Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - கீழ்வானம் வெள்ளென்று - 8

ஆண்டாளும் தோழிகளும் - கீழ்வானம் வெள்ளென்று - 8





(சூழல்: ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் பறவைகளின் ஒலியைச் சொல்லி பத்மாவை எழுப்பிய பிறகு, கண்ணனால் பெரிதும் விரும்பப்பட்ட விசாகா என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். கிருஷ்ணனை அடைய வேண்டும் என்ற ஆசை ஒருபுறம், ஊரார் விழித்துக்கொண்டால் தடுத்துவிடுவார்களே என்ற பயம் மறுபுறம் இருக்க, ஆர்வமும் தவிப்புமாக அந்தப் பெண்ணின் வீட்டு வாசலை அடைகிறார்கள்.)

(காட்சி: பனி மெல்ல விலகி கிழக்கு வெளுக்கும் சமயம். பசுமையான வயல்களில் எருமைகள் ஆங்காங்கே தெரிகின்றன. கோயில்களில் மணியோசை கேட்கிறது. பறவைகள் இரை தேடிப் பறக்கின்றன.)

பத்மா: "என்னை எப்படியோ எழுப்பிவிட்டீர்கள். அடுத்து உங்கள் கையில் சிக்கப் போவது யார்?"

புல்லகலிகா: "கண்ணனுக்கு விருப்பமான விசாகா! நம் தோழிகள் எல்லோரும் இவளைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்."

(விசாகாவின் இல்லம் வருகிறது. வாசலில் நிற்கிறார்கள்.)

புல்லகலிகா: "விசாகா! பொழுது விடிந்துவிட்டது; ஊரார் அனைவரும் விழித்துக்கொண்டால் நம்மைக் கண்ணனிடம் செல்ல விடமாட்டார்கள். அவர்கள் நம்மைத் தடுப்பதற்கு முன்பே நாம் புறப்பட வேண்டாமா? இந்த இக்கட்டான நேரத்திலும் நீ இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே?"

(தூக்கக் கலக்கத்தில் உள்ளே இருந்து விசாகா பேசுகிறாள்)

விசாகா: "ஏண்டி! உங்களுக்கு எல்லாம் தூக்கமே வராதா? மார்கழி மாதக் குளிரில் நீங்களும் தூங்காமல், மற்றவர்களையும் தூங்க விடாமல் ஏன் இப்படிப் படுத்துகிறீர்கள்?"

ஆண்டாள்: "விசாகா! தமோ குணத்தின் மிகுதியே உன் தூக்கம்! விடிந்துவிட்டது சீக்கிரம் வெளியே வா!"

விசாகா: "கோதை! விடிந்துவிட்டது என்று சொன்னாயே, அதற்கு என்ன அடையாளம்?"

ஆண்டாள்: "அடியே! கிழக்கு வெளுத்திருக்கிறதே! (கீழ்வானம் வெள்ளென்று)."

விசாகா: "ஏன் வெளுக்காமல்? நீங்கள் எல்லோரும் கூட்டமாக நின்று, பொழுது எப்போது விடியப் போகிறது என்று கிழக்குத் திக்கையே ஆவலோடு பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் முக ஒளி கிழக்கில் பட்டுத் தான் கிழக்குத் திசை வெளுத்திருக்கிறது! அது சூரிய ஒளி அல்ல. எப்போதும் பால், தயிர், மோர் என்று வெளுத்த வஸ்துக்களையே பார்த்துப் பழகிய உங்களுக்கு, வெளுத்தது எல்லாம் பால் தானே? உண்மையில் கிழக்கு இந்நேரம் வெளுத்திருக்காது. போய்த் தூங்குங்கள், விடிந்த பிறகு வாருங்கள்!"

ஆண்டாள்: "நீயும் ஆரம்பித்துவிட்டாயா? உன் வீட்டின் எதிரே பசுமையான பனிப்புல்லை மேய்வதற்காக (சிறுவீடு மேய்தல்) எருமைகள் வயலெங்கும் பரவியிருக்கின்றனவே, அதுவும் தெரியவில்லையா?"

