Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - கீசு கீசு - 7

ஆண்டாளும் தோழிகளும் - கீசு கீசு - 7



(சூழல்: ஆண்டாள் பூதனை மற்றும் சகடாசுரன் வதங்களை விளக்கிய பின், முனிவர்களும் யோகிகளும் தங்கள் மனதில் கண்ணனை எப்படித் தாங்குகிறார்கள் என்று பேசியபடியே, ஆண்டாளும் தோழிகளும் அடுத்தப் பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள்.)

(காட்சி: பனி படர்ந்த காலை. ஆங்காங்கே சில மாடுகள் மேய்ச்சலுக்கு புறப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கழுத்தில் கட்டிய மணி ஓசை ஆங்காகே கேட்கிறது.. இவர்கள் நடந்து செல்லும் போது தயிர் கடையும் ஓசையும், அவர்கள் பாடும்போது அணிந்துள்ள ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தமும் கேட்கிறது. தயிர் வெண்ணெய் முடைநாற்றத்துடன் நறுமணமும் சேர்ந்து வருகிறது பனியுடன் கலந்து வருகிறது.)

(குறிப்பு: பத்மா கோபியர்களின் ஒருவள். இவள் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபடுவாள். அதனால் இன்றைய பாசுரத்துக்கு இவள் பெயரை தேர்ந்தெடுத்துள்ளேன்)

புல்லகலிகா: "என்னை எழுப்பிவிட்டீர்கள், அடுத்து யாரை எழுப்ப வேண்டும்?"

தோழி: "பத்மா!"

ஆண்டாள்: "அவளுக்குப் பகவத் விஷயத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. ஆனால் அவளை எழுப்புவது கஷ்டம். அவளிடம் வாய்க்கொடுத்து மாட்டிக்கொள்ளக் கூடாது. வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவளை ஜெயிக்க கண்ணனே வந்தாலும் முடியாது! இருந்தாலும், நம் ஆயர்பாடியில் இருக்கும் ஐந்து லட்சம் சிறுமியர்களில் ஒருவரையும் நாம் விடக்கூடாது. அனைவரையும் அழைத்துக்கொண்டு தான் கண்ணனிடம் செல்ல வேண்டும்."

(பத்மாவின் இல்லம் வருகிறது. வாசலில் நிற்கிறார்கள்.)

புல்லகலிகா: "ஏய் பெண்ணே பத்மா! பொழுது விடிந்துவிட்டது, எழுந்திரு!"

(உள்ளிருந்து எந்தச் சத்தமும் இல்லை. ஆண்டாள் கதவை மெதுவாகத் தட்டுகிறாள்.)

புல்லகலிகா: (சற்று உரக்க) "ஏய் பத்மா! நாங்கள் கூப்பிடுவது உன் காதில் விழவில்லையா? தூங்கியது போதும் எழுந்திரு!"

(உள்ளிருந்து சலிப்பான குரல் கேட்கிறது)

பத்மா: "விடிவதற்கு முன்பே ஏன் வீட்டுக் கதவை இப்படித் தட்டுகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் தூக்கமே கிடையாதா?"

ஆண்டாள்: "இப்படி எதிர் கேள்வி கேட்கும் நீயும் தூங்கவில்லை என்பது எனக்குத் தெரியும். விடிந்துவிட்டது, வெளியே வா!"

பத்மா: "அது கிடக்கட்டும் கோதை! விடிந்துவிட்டது என்று எப்படிச் சொல்லுகிறாய்? என்ன அடையாளம்?"

(கீசு கீசு என்று)
ஆண்டாள்: "உங்கள் வீட்டு வாசலில் உள்ள பசுக்களின் மீது உட்கார்ந்திருக்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் செவிக்கு இனிய 'கீசு கீசு' என்ற ஒலி உனக்குக் கேட்கவில்லையா? ரிஷிகளும் முனிவர்களும் 'ஹரி ஹரி' என்று சொல்லுவதைப் போல், இவைகள் 'கிருஷ்ண கிருஷ்ண' (கீசு கீசு) என்று பேசிக்கொள்கின்றன. இது விடிந்ததற்கான அடையாளம் தானே?"

பத்மா: "கோதை! உனக்கு எல்லாமே கிருஷ்ணன் தான். கீசு கீசு என்பது கூட உனக்கு கிருஷ்ணா கிருஷ்ணா என்றுதான் கேட்கும். தினமும் எங்கள் வீட்டுப் பசுவைத் தேடி வரும் இந்த ஓர் ஆனைச்சாத்தன் கத்தினால் விடிந்துவிட்டதாக அர்த்தமாகுமா?"

(எங்கும் ஆனைச்சாத்தன்)
ஆண்டாள்: "அடியே! வெளியே வந்து பார்! ஓர் ஆனைச்சாத்தன் அல்ல, எங்கும் ஆனைச்சாத்தன் போடும் கீசு கீசு சத்தம் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா?"

பத்மா: "என்னை எழுப்ப வரும் வேகத்தில், நீங்கள் தான் அவைகளை 'எங்கும்' எழுப்பிவிட்டிருப்பீர்கள். உங்களுக்குத் தான் யாரும் தூங்கினால் பிடிக்காதே!"

(கலந்து பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? )
ஆண்டாள்: "மறுபடியும் ஆரம்பித்துவிட்டாயா? அவை உன்னைப் போல் அல்ல, தானாகவே எழுந்து ஒன்றோடு ஒன்று கலந்து பேசுவது (பேச்சரவம்) உனக்குக் கேட்கவில்லையா?"

பத்மா: "இரவெல்லாம் தூங்கிவிட்டு, அவை பொழுது விடியும் போது ஏன் கலந்து பேசிக்கொள்ள வேண்டும்? அப்படி என்னதான் பேசிவிடப் போகிறது? அப்படியே பேசினாலும் உனக்கு அதில் என்ன புரிந்துவிடப் போகிறது?"

ஆண்டாள்: "அடியே! மரக்கலத்தில் ஏறிக் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், மீண்டும் கரை திரும்பும் வரை தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்வதைப் போல, பகல் பொழுது முழுவதும் நீடிக்கப் போகும் பிரிவைத் தாங்குவதற்குத் தேவையான மனவலிமையை, இப்பறவைகள் இப்படித் தங்களுக்குள் கலந்து பேசித் திரட்டிக் கொள்கின்றன. பிரிவின் ஏக்கத்தில் அவற்றின் குரல்வளையிலிருந்து வரும் அந்த 'மிடற்றோசையை' நன்றாகக் கேள் பெண்ணே! இது விடியலுக்கான அடையாளம் தானே? அவை என்ன பேசுகின்றன என்று உனக்குப் புரிய வேண்டாம்; ஆனால் அவற்றின் ஏக்கக் குரலைக் கேட்டவுடனேயே, தாமதிக்காமல் கண்ணனிடம் சென்று அவன் அருகில் நிற்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?"

பத்மா: "உங்களுக்கு இப்படி எழுப்புவதே வேலை! முன்பு இறைவனின் துதி கேட்டு எழுந்துகொள்ளும் காலம் இருந்தது; இப்போது பறவைகளின் பேச்சுக் கேட்டு எழுந்திருக்கும் நிலை வந்துவிட்டதே! இது தான் கலிகாலம் போலும்!"

(பத்மா போர்வையை இன்னும் இழுத்துப் போர்த்திக்கொள்கிறாள்.)

ஆண்டாள்: "அடியே! அங்கே உள்ளே கண்ணன் இருக்கிறானோ? அவனுடன் நீயும் மர்மமாகக் கலந்துப் பேசிக்கொண்டிருக்கிறாயோ?"

(உள்ளிருந்து பதில் இல்லை. ஆண்டாளின் தோழிக்குக் கோபம் வருகிறது.)

(பேய்ப் பெண்ணே)
தோழி: "பேய்ப் பெண்ணே! நன்றாக விடிந்துவிட்டது என்று தெரிந்தும், நாங்கள் சொல்லும் வார்த்தைகளைக் காலால் எட்டி உதைப்பது போலத் துச்சமாக மதிக்கும் அறிவுகெட்டவளே! உன்னுடைய பேய்த்தனத்துக்கு அளவே இல்லையா?"

பத்மா: "நள்ளிரவில் வந்து கதவைத் தட்டி எழுப்பும் நீங்கள் அல்லவோ பேய்ப் பெண்கள்?"

ஆண்டாள்: "தோழி, கோபப்படாதே! பாகவதர்களுடன் சேர்ந்து இறைவனை அனுபவிப்பது தானே அறிவுள்ள பெண்கள் செய்யும் செயல்? அந்தக் குணம் உன்னிடம் இருக்குமே? நீ வெளியே வரவில்லை என்று என் தோழி உரிமையோடு உன்னைப் 'பேய்ப் பெண்ணே' என்று அழைத்தாள்."

(சற்று கோபம் குறைந்தாலும், இன்னும் சிணுங்கிக்கொண்டே பத்மா பேசுகிறாள்.)

பத்மா: "எல்லாம் சரி, விடியலுக்கு வேறு ஏதாவது பலமான அடையாளம் இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் கிளம்புங்கள்."

(காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?)
ஆண்டாள்: "அடியே! ஆய்ச்சியர்கள் எல்லோரும் எழுந்து, தயிர் கடையும் ஓசை கூடவா உன் காதில் விழவில்லையா?"

பத்மா: "எனக்குக் கேட்கவில்லையே!"

ஆண்டாள்: "அடியே! மலைப் போன்ற கெட்டியான தயிரை, மத்து கொண்டு திருப்பாற்கடலைக் கடைவது போல் இவர்கள் வேகமாக கடையும் போது, அவர்கள் கூந்தல் அவிழ்ந்து முடை நாற்றத்தை மறைக்கும் அளவு வாசனையான நறுமணத்துடன், அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் காசுமாலையும், ஆமைத்தாலி/முலைத்தாலியும் 'கலகல' என ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. அவர்கள் பாடிக்கொண்டே தயிர் கடையும் அந்த அரவம் வைகுண்டத்தில் கூடக் கேட்கும்... அது உன் காதில் விழவில்லையா?"

பத்மா: "நம்மூரைப் பற்றி உனக்குத் தெரியாதா? கண்ணன் பிறந்த பின் பசுக்கள் குடம் நிறையப் பாலை நிரப்ப, இவர்கள் இரவு பகல் பாராமல் எப்போதும் கடைந்துகொண்டே இருப்பார்கள்! இவர்களுக்கு இதே பொழுதுபோக்கு. அதனால் இது விடியலுக்கு அடையாளம் ஆகாது."

(வெளியில் இருப்பவர்கள் இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று தவிக்க, ஆண்டாள் தொடர்கிறாள்.)

(நாயகப் பெண் பிள்ளாய்)
ஆண்டாள்: "நாயகப் பெண்பிள்ளாய்! (எங்கள் தலைவியே!) நீ எங்களை வழி நடத்துவாய் என்று பார்த்தால், நாங்கள் உன்னை வழிநடத்த வேண்டியிருக்கிறதே! நீ தலைவியாக இருக்கும் செருக்கால் இப்படிப் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாயோ?"

பத்மா: "சற்று முன் 'பேய்ப் பெண்ணே' என்றீர்கள், இப்போது 'தலைவி' என்கிறீர்களே?"

ஆண்டாள்: "அடியே! தலைவியாக இருந்தாலும் மிகவும் நேசிக்கும் தோழியை உரிமையோடு 'பேய்ப் பெண்ணே' என்று செல்லமாகத் திட்டினோம்! நீயே நாயகப் பெண்பிள்ளாய்!"

(பத்மா அமைதியாக இருக்கிறாள்)

(நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?)

ஆண்டாள்: "அடியே! கம்சன் ஏவிய குதிரை வடிவ அசுரனான கேசியைப் பிளந்து கொன்ற நாராயண மூர்த்தியான நம் கண்ணனை (கேசவனை) நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்டும் நீ தூங்கலாமா? எங்களுடன் வந்து பாட வேண்டாமா? நாங்கள் பாடுவது குழந்தையை தொடையில் தட்டி தூங்க வைப்பது போல் இருக்கிறதோ?"

(தேசம் உடையாய்! திற ஏலோர் எம்பாவாய்)
(கேசியைக் கொன்ற விஷயம் கேட்டதும், பத்மா சந்தோஷத்தில் முகமலர்ச்சி பெற்று மேலும் அழகானாள். இதைச் சாளரம் (ஜன்னல்) வழியே எட்டிப் பார்த்த ஆண்டாளும் அவள் தோழிகளும் வியக்கிறார்கள்.)

ஆண்டாள்: "தேஜஸ் உடையவளே! (ஒளி மிக்கவளே!) கதவை மூடி வைத்து உன் அழகு வெள்ளத்துக்குத் தடை போடாதே! சீக்கிரம் வந்து கதவைத் திற. நாம் சேர்ந்து செல்லாலம்”

கீழ்வானம் தொடரும்..
-சுஜாதா தேசிகன்
22.12.2025

Comments