Skip to main content

25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி

 25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி 'எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த தரிசனத்தை உலகெங்கும் பரவிட 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தினார் ஸ்ரீராமானுஜர். அதில் ’திருக்கோவலூர் ஆழ்வான்’ ஸ்வாமிகள் ஒருவர். 


’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று  பொய்கையாழ்வார் அருளியபடி திருக்கோவலூர் சந்நிதி மற்றும் தர்சன நிர்வாகங்களைச் செய்து, பக்தி சிரத்தையுடன் ஆசாரிய பீடமாக விளங்கினார்.


திருக்கோவலூர் திருக்கோயிலில் உள்ளக் கல்வெட்டு இக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த திருக்கோவலூர் ஆழ்வான் திருமாளிகை மடத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு உணவு அளிக்க ஒரு வேலி நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. பிறகு நடந்த சமய கலவரத்தில் பல மடங்கள் இடிக்கப்பட்டன. அதில் திருக்கோவலூர் மடமும் ஒன்று. அந்தக் காலத்தில் அங்கே வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள் என்ற  தகவலும் கல்வெட்டில் இருக்கிறது. 


பிறகு திருவரங்கத்தில் பெரும் புகழுடன் விளங்கிய ஸ்ரீ வேதவியாச பட்டரை எழுந்தருளிச் செய்து, சமயவாதிகளை வாதத்தில் வென்று, கோயிலை மீட்டு அவர் நிர்வாகத்தில் ஒப்படைத்தனர். இதற்கு நன்றியாகத் திருக்கோவலூர் வைணவர்களும், கோயில் பணியாளர்களும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாளுக்கு வழிபாடு நடத்தவும், மாலை அணிவிக்கவும் பூந்தோட்டத்தை நிர்வகிக்கவும் வழங்கினார்கள் என்று மற்றொரு ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.


சில காலம் கழித்து அந்நாட்டை ஆண்ட சோழ மன்னன் சைவ மதத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு திருவிக்ரமப் பெருமாளின் சந்நிதியை அபகரித்துக் கர்ப்பக் கிரஹத்தைக் கற்சுவரால் அடைத்தபோது பட்டர் பெரும் துயருற்று உண்ணாது உறங்காது தளர்வுற்று இருந்தார். 


ஒரு நாள் இரவு அவருக்குத் உலகளந்த பெருமாள் கனவில் தோன்றி ‘வருத்தம் வேண்டாம். ஜீயர் அவதரிக்கப் போகின்றார். அவரால் இத்தலம் மீண்டும் மேன்மை பெரும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். பட்டரும் சந்தோஷத்துடன் திருவரங்கம் அடைந்து அரங்கனை மங்களாசாசனம் செய்து ஜீயருடைய திரு அவதாரத்தை எதிர் நோக்கி இருந்தார். 


திருவேங்கடத்தில் வடக்கே முல்குதிர் என்ற ஒரு கிராமத்தில் ‘கொண்டான் ஐய்யங்கார்’ தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு இராமானுஜன் என்று திருநாமம் சாற்றினார்கள். 


ஆசாரியரிடம் பயின்று வந்த இராமானுஜன் ஒரு நாள் நடுப்பகலில் சூரிய வெப்பம் அதிகமாக இருந்ததால் ஆசாரியர் திருமாளிகைக்கு அடுத்த இல்லத்தின் இடைகழியில் கொஞ்சம் அயர்ந்துவிட்டார். பழைய இல்லம் ஆதலால் அதன் கூறை இடுக்கு வழியாகச் சூரிய ஒளி அவர் முகத்தில் பட அதை ஒரு பாம்பு படம் எடுத்துத் தடுத்துக் கொண்டிருந்தது. 


நெடுநேரமாகியும் இராமானுஜர் காலக்ஷேபம்  வராமல் இருக்க ஆசாரியர் சீடர்களை அவரைத் தேடப் பணித்தார். சீடர்கள் தாங்கள் கண்ட ஆச்சரியத்தை ஆசாரியரிடம் சொல்ல ஆசாரியர் நேரில் சென்று பார்த்து வியப்புற்றார். திருப்பதி ஜீயர் திருநாடு அலங்கரிக்க, இவரை ஜீயராக நியமித்தார்கள்.


