Skip to main content

11. பாவை குறள் - புனமயிலே!

 11. பாவை குறள் - புனமயிலே!



கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவாய்.

இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களைக் கறப்பவர்களும் பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களுமான குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே! 

பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா உறவு முறையுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும் உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களைப் பாடுகிறோம். அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே! உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்! என்று ஆண்டாள் தன் தோழிகளுடன் இன்னொரு பெண்ணை எழுப்புகிறாள். 

எழுப்பப்படும் பெண் எப்படி இருக்கிறாள் என்று ஆண்டாள் அவளை எட்டு வரி பாசுரத்தில் இரண்டு வரிகளில் வர்ணிக்கிறாள். 

கோவலர் தம் பொற்கொடியே - ஆயர்களின் குலத்தில் தோன்றிய பொன்னாலான கொடி போன்றவளே.
புற்றரவு அல்குல் - புற்றிலிருந்து பாம்பு தலையை மட்டும் நீட்டி படம் எடுக்கும் போது அதன் கீழ் பகுதியை போல சிற்றிடையை உடையவளே
புனமயிலே - காட்டு மயில் போன்ற பெண்ணே! 

இதற்கு இவ்வளவு வர்ணனை ? 

பெரியாழ்வார் பாசுரமான ”வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலனைக்  கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்கிறார். இந்த பாசுரமும் ‘கோவலர் தம் பொற் கொடியே!’ என்று ஆண்டாளும் கூறுவது ஒன்றாக இருக்கிறது. பெரியாழ்வார் போல் ஆண்டளும் முகில் வண்ணனைத் தான் சொல்லுகிறாள் -  it rings a bell

அடுத்து அந்த பெண்ணை காட்டில் உள்ள மயில் போன்றவளே ( புன மயில் ) என்று வர்ணிக்கிறாள். 

இராமபிரான் பம்பா நதிக்குச் சென்ற சமயம் மயில் தோகைகளை விரித்தாடுவதை வர்ணித்து ”லக்ஷ்மணா மலைத்தாழ்வரைகளில் பார் கணவனாகிய ஆண் மயிலை மயில் பேடு மன்மதனால் பீடிக்கப்பட்டதாய் அனுசரித்துக் கூத்தாடுகிறது. ஆண் மயிலும் அழகிய சிறகுகளைப் பரப்பிக்கொண்டு சப்தங்களால் சிரிப்பது அந்த மனைவியின் உள்ளத்து பூரிப்பைக் காட்டுகிறது” என்று கூறுகிறார். 

வள்ளுவரின் ஒரு குறள் இது 

அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

நான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அப்பொழுது அசைந்தாடும் இயல்புடையவளுக்கு ஒரு பொலிவுண்டு என்கிறார். 

இந்தக் காட்சி இப்படி விவரிக்கலாம் - காதல் கொண்ட இருவர் சந்திக்கிறார்கள். மயில்போல் அசைந்து வருபவளை அவன் பார்க்கிறான். அவன் மேல் அன்பு கொண்டவளானதால் நெகிழ்ச்சியுண்டாகி அவள் மெல்லச் சிரிப்பாள். அப்பொழுது அது அவளுக்கு ஒரு புதுப் பொலிவு தருகிறது. 

இராமர் கூறிய வார்த்தைகளும், வள்ளுவரின் இந்த குறளும் ஒத்து இருப்பதைப் பார்க்கலாம். 

ஸ்வாமி தேசிகன் “தோகைகளுடன் விளங்கும் ஆண் மயிலுடன் பெண் மயில் கூடிக் களிப்பது போல் மயில் கழுத்து நிறனாய் தோகைகளுடன் விளங்கும் கண்ணபிரானைக் கண்டு கோபிகள் காதல் கொள்ளுகின்றனர்” என்று கோபால விம்சதியில் கூறுகிறார். 

