Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - புள்ளும் - 6

 ஆண்டாளும் தோழிகளும் - புள்ளும் - 6



கண்ணன் ஆயர்பாடியில் பிறந்து, நித்தியசூரிகள் கூட அனுபவிக்க முடியாத அவனது குணங்களையும், அழகையும் நினைத்து ஆண்டாளும் அவள் தோழிகளும் வியக்கிறார்கள். அவனுடைய நாமங்களைத் தூய மனதுடன் சொன்னால் பாவங்கள் தொலையும் என்று பேசிக்கொண்டு வருகிறார்கள்.

ஆண்டாள்: "தோழி! வேகமாக நட. நாம் மற்றவர்களை எழுப்ப வேண்டும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் துணைக் கொண்டு குளிப்பது போல், கண்ணன் எனும் அனுபவத்தில் சிக்கித் தவிக்கும் நமக்குத் துணை தேவை."

தோழி: "கோதை! ஆம், அந்த நித்தியசூரிகளே வைகுண்ட நாதனை அனுபவிக்கத் துணையைத் தேடுகிறார்கள் எனும்போது, இடக்கை வலக்கை அறியாத நமக்குத் துணை தேவைப்படாதா? இதோ, அந்தப் பெண்ணின் வீடே வந்துவிட்டது."

(காட்சி: அழகான வீடு. சுற்றிலும் மரங்கள் அசையாமல் இருக்க, ஆங்காங்கே பறவைகளின் ஒலி கேட்கிறது. எதிரே உள்ள கோயிலின் பெரிய கதவை யாரோ திறக்கும் ஓசை கேட்கிறது. பனியால் கோயில் கோபுரம் அதன் உள்ளே கொடிமரமும் மங்கலாகத் தெரிகிறது.)

( ஆண்டாள் திருப்பாவையில் உள்ளே உறங்கும் தோழியின் பெயரைக் குறிப்பிடவில்லை. பெரியவாச்சான் பிள்ளையும் குறிப்பிடவில்லை. இந்தப் பாசுரத்தின் அந்த பெண்ணின் பெயர் பிள்ளாய். புல்லகலிகா என்பவள் பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு சேவை செய்யும் முக்கியமான கோபியர்களில் ஒருத்தி. புள்ளும் என்பதற்கு ஏற்ற மாதிரி புல்லகலிகா இருப்பதாலும் தோழிகள் பேசிக்கொள்ளும் போது படிக்க சுலபமாக இருப்பதற்கு அதை இங்கே உபயோகித்துள்ளேன்).

ஆண்டாள்: "உள்ளே இருக்கும் பெண்ணின் பெயர் தானே புல்லகலிகா?"
தோழி: "ஆமாம் கோதை! நேற்றுதான் நம் கோஷ்டியில் சேர்ந்தாள். பாகவதர்களின் பெருமையை அவ்வளவாக அறியாத பெண்."

(ஆண்டாள் குரல் கொடுக்கிறாள்)

ஆண்டாள்: "புல்லகலிகா... எழுந்திரு!"

(பதில் இல்லை)

தோழி: "குவளை மலரில் மதுவுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு போல் தூங்குகிறாளே! (சற்று உரக்க) புல்லகலிகா! விடியற்காலை எழுந்திருப்பதாகச் சொன்னாயே, இன்னும் இப்படித் தூங்கலாமா? சீக்கிரம் எழுந்திரு. நீராட நேரமாகிவிட்டது."

(உள்ளிருந்து மெல்லிய, தூக்கக் கலக்கமான குரல் கேட்கிறது)

புல்லகலிகா: "பொழுது விடிந்தால் தானே எழுந்திருக்க முடியும்? இன்னும் விடியவே இல்லையே!"

தோழி: "நன்றாக விடிந்துவிட்டது, எழுந்திரு! நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்."

புல்லகலிகா: "நீங்கள் விடிந்துவிட்டது என்கிறீர்கள். உங்களை எப்படி நம்புவது? அதற்கு என்ன அடையாளம்?"

