ஆண்டாளும் தோழிகளும் - கற்று - 11
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா) அடுத்ததாக ஹேமலதா என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். கண்ணன் எப்படி கோகுலத்திற்கே ஒரே செல்லப் பிள்ளையோ, அதுபோல இவள் கோகுலத்திற்கே ஒரே செல்ல மகள். உயர்ந்த குடியில் பிறந்தவள். ஒரு கொடியானது படர்வதற்கு எப்படிக் கொழுகொம்பு (ஆதாரமான மரம்) தேவையோ, அதுபோல இவள் கண்ணன் என்னும் கொழுகொம்பைச் சார்ந்து இருக்க வேண்டிய மென்மையான பொற்கொடி போன்றவள். இவளுக்கு ஒரு குணம் உண்டு - "நான் ஏன் அவனை அடைய நோன்பு இருக்க வேண்டும்? அவனுக்கு விருப்பம் இருந்தால், அவனே நோன்பு இருந்து வந்து என்னை அடையட்டும்" என்ற எண்ணம் கொண்டவள். (ஹேமலதா என்றால் பொற்கொடி)
(காட்சி: எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவியிருக்க, அவர்கள் மாடவீதியிலிருந்து கோவலர்கள் குடியிருக்கும் வீதிக்கு வருகிறார்கள். அங்கே மாடுகளும் எருமைகளும் நிரம்பியிருக்க, அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஓசை கேட்கிறது.)
சொர்ணலேகா: "கோதை! அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?"
ஆண்டாள்: "குணம், குலம், ரூபம் என்று எல்லாவற்றிலும் சிறந்த ஹேமலதாவைத் தான் எழுப்பப் போகிறோம்."
புல்லகலிகா: "அடடா! ராகவனுக்கு ஏற்ற வைதேகி (சீதா) போல், கண்ணனுக்கு ஏற்ற ஹேமலதாவா!"
(கற்றுக் கறவை கணங்கள் பல )
பத்மா: "இங்கே பாருங்களேன்! எண்ணவே முடியாதபடி இங்கே உள்ள பசுக்களின் கூட்டத்தை! நாராயணனின் கல்யாண குணங்களைப் போல் எண்ண முடியாதபடி, வகை வகையாக 'கோ சமுத்திரம்' (பசுக்களின் கடல்) போல் காட்சி அளிக்கிறதே!"
விசாகா: "இந்தப் பசுக்கள் எல்லாம் கறவை மாடுகள் என்று சொல்ல முடியாதபடி, முதல்முதலில் ஈன்ற இளம்பசுக்களாக (தலை ஈற்றுப் பசுக்களாக) இருக்கின்றனவே! எது தாய் பசு, எது கன்றுக்குட்டி என்று வித்தியாசமே தெரியாமல் நித்தியசூரிகள் போல் இளமையாக இருக்கின்றன."
சுகந்தா: "அது என்ன நித்தியசூரிகள் போல்?"
சொர்ணலேகா: "பரமபதத்தில் இருக்கும் நித்தியசூரிகள் பெருமாளுடைய தீண்டலால் எப்போதும் இருபத்தைந்து வயது இளைஞர்கள் போல் அல்லவா இருப்பார்கள்? அதே போல் இந்தப் பசுக்கள் எல்லாம் கண்ணனின் திருக்கரம் பட்டதால், முதிர்ந்த கறவை மாடுகளும் கன்றுகள் போலவே இளமையாகக் காட்சி அளிக்கின்றன!"
ஆண்டாள்: "சரியாகச் சொன்னாய்! சக்கரவர்த்தி தசரதன் ராமனை நினைக்கும் போதெல்லாம், கிழவனான தானும் வாலிபனாகவே ஆகிவிட்டதாக உணர்வாரே, அது போல!"
(கறந்து)
புல்லகலிகா: "ஊரெல்லாம் பாலும் நெய்யும் வெள்ளமாக வழிந்தோடிக்கொண்டு இருக்க, இவர்கள் யாருக்காக இப்படி ஓயாமல் பாலைக் கறந்துகொண்டே இருக்கிறார்கள்?"
ஆண்டாள்: "அவர்கள் பசுக்களின் நன்மைக்காக கறக்கிறார்கள்! பால் கறக்காமல் இருந்தால் மடி கனத்து, பசுக்களுக்கு முலைக் கடுப்பு வந்து துடித்துவிடும். அந்தப் பசுக்களின் துன்பம் தாங்காமல் தான் இவர்கள் ஓயாமல் கறந்துகொண்டே இருக்கிறார்கள்!"
(செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்)
பத்மா: "கறக்கும் இந்தக் கோனார்களை (இடையர்களை) சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். இவர்களுக்குப் பால் கறக்கவும் தெரியும், போர் வீரர்கள் போல் சண்டையிடவும் தெரியும்
விசாகா: "ஆமாம். கண்ணனுடைய பெருமையை அறியாதவர்கள் எல்லோரும் இவர்களுக்கு எதிரிகள். கம்சன் போன்றவர்கள் உள்ளே வந்து கண்ணனுக்குத் தீங்கு ஏற்படாதவாறு காக்கும் மிடுக்கு உடையவர்கள்! இவர்கள் எதிரிகள் வந்தால் போரிடுவார்கள்; அதே சமயம் எதிரிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை அழிக்கும் வல்லமை உடையவர்கள்."
(குற்றம் ஒன்று இல்லாத)
சுகந்தா: "ஆமாம்! சென்று, கொன்று, வென்று கொண்ட சக்கரவர்த்தித் திருமகன் (ராமன்) போல் வீரம் மிக்கவர்கள் அல்லவா இவர்கள்! அதுமட்டும் அல்ல, பொதுவாக வீரர்களுக்குச் சில குறைகள் இருப்பதுண்டு. ஆனால் நம் ஊர் ஆயர்களிடம் அத்தகைய குறைகள் எதுவுமே இல்லாத, கண்ணனுக்கு என்றுமே அவர்கள் தூய்மையானவர்கள்."
சொர்ணலேகா: "நேரம் ஆகிவிட்டது, பசுக்களைப் பற்றியும், வீரமிக்க ஆயர் குலத்தையும் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். சீக்கிரம் அவளை எழுப்பலாம்!"
(கோவலர் தம் பொற்கொடியே!)
ஆண்டாள்: "அடியே! ஜனகருக்குச் சீதையைப் போல், சிறந்த வீரர்களையும், வளமான பசுக்களையும் கொண்ட இந்த ஆயர்குலத்துக்கே அலங்காரமாய் விளங்கும் பொற்கொடியே ஹேமலதா! எழுந்திரு!"
புல்லகலிகா: "பெயருக்கு ஏற்றார் போல் தங்கம் போன்ற பிரகாசமான அழகியே! மென்மையான கொடியைப் போல வளர்ந்திருப்பவளே! இப்படித் தரையில் கிடக்கலாமா? ஒரு பற்றுக் கொம்பைப் பற்றச் சீக்கிரம் எழுந்து வா!"
(புற்றரவு அல்குல்)
ஆண்டாள்: "அடியே! வெளியே அலைந்து திரிந்து, மற்றவர்களிடம் பிடிப்பட்ட பாம்பு போல் அல்லாமல், புற்றிலிருந்து வரும் நாகம் போன்ற பொலிவையும் , மென்மையையும், நளினத்தையும் கொண்ட இடையழகைப் பெற்றவள் நீ! அதைப் பார்த்து ரசிக்கப் பெண்களான நாங்களே ஆண்கள் போல ஆசைப்பட்டு வந்திருக்கிறோம்! வெளியே வா!"
(புனமயிலே! போதராய்)
பத்மா: "அடியே! காட்டில் ஆடும் மயில் போன்ற நளினமும் அழகும் கொண்டவளே! மயிலின் தோகை எவ்வளவு அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்குமோ, அதுபோல உன்னுடைய அடர்ந்த கரிய கூந்தலும் மிக அழகு! ஒரு மயிலின் அழகைக் கூடத் தோற்கடிக்கும் 'புனமயிலே!' (காட்டு மயிலே!), சீக்கிரம் எழுந்து வா, உன் அழகைக் காண வந்திருக்கிறோம்!"
ஆண்டாள்: "ஹேமலதா! உன்னுடைய ஒவ்வொரு உறுப்பின் அழகையும் (அவயவ சோபை), உன்னைப் பார்க்கும் போது ஏற்படும் ஒட்டுமொத்தப் பொலிவையும் (சமுதாய சோபை) நாங்கள் கண்டு மகிழ வந்திருக்கிறோம்! நீ எங்களுக்கு முன்னால் அழகாக நடந்து செல்ல, உன்னுடைய அந்த நளினமான நடையழகை ரசித்தபடி நாங்கள் உன் பின்னே வர ஆசைப்படுகிறோம். எனவே, தாமதிக்காமல் சீக்கிரம் எழுந்து வெளியே வா!"
