Skip to main content

5. பாவை குறள் - குடல் விளக்கம்

5. பாவை குறள் - குடல் விளக்கம்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

மாயனான வடமதுரையில் பிறந்த திருக்குமாரனான தூய யமுனை நதிக் கரையில் வசிக்கிற இடையர் குலவிளக்காக அவதரித்து, யசோதைக்குப் பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்தத்துடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி, நெஞ்சார தியானித்தால்,  முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும். ஆகவே அவன் நாமங்களைச் சொல்லுவோம் என்கிறாள் ஆண்டாள். 

’மாயனை’ என்று ஆரம்பிக்கிறாள் ஆண்டாள். மாயனை என்ற சொல்லை எப்படிப் புரிந்துகொள்வது ? வியக்கத்தக்கச் சொல்ல முடியாத செயல்களைச் செய்பவன் மாயன். 

சென்ற பாசுரத்தில் பரிமேலழகர் ’கடவுளின் ஆணையால் உலகமானது நிலை பெறுவதற்கேதுவாய் இருக்கும் மழையினது சிறப்பை சொல்லும் அதிகாரம்’ என்று ’வான் சிறப்பு’ அதிகாரத்தை விளக்குகிறார். மழையை ஏற்படுத்துகிறான் அதனால் அவன் மாயன் என்று கூறலாம். ‘சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று…’ மழை வருகிறது இது அறிவியல், இங்கே பெருமாள் எங்கே வருகிறார் என்று நமக்குத் தோன்றும். நம் வீட்டில் இருக்கும் குழாயில் மேலே இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் வருகிறது. வானத்தில் பெரிய தண்ணீர் தொட்டியா இருக்கிறது ? எப்படி அவ்வளவு தண்ணீர் மேலே எந்தத் தொட்டியும் இல்லாமல் இருக்கிறது ? 

முதல் பாசுரத்தில் கண்ணனின் அடையாளங்களைக் கூறி நாராயணன் என்றாள். இந்தப் பாசுரத்தில் அதே போல் மேலும் கண்ணனின் அடையாளங்களைக்  கூறி ’தாமோதரன்’ என்கிறாள். தாமோதரன் என்றால் எளிமையின் வடிவம். போன பாசுரத்தில் பற்பநாபன் என்று சிருஷ்டிக்குக் காரணமான ஊழி முதல்வனைப் போற்றிய ஆண்டாள்,  பயப்படாதீர்கள் அவன் மிக எளியவன் என்று இந்தப் பாசுரத்தில் கூறுகிறாள். 

வியக்கத் தக்க செயல்களைச் செய்யும் பற்பநாபன், யசோதை ஒரு சின்ன கயிற்றால் வயிற்றில் தழும்பு ஏற்படும் படி அவனைக் கட்டினாள். அந்த ஆதிபகவனான சர்வேஸ்வரனைக் கட்டுமளவுக்கு எளிமையை உலகறிய காட்டியருளினான் கண்ணன். 

வள்ளுவர் 

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

பார்வைக்கு எளிமை, சொல்லுக்கு இனிமை உடைய மன்னனை நாடு புகழும் என்கிறார். பகவானோ இந்தப் பிரபஞ்சத்துக்கே மன்னன் அவன் காட்டிய எளிமையை என்னவென்று கூறுவது ? இதுவே ஒரு பெரிய மாயம் அல்லவா ? அதைத் தான் மதுரகவி ஆழ்வார் ‘கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன்’ இதை நினைவு கூர்ந்து நம்மாழ்வார் ‘எத்திரம் உரலினோடு இணைந்து இருந்த ஏங்கிய எளியே!” என ஆறு மாதம் கண்ணீர் மல்கிக் கிடந்தார். 

ஒவ்வொரு முறையும் அந்த தழும்பை உலகம் பார்க்கும் போது யசோதை நினைவுக்கு வந்து, தன்னைக் கட்டுமளவுக்குப் பணிவான மகனைப் பெற்ற அந்த வயிற்றுக்குப் பெருமை தேடிக் கொடுத்தவன் ( குடல் விளக்கம் ) 

பெரியாழ்வார் கண்ணனைப் பால் அருந்த யசோதை கெஞ்சுகிறாள். கண்ணன் வர மறுக்கிறான். 