விசாகா: "கோதை! சூரியன் வரும் போது இருள் சிதறுவது போல, உங்கள் முகவொளியைக் கண்டு கருப்பான இருள் சிதறியிருப்பதை, எருமைகள் என்று நினைக்கிறீர்கள். கயிற்றைப் பார்த்துப் பாம்பு என்று நினைக்கும் உங்கள் விபரீத ஞானம் இது! அதனால் அது எருமைகள் சிறுவீடு மேய்வதல்ல; வீட்டுக்குச் செல்லுங்கள்!"

ஆண்டாள்: "எங்கள் ஞானம் விபரீதமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஞானத்தில் சிறந்தவளே! இவ்வளவு பேசுகிறாயே! விடியவில்லை என்பதற்கு நீ ஒரு அடையாளம் சொல்லேன் பார்க்கலாம்?"

விசாகா: "கோதை! ஏன் சொல்ல முடியாது? ஆயர்பாடியில் உள்ள ஐந்து லட்சம் பேரும் என் வீட்டு வாசலில் இருக்கிறார்களா? இல்லையே! விரல் விட்டு எண்ணும்படியாக உன்னுடன் பத்து பேர் தானே வந்திருக்கிறீர்கள்? இதுவே விடியவில்லை என்பதற்கு அடையாளம் இல்லையா? எல்லோரும் வந்தால்தானே விடிந்ததாக அர்த்தம்?"

ஆண்டாள்: "அடியே! உன்னைத் தவிர மற்ற எல்லோரும் எழுந்து சென்றுவிட்டார்கள். உன்னை விட்டுவிட்டுப் போகக் கூடாது என்றுதான் நாங்கள் உன்னைத் தேடி வந்தோம்."

விசாகா: "அப்படியா? அவர்கள் என்னைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டார்களே? என்மேல் அவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை போலும்!"

ஆண்டாள்: "அம்மா விசாகா! அவர்கள் உன்னை அலட்சியம் செய்துவிட்டுப் போகவில்லை. பெரிய கூட்டமாக இருந்ததால், அந்தக் கும்பலில் நீயும் இருப்பாய் என்று எண்ணி அவர்கள் சென்றுவிட்டார்கள்!"

விசாகா: "கோதை! சரி அது போகட்டும்! என்ன காரியத்துக்காக அவர்கள் இவ்வளவு அவசரமாக என்னை விட்டுவிட்டுப் போகிறார்கள்?"

ஆண்டாள்: "வைகுண்டத்துக்குப் போவது போலவும், திருவேங்கட யாத்திரை போவது போலவும், அக்ரூரர் கண்ணனைப் பார்க்க அவனை நினைத்துக்கொண்டே போனாரே, அது போலவும்... கண்ணனைப் பார்க்கப் போவதே (யாத்திரையே) அவர்களுக்குச் சந்தோஷம்! அதனால் முன்னரே சென்றுவிட்டார்கள்."

(குறிப்பு: ரயிலில் ஊருக்குப் போகும் போது, ஊர் போய்ச் சேருவதை விட ரயிலில் போகும் அனுபவம் சந்தோஷமாக இருக்குமே, அது போல.)

விசாகா: "என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்ட பிறகு, நான் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?"

ஆண்டாள்: "என்னைப் பேசவிடு! அவர்கள் போகும் போது கூட்டத்தில் உன்னைக் காணாமல், 'விசாகா இன்னும் வரவில்லை' என்றோம். உடனே திடுக்கிட்டு, மந்திரத்தால் கட்டுண்ட நாகம் போல் அப்படியே அசையாமல் நின்றுவிட்டார்கள். அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, உன்னை அழைத்துச் செல்ல உன் வீட்டு வாசலில் நிற்கிறோம்."

விசாகா: "அந்தப் பெண்கள் ஒரு கூட்டமாக ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கட்டும். நீங்கள் ஏன் என்னைத் தனியாகத் தேடி வந்தீர்கள்?"

