Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - புள்ளின்- 13

ஆண்டாளும் தோழிகளும் - புள்ளின்- 13



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா) அடுத்ததாக, கண்ணழகி ஒருத்தியை எழுப்பப் போகிறார்கள். 'என் கண்ணழகிற்கு மயங்கி கண்ணன் தானே என்னிடம் வரட்டும்' என்ற செருக்கில் படுக்கையில் கிடக்கிறாள் அவள். இவள் பெயர் சுலோச்சனா ('சு' - அழகான + 'லோச்சனா' - கண்கள்).

(காட்சி: தனநிஷ்டாவின் வீட்டு வாசலில் பால் சேற்றில் நின்றதால், காலில் சகதியுடனும், மழையில் நனைந்த ஈரமான உடைகளுடனும் தோழிகள் மெதுவாக நடந்து செல்கிறார்கள். உள்ளே இருப்பவள், கோகுலத்தில் கண்ணனைப் பாடாமல், ராமரை அதுவும் ‘மனத்துக்கு இனியானை’ என்று எப்படிப் பாடலாம் என்ற செல்லக் கோபத்தில், இவர்கள் பார்க்கும்படி முகத்தைத் திருப்பிக்கொண்டு கிடக்கிறாள். அவளின் மன எண்ண ஓட்டத்தை ( மைண்ட் வாய்ஸ் ) அறிந்த தோழிகள் அவள் வீட்டு வாசலில்… )

(புள்ளின் வாய் கீண்டானை)

ஆண்டாள்: "தாழ்ந்த நீர் நிலைகளிலே மேயும் கொக்கு உருவத்தில் கள்ள அசுரனான பகாசுரனின் வாயை வயிறுவரை இரண்டாகப் பிளந்த…”

(கண்ணனின் வீரச்செயலைக் கேட்டவுடன், உள்ளே இருப்பவள் சற்று கோபம் தெளிந்து தலையை இவர்கள் பக்கம் திருப்புகிறாள். ஆண்டாள் மேலும் தொடர்கிறாள்.)

(பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்)

ஆண்டாள்: "ஆண்டாள்: கண்ணன் போல், உடலும் உயிருமான ராமரையும் சீதையையும் பிரித்த அந்தப் பொல்லா அரக்கனான ராவணனின் பத்துத் தலைகளையும் ராமன் கிள்ளி களைந்த வீர சரித்திரத்தைப் பாடிக்கொண்டு வந்தோம்”

(பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்)

புல்லகலிகா: "அடியே சுலோச்சனா! நாம் சென்று எழுப்ப வேண்டிய பிள்ளைகள் எல்லோரும் உனக்கு முன்னே எழுந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள்

(உள்ளிருந்து தூக்கக் கலக்கத்துடன் சுலோச்சனா கேட்கிறாள்.)

சுலோச்சனா: "என்ன? அந்தச் சிறுசுகள் எல்லாம் போய்விட்டார்களா? விடிந்து விட்டதா என்ன ?

விசாகா: "ஆமாம், விடிந்துவிட்டது. சந்தேகமாக இருந்தால் நீயே வெளியே வந்து பார்!"

சுலோச்சனா: "நான் வெளியே வந்து பார்ப்பது இருக்கட்டும், அவர்கள் ஏன் இவ்வளவு அவசரமாக அங்கே போகிறார்கள்?"

சுகந்தா: "இது கூடவா தெரியாமல் படுத்திருக்கிறாய்? கண்ணனும் பெண்களும் வழக்கமாக கூடும் பாவைக்களம் தான்!"

சுலோச்சனா: "சிறுபிள்ளைகள் என்று சரியாகத்தான் சொன்னீர்கள். நேரம் காலம் தெரியாத முந்திரிக்கொட்டைகள்! ஊருக்கு முன்னாடி விழித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள், அந்த அறிவிலிகள்! அறிவுள்ள நாம் சுக்கிரோதயம் பார்த்துக் கிளம்பளாம். சுக்கிரேதயத்துக்கு பின் வாருங்கள்.

(வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று)

சுகந்தா: "அடியே! உனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை! வெளியே வந்து பார். கிழக்கு வானத்தில் சுக்கிரன் (வெள்ளி) தலைக்கு மேலே நன்றாகப் பிரகாசிக்கிறான். குரு (வியாழன் சூரியன் ஒளிப்பட்டு குன்றி) அஸ்தமித்துத் தன் ஒளியை இழந்து மறைந்துகொண்டிருக்கிறான் இது விடிந்ததற்கான அடையாளம் தானே?"

சுலோச்சனா: "நீங்கள் எல்லாம் சரியான அவசரக்குடுக்கைகள். உங்களுக்கு மின்னுவது எல்லாம் பொன், மினுக்குவது எல்லாம் நட்சத்திரம். எதையோ பார்த்துவிட்டு குரு, சுக்கிரன் என்கிறீர்கள். புனர்பூசம், பூசமாக இருக்கலாம். போய் தூங்குங்கள்!

