Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - கனைத்து - 12

ஆண்டாளும் தோழிகளும் - கனைத்து - 12



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா) அடுத்ததாக, கண்ணனின் நிழலாகத் திகழும் 'நற்செல்வன்' என்பவனின் தங்கையை எழுப்பப் போகிறார்கள். ராமனுக்கு எப்படி லட்சுமணனோ, அதுபோலக் கண்ணனுக்கு இந்தச் செல்வன். அண்ணனைப் போல் தங்கையும். அவள் பெயர் தனநிஷ்டா.)

(காட்சி: 'செல்வப் பெண்டாட்டி'யான ஹேமலதா இல்லத்துக்கு மிக அருகில் இருக்கும் இல்லம். எருமை மாடுகள் ஏராளமாக நிற்கின்றன. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. பாசுரம் 4-ல் வேண்டிக் கொண்டபடி லேசாகத் தூறல் போடத் தொடங்குகிறது)

ஹேமலதா: "அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?"

புல்லகலிகா: "உன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் செல்வனின் தங்கை தனநிஷ்டாவை."

ஆண்டாள்: "நாடோ, காடோ... ராமனைப் பின்தொடர்ந்த இளையபெருமாளைப் (லட்சுமணனைப்) போல், இவனுக்கும் கண்ணனைத் தவிர வேறு எதுவும் தெரியாதே! அதனால் இவனை வெறுமனே செல்வன் என்று சொல்லாமல் ‘நற்செல்வன்’ என்று அழைப்பது தான் பொருத்தம்."

பத்மா: "அவனுடைய தங்கையும் அப்படியே! கண்ணனுக்குத் தொண்டு புரியும் கைங்கரியச் செல்வமே அவளது நிஷ்டை. பெயரும் அதற்கு ஏற்றாற் போலப் பொருந்தியிருக்கிறதே!"

( எங்கும் எருமைகள் கனைத்துக்கொண்டு இருக்கும் ஓசை கேட்கிறது)

(கனைத்து இளங் கற்று-எருமை)

ஹேமலதா: "இளமையான கன்றுகள் போல் காட்சி அளிக்கும் எருமைகள்... இவன் வீட்டுக்கு இதுவே அடையாளம். அதோ அவன் வீடு வந்துவிட்டது."

விசாகா: "இவன் வீட்டில் எருமைகள் எல்லாம் ஏன் இப்படிக் கனைத்துக் கொண்டு இருக்கின்றன?"

சுகந்தா: "இவளுடைய அண்ணன் கண்ணனுடனேயே எப்போதும் திரிவதால், கறவைகளைக் கறக்க மறந்துவிடுகிறான்! பாவம், மடி கனத்து முலைகடுத்து அவை கதறுகின்றன (கனைத்திளம் கற்றுக்)."

சொர்ணலேகா: "அடடா! எருமைக்கன்றுகளைச் சற்றுத் தள்ளி அந்தக் கொட்டகையில் கட்டி வைத்திருக்கிறான். அவற்றை அவிழ்த்து விட்டாலாவது அவை வந்து பால் குடிக்கும். அதைச் செய்வதற்குக்கூட நேரமில்லாமல் கண்ணன் பின் அலைந்துகொண்டிருக்கிறான் நற்செல்வன்."

(கன்றுக்கு இரங்கி)

ஹேமலதா: "யாரும் கறக்காத போது, அவை தானாகப் பால் சுரந்து, வாசல் முழுவதும் யமுனை ஆறு போலப் பால் வழிந்து இந்த இடமே சேறாகியிருக்கிறதே!

(நினைத்து முலை வழியே நின்று பால் சோர)

பத்மா: "எருமை என்றால் இரக்க குணம் இருக்காதா என்ன? ராமன் ஏழை என்றும், கீழ் மகன் என்றும் பார்க்காமல் குகனுக்கு இரங்கியது போல, சற்றுத் தொலைவில் கட்டப்பட்டுள்ள தங்கள் கன்றுகளின் மீது பாவனையால் பாசத்தைச் செலுத்தி, கன்றுகள் வாய்வைத்தாக எண்ணி இவை இடைவிடாமல் பால் சொரிகின்றன! அதனால் தான் எங்குப் பார்த்தாலும் பால் வெள்ளம்!"

