ஆண்டாளும் தோழிகளும் - எல்லே - 15
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா, பூர்ணா) அடுத்ததாக சுகபாஷிணி என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். பூர்ணா இல்லத்திலிருந்து ‘ஏண்டி’ என்று கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் இருக்கிறது இவள் இல்லம். எல்லாப் (பாகவத) பெண்பிள்ளைகளுடைய கோஷ்டியையும் ஒன்றாகக் காண வேண்டும் என்ற ஆசை உடையவள். என்ன பேசினாலும் திரும்பச் சொல்லும் கிளிப் போல, இவள் பேச்சிலும், அழகிலும் கிளியைப் போன்றவள். (சுகம் - கிளி; பாஷிணி - பேசுபவள்).)
(காட்சி: எங்கும் நல்ல வெளிச்சம். ஆண்டாளும் தோழிகளும் பாசுரம் 14-ல் சொன்னது போல ‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை’ என்று பாடிக்கொண்டே வருகிறார்கள். அதே பாடலை மென்மையாக மெருகேற்றி, இனிமையாகத் தனக்குள் யாரோ முணுமுணுக்கும் ஓசை கேட்கிறது. பாடலில் கவரப்பட்டு அதைத் தேடிக்கொண்டு, அந்த இனிமையான தேவகானம் வரும் வீட்டை அடைகிறார்கள்.)
(குறிப்பு: ஏல, ஏலே என்பது தென் தமிழகப் பேச்சு வழக்கு. இவள் பேச்சுக்கும் அழகிற்கும் இவளைக் 'கிளி' என்றே அழைத்திருக்கலாம். ஆனால் இவள் இளமையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக 'இளங்கிளியே' என்கிறார்கள்.)
புல்லகலிகா: "உள்ளே இனிமையான பாடல் கேட்கிறது. இவள் எழுந்துவிட்டாள் போலிருக்கிறதே!"
(கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் பாடல் ஒலி மட்டும் கேட்கிறது; பதில் இல்லை.)
[எல்லே! இளங்கிளியே!]
ஆண்டாள்: "எல்லே! இளங்கிளியே! எழுந்திரு!"
(ஏற்கனவே அண்டை வீட்டுப் பூர்ணாவை ’நாணாதாய், நாவுடையாய்’ என்று இவர்கள் கோபித்துப் பேசியதை இவள் கேட்டிருந்தாள். அதனால் ’இளங்கிளியே’ என்பது பாராட்டா அல்லது வசவா என்ற குழப்பத்தால், 'பங்கயக் கண்ணானை' பாடலை முணுமுணுத்துக்கொண்டு பேசாமல் கிடந்தாள்.)
[இன்னம் உறங்குதியோ!]
பத்மா: "இளங்கிளியே! நாங்கள் கண்ணனைப் பிரிந்து, தூக்கம் இல்லாமல், உன்னைக் காணவேண்டும் என்று தவித்துக்கொண்டு இருக்கிறோம். அதைக் கண்டும் கேட்டும் உனக்கு இன்னுமா தூக்கம்?"
விசாகா: "இளங்கிளியே! ஊர்க்காரர்கள் எல்லாம் நமக்குக் கண்ணனுடன் சேர்வதற்கு அனுமதி கொடுத்ததைத் தெரிந்தும் நீ இன்னும் படுக்கையில் கிடப்பது நியாயமா?"
(இவர்களின் தொடர் பேச்சால், தான் ’பங்கயக் கண்ணானை’ குறித்துப் பாடி அனுபவிப்பதை இவர்களின் பேச்சு இடையூராக இருக்கவே இவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது.)
[சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்]
சுகபாஷிணி: "நங்கைகளே! ஏன் சில்வண்டு சத்தம் காதைக் குடைவதுப் போல இப்படிச் 'சிலுசிலு’ வென்று' பேசிக்கொண்டே இருக்காதீர்கள்! புறப்பட்டு வருகிறேன்! "
(குறிப்பு: தோழிகளான நம்மை அன்புடன் பெயர் சொல்லி அழைக்காமல், ‘நங்கைமீர்’ என்று அன்னியப்படுத்தி அழைக்கிறாள். மேலும் 'சில்லென்று' என்ற சொல் அவளுடைய கோபத்தின் வெளிப்பாடு என்பதை ஆண்டாளும் தோழிகளும் உணர்கிறார்கள்.)
சுகந்தா: "பரிபூரணமான குணங்களை உடைய குணவதியே! நாங்கள் கண்ணனுடைய அனுபவத்திற்கு உன்னை அழைத்தால், நீயோ எங்கள் மீதே இப்படிக் கோபப்படுகிறாயே!"
சுகபாஷிணி: "குணவதிகளே! உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். சற்று வாயை மூடினால், நானே வருகிறேன்!"
[வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்]
சொர்ணலேகா: "பேச்சைப் பார்! இந்த மாதிரி நெருப்புக் கக்குவது போலக் கடுமையான வார்த்தைகளை இன்னைக்கு நேத்தா இப்படி பேசுகிறாய்! உன் பழைய பழக்கம் தானே!"
சுகபாஷிணி: "வெறுப்புப் பேச்செல்லாம் நீங்கள் பேசிவிட்டு என்னைக் குறை சொல்லுகிறீர்கள்! பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்!"
ஹேமலதா: "நாங்கள் என்னமா அப்படிப் பேசினோம்!"