ஜீயரான சில வருடங்கள் கழித்து,  இவர் கனவில் எம்பெருமான் தோன்றி திருக்கோவலூரை மீட்க வேண்டும் என்று நியமிக்க, இவர் சைவர்களிடம் வாதாடி வென்றார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்காமல் இவரைக் கொதிக்கும் சுண்ணாம்பு காளவாயில் இறங்க வேண்டும் என்று கூற, ஜீயரும் அதில் இறங்க அது ‘குளிர் அருவி வேங்கடமாக’  அவரை ஒன்றும் செய்யவில்லை.  ஜீயர் பெருமையை உணர்ந்து, கற்திரையை திறந்தால் திருவிக்கிரமன் காட்சியளிக்க அங்கே இருந்த விளக்கு எரிந்துகொண்டு இருந்தது!. 


இவர் வம்சத்தவர் தான் இன்றும் ’எம்பெருமானார் ஜீயர்’ மடாதிபதிகளாக திருக்கோவலூர் கோயிலை நிர்வகிக்கிறார்கள். 


2017ல் திருக்கோவலூர் விஜயம் செய்தேன். மணவாள மாமுனிகள் உற்சவம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எம்பெருமானார் ஜீயர் மடத்துக்கு விஜயம் செய்து 25ஆம் பட்டம் ஜீயரைச் சேவித்தேன். 


ஜீயர் அடியேனுடன் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தது இன்றும் நினைவு இருக்கிறது.  ஜீயருடைய திருமாளிகை அருகில் எங்களுக்கு தங்க இடம் கொடுத்து, ஜீயர் திருமாளிகையிலேயே உட்கார வைத்து பிரசாதம் சாதித்தார்கள். பிறகு உலகளந்த பெருமாள் சந்நிதியில் பெருமாள் மாலை பிரசாதங்களை அடியேனுக்கும் கொடுக்கும் படி நியமித்தார். 


இன்று காலை 2.30 மணி அளவில் 25ஆம் பட்டம் திருக்கோவலூர் வர்த்தமான எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 


நேற்று மணவாள மாமுனிகளின் சாற்றுமுறையை முடித்துக்கொண்டு, லீலாவிபூதியில் திருக்கோவலூர் ஆயனார் சந்நிதி கைங்கர்யத்தைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டு, நித்ய விபூதியில் வைகுண்ட நாதன் கைங்கர்யத்துக்கு எழுந்தருளினார். 


- சுஜாதா தேசிகன்

9-11-2021

படம்: ஊஞ்சல் சேவையில் ஸ்ரீ தேஹளீச பெருமாளுடன் ஜீயர் ஸ்வாமிகள்.

Comments

  1. இன்று காலை நாங்கள் செய்தி கிடைக்கப்பெற்றோம். எனது சொந்த ஊர் திருக்கோவிலூர். 25 வருடங்களாக சென்னை வாசம். தற்போதய ஜீயரின் தகப்பனார் ஆசார்யன் திருவடியடைந்து இவர் ஜீயர் பொறுப்பேற்கும்போது நான் சின்ன பையன். நாங்கள் ஸ்மார்த்தர்களாக இருந்த போதிலும், காலமெல்லாம் என் தகப்பனார் பட்டைசாத கடை வைத்திருந்தது கோவில் இடத்தில் என்ற வகையிலும் நாங்கள் குடியிருந்தது அய்யங்கார் குடும்பங்கள் சூழ இருந்த இடம் என்ற வகையிலும் இந்த ஜீயர் எங்களுக்கு முக்கியமானவர். இவருடைய பரம்பரை பற்றிய முக்கியத்துவம் உங்கள் பதிவின் மூலமாகத்தான் என்று நினைக்கும்போது எங்களை நினைத்து சற்று வருத்தமாக இருக்கிறது. இப்போதாவது இந்த குருபரம்பரை மகிமையை என் தகப்பனாருக்கும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்தி பயனடைவோம். மிக்க நன்றி!

    ReplyDelete

Post a Comment