”உன்னை கண்டார்
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே”


என்று கூப்பிடுகிறார். 

உன்னைக் காண்பவர்கள் "இவனைப் பெற்றவள் என்ன நோன்பு நோற்றாளோ?" என்று என்னைப் புகழ்வதைக் கேட்கும்படி செய்த காதல் மகனே இருடிகேசா! பால் அருந்தவா என்று செல்லமாகக் கெஞ்சிக் கொஞ்சுகிறாள்

வள்ளுவர்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

என்கிறார். அதாவது மகன் செய்யத்தக்கக் கைம்மாறு ’இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் என்கிறார். 

மேலே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் ‘என்னும் வார்த்தை’ என்பது இந்தக் குறளை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம். 

’மக்கட் பேறு’ என்ற அதிகாரத்தில் மற்ற சில குறள்களைப் பார்த்தால் ‘குடல் விளக்கம்’ என்பதற்கு விளக்கம் கிடைக்கும். 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள். அப்படி மகிழ்ந்தாள் யசோதை. எமக்கு தேவகி தானே மகனாக பெற்றாள் என்று தோன்றும். அந்த குறையை தீர்க்க தான் ’மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’ என்று குலசேகர ஆழ்வார் பாடிவிட்டார். 

அப்படிப்பட்ட அந்த எளிமையான மாயனை நாம் தூய மனத்துடன் மலர்களைத் தூவி, அவன் நாமங்களைப் பாடி பூஜை செய்யலாம் வாருங்கள் என்கிறாள். 

தூய மனதினால் செய்யும் பூஜையே சிறந்தது அதனால் ’தூயோமாய் வந்துநாம்’ என்பதில் மனம் தூய்மைக்கு ஆண்டாள் முக்கியத்துவம் கொடுக்கிறாள். வள்ளுவரின் ஒரு குறளை பார்க்கலாம். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

அதாவது ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் என்கிறார் முனிவர்.

மனம் சுத்தமாக வைத்துக்கொள்ள பக்தியும், பூஜையும் அவசியம். உள்ளத்தைத் துப்புரவாக வைப்பதற்கு ஆரவாரம் தேவை இல்லை. எது தர்மம் எது அதர்மம், என்று பல புத்தகங்களையும் சாஸ்திரங்களையும் படிக்கத் தேவை இல்லை. 

இந்த ஒரு குறள் போதும். 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும். 

அந்த மனத்தூய்மையே கற்பு. ஒரு பெண் எப்படி தன் கணவனையே உறுதியாக நம்பி இருப்பாளோ அது போல நாம் நாராயணனே என்று கற்புடன் பக்தி செய்யவேண்டும். 

வள்ளுவர் 

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

புற நிர்ப்பந்தங்களில் உண்டாகும் சுத்தம் கற்பாகாது; தன் உள்ளத் தூய்மையால் அடையும் சுத்தமே கற்பு. இன்னொரு குறளில் 

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

திண்மை என்றால் உறுதி என்று பொருள். அதுவே கற்பின் முக்கியமான இலக்கணம். ஒரு சமயம் பொங்கி வழிந்து, ஒரு சமயம் தாழ்ந்துபோகும் பக்தி கற்பாகாது. அசையாத, அழையாத, அசங்காத பக்தியே கற்பு. அப்படி செய்தால் ? பாவங்கள் தொலையும் என்கிறாள் ஆண்டாள். 

வள்ளுவர் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் பெருமாளின் திருவடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது என்கிறார். 

எளியவனான அந்த மாமாயனைப் பூரண அன்பும், ஆசையும் நம்பிக்கையும், அனைத்தும் நீயே என்னும் கற்புள்ள பக்தியைச் செலுத்தினால் நம் பாவங்கள் எல்லாம் தீயில் இட்ட பஞ்சு போல உருதெரியாமல் மாயமாய் மாயும்(அழிந்துவிடும்) வாருங்கள் என்று நம்மை அழைக்கிறாள் ஆண்டாள்!  

- சுஜாதா தேசிகன்
20-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art 




Comments

  1. வள்ளுவர் over takes ஆண்டாள் .சிறப்பான பதிவு.மாயனுக்கு உங்கள் விளக்கம் வினோதமான அழகு

    ReplyDelete

Post a Comment