Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - ஓங்கி - 3

ஆண்டாளும் தோழிகளும் - ஓங்கி - 3



ஆண்டாளும் தோழியும் நோன்பு நோற்க முடிவெடுத்தபோது, மார்கழி மாதத்தில் முழு நிலவுடன் கூடிய நல்ல நாள் அமைந்தது கண்ணனின் திருவருளே என்று மகிழ்கின்றனர். இந்த நோன்புக்குரிய செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்துப் பேசிய பிறகு, அவர்கள் 'பரமனடி போற்றி' என்று பாடிக்கொண்டு, அனைவரும் கண்ணனின் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஸ்ரீவில்லிபுத்தூரே ஆயர்பாடியாகக் காட்சி கொடுக்க, தெருவில் மற்ற தோழிகளை எழுப்புவதற்காக நடந்து செல்கிறார்கள்.
வழியில் வளைந்திருந்த மூங்கிலைக் கண்ட ஆண்டாள், தன் தோழியிடம் பேசலானாள்.

ஆண்டாள்: "இந்த மூங்கிலைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது?"
(ஓங்கி உலகளந்த) தோழி: "வேறொன்றும் தோன்றவில்லை.

தோழி: “மூங்கில் பனிக்குப் பணிந்து சாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான். சூரிய ஒளி பட்டதும் நிமிர்ந்துவிடும்."

ஆண்டாள்: "பனி படர்ந்த மூங்கில் சூரியன் பட்டவுடன் நிமிர்வது போல, திருப்பாற்கடலில் சாய்ந்திருக்கும் பரமன். மகாபலியின் கையில் வார்த்த நீர் பட்டவுடன், ஓங்கி உலகை அளந்தான். அவன் உத்தமன்!"

தோழி: "கோதை, உனக்கு எதைப் பார்த்தாலும் அவன் நினைவுதான்! எனக்கு வாமன அவதாரம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லேன்."

ஆண்டாள்: "இந்திரனின் கண்ணீரால் துயருற்று வாமனனாகச் சுருங்கினான். மகாபலி அவன் கையில் நீர் வார்க்க, அந்த நீர் பட்டவுடன், ஆனந்த மிகுதியால் ஓங்கி திருவிக்கிரமனாக வளர்ந்து உலகளந்தான். வாமனனின் கையில் பட்ட நீரும், அவன் திருவிக்கிரமனாக வளர்ந்தபோது பிரம்மா அவன் திருவடியைத் விளக்கிய நீரும் ஒன்றாக விழுந்தனவாம். அவ்வாறு அவன் திருவடி இந்த மண்ணில் பட்டவுடன், எந்தப் பேதமும் இல்லாமல் அனைத்து உயிரினங்களின் தலைகளையும் தொட்ட உணர்வைப் பெற்றதே! அது, உறங்கும் குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் உணர்வு போல் இருந்ததாம்” என்றவள் கீழே கிடந்த மண்ணை இரண்டு கையாலும் எடுத்து, "இதை முகர்ந்து பார், வாமனனின் திருவடி வாசனை இதில் வரும்" என்றாள்.

(உத்தமன் பேர்பாடி)
தோழி: அதனை முகர்ந்து பார்த்தபோது, "எனக்கு முடை நாற்றம்தான் தெரிகிறது! வாமனனின் வடிவழகைப் பார்த்தால் எனக்குக் கண்ணன் நினைவுதான் வருகிறது. அது சரி கோதை, வாமனனை ஏன் உத்தமன் என்று கூறினாய்?" என்றாள்.

ஆண்டாள்: மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள். முதலாவது அதமன் - தன் சுயநலத்திற்காகப் பிறருக்குத் தீங்கு விளைவிப்பவன். இரண்டாவது மதியமன் - பிறரும் வாழ வேண்டும் என்ற நடுநிலையுடன் வாழ்பவன். மூன்றாவது உத்தமன் - தான் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்று பிறரின் நன்மைக்காகத் தியாகம் செய்பவன்.
சர்வலோகங்களுக்கும் தலைவனான அவன், தேவர்களின் நலனுக்காகத் தன்னைக் குறுக்கிக்கொண்டு, கையேந்தி யாசகம் கேட்டானே! அவனே உண்மையான உத்தமன். அத்தகைய உத்தமனின் திருப்பெயரைப் போற்றிப் பாடுவோம்!

தோழி: "கோதையே! திருமால் முக்கியமா, அல்லது அவரது திருநாமங்கள் முக்கியமா?"

