‘சிறுமாமனிசர்’ பாரதி மணி
சுஜாதா மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் “பாரதி மணி எழுதிய ‘தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)’ என்ற கட்டுரையைப் படித்தீர்களா தேசிகன்? எப்பவாவதுதான் இதுபோல நல்ல கட்டுரை கிடைக்கும்” என்றார். ‘பாரதி மணி’ என்ற பெயரை முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது.
சுஜாதா மறைந்தபோது, இந்த நிகழ்வை நான் எழுதிய சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்தப் பகுதி அச்சில் பிரசுரம் ஆகவில்லை.
சுஜாதாவிற்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று நாரத கான சபாவில் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் வரிசையில் ஓர் ஓரத்தில் திரு பாரதி மணியைப் பார்த்தேன். அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு “சுஜாதா உங்கள் கட்டுரையைப் பாராட்டினார்” என்று கூறியவுடன் அவர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார்.
அந்த நிகழ்வைத் திரு பாரதி மணி,
“……..பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த சுஜாதாவுக்குக் காலம் தாழ்த்தாமல், மார்ச் 2-ம் தேதியே ஒரு நினைவஞ்சலியை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. நெகிழ்வான நிகழ்ச்சி. பாலுமகேந்திரா மேடையில் பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே பெங்களூரிலிருந்து வந்திருந்த சுஜாதாவின் நண்பர் தேசிகன், என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சொன்ன விஷயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “மணிசார், சுஜாதா கடைசியாகப் படித்த கட்டுரை ‘உயிர்மை‘யில் நீங்கள் எழுதிய தில்லி (நிகம்போத்) சுடுகாட்டைப்பற்றியது. ‘எப்போதோ ஒரு தடவைதான் இந்த மாதிரி கட்டுரை படிக்கக் கிடைக்கிறது… என்று சொன்னார் தேசிகன். இந்த ‘L’ Board கத்துக்குட்டி எழுத்தாளனுக்கு இதைவிட வேறென்ன பாராட்டு வேண்டும்? சுஜாதா, என்னிடம், ஏன் நீங்கள் நேரில் சொல்லவில்லை? என் கைப்பேசி எண் உங்களிடம் இல்லையா? அவர் தான் சுஜாதா!….” என்று எழுதியிருக்கிறார்.
இதைப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அனுப்ப, அதில் ’தேசிகன்’ என்ற பெயரை ‘எடிட்’ செய்து பிரசுரம் செய்தார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து பாரதி மணி என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார்.
“தேசிகன், பொதுவாக நான் அனுப்பும் கட்டுரையில் எதையும் எடிட் செய்யமாட்டார்கள். கால் புள்ளி, அரைப் புள்ளி எல்லாம் சரியாக வைத்து அப்படியே அச்சில் ஏற்றுவது மாதிரிதான் எழுதுவேன். என்ன காரணம் என்று தெரியவில்லை தேசிகன், உங்கள் பெயரை நீக்கியுள்ளார்கள். எனக்கு வருத்தமும் கோபமும் வருகிறது” என்றார்.
“பரவாயில்லை விடுங்க சார்! இதில் என்ன இருக்கிறது!” என்றேன். அவர் விடுவதாக இல்லை. அவர் என்ன எழுதினார் என்று வாசித்துக் காண்பித்து பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள், எடிட் செய்யாத அந்த முழுக் கட்டுரையை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்று அதை எனக்கு உடனே அனுப்பினார்.
’பாரதி மணி’ என்ற ஒரு நல்ல ஆத்மாவைக் கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு அவருடன் தொலைப்பேசியில் பல விஷயங்கள் பேசியிருக்கிறேன். பல சுவாரசியமான அனுபவக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
சில வருடங்கள் முன் ஒருவர் என்னைப் பற்றித் தவறாக எழுத, அதை பாரதி மணி படித்துவிட்டு, ”அவர் நம்பர் என்னிடம் இருக்கிறது நீங்க அவருடன் பேசுங்கள்! ?” என்றார்.
“பேசிப் பிரயோஜனம் இல்லை… விடுங்கள் என்றேன். அதற்கு அவர் எனக்கு அனுப்பிய பதிலை அப்படியே இங்கே தருகிறேன்.
“எப்படியோ இது வளர்ந்து நாற்றத்தைப் பரப்புகிறது. எனக்கு ஓரளவு உண்மை தெரியும். அதனால் வலிக்கிறது!”
என்னைப் பற்றிய கடும் சொற்கள் என்னைவிட அவருக்கு வலித்திருக்கிறது!
நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் ‘சிறுமாமனிசர்’ என்ற சொற்றொடரை உபயோகித்துள்ளார். ‘சிறு என்றால் சிறிய’, ’மா என்றால் பெரிய’ சிறியராயும் பெரியராயும் உள்ள மனிசர் என்பது அதன் பொருள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் உருவத்தில் சிறியவராகவும் உள்ளத்தில் பெரியவராகவும் இருந்த பாரதி மணிக்கு இது கச்சிதமாகப் பொருந்துகிறது!
”நடிகரும், எழுத்தாளருமான ‘பாரதி மணி’ காலமானார்” என்று செய்தி போடுகிறார்கள். ‘நல்ல மனிதருமான’ என்ற வாக்கியத்தையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளச் சிபாரிசு செய்கிறேன்.
அந்த நல்ல ‘மணி’தருக்கு என் அஞ்சலிகள்.
- சுஜாதா தேசிகன்
19.11.2021
நன்றி: கல்கி கடைசிப் பக்கம்
நல்ல ‘மணி’தருக்கு, Super!
ReplyDelete