ஆண்டாள்: "அடியே! நாங்கள் எழுந்து வந்ததே உனக்கு அடையாளமாகத் தெரியவில்லையா?"

புல்லகலிகா: "நீங்கள் எல்லோரும் தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு? கண்ணனைக் காதலிப்போருக்கு ஏது தூக்கம்? அதனால் நீங்கள் எழுந்து வந்தது விடியலுக்கு அடையாளமாகாது."

(புள்ளும் சிலம்பின காண்)

ஆண்டாள்: "உங்கள் வீட்டு மரங்களில் உள்ள அறிவற்ற பறவைகள் ஆரவாரத்துடன் இரை தேடச் செல்ல, அறிவுள்ள நாம் ஆர்வத்துடன் இறை தேடச் செல்ல வேண்டாமா? பறவைகளின் ஆரவாரம் உனக்கு அடையாளமாகத் தெரியவில்லையா? சீக்கிரம் வா."

புல்லகலிகா: "உங்களுக்கும் தூக்கம் இல்லை; இங்கே வந்து என்னை எழுப்பச் சத்தம் போட்டு, பாவம் தூங்கிக்கொண்டிருந்த பறவைகளையும் எழுப்பிவிட்டீர்கள். இவை இயற்கையான பறவைகளின் ஆரவாரமில்லை. எங்கள் வீட்டுப் பறவைகளின் ஒலி எனக்குத் தெரியும். நீங்கள் இருக்கும் ஊரில் பறவைகளுக்கு ஏது தூக்கம்?"

ஆண்டாள்: "உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு அவற்றை எழுப்புவதுதான் வேலையா? வெளியே வந்து பறவைக் கூடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்று பார். அதுபோல நம் பாவங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 'சீக்கிரம் எழுந்திரு, திருமாலை அணுகி நம் பாவங்களைப் போக்கிக்கொள்ள ஏற்ற விடியற்காலை இது' என்று அப்பறவைகள் திருப்பள்ளியெழுச்சி பாடும் சத்தம் உனக்கு உணர்த்தவில்லையா?"

புல்லகலிகா: "சரி சரி, வேறு ஏதாவது உருப்படியான அடையாளம் இருந்தால் சொல்லுங்கள்."

(புள்ளரையன் கோயிலில்)

ஆண்டாள்: "அது கிடக்கட்டும். நாங்கள் வரும்போதே உன் வீட்டு வாசலில் கருடாழ்வான் சந்நிதியுடன் கூடிய பெருமாள் கோயிலைத் திறந்துவிட்டார்கள். அந்தச் சந்நிதியின் வாசலில் எழும் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லையா?"
புல்லகலிகா: "கோதை! எங்கள் வீட்டுக்கு முன் இருக்கும் கோயிலில் ஒவ்வொரு ஜாமத்திற்கும் இப்படி ஊதுவார்கள். அதனால் இது விடிந்ததற்கான அடையாளமாக இருக்காது. அர்த்தஜாமமாக இருக்கும். போய் தூங்கு"

(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?)

ஆண்டாள்: "'பொழுது விடிந்துவிட்டது எழுந்திருங்கள்' என்று திருப்பள்ளியெழுச்சிக்கு அழைக்கும் பெரிய சங்கொலி இது, உனக்குக் கேட்கவில்லையா? இன்னொன்றைச் சொல்லுகிறேன் கேள்! அவர்கள் கையில் வைத்திருக்கும் சங்கு வெண்மையாகத் தெரிகிறது. இந்த வெளுப்பு தெரிவதே விடியலுக்கு அடையாளம் தானே?"

புல்லகலிகா: "கோதை! கருடனுக்கு ஸ்வாமியான அந்த எம்பெருமானே கண்ணனாக அவதரித்திருக்கும் இந்த ஆயர்பாடியில் அவனுக்குத் தனிக் கோயில் உண்டோ?"

