Skip to main content

நம்பிள்ளை சில குறிப்புகள்

நம்பிள்ளை சில குறிப்புகள்



இன்றைக்கு 870 ஆண்டுகளுக்கு முன் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூர் என்ற கிராமத்தில் அவதரித்தார்.  இயற்பெயர் ‘வரதராசர்’ . அதனால் ‘நம்பூர் வரதாசர்’ என்று அழைப்பர். 

குருபரம்பரையில் பட்டர் , நஞ்சீயர், நம்பிள்ளை என்ற வரிசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் பட்டர் பரமபத்தித்த பின்னர் தான் நம்பிள்ளை அவதரித்தார் என்ற எண்ணம் வரும். ஆனால் பட்டர் வாழ்ந்த காலத்திலேயே நம்பிள்ளையும் வாழ்த்திருக்கிறார். 

அப்போது பட்டரிடம் கேட்ட அரும்பொருள்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து, பட்டரின் அருளுரைகளை செமிக்கும் கிடங்காக அது இருந்தது. 

பட்டர் பரம்பதித்த பிறகு நஞ்சீயர் ஆசாரியரானார்.   பட்டர் போலவே நஞ்சீயர் காலஷேபங்களை  நம்பிள்ளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார். நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை இயற்றியிருந்தார்.  அதை படி எடுக்க விருப்பப்பட்டு நம்பிள்ளையிடம் பட்டோலைப் படுத்த நியமித்தார் (அதை பற்றிய கட்டுரையை தனியே எழுதியிருக்கிறேன்). அதுவே ஈடு. 

நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது  ‘ஈடு’ என்ற வார்த்தை தான். ’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும். 

உதாரணம் - காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு. 

நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும். ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. 

திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு; 

திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஈடு என்ற வார்த்தையைக் கவசம் என்ற பொருளில் உபயோகிக்கிறார் அதனால் திருவாய்மொழிக்குக் கவசம் போன்றது என்பது இன்னொன்று விளக்கம்

கடைசியில்  பெருமாளிடத்து நம்மை ஈடுபடச் செய்வது அதற்கு ‘ஈடு’ ...எது எப்படியோ, நம்பிள்ளை ஈட்டுக்கு ’ஈடு இணையில்லை’  !

நஞ்சீயர் தம் வாழ்நாளில் நூறுமுறை திருவாய்மொழிக்கு காலஷேபம் சாதித்தார். ஒரு முறை கூட தப்பாமல் அதை நூறுமுறையும் கேட்டார் நம்பிள்ளை. நூறாவது முறை நடந்த பின் தன் ஆசாரியருக்கு பெரும் சிறப்புடன் சதாபிஷேகம் செய்து மகிழ்ந்தார் நம்பிள்ளை. 

ஆழ்வார் அருளிச்செயல்களுக்கு சில சமயம் நம்பிள்ளை தமக்கு நெஞ்சிற்பட்ட வேறு பொருளைக் நஞ்சீயரிடம்  கூறுவார். நஞ்சீயரும் அதைப் பாராட்டுவார். சீடர்கள் சிலர், இது போல ஆசாரியன் சீடனைப் பாராட்டிப் பேசலாமோ ? என்று கேட்க ‘வளர்த்ததனால் பயன் பெற்றேன்’ என்று திருமங்கையாழ்வார் கிளியை கைகூப்பி வணங்கியதை குறிப்பிடு, சிஷ்யன் ஆனாலும் தகுந்த பொருளைக் கூறினால் பாராட்டலாம் என்றார்.  

நன்றாக படிக்கும் மாணவன் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டு தெரிந்துகொள்வது போல நம்பிள்ளை தன் ஆசாரியரான நஞ்சீயரிடம் பல கேள்விகள் கேட்டுள்ளார். அவற்றுள் சில.. 

நம்பிள்ளை கேள்வி: “ஸ்ரீவைஷ்ணவன் என்று ஒருவன் தன்னை எப்போது நினைத்துக்கொள்ளலாம் ?”

நஞ்சீயர் பதில்: மூன்று விஷயங்கள் 

1. வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளும்,  கோயிலில் இருக்கும்  பெருமாளும் ( அர்ச்சாவதாரம் ) ஒன்று தான் என்று எப்போது ஒருவன் நினைக்கிறானோ அப்போது. 

2. தன் மனைவி, குழந்தைகளிடம் கொண்டிருக்கும் அதே அன்பை மற்ற  ஸ்ரீவைஷ்ணவர்களிடமும காண்பிக்கும்  போது. 

3. எந்த ஸ்ரீவைஷ்ணவன் தன்னை திட்டினாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, திட்டியவரை ஸ்ரீவைஷ்ணவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்

நம்பிள்ளையின் கேள்வி -  ”பாகவத அபசாரம் என்றால் என்ன ?”

நஞ்சீயர் பதில்  : “ மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களையும் நம்மைப் போன்றவர்கள் என்று நினைப்பதே பாகவத அபச்சாரம்!. பாகவதர்கள் நம்மைக் காட்டிலும் பல மடங்கு மேலானவர்கள் என்று தொண்டரடிப்பொடியாக’ உள்ளத்தால் நினைக்க வேண்டும். 

