பாகவத திருப்பாவை - அவதாரிகை கடந்த பல வருடங்களாக மார்கழி மாதம் திருப்பாவைக்கு ஆண்டாளின் ஆசியுடன் ஏதாவது ஒரு ’தீம்’ல் அடியேன் எழுதிக்கொண்டு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தினமும் எழுத வேண்டும் என்று தொடங்கி எப்படியாவது திருவாடிப்பூரத்துக்கு முன் முடித்துவிடுவேன். சென்ற வருடங்களில் ஸ்ரீமத் ராமாயணம், திருக்குறள் என்ற வரிசையில் இந்த வருடம் ஸ்ரீமத் பாகவதமும் திருப்பாவையும் சேர்ந்து ’பாகவத திருப்பாவை’ என்று அனுபவிக்கலாம் என்று எண்ணம். ஜனகருக்கு சீதை கிடைத்தது போல, பெரியாழ்வாருக்கு அவருடைய நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் கோதை என்ற ஆண்டாள் கிடைத்தாள். பாகவதத்தில் ( 3.10.19 ) ஒரு ஸ்லோகத்தில் ”பகவான் மிக்க விருப்பத்துடன் துளசி மாலைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். அதன் நறுமணத்தையே முகர்ந்து மகிழ்கிறார்” என்பதிலிருந்து துளசியின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். இன்னொரு இடத்தில் ( 10.29.37 ) கண்ணனிடம் கோபிகைகள். “லக்ஷ்மியின் கடைக்கண் பார்வையைப் பெற எல்லாத் தேவர்களும் தவம் கிடக்கின்றனர். அந்த லக்ஷ்மி உன் மார்பில் இடம் பெற்ற பின்னரும்...