ஆண்டாளும் தோழிகளும் - நாயகனாய் - 16 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா, பூர்ணா, சுகபாஷிணி) ஆயர்பாடியில் உள்ள சிறுமியர்கள் எல்லோரையும் எழுப்பிவிட்டார்கள். யாரையெல்லாம் எழுப்ப வேண்டும் என்ற பட்டியல் அவர்கள் கையில் இருக்கிறது. இப்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நந்தகோபனுடைய திருமாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கே முதலில் அரண்மனையைக் காப்பவனையும், பிறகு வாசல் காப்பவனையும் எழுப்பி அனுமதி பெறச் செல்கிறார்கள்.) (காட்சி: நந்தகோபன் இல்லம் அருகே வெளிச்சம் குறைவாக, பனி படர்ந்து இருக்கிறது. ஆண்டாளும் தோழிகளும், சற்றுத் தூரத்தில் கொடிகளுடன் கம்பீரமாகக் காணப்படும் அரண்மனையை நோக்கிப் போகிறார்கள். அரண்மனை வாசலில் ஒரு காவலாளியும், உள்ளே தோரணம் கட்டிய வாசலில் ஒரு காவலாளியும் கையில் வேலுடன் காவல் காக்கிறார்கள்.) சுகபாஷிணி: "கோதை! நாம் கண்ணனைத் தானே எழுப்பப் போகிறோம்? அதற்கு முன் ஏன் இந்தக் கோயில் காப்பவர்களிடம் அனுமதி பெற வேண்டும்? நாம் பாட்டுக்கு உள்ளே சென்றால் அவர்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை!" ஆண்டாள்: "அடியார்கள...