விசாகா: "இவை பால் சொரிவதைப் பார்த்தால் திருமலையில் அருவிகளில் இடைவிடாமல் நீர் கொட்டுவது போல் அல்லவா இருக்கிறது! கால் வைக்கவே இடமில்லையே!"

புல்லகலிகா: "ராம கைங்கரியம் என்ற செல்வத்தை இடைவிடாமல் செய்த இளையபெருமாள் போல், இந்தச் செல்வன் இடைவிடாமல் கிருஷ்ண கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கிறான். அவன் தங்கையும் கிருஷ்ண அனுபவத்தில் மூழ்கிக்கிடக்கிறாள் போலும்."

சுகந்தா: "அடியே! தனநிஷ்டா! உன் வீட்டில் எருமைகளுக்குத் தங்கள் கன்றுகளிடத்தில் இருக்கும் அன்பும் இரக்கமும் கூட உனக்கு எங்களிடம் இல்லையா? விடிந்துவிட்டது எழுந்திரு!"

சொர்ணலேகா: "அடியே! வெளியே வந்து பார்! செல்வன் எருமைகளைக் கறக்காமல் விட்டதால் அவை படும் பாட்டை நாங்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்கும் சேறாக இருக்கிறது."

(நனைத்தில்லம் சேறாக்கும்)

ஆண்டாள்: "வீடு முழுவதும் பால் சேறாக இருக்க நாங்கள் உள்ளேயும் வர முடியவில்லை."

ஹேமலதா: "அண்ணன் போல் தங்கை! செல்வன் எருமைகளைப் பார்த்தால் தானே இவள் நம்மைத் திரும்பிப் பார்ப்பாள்?"

(நற் செல்வன் தங்காய்)

ஆண்டாள்: "விபீஷணன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராமபிரானுக்கு அடிமை பூண்டான். அப்போது அவன் மகள் திரிஜடை, சீதையின் துயரத்தைப் போக்கினாள் அல்லவா? அதுபோல, உன் அண்ணனுக்குக் கண்ணனே சகலமும் என்று இருக்கும்போது, நீ திரிஜடையைப் போல் எங்களைக் கவனிக்க வேண்டாமா?"

(தூறல் சற்று அதிகமாகிறது)

(பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி)

ஆண்டாள்: "தனநிஷ்டா! இப்போது எங்கள் நிலைமை என்ன தெரியுமா? மேலே பார்த்தால், (ஆழி மழைக்) கண்ணன் பொழியும் மழை வெள்ளம் ; கீழே பார்த்தால், உங்கள் வீட்டு எருமைகள் சொரியும் பால் வெள்ளம்; எங்கள் மனதிற்குள்ளே பார்த்தால், கண்ணன் மேல் நாங்கள் கொண்டுள்ள அன்பாகிய மால் வெள்ளம்! இப்படி மூன்று வெள்ளங்களுக்கு நடுவே தத்தளிக்கும் நாங்கள், தப்பிக்க வழியில்லாமல் ஒரு தெப்பத்தைப் (படகு) பற்றிக்கொள்வது போல, வழுக்கி விழாமல் இருக்க உன் வீட்டு வாசற்படியின் மேற்கட்டையைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டு நிற்கிறோம் . நீதான் வெளியே வந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்!"

(ஆண்டாளும் தோழிகளும் தனக்காகப் படும் பாட்டை இன்னும் சிறிது நேரம் காண வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, அவள் பேசாமல் படுக்கையில் படுத்திருந்தாள்)

பத்மா: "கோதை! நாம் 'பல்லி சேர்க்கை' போல் ஒன்று சேர்ந்து ’கண்ணன் அப்படிச் செய்தான்’, ’இப்படிச் சிரித்தான்’ என்று அவனது கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தால், இவளோ ஒரு பேச்சுக்குக் கூடப் பதில் சொல்லாமல், கண்ணனைப் பற்றிய நினைவுகளில் அப்படியே உறைந்து போய்க் கிடக்கிறாள்."

