' அதனால் அவன் முகத்தில் நம் ஊர் பெண்களின் பார்வைப் படவே கூடாது என்று முடிவு செய்தனர். வயது முதிர்ந்த இடையர் எல்லோரும் ஒன்றுகூடி, ஆலோசித்து ஒத்த பருவத்தில் இருக்கும் யுவதிகளை நிலவரைகளில் அடைத்தார்கள்.

கண்ணனும் பெண்களும் செய்த பாக்கியமா அல்லது யுவதிகளை அடைத்து வைத்த அதர்மத்தாலோ வருணதேவன் அவ்வூரில் மழை இல்லாது செய்தான். நாட்டில் வளம் குன்றியது. எங்கும் வறண்டு கிடக்கும் நிலை உருவானது. இடையர்கள் எல்லோரும் ஒன்று கூடி, பசுக்களும் மனிதர்களும் பிழைக்க என்ன வழி? என்று ஆராய்ந்தார்கள். ஆய்வின் முடிவில் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘பெண்கள் மழைபொழிவதற்காக நோன்பு நோற்க வேண்டும்’ என்று முடிவு செய்தார்கள். மேலும், இந்த நோன்புக்கு நந்தகோபன் மகனான கண்ணன் எல்லோரையும் ஒன்று கூட்டி, காரியத்தைச் செய்து முடிக்கும் திறமை மிக்கவன். அவனே தலைவனாய் இருந்து, வேண்டியவைகளைப் பெற்றுத் தருவான் என்றும் தீர்மானித்தார்கள்.

நிலவரையில் அடைத்து வைத்த இடைச்சிகளை அழைத்து, கண்ணனையும் அழைத்து ஒரு பெரிய மரத்தடிக்குச் சென்றார்கள். அங்கே பெண்களிடம் ‘நீங்கள் எல்லோரும் நோன்பு நோற்க வேண்டும்’ என்றும், கண்ணனிடம் ‘இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக தலைமையேற்க வேண்டும்’ என்றார்கள். (கடகன் - பொறுப்பாளன்; இந்தக் காலத்து பிராஜக்ட் மேனேஜர்).

கரும்பு தின்னக் கூலியா என்று நினைத்த கண்ணன் உடனே சம்மதித்தால் சந்தேகம் வந்துவிடும் என்று எண்ணினான். ’என்னால் இயலாது!’ என்றான். பிறகு இடையர்கள் இடைவிடாது கண்ணனை கட்டாயப்படுத்த அவனும் ’சரி’ என்று சம்மதித்தான். கூட்டம் முடிந்து பெரியவர்கள் ‘பெண்கள் நோற்பார்; கண்ணன் நோன்புக்கு வேண்டியவற்றை தந்து உதவுவான்’ என்று ஏக மனதான பொதுக் குழு தீர்மானம் போல வாசித்து முடித்தவுடன் கூட்டம் கலைந்தது.

பெரியோர்கள் சென்றவுடன் கண்ணன் பெண்களைப் பார்த்து, ‘குரவைக் கூத்து ராத்திரி போல, பெண்களே! இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே!’ என்று குதூகலத்துடன் சற்று நேரம் விளையாடினான். பிறகு, ‘பெண்களே! இனி நாம் இங்கிருந்தால் ஆயர்கள் சந்தேகிப்பார்கள். நீங்கள் இப்போது கிளம்புங்கள். அபரராத்திரியில் (இரவின் பிற்பகுதி, விடியலுக்கு முன்) என்னை வந்து ’நோன்புக்குக் குளிக்கப் போகலாம்’ என்று வந்து எழுப்புங்கள்’ என்று கண்ணன் நப்பின்னை திருமாளிகைக்குச் புகுந்தான்..

கண்ணன் சென்றவுடன் பெண்கள் தளர்ந்து, உறங்க முடியாமல் தவித்து, நடக்கக் கூட முடியாமல் ஒருவருக்கு ஒருவர் கைத்தாங்கலாகத் தத்தம் இல்லங்களுக்குச் சென்றார்கள். அங்கே கண்ணனின் குணம், செயல்களை நினைத்து உறக்கம் இல்லாமல், எழுந்திருக்க முடியாமல் கிடந்தார்கள்.