ஆண்டாள்: "அவர்களுக்குப் போவதே சந்தோஷம் என்பது போல, எங்களுக்கு உன்னை 'கோதுகலப் பாவை' (கௌதுகலம் என்றால் குதூகலம்/ஆசை) என்று கூப்பிடுவதே சந்தோஷம். கண்ணன் விரும்பிய பொம்மை ( பாவை என்பதற்கு பொம்மை என்று ஒரு பொருள் உண்டு) போன்றவளே! அவனுடைய ஆசையைப் பெற்றிருப்பவளே! அப்படிப்பட்ட நீதானே எங்களைக் கண்ணனிடம் அழைத்துச் செல்ல வேண்டும்? கண்ணனை விட நீயே எங்களுக்கு வேண்டப்பட்டவள்! சீக்கிரம் எழுந்திரு!"

(குறிப்பு: குழந்தைகள் ஒரு 'டெட்டி பேர்' பொம்மையைக் கட்டிக்கொண்டு ஆசையாகத் தூங்குவது போலே, கண்ணனுக்குப் பிரியமானவள் இவள்.)

விசாகா: "எல்லாம் சரி கோதை! இப்படி எழுந்து, கூடிச் சென்று நாம் பெறப் போகும் பயன் தான் என்ன?"

ஆண்டாள்: "என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்! முன்பு ஊரார் 'கண்ணன் கிடக்கட்டும், பெண்கள் கிடக்கட்டும்' என்று நம்மைக் கண்ணனிடம் அண்ட விடாமல் தடுத்தார்கள். அப்போது, ஊராருக்குத் தெரியாமல் கண்ணனை நெஞ்சத்தில் அனுபவித்து, அந்த அனுபவத்தால் பிறந்த ஆசையை எல்லாம் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டோம்."

விசாகா: "இப்போது?"

ஆண்டாள்: "இப்போது ஊர் மக்களே நாம் கண்ணனைப் பாடச் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இத்தனை காலம் அணை போட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீரைப் போல, நம் மனதிற்குள் தேங்கிக் கிடந்த கண்ணனின் நினைவுகள் இப்போது பொங்கி எழுகிறது அல்லவா? நம் நெஞ்சத்து பக்தி வெள்ளம், தடையையும் அணைகளையும் உடைத்துக்கொண்டு சீறிப் பாயும்படி, நாம் ஆசை தீர வாயாரக் கண்ணனைப் பாடிப் பறையைப் பெற வேண்டாமா?"

விசாகா: "கோதை! எல்லாம் சரி, எதைப் பாடுவது? அது என்ன பறை?"

ஆண்டாள்: "பறை பற்றி நீ எழுந்து வந்த பின் சொல்லுகிறேன். பாடுவதற்கு கண்ணனுடைய வீர தீர சரித்திரங்களுக்கா பஞ்சம்? நமக்காகக் கேசியைப் பிளந்ததைப் பற்றிப் பாடலாமே!"

விசாகா: "அது பழைய கதை!"

ஆண்டாள்: "அப்படியானால், வடமதுரை சென்று மல்லர்களை வீழ்த்திய அந்த சிங்கக் குட்டியைப் பாடிக்கொண்டே அவனை நாம் சென்று சேவிக்க வேண்டாமா?"

விசாகா: "நாம் ஏன் அவனைச் சென்று சேவிக்க வேண்டும்? அவன் வரமாட்டானா?"

ஆண்டாள்: "பரதன் ராமனைப் போய்ச் சேவிக்கவில்லையா? அவன் தேவாதி தேவன். நாம் போய் அவனைச் சேவித்தால், 'ஐயோ! இவர்கள் நம்மை வந்து சேவிக்கிறார்களே' என்று பதறி, 'அடியவர்களைக் காப்பவன் என்ற என் ஏற்றம் அழிந்துவிடுமே' என்று நம் துக்கத்தைப் பொறுக்காமல் நமக்கு இரங்கி அருள் புரிவான் (ஆராய்ந்து அருளுவான்). வா போகலாம்!"

தூமணி... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
23.12.2025

Comments