ஆண்டாள்: "அவன் கட்டிப் பொன் போன்றவன்; அவனது திருநாமமோ பணிப் பொன் போன்றது. எம்பெருமான் எந்த விதக் குறைகளோ, குற்றங்களோ, கலப்போ அற்ற தூய்மையானவனாய், பரிபூரணப் பொலிவுடன் விளங்குகிறான். அவனது திருநாமமோ, ஆபரணம் செய்ய உதவும் பணிப் பொன் போன்றது. ஆபரணப் பொன் அணிபவருக்கு அழகையும், இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பது போல, திருமாலின் திருநாமம் உச்சரிப்பவருக்குச் சகல நலன்களையும், பாவங்களைப் போக்கி மன அமைதியையும், இறுதியில் வீடுபேற்றையும் அளிக்கவல்லது. கட்டிப் பொன்னைவிட, ஆபரணப் பொன்னே அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாகவும், பயன் தரக்கூடியதாகவும் இருப்பது போல, எம்பெருமானின் முழுமையான சொரூபத்தை அறிவது கடினம் என்றாலும், அவனது திருநாமத்தைச் சொல்வது மிக எளிதானதும், ஆனால் அளப்பரிய ஆற்றல் வாய்ந்ததுமாகும்."

தோழி: 'இறைவன் இல்லை' என்று சொல்லும் பகுத்தறிவு நாத்திகன் கூடத் தன் காரியங்களை நிறைவேற்ற அவரது திருநாமங்களைச் சொல்லிக் கொள்வதை நாம் காண்கிறோமே! அவன் இல்லை என்று மறுத்துவிட்டு, அதே சமயம் அவன் திருநாமத்தை உச்சரிப்பது ஒருவகை அயோக்கியத்தனம் இல்லையா?"
ஆண்டாள்: "தாயைக் கொடுமைப்படுத்தும் ஒரு தடியன், அவளைத் தன் கையாலேயே அடித்துத் துன்புறுத்துகிறான். அப்படி அடிக்கும்போது அவனது கை சுளுக்கினால், அந்த வலியைப் போக்கிக்கொள்ள 'அம்மா!' என்று அதே தாயின் பெயரைச் சொல்லித் தானே முனகுகிறான். இதனால் ‘அம்மா’ என்ற சொல்லுக்கு தானே மரியாதை? அவனுடைய திருநாமம் சொல்ல விரோதிகளுக்கும், அயோக்கியர்களுக்கும் தகுதி உண்டு."

தோழி: ”கோதை! மனம் குளிர்ந்தது. ஆயர்பாடியில் நல்ல வேளை நாத்திகர்கள் இல்லை! நாம் வேறு பலன்களை எதிர்பார்க்காமல், அவன் திருநாமம் பாடுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள். அவன் திருநாமம் நமக்கு வாழ்வுக்கு உணவு போன்றது. அவன் பேரைச் சொல்லாவிட்டால் நம்மால் ஜீவிக்க முடியாது. இந்த மார்கழி மாதத்தில் அவன் திருநாமங்களைச் சொல்லும் பேறு பெற்றோம்."

(நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்)
ஆண்டாள்: ”சிலர் முத்தைக் கொடுத்துப் பாக்கு வாங்குபவர்களைப் போல, அவன் திருநாமத்தைக் கூறி அற்பமான பலன்களைப் பெறுவர். ஆனால் நாமோ பல கட்டுப்பாடுகள் உள்ள இந்த ஊரிலே, அவன் நாமங்களை 'நோன்பு' என்ற சாக்கில் வாயால் பாடும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். இந்த நோன்பு நீராடலே அவனை அனுபவித்தல் ஆகும். நோன்புக்குத் தேவையான பலத்தையும், பலன்களையும் அவனே அளிக்கிறான்.”

தோழி: ”ஆம்! இந்திரன் இழந்த பூமியை மீண்டும் அடைந்தான்; மகாபலி பூமியை இழந்தான். ஆனால் அவர்களை யாரும் கொண்டாடுவதில்லை. ”
(தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து)

ஆண்டாள்: ”நாம் எல்லோரும் அவன் பேர் பாடினால், ’உறு எண்ணெய் விட்டார் போல’ ஒரு நாள் மழையும் ஒன்பது நாள் வெயிலுமாக மாதந்தோறும் மும்மாரி பெய்யும். நோய், பஞ்சம், திருடர் பயம் எதுவும் இன்றி, நம் ஆயர்பாடி மட்டுமல்லாமல் நாடெங்கும் சுபிட்சம் நிலவும். திருவிக்கிரமன் உலகை அளக்க ஓங்கி வளர்ந்தது போல, செந்நெல் பயிர்கள் செழித்து வளரும்."