(உள்ளிருந்து ஹேமலதாவின் தூக்கக் கலக்கத்துடன் கூடிய குரல் கேட்கிறது)
(சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து)
ஹேமலதா: "நான் சீக்கிரம் எழுந்து வெளியே வருவது இருக்கட்டும். நீங்கள் எல்லாரும் வந்துவிட்டீர்களா? "
(நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட)
ஆண்டாள்: "ஹேமலதா, உன் மீது அன்பு கொண்ட உன் தோழிகள் மட்டும் அல்ல, உன் சம்பந்தம் பெற்ற உறவினர்களும் கூட! உன் மீது அன்பு கொண்ட உன் சுற்றத்தினர் அனைவரும் இதோ உன் வாசலில் கூடிவிட்டார்கள். உன்னைக் காண்பதுதான் அவர்களுக்குப் பேரின்பம். நீ இல்லாமல் அவர்களால் எதையும் தொடங்க முடியாது. உன் அன்பைப் பெறத் துடிக்கும் இவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிற்கும்போது, நீ மட்டும் இன்னும் கண்ணயர்ந்து கிடக்கலாமா?"
விசாகா: "அடியே! விபீஷணன் எப்படிக் கடலைக் கடந்து கரை வந்து சேர்ந்தவுடன் 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டானோ, அது போல உன் வீட்டு முற்றம் எங்களுக்குத் திருமுற்றம் (கோயில் சந்நிதி). நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம்."
ஹேமலதா: "எல்லாம் சரி, முற்றத்துக்கு வந்தீர்கள் சரி, என்ன செய்ய உத்தேசம்?"
(சிற்றாதே பேசாதே )
ஆண்டாள்: "ஹேமலதா! முகில் வண்ணன் (மேகவண்ணன்) அழகில் மயங்கிக் கிடக்கும் நீ, அந்தப் பரவசத்தில் அவனது புகழைப் பாட வேண்டும்; உன் பக்கத்திலேயே நின்று அதைக் கேட்டு நாங்களும் அந்தப் பேரின்பத்தைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நீ உருகிப் பாடும் கண்ணனின் திருநாமங்களைக் கேட்டு மகிழவே நாங்கள் இங்கே காத்திருக்கிறோம்!"
(ஹேமலதா 'முகில் வண்ணன்' என்ற பெயரைக் கேட்டவுடன் கண்ணனின் மேகத்தைப் போன்ற நிறத்தையும், அவனுடைய அழகையும் நினைத்து அவள் மயங்கிப் பேசாமல் கிடக்கிறாள்)
(செல்வப் பெண்டாட்டி!)
ஆண்டாள்: "எங்களுக்கும் கண்ணனுக்கும் எல்லாச் செல்வமுமாய் இருக்கிற பெண்ணே (செல்வப் பெண்டாட்டி)! இப்படிச் சிறிதும் அசையாமல், வாய் பேசாமல் கிடக்கிறாயே! உன்னுடைய பெருமை உனக்கே தெரியவில்லை. எங்களுக்கு உன்னோடு சேர்ந்திருப்பதே மிகப்பெரிய செல்வம்!"
(மயக்கம் தெளிந்த ஹேமலதா கேட்கிறாள்)
ஹேமலதா: "இங்கே என்ன நெல் குதிர் போன்று அவ்வளவு பேரின்பச் செல்வமா நான் சேமித்து வைத்திருக்கிறேன்?”
(நீ எற்றுக்கு உறங்கும் பொருள்?)
ஆண்டாள்: "அடியே! உன்னுடைய அமைதி எங்களைக் கொல்கிறது. உன் ஆசைக்காகவோ, எங்கள் தவிப்புக்காகவோ, அல்லது கண்ணனின் அழகுக்காகவோ... இந்த மூன்றில் எதைக் கருதியாவது நீ எங்கள் கோஷ்டியில் சேர வெளியே வந்திருக்க வேண்டாமா? நீ இப்படி எந்தப் பிரயோஜனமே இல்லாமல் உறங்குவதற்குக் காரணம் தான் என்ன? சீக்கிரம் எழுந்து வா!"
கனைத்து... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
26.12.2025
Comments
Post a Comment