(குறிப்பு: பல்லி சேர்க்கை - பல்லிகள் ஒன்று சேர்ந்தால் இடைவிடாமல் 'டிக் டிக்' என்று சத்தமிடும். அதுபோல, பெண்கள் நான்கு பேர் கூடினால் அங்கே பேச்சிற்குப் பஞ்சம் இருக்காது.)

ஆண்டாள்: "கண்ணன் கதைகளைச் சொன்னால் இவள் அதில் மயங்கி எழுந்துகொள்ள மாட்டாள். இவளை எழுப்ப, பெண்களைப் பிரிந்தால் உணவும் உறக்கமும் இல்லாத சக்கரவர்த்தித் திருமகனைக் குறித்துச் சொல்லலாம்."

(சற்று உரத்த குரலில் ஆண்டாள் பாடுகிறாள்)

(சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை)

ஆண்டாள்: "ஏண்டி! சுக்ரீவனுக்குக் கோபம் வந்த போது, தனக்கு வந்த கோபம் போல் வாலியை அடித்தான். சுக்ரீவன் அழுத போது தானும் அழுதான். தன் மீது அம்பு பட்ட போது கூடக் கோபமே வராத ராமபிரான், அனுமன் மீது அம்பு பட்ட போது, கோபத்தால் சீறி, தென் இலங்கை கோமானான ராவணனின் படையை அழித்து, புத்திரர்களை மாய்த்து, அவன் தேரைச் சாய்த்து, ஆயுதங்களை முறித்து, அவன் செருக்கை அழித்த மனதுக்கு இனியவனான ராமபிரானின் பிரபாவத்தைப் பாடியும் நீ வாய் திறக்காமல் மௌனமாக இருக்கலாமா?"

ஹேமலதா: "இறந்தவர்களுக்குக் கூட உயிர் கொடுக்கக்கூடிய சஞ்சீவியாகிய ராம நாமத்தைச் சொல்லுகிறோம். இறந்தவர்கள் கூட எழுந்துவிடுவர்கள் ஆனால் அதைக் கேட்டுக்கொண்டும் எழுந்துக்கொள்ளாமல் இப்படி உறங்கலாமா?"

(பாடவும் நீ வாய் திறவாய் இனித் தான் எழுந்திராய், ஈது என்ன பேர் உறக்கம்!)

ஆண்டாள்: "தனநிஷ்டா! நாங்கள் உன் வாசலில் படும் துன்பத்தையும் தவிப்பையும் கண்டும் நீ எழுந்திருக்காமல் இருக்கிறாய். சரி, எங்கள் மேல் உனக்கு அக்கறை இல்லையென்றால் போகட்டும்! ஆனால், நம் எல்லோருடைய மனதிற்கும் இனியவனான அந்த ராமரைப் பற்றிப் பாடிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்பதற்காகவாவது நீ எழுந்து வர வேண்டாமா? எங்கள் முகத்திற்காக வராவிட்டாலும், அவன் புகழுக்காகவாவது நீ வெளியே வரவேண்டாமா? உன் உறக்கத்தைப் போல நாங்கள் இதுவரை கண்டதில்லை, இது என்ன மாதிரி உறக்கம் அம்மா? இந்தப் பேருறக்கத்துக்கு என்ன பெயரோ?"

(அனைத்து இல்லத்தாரும் அறிந்து )

விசாகா: "ஊரில் இருக்கும் பெண்கள் எல்லாம் உன் வீட்டு வாசலில் கூடி நிற்க, அப்படியும் நீ எழுந்துகொள்ளாமல், எல்லாரும் நம்மை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறாயா?"

புள்ளின்வாய்... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
27.12.2025

Comments