தோழி: ”மாரீசன் பயத்தினால் பார்க்கும் மரங்களை எல்லாம் ராமனாகப் பார்த்தான். கோதை! நீயோ அன்பினால் நிற்கின்ற எல்லாவற்றையும் நெடுமாலாகப் பார்க்கிறாய்!"

(ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப)
ஆண்டாள்: “வயலில் நெற்பயிர்கள் எல்லாம் வைரத் தூண்கள் போலக் கம்பீரமாக நிற்கிக, அதன் காலடியில், யானைக் கன்றுகளைப் போலச் செருக்குடன் வளர்ந்த கயல் மீன்கள், நெற்பயிர்களுக்கு இடையே புகுந்து ஓட முடியாமல் துள்ளித் தவிக்கின்றன. அங்கே பூத்திருக்கும் குவளை மலர்களில் தேனைக் குடித்த வண்டுகள், அப்படியே மயங்கிக் கிடக்கின்றன. மீன்கள் துள்ளும் வேகத்தில் நெற்பயிரும் குவளையும் மோதிக்கொள்ள, அந்த அசைவில் வண்டுகள் ஊஞ்சலாடுகின்றன. அந்தத் தோற்றம் எப்படி இருக்கும் தெரியுமா? வாயில் மதுவோடு தூங்கு மெத்தையில்(ஊஞ்சல்) சுகமாகத் தூங்கும் ஓர் இளவரசனைப் போலவே இருக்கும்!!"

தோழி: ”கோதையே! வயல் அழகு போதும், ஊருக்குள் செல்லலாம்” என்று புன்னகைக்கிறாள்.

(தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி)
ஆண்டாள்: ஊரிலுள்ள பசுக்கள் அனைத்தும் பாலுடன் மிகவும் புஷ்டியாக இருப்பதால், பலம் பொருந்திய இடையர்கள் கூட அவற்றைக் கறக்கத் தயங்குவார்கள்.

தோழி: நீ சொல்வதைப் பார்த்தால், கடலைத் தாண்டிய அனுமன் போல வலிமை மிக்க ஒருவன் தான் பால் கறக்க வர வேண்டும் போலிருக்கிறதே!
(வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்)

ஆண்டாள்: ஆம், முத்து எடுக்க மூழ்குபவர்கள் கடலுக்குப் பயந்தால் முடியுமா? அதுபோல, துணிந்து கறக்க வேண்டும். ஒருமுறை கறக்கத் தொடங்கினால், எழுந்து நிற்க முடியாமல், விரலல் கறக்க முடியாது. இரண்டு கைகளாலும் இடைவிடாது பெருத்த முலைகளைப் பற்றி இழுத்துக் கறந்துகொண்டே இருக்க வேண்டும். பால் வற்றாமல் வந்துகொண்டே இருக்கும்; ஒருமுறை இழுத்தாலே பல குடங்கள் நிரம்பி வழியும்.இடையர்கள் குடம் இல்லாமல் தவிப்பார்கள்.

தோழி: நீ சொல்வதைக் கேட்டால், இந்தப் பசுக்களிடம் சிறுவர்கள் போகப் பயப்படுவார்களே?

ஆண்டாள்: ”இல்லை! இவை சிறுபிள்ளைகள் கட்டினாலும், அடித்தாலும் சாதுவாக இருக்கும். கண்ணனின் கழுத்தில் ஓலை கட்டி 'தூது போ' என்று சொன்னால் கேள்வி கேட்காமல் போனது போலத் தம்மையே கொடுத்துக்கொள்ளும் வள்ளல் குணம் கொண்ட பெரும் பசுக்கள்.

தோழி:” இவை சாதாரணப் புல்லும் தண்ணீரும் மட்டும் சாப்பிட்டு வளரவில்லையே!. கண்ணன் தடவி வளர்த்தவை; அவனுடைய புல்லாங்குழல் ஓசையைக் கேட்டு வளர்ந்தவை அல்லவா?”

(நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.)
“ஆண்டாள்: நாம் ஓங்கி உலகளந்த உத்தமனின் புகழைப் பாட, வள்ளல் குணம் கொண்ட இந்தப் பசுக்கள் குடத்தை நிரப்பும்; அது போல, அவன் கருணையால் நமக்கு அழியாத கைங்கரியச் செல்வம் கிட்டும்!

அப்போது, அந்த இருட்டில் தூரத்தில் யாரோ வருவது போலத் தெரிந்தது. அது யாராக இருக்கும் என்று ஆண்டாளும், தோழியும் உற்றுப் பார்த்தனர்.

இன்றைய கேள்வி : ’உறு எண்ணெய் விட்டார் போல’ என்றால் என்ன ?

ஆழி தொடரும்..
-சுஜாதா தேசிகன்
19.12.2025
#திருப்பாவை2025-2026

Comments