பொய்யிலாத மணவாள மாமுனி ’பொய்யிலாத’ என்று பதம் ஏன் வருகிறது என்று பல காலமாக தெரியாது. ஒரு முறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது அதை விளக்கினார். அதைக் குறித்து கடைசியில் கூறுகிறேன். சில வருடங்களுக்கு வைகாசி விசாகம் அன்று ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். அன்றுதான் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருநட்சத்திரம். வீதிப் புறப்பாட்டின்போது மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையை சேவித்துவிட்டு, மாலை மரியாதைகளுடன் சில வாழைப்பழப் பிரசாதங்களுடன் விடைபெற்றுச் சென்றார். பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன். “இந்தப் பிரசாதத்தை கொடுக்க தகுந்தவரை தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளித்த பிரசாதம்” என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார். திருவாய்மொழிப் பிள்ளை தான் மணவாள மாமுனிகளின் ஆசாரியர். திருவாய்மொழிப் பிள்ளை, சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், 'பரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காத...