ஒரு நாள் நம்பிள்ளை நஞ்சீயரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டுக்கொண்டு இருந்தார். 

பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யும் நேரம், தளிகை ஆகிவிட்டது. நஞ்சீயர் நம்பிள்ளையிடம் “நீரே இன்று பெருமாளுக்கு திருவாராதனம் செய்யும்” என்றார். 

“அடியேனுக்கு முழுமையாகத் தெரியாது…” என்றார் நம்பிள்ளை  

“எனக்கு மட்டும் முழுமையாகத் தெரியுமா என்ன ?  த்வய மஹா மந்திரத்தை சொல்லி அவனுக்கு எதைக்கொண்டுத்தாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் எளியவன், சுலபன் அவன் என்று 

பரிவது இல் ஈசனைப் பாடி*
விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்*
புரிவதுவும் புகை பூவே.

என்ற திருவாய்மொழியை எடுத்துக்காட்டாகச் சொன்னார். 

[நல்ல நீரைத் தூவி, புகையை புகைத்துப் பூவை அவன் திருவடிகளில் அவன் சுலபன், சுலபமாக ஏற்றுக்கொள்வான்! ] 

ஒருமுறை பிள்ளையாத்தான் என்னும் செல்வர் நஞ்சீயரிடம் திருவாய்மொழி பொருள் கேட்க சென்றார். சீயர் அவரை நம்பிள்ளையிடம் அனுப்பினார். செல்வந்தரோ நம்பிள்ளையை தெண்டனிட்டு வணங்கத் தயங்கினார். நஞ்சீயர் துறவி அதனால் அவரை வணங்கலாம் ஆனால் நம்பிள்ளையோ தன்னைவிட இளையவர் குடும்பஸ்தர்  எப்படி அவரை வணங்குவது என்று தயங்கினார். 

இதை அறிந்த நஞ்சீயர், நம்பிள்ளையை அழைத்து செல்வந்தருக்கு ‘பாங்கானபடி’ பொருள் உரைக்குமாறு ஆணையிட்டார். நம்பிள்ளையும் நஞ்சீயரின் குறிப்பறிந்து, அச்செல்வந்தரை ஓர் இருக்கையில் உயர அமர்த்தித் தான் கீழே உட்கார்ந்துகொண்டு திருவாய்மொழியின் பொருளை உபதேசித்து வந்த போது திருவாய்மொழி (3.7.3) பாடல் வந்தது 

நாதனை, ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்தன்னை*
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்*
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே. ( 3.7.3 ) 

இதற்குச் சுலபமான அர்த்தம் - இப்பூவுலகில் வானுலகும் வணங்கத் தக்க என் தந்தையான எம்பெருமான், திருத்துழாய் மாலை சூடிச் சக்கரம் ஏந்தியவன் இப்பகவானைப் பணிந்து திருவடிகளைத் தொழும் அடியார்களுக்கு ஆட்பட்ட பரமபாகவதர்களே எல்லாப் பிறவிகளிலும் எம்மை ஆளும் தலைவர்கள் ஆவார்கள் என்று நம்பிள்ளை அடியார்களின் ஏற்றத்தை விரித்துரைக்க அதைக் கேட்ட செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, நம்பிள்ளையை தெண்டனிட நம்பிள்ளை அதை ஏற்கவில்லை. 

செல்வந்தர் நஞ்சீயரிடம் முறையிட்டு, நம்பிள்ளையின் திருவடிகளை வணங்கினார். திருவாய்மொழிக்குச் சீடரை வணங்கி உபதேசித்து பொருள் உரைத்த பண்பாளராக விளங்கினார் நஞ்சீயர். 

ஒரு சமயம் நம்பிள்ளை நோய்வாய்ப்பட்டார்.  நோயைத் தீர்த்துக்கொள்ளச் சிறிதும் விரும்பவில்லை. அவர் மீது பரிவுகொண்ட சிலர் மந்திரங்களைப் பிரயோகித்து பரிஹாரிக்க முயற்சி செய்த போது அதைத் தடுத்தார். அவருக்குத் துவயம் என்ற மந்திரத்தைத் தவிர மற்ற மந்திரங்களை அவர் நினைத்துப்பார்த்ததில்லை. ஆனால் துவயத்தை தம்முடைய உடல் நோயை தீர்க்கும் உபாயமாக்கிக்கொள்ள விரும்பவில்லை. நோயினால் திருமேனி இளைத்தது. 

ஓர் அன்பர் “என்ன உடம்பு ஆரோக்கியம் இல்லையா ?” என்று விசாரித்த போது 

“போர் செய்யவா போகிறேன்.. பெருமாளைச் சேவிக்க வேண்டிய அளவு ஆரோக்கியத்துக்கு இது போதும்” என்று பதிலளித்தார்.  நம்பிள்ளை 105 காலம் வாழ்ந்தார். 

- சுஜாதா தேசிகன்

19-11-2021

கார்த்திகையில் கார்த்திகை
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்
நம்பிள்ளை திருநட்சத்திரம் 

Comments