சொர்ணலேகா: "அம்மா! நாங்கள் ஏதோ ஓரிருவர் சொல்லவில்லை. இவ்வளவு பேர் திரண்டு வந்து பொய் சொல்வோமா?

சுலோச்சனா: "நீங்கள் எல்லாம் எப்போது பார்த்தாலும் பறவைக் கூட்டம் போல ஒன்றாகத்தானே செல்கிறீர்கள்! ."

(புள்ளும் சிலம்பின காண்)

ஹேமலதா: "நாங்கள் பறவைகளாக இருந்திருந்தால், இந்நேரம் ‘சிலம்பிக்கொண்டு’ இரை தேடப் புறப்பட்டிருப்போம்! அவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது! அவைகளை அனுப்பிவிட்டு தான் வருகிறோம்! நீ தான் இன்னும் தூங்குகிறாய்."

(சுலோச்சனா பறவைகளைக் கொண்டு காலத்தைச் சொல்லும் இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மௌனமாக இருந்தாள்.)

(போதரிக் கண்ணினாய்!)

தனநிஷ்டா: "அடியே! ‘மான்விழியாள்’ என்ற கர்வத்தினால் பேசாமல் இருக்கிறாயா? அல்லது பூவிலே இருக்கும் வண்டு போன்ற கருவிழி கொண்டவள் என்ற தலைக்கனமா?"

(அதிகக் கடுமையான சொல்லைச் சொல்லிவிட்டோமோ என்று, புல்லகலிகா பேச்சை மாற்றுகிறாள்.)

புல்லகலிகா: "உன் கண்ணழகால் அந்தக் கமலக்கண்ணனையே வளைத்துப் பிடித்து எங்களுக்குத் தருவாய் என்று பார்த்தால், நீ இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே!"

(குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே)

பத்மா: "நீ இன்னும் தாமதப்படுத்தினால் சூரியன் உச்சிக்கே வந்து ஆற்று நீர் நம் விரகதாபம் போல் கொதித்துவிடும். அதனால் நீர் குளிர்ச்சியாக இருக்கும்போதே, நம் விரகதாபம் தீர ஆழமாக நீரில் மூழ்கி, குளிர் நடுக்க, உடல் குறுகிப் போக நீராட வேண்டாமா ? "

(பள்ளிக் கிடத்தியோ?)

விசாகா: "அடியே! இல்லை... உன் கண்ணால் கண்ணனைத் தோற்கடித்து, அவன் படுத்த படுக்கையை மோந்துகொண்டு, அந்த வாசனையை விட்டு வர மனம் இல்லாமல், அதிலேயே கிடக்கிறாயோ என்னவோ ?"

சுகந்தா: "உன்னைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் - நீ கண்ணனைத் தனியாக அனுபவிக்கும் பெண் கிடையாதே!"

(பாவாய்! நீ நன்னாளால்)

ஆண்டாள்: "கண்ணனே கொண்டாடும் கண்ணழகி! கண்ணனையும் நம்மையும் பிரித்து வைக்கும் ஊர், இன்று நாமும் அவனும் ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயலாம் என்று அனுமதித்திருக்கும் நன்னாள் இது. நீயோ அவன் படுத்த படுக்கையை மோந்து பார்த்துக்கொண்டிருக்கிறாயே!"

சொர்ணலேகா: "அடியே! பார்க்கும் இடமெல்லாம் வயலில் நெல் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்க, நீ கீழே சிந்திய உதிர் நெல்லைப் பொறுக்குவது போல் அல்லவா இருக்கிறது நீ செய்யும் செயல்! கண்ணன் என்ற பயிர் காத்திருக்க, அவன் படுத்த படுக்கை என்ற உதிர் நெல்லைப் பொறுக்காதே!"

(கள்ளம் தவிர்ந்து கலந்து)

ஆண்டாள்: "சுலோச்சனா! பாகவதர்களுடன் சேராமல், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது ‘பாகவத அபசாரம்’. எங்களுக்குச் சொத்தாக இருக்கும் பாகவதர்கள் தங்களைத் தாமே மறைத்துக்கொண்டால் அது ‘பாகவதத் திருட்டு’ தானே! நீ உன்னை தனிமைப் படுத்திக்கொண்டால் அது அபசாரம். எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டால் அது திருட்டு தானே பெண்ணே! தனியே கண்ணனை அனுபவிப்பது கள்ளத்தனம் என்று உனக்குத் தெரியாதா? உன் கள்ளத்தனத்தை விடுத்து எங்களுடன் நீ வந்து கலந்து நீராட வர வேண்டும்!"

உங்கள்... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
28.12.2025

Comments