முற்பட எழுந்தவர்கள் கண்ணனின் குணங்களையும் செயல்களையும் நினைத்து, எழுந்துகொள்ள முடியாமல் கிடக்கின்றவர்களைத் தனித்தனியே எழுப்புகிறார்கள். பின் எல்லோரும் ஒன்று கூடி நந்தகோபன் திருமாளிகைக்குச் சென்று கண்ணனை எழுப்பி, பரதன் ராமன் காலில் விழுந்தது போலத் தங்கள் விரும்பியக் கைங்கரியத்தைப் பெற்று முடித்தார்கள்” என்று உபன்யாசகர் பேசி முடிக்க, ஆண்டாளுக்கு ஒரு தெளிவு பிறந்தது.

தன்னை இடைப்பெண்ணாகப் பாவித்த ஆண்டாள், தன் தோழிகளைப் பார்த்து, “‘மேலையார் செய்வனைகள்’ என்று கோபியர்கள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள். அவர்கள் செய்தது போல நாமும் நாளைக் காலை நோன்பு நோற்கலாம்! வாருங்கள்!” என்றாள்.

தோழி: ”ஒரு சந்தேகம்! கண்ணனை அடைவதற்காக நாம் நோன்பு என்று பொய்யான காரணத்தைச் சொல்லலாமா?”

ஆண்டாள்: “ஏன் கூடாது? திருமணத்துக்கும் உயிருக்கு ஆபத்து நேரிடும் போதும் பொய் சொல்லலாம். பாபமல்ல என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே!”

மற்றொரு தோழி சந்தேகத்துடன்: “ராமன் சாது, ஆனால் கண்ணன் குறும்புக்காரன். நாம் நோன்பு நோற்றால் கண்ணன் வருவானா?”.

ஆண்டாள்: “பட்டத்து ராணி பிச்சை எடுத்து ஜீவித்தால் அது அரசனுக்கு இழுக்குதானே? அது போல நாம் நோன்பு நோற்றால் எங்கே தன்னுடைய குணத்திற்கு இழிவு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டு ஓடி வந்துவிடுவான்!”

இன்னொருத்தி: “பொய்யாக நோன்பு நோற்றால், வருணன் கோவித்துக்கொண்டு இருக்கும் மழையையும் இல்லாமல் செய்துவிட்டால் ? வருண தேவன் மழையைக் கொடுப்பானா?” என்றாள் கவலையுடன்.

ஆண்டாள்: ”நாம் நோன்பு நோற்போம், நம் நியம பட்டினியால் உடல் இளைத்து, அதைப் பார்த்து மனம் இரங்கி வருண தேவன் மழையைத் தருவான். கவலைப்படாதீர்கள்” என்று ஆண்டாள் கூறிவிட்டு, காலை வந்து எழுப்புகிறேன் என்று புறப்பட்டாள். அவள் இடைச்சி போல நடந்து செல்லும் அழகைத் தோழிகள் ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.

மார்கழித் திங்கள் - 1.1

காட்சி: முழு நிலவு நிறைந்த, மார்கழி மாதத்தின் பின்னிரவு காலம். எங்கும் பணி மூட்டம். நிசப்தமான வேளை. செல்வச் செழிப்புள்ள ஆய்ப்பாடியில் தன் இல்லத்தின் அருகேயுள்ள தன் தோழியின் இல்லம் முன் கோதை நிற்கிறாள். பாவை நோன்புக்காக அவளை அழைக்கிறாள்.

ஆண்டாள்: ”அடியே! இன்று மார்கழி! மதிநிறைந்த நல்ல நாள்! எழுந்திரு!”

தோழி: ”கோதையே! மார்கழியாக இருந்துவிட்டுப் போகட்டுமே! ஏன் இந்த ராத்திரி வேளையில் இந்த அவசரம்?”

(மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்)
ஆண்டாள்: “சொல்கிறேன் கேள்! அதிக வெப்பமும், குளிரும் இல்லாத மாதம். சத்வகுணம் மேலோங்கியிருக்கும் காலம். பயிர்களும் கூட முளை கிளம்பும் காலத்தில் உயிர்களாகிய நாம் எழ வேண்டாமா? குளிருக்கு அஞ்சி முதிய ஆயர்கள் வெளியே வராத காலமாயிற்றே! இந்த அரிய சமயத்தை இழக்கலாமா?

நம் முயற்சிகள் வெற்றிபெறத் தகுந்த காலம் இது. நம் கண்ணன், 'மாதங்களில் நான் மார்கழியாகிறேன்' என்று கொண்டாடும் இந்த வைஷ்ணவ மாசத்தில் நாம் அவனைப் பெற வேண்டாமா?