சுகபாஷிணி: "என்ன பேசினீர்களா? ‘இன்னுமா தூங்குகிறாய்?’, ‘கடுமையாகப் பேசும் வாயாடி இது உனக்கு பழக்கம் தானே’ என்றெல்லாம் வெறுப்புப் பேச்சு பேசினீர்களே? மறந்துவிட்டீர்களா?”
தனநிஷ்டா: "உன் வாசலில் வந்து துவண்டு நிற்கும் எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்! நீ என்னென்ன பேசினாய் என்று நாங்கள் பட்டியலிடவா? ‘சிலுசிலு என்று பேசாதே’ என்று சுடுச்சொல் பேசி முதலில் சீறியதே நீதானே அம்மா!"
சுகபாஷிணி: "சிலுசிலு என்று பேசாதீர்கள் என்று நான் சொன்னேன், வாஸ்தவம் தான். ஆனால் நான் அப்படிச் சொன்னதற்கும் நீங்கள் தான் காரணம்!"
சுலோச்சனா: "என்னது நாங்கள் காரணமா? நல்லா இருக்குடி உன் பேச்சு!"
சுகபாஷிணி: "எதுவும் காதில் விழாதபடி உள்ளே நான் ’பங்கயக் கண்ணானை’ பாடிக்கொண்டு கிருஷ்ணனை அனுபவித்துக்கொண்டு இருப்பதை, கண்டும் கேட்டும் சந்தோஷப்படாமல் நீங்கள் என்னைக் கரித்துக் கொட்டலாமா? சரி, அப்படியே பேசினேன் என்றாலும், 'இவள் அப்படிப் பேசமாட்டாளே, ஆழ்ந்த கிருஷ்ண அனுபவத்தில் இருக்கிறாள்' என்று யோசித்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்! இப்போது சொல்லுங்கள் யார் மீது குற்றம்?"
(இந்த சமயத்தில் அவளுக்கு ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் பற்றிய சிந்தனை மனதில் உதித்தது. ஒருவருக்கொருவர் 'அடியேன்', 'தாசன்' என்று சொல்லிக்கொள்ளாமல் இப்படி வசை பேசுகிறோமே! இப்படிப் பாகவதர்களைப் பேசுவதும், அவர்களிடம் வாதம் செய்வதும் 'பாகவத அபசாரம்'. இல்லாத குற்றத்தைச் சுமத்தினாலும், அதை ஏற்றுக்கொள்பவன் தானே வைஷ்ணவன்? பரதாழ்வான் பிறர் குற்றத்தையும் தன் குற்றமாகக் கருதினான் அன்றோ! என்று நினைத்த மறுநொடி...)
[வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!]
சுகபாஷிணி: "குற்றம் என்னுடையதாகவே இருக்கட்டும்!. இப்போது அடியேன் என்ன செய்ய வேண்டும்?"
ஆண்டாள்: "உன்னை விட்டு ஒரு நொடியும் எங்களால் பிரிந்திருக்க முடியாது. அதனால் சீக்கிரமாக வந்து, சடக்கென்று எங்களுடன் சேர்ந்துகொள்!"
(இதற்குப் பிறகும் சுகபாஷிணி வருவதற்குத் தாமதிக்க...)
[ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?]
ஆண்டாள்: "இவ்வளவு சொல்லியும் தனியே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? ஐந்து லட்சம் பேர் பெரும் பானையில் ஒன்றாகச் சேர்ந்து உண்ண இங்கே சமைத்துக்கொண்டிருக்க, நீ சிறிய பானையில் தனியே சமைத்து உண்ணுவது போல் அல்லவா இருக்கிறது உன் செயல்! வைஷ்ணவர்களை விட்டுத் தனியே எம்பெருமானை அனுபவிப்பது தேவதாந்தரங்களின் பஜனைக்கு ஒப்பாகும் என்பது உனக்குத் தெரியாதா பெண்ணே!"
[எல்லாரும் போந்தாரோ? ]
சுகபாஷிணி: "கோதை! உங்களோடு கூடுவதைவிட அடியேனுக்கு வேறு வேலை இல்லை! உங்களை எல்லாம் ஒன்றாகக் காண வேண்டும் என்று ஆசை. ஒன்றும் அறியாத சிறுபெண்களும் வந்த பிறகு வரலாம் என்று இருந்தேன். எல்லோரும் வந்துவிட்டார்களா?"
[போந்தார், போந்து எண்ணிக்கொள்]
ஆண்டாள்: "எல்லோரும் உன்னைக் காண உன் வீட்டு வாசலில் தான் இருக்கிறோம். நீயே வெளியே வந்து அவர்களை உன் விரலால் தொட்டு எண்ணிப் பார்த்துக்கொள். (போந்து எண்ணிக்கொள்)."
சுகபாஷிணி: "கோதை! நாம் அனைவரும் கூடிச் செய்ய வேண்டியது என்ன?"
[வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்]
ஆண்டாள்: "வலிய 'குவலயாபீடம்' என்ற யானையைக் கொன்று, கம்சன் முதலியோரை அழித்து, வல்லமை மிகுந்த மாயனான கண்ணன், தன்னையே நமக்கு அளித்த அந்த கீர்த்தியை உன் இனிமையான குரலில் பாடநீ சீக்கிரம் எழுந்து வா இளங்கிளியே!”
நாயகனாய்... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
30.12.2025
Comments
Post a Comment