Skip to main content

திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்

திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்படிக்கும்போது ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் அகராதியை நாடுகிறோம். வாக்கியத்துக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் நூலகத்தை நாடினோம்; இன்று கூகிளைக் கேட்கிறோம்.

நம் ஆசாரியர்களின் காலத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு நமக்குத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சற்று யோசிக்க வேண்டும். 

ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றப் பிரம்மசூத்திரத்தைத் தேடிக்கொண்டு காஷ்மீர் வரை நடந்து சென்று, ஸ்ரீபாஷ்யம் என்ற உயர்ந்த விஷயத்தை நமக்கு அருளினார் ஸ்ரீராமானுஜர். 

ஆசாரிய ஹ்ருதயம் உபதேசிக்கும்போது ஒரு வாக்கியத்துக்குப் பொருள் விளங்காதிருக்க ”இதற்கு அர்த்தம் அருள்பவர் யாரோ ?” என்று மனம் கலங்கி மணவாள மாமுனிகள் என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்க நேயர்களை அழைக்கிறேன். 

நம் ஆசாரியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆழ்வார்கள் அருளிச் செயல், ரகசியக் கிரந்தங்கள் பொன்றவை  ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்திலிருந்து வாய்மொழியாகவே வந்தது. இதை ’ஓராண் வழி’ என்பர். 

ஸ்ரீராமானுஜர் காலத்தில் அவருடைய நியமனத்தில் முதன்முறையாக எழுத்து வடிவில் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை எழுதினார்.  

இதை மாமுனிகள் 

தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறாயிரம் 

என்று உபதேச ரத்தினமாலையில் குறிப்பிடுகிறார். 

பின்னர் பட்டர் போன்ற ஆசாரியர்கள் நவின்ற விளக்கங்கள், எடுத்துக்காட்டு போன்றவற்றைக் கொண்டு உரைகளை மேலும் செம்மைப் படுத்தி நஞ்சீயர் நம்பிள்ளை பெரியவாச்சான் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. 

இவ்வாறு எழுதப்பட்ட உரைகளும் ஓராண்வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. 

வாய்வழி மரபு(ஓராண்வழி), எழுத்து மரபு(ஓலைச்சுவடி),  அச்சு ஊடகம்(காகிதம்), மின்னணு ஊடகம்(இணையம்) என வளர்ச்சி அடைந்தாலும் ’கறந்த பாலுள் நெய்யே போல்’ உரைகளின் உள்ளே ஒளிந்துகொண்டு இருப்பது சாதாரண தகவல் இல்லை ஞானம். ஆசாரியர்கள் கூறிய ஒவ்வொரு வாக்கியமும் அவர்களின் திருவாக்கில் உதிர்ந்த முத்துகள். 

ஆசாரியர்களின் உரைகளுடன் பாசுரங்களைப் படித்தால் மைக்ரோ ஃபைபர் துணிக் கொண்டு  கண்ணாடியைத் துடைத்த மாதிரி பளிச்சென்று புரிவதோடு மட்டும் அல்லாமல், மற்ற சித்தாந்தங்கள், வேற்று மத போதனைகள் போன்றவற்றை இடது கையால் தள்ளிவிடலாம். நம் ஸ்ரீவைஷ்ணவம் உயர்ந்து நிற்பதற்கு இது மிக முக்கியமான காரணம். 

அடுத்த காரணம் மைசூர் அருகில் இன்று மேல்கோட்டை என்று அழைக்கப்படும் திருநாராயணபுரம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். காரணம் இருக்கிறது. சொல்கிறேன். 

அனந்தாழ்வான், வடுக நம்பி, நஞ்சீயர் முதல் அஹோபில ஸ்ரீமந் ஆதிவன் சடகோப ஜீயர் வரை பல முக்கியமான ஆசாரியர்களைப் பெற்றுத் தந்த திவ்ய தேசம் திருநாராயணபுரம். 

ஸ்ரீராமானுஜர் தன் கடைசிக் காலத்தில் கூறிய வார்த்தைகளில் ஒரு வார்த்தை  ‘எதுவும் முடியவில்லை என்றால், திருநாராயணபுரத்தில் ஒரு குடிலாவது கட்டிக் கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ்ந்தாலே போதும்’ என்றார்.


நம் ஸ்ரீராமானுஜருக்கும், ஸ்ரீ தேசிகருக்கும் ஏன் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் காலடிப் பட்ட திருநாராயணபுரம் 109ஆவது திவ்ய தேசமாகவே நாம் கருதலாம்! 

இந்தத் திவ்ய தேசத்தில் அதிகம் பரிச்சயம் இல்லாத இன்னொரு ஆசாரியர் ’திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்’ என்பவர். அவரைப் பற்றித் தான் இக் கட்டுரை. 

ஸ்ரீ பிள்ளைலோகாசாரியார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் காலத்துக்குப் பின்பு ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆசாரிய ஸ்தானத்துக்கு வரும் வரை ஆழ்வார்கள் அருளிச் செயல்களின் உரைகள், மற்றும் கிரந்தங்களைக் கட்டிக் காத்து வளர்த்தவர்களில் நாலூர் ஆச்சான்பிள்ளை, திருவாய்மொழி பிள்ளையுடன் இன்னொரு ஆசாரியர் ’திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்’ என்ற மஹாசார்யார். 

எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் ’ஆஸூரிப் பெருமாள்’ ஒருவர். இவர் ஸ்ரீராமானுஜரின் ஹாரீத வம்சம். இவருடைய வம்சத்தில் அவதரித்தவர் ஸ்ரீஸாநுதாஸர் என்ற தேவராஜன். இவரே ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று பெயர் பெற்றார். மேல்கோட்டை செல்லப் பிள்ளைக்கு அன்புடன் நடாதூர் அம்மாள் போலத் தினமும் ஏலம், குங்குமப்பூவுடன் பரிவையும் சேர்த்து பாலமுது காய்ச்சி பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார். ஒரு நாள் ஏதோ காரணத்தால் பாலமுது கொண்டுவரத் தாமதம் ஆக, செல்லப்பிள்ளை ‘நம் ஆய்(தாய்)’ எங்கே?’ என்று கேட்க ’ஆய்’ என்றும் ’ஜனந்யாச்சாரியார்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று. (ஜனனி என்ற சொல்லிற்கு "பெற்