மாதம் மட்டும் இல்லை. இன்று நாள், பட்சம் எல்லாம் நமக்குக் கைகொடுக்கிறதே! மாசத்திற்கு நாயகக் கல்போலே பிரகாசமான மதிநிறைந்த நன்னாளாக அமைந்திருக்கிறது. வெளியே வந்து பார், அழகு நிறைந்த முழு நிலவு! நாயகனை அடைய விருப்பம் இல்லாதவர்கள் அன்றோ சந்திரனை வெறுப்பார்கள்? நெடுநாள் சிறையில் கிடந்தவன், விடுதலைப் பெற்று வெளியே வந்து அந்நாளைக் கொண்டாடுவது போல, பகவத் சம்பந்தம் கிடைக்கும் நாளே நன்னாள். மற்றவை எல்லாம் தீய நாட்கள்! அவன் சம்பந்தம் கிடைக்க நாம் ஒரு அடி முன்னே வைத்தோம் என்றால் அது நன்னாள்! அப்படி வைக்காமல் படுத்துத் தூங்கினால் அது தீயநாள். இன்று நமக்கு நன்னாளாக விடியப் போகிறது. நீ வெளியே வந்து கொண்டாட வேண்டாமா?

அக்ரூரர் கண்ணனைக் காணச் சென்ற அந்நாள் நன்னாள் என்று கொண்டாடியது போல், நாம் கண்ணனைக் காணச் செல்லும் இன்னாள் நன்னாள் என்று கொண்டாட வேண்டாமா? கண்ணனிடம் செல்ல அனைவரும் ஒன்று கூடியதால், இன்று நம் ஞானத்தை (மதி) பெறப்போகும் நல்ல நாள். சீக்கிரம் எழுந்து வா, நீராடச் செல்லலாம்!

(நீராட )
தோழி: ”கோதை! புதுசா இன்று என்ன நீராட? இந்த வார்த்தையை நீ பேசி நான் கேட்டதில்லையே! இது கோயில்களில் வைணவர்கள் பேசும் மொழி அன்றோ ? ”

ஆண்டாள்: “இது கூடவா புரியவில்லை? கண்ணனோடு கூடுதலைத் தான் அப்படி மறைத்துச் சொன்னேன். கலவியைச் 'சுனையாடல்' என்பார்களே, இது கூடவா புரியவில்லை? சங்க இலக்கிய தோழிகள் புத்திசாலியாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீ அப்படி இல்லையே! கண்ண விரகத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளித்தலை - பகவானோடு சம்பந்தப்பட்ட உறவுக்கு ‘நீராட’ என்று கௌரவித்துச் சொன்னேன். இது கூடப் புரியவில்லையா?

(போதுவீர் போதுமினோ)

தோழி: ”கோதை! எல்லாம் சரி, எனக்கு எதற்கு இந்த கௌரவம்? சாதாரண சுவர்க்கத்தைப் பெறுவதற்கே மிகுந்த முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. தேவதாந்தர விஷயங்களிலும் நிறைய கஷ்டங்கள் இருக்கிறதே! அப்படி இருக்க, கண்ணனுடன் சேர்வதற்கு அவற்றை காட்டிலும் அதிக முயற்சிகளும் கஷ்டங்களும் இருக்குமே!”

ஆண்டாள்: “ஒன்றும் தேவை இல்லை! கடினமான விதிகள் ஏதும் கிடையாது. அதனால் கவலையை விடு. என் தந்தை பட்டர்பிரான் ‘கூடு மனம் உடையீர் …கூடுமினோ’ என்று சொல்லியிருக்கிறாரே. அதனால் அவனுடன் சேர வேண்டும் என்ற இச்சையே போதுமானது! எலுமிச்சை பழத்துடன் சென்று மன்னனைக் கண்டு அவனிடம் ராஜ்யத்தை பெற்றவருக்கு அந்த பழம் சாதனம் போல் நமக்கு இச்சை ஒரு சாதனம்.
தாய் தந்தைக்குச் சேவை செய்ய இச்சை போதுமே! நமக்கு தாயாகவும், தந்தையாகவும், மற்றெல்லாமுமாக இருப்பவன் அவன் தானே? நீயும் மற்ற தோழிகளும் நடந்து செல்ல வேண்டும். நான் உங்கள் நடையழகை எல்லாம் அனுபவித்துக்கொண்டு பின்னே வருகிறேன்!

மார்கழி தொடரும்..
-சுஜாதா தேசிகன்
16.12.2025
#திருப்பாவை2025-2026

Comments