ஆண்டாள்: "அயோத்தி மக்கள் ராமனை வணங்கினார்கள். ஆனால் சக்கரவர்த்தித் திருமகன் ரங்கநாதனுக்கு ஒரு கோயில் அமைத்துச் சீதையுடன் வணங்கியதை நீ அறிவாய் அல்லவா? அதுபோலக் கண்ணனையும் கும்பிட வைக்கும் கோயில் இங்கே உண்டு!"

(புல்லகலிகாவிடமிருந்து பதில் இல்லை. ஆண்டாள் தன் தோழியிடம் சற்று உரக்க பேசுகிறாள்)

(பிள்ளாய்! எழுந்திராய் )

ஆண்டாள்: "தோழி, உள்ளே இருக்கும் புல்லகலிகா பாகவத பெருமையை முழுமையாக அறியாத பிள்ளையாக கிடக்கிறாள். கண்ணனைக் கொண்டாடும் அடியவர்களுடன் சேர்ந்திருக்கும் சுவை அறியாத, அல்லது விருப்பம் இல்லாத பேதமைப் பிள்ளை போலும். அவள் வீட்டு வாசலில் நின்று நாம் அவளைக் காண ஆசைப்பட்டோம்; ஆனால் அவளோ நம்மை காண ஆசைப்படாத பிள்ளை."

(உள்ளிருந்து இதைக் கேட்ட புல்லகலிகா சற்று கோபத்துடன் பேசுகிறாள்)

புல்லகலிகா: "நான் உள்ளே உறங்கிக் கிடக்கிறேன் என்று நீங்கள் பார்த்தீர்களா? நான் கிருஷ்ணானுபவத்தில் திளைத்துக் கொண்டிருக்க, உங்களுடைய சுவையான பேச்சுகளைக் கேட்டேன். என்னைப் 'பிள்ளாய்' என்று அழைத்த நீங்கள் அன்றோ பிள்ளைகள்!"

ஆண்டாள்: "நன்றாக இருக்கிறது! நாங்கள் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தாயாக்கும்! பிள்ளாய்!"
புல்லகலிகா: "கோதை! முதலில் உங்களை யார் எழுப்பினார்கள்?"

ஆண்டாள்: "எங்களை யாரும் எழுப்பவில்லை. விடியற்காலை பாகவதர்களுடைய 'ஹரி ஹரி' என்ற நாமம் கேட்டு நாங்களே எழுந்தோம்."

புல்லகலிகா: "நீங்கள் சொல்லுகிறபடி நானே பிள்ளையாக இருந்துவிட்டுப் போகிறேன். கிடக்கும் என் காதுக்கு இனிமையான பேச்சுகளைப் பேசுங்கள்."

(பேய்முலை நஞ்சு உண்டு)

ஆண்டாள்: "சொல்கிறேன் கேள்! கண்ணனைப் பெற்ற தேவகி, கம்சன் கொன்றுவிடுவான் என்ற பயத்தில் அவனை ஆயர்பாடியில் ஒளித்து வளர்த்தாள். இதை அறிந்த கம்சன் அக்குழந்தையைக் கொல்லப் பல அரக்கர்களை அனுப்பினான். அவர்களில் ஒருத்திதான் பூதனை. இரவில் அழகிய உருவம் ஏற்று, உறங்கிக்கொண்டிருந்த கண்ணனின் அருகில் சென்று தனது நஞ்சு தீற்றிய முலைப்பாலைக் கொடுத்துக் கொல்ல நினைத்தாள்... கண்ணனுக்கு வந்த இந்தப் பேராபத்தைப் பற்றி உனக்குத் தெரியாதா?"

(இதைக்கேட்ட புல்லகலிகா பதறிப்போய் பாதி எழுந்து உட்கார்ந்தாள்)

புல்லகலிகா: "அப்புறம் என்ன ஆச்சு?"

ஆண்டாள்: "கண்ணன் அவளுடைய முலையை இறுகப் பிடித்துப் பால் பருகுவது போல் அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சிவிட்டான். இந்தச் சங்கொலி போல் பேரிரைச்சலுடன் அவள் உயிரை விட்டாள்."