இங்கே ஆண்டாள் அந்தப் பெண்ணை முகிலைக் கண்டால் மயிலுக்குக் கொண்டாட்டம், அதனால் இங்கே ‘ முகில் வண்ணன்’ பற்றி நாங்கள் பாட நீ அழகாகக் காட்டு மயில் போலக் கூத்தாட வேண்டும் என்கிறாள். 

வீட்டு மயில் தன் இஷ்டம் போல நடந்துகொள்ள முடியாது, காட்டு மயிலை யாரும் தடுக்க முடியாது அதனால் புன மயிலே என்கிறாள். 

பெரியாழ்வார் தம் திருமொழியில்  “பேடை மயில் சாயல் பின்னை மணாளா” (பெண் மயில் போன்ற நப்பின்னை பிராட்டியின் மணாளா) என்கிறார். இன்னொரு இடத்தில்  ”தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய நப்பினை” (தூய கருங் கூந்தலையும் தோகை மயில் போன்ற அழகும் கொண்ட நப்பின்னை) என்கிறார். 

வள்ளுவர் 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

ஐயோ! என்ன ஓர் அழகு! எதிரே இருக்கும் உருவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது குழை கொண்ட ஒரு பெண் தானோ! என் நெஞ்சம் மயங்குகின்றதே! என்கிறார். 

ஆழ்வார்களும், வள்ளுவரும் மயிலை அழகுக்கு உமையாக கூறுகிறார்கள். 


ஓர் உபநிஷத வாக்கியம் இது 

உபநிடதங்கள் அத்தனையும் பசுக்கள்; கண்ணனே அவைகளை  மேய்ப்பன்; புத்திமான் ; அர்ஜுனனே கன்று; அவன் அருந்திய பாலெனும் அமுதமே கீதை. அந்த ஞானப்பாலை அருந்துபவர்கள் நல்ல புத்திமான்கள்

இது இந்த பாசுரத்துடன் எப்படி சேர்கிறது என்று பாருங்கள் 

முறையாகக் கற்க வேண்டியவற்றை முன்னோர்கள் காட்டிய வழியில் ’கற்று’ நம் ஆசாரியர்களான ‘கறவைக் கணங்கள்’ கன்றுக்கு இரங்கும் தாய்ப் பசுவைப் போன்று கன்றுக் கூட்டமான சீடர்களுக்குப் பல காலமாகக் கேட்டு உணர்ந்தவற்றை ‘பல கறந்து’ குதர்க்க வாதம் செய்பவர்களை ‘செற்றார் திறலழிய’ அடக்கி முகில் வண்ணன் பற்றி உபதேசிக்க(பாட), மயில் மேகத்தைக் கண்டு தோகை விரித்து ஆடுவது போல, சீடர்கள் ஆசாரியனின் உபதேசம் கேட்டு ஆனந்தப்பட்டு புனமயில் போல தன்னைப் போன்ற சுற்றத்து தோழிமார்களான பாகவதர்களுடைய குழுவில் சேர்ந்து ஆனந்தப்படுவன். 

புற்றரவு அல்குல் என்று ஆண்டாள் பாம்பை எதற்கு கொண்டு வருகிறாள் ? 
புற்றில் முழு அங்கத்தையும் மறைத்துக்கொண்டு தலையை மட்டும் நீட்டிப் பாம்பு படமெடுப்பது கற்பை குறிக்கும். இதர தேவதைகளை வழிபடாத ஒரு சீடனை குறிக்கும்! 

புற்றரவு அல்குல் போன்ற கற்புடைய ஸ்ரீவைஷ்ணவன் ஆசாரியன் முகில் வண்ணன்  பேர் பாட இவன் புனமயில் போல ஆனந்தப்படுவான். 

இந்த பாடலுக்கு அமுதனிடம் வரைய சொன்னேன்.அவன் வரைந்த ஓவியம் நீங்கள் மேலே பார்ப்பது. 

- சுஜாதா தேசிகன்
26-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art






Comments

Post a Comment