தோழி: "பேயையாவது ஆராய்ந்து கொள்ளலாம். ஆனால் யசோதை ஒரு வண்டியின் அடியில் நிழலுக்காகக் கண்ணனைத் தூளி கட்டிப் படுக்க வைத்துவிட்டுச் சென்றாள். அங்கே தூங்கிக்கொண்டிருந்த கண்ணனுக்கு வந்த பேராபத்து பற்றி உனக்குத் தெரியுமா?"

(இதைக்கேட்ட புல்லகலிகா பதறிப்போய் முழுவதுமாக எழுந்து உட்கார்ந்தாள்)

புல்லகலிகா: "ஐயோ! அது என்ன கதை?"

(கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி)

தோழி: "கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன் அந்த வண்டியில் புகுந்தான். இதனை அறிந்த கண்ணன் பாலுக்காக அழுவது போல் இரண்டு திருவடிகளையும் மேலே தூக்கி உதைக்க, அது பேரோசையுடன் அக்குவேறு ஆணிவேறாகச் சிதறியது!"

(பெரியாழ்வார் சம்பந்தம் பெற்ற ஊர் என்பதால், கண்ணனுக்கு ஆபத்து என்றதும் புல்லகலிகா துணுக்குற்று எழுந்தாள். ஆண்டாள் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக பெருமாளுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று தொடர்கிறாள்)

(வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை)
ஆண்டாள்: "கண்ணனுக்கு இத்தீமைகள் நேர்ந்தாலும், எந்த அபாயமும் இல்லாத திருப்பாற்கடல் என்ற குளிர்ந்த இடத்தில், மென்மையான, வாசனையான அனந்தாழ்வான் மேலே, உலகங்களை எப்படிப் பாதுகாக்கலாம் என்ற சிந்தனையில் அவன் துயில்கிறான். அவன் திருவடியில் உள்ள பிராட்டி எழுப்பினாலும் எழுந்துகொள்ளாமல், அடுத்து என்ன அவதாரம் செய்யலாம் என்று யோகநித்திரையில் இருக்கிறான்."

(புல்லகலிகா அமைதியடைகிறாள்)

(உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்; மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்)

ஆண்டாள்: "இப்படித் துயிலில் இருப்பவன், தன் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு முனிவர்கள் மற்றும் யோகிகளின் நெஞ்சாகிய பிரதேசங்களில் குடியேறுகிறான். இந்த முனிவர்களும் யோகிகளும், தங்கள் உள்ளே அந்தர்யாமியாக இருப்பவனுக்கு எந்தத் தீங்கும் வராமல் இருக்க, கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நோகாமல் மெல்ல எழுந்து கொள்வதைப் போல விடியற்காலை எழுகிறார்கள். அவர்கள் எழுந்து 'ஹரி ஹரி ஹரி' என்று உச்சரிக்கும் ஒலி ஆயர்பாடி முழுவதும் பேரரவமாக ஒலிக்கிறதே!"

(உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்)

தோழி: "கண்ணனைப் பிரிந்து புண்பட்ட எங்கள் நெஞ்சை, அந்த ஹரியின் திருநாம ஒலி ஆற்றுப்படுத்தியது. அது வெள்ளம் போலப் பாய்ந்து, முனிவர்கள், யோகிகளின் நெஞ்சங்களில் புகுந்தது போல், செவி வழியே எங்கள் நெஞ்சத்துள் புகுந்து குளிரச் செய்தது. அந்தக் குளிரில் எங்கள் பற்கள் கிடுகிடுவென ஆரவாரித்தது(வவ்வலிடப்பண்ணிற்று; Chattering teeth due to cold); அதனால் நாங்கள் எழுந்தோம். ஆகையால் பிள்ளாய், நீயும் எழுந்திராய்!"

கீசு கீசு தொடரும்..
-சுஜாதா தேசிகன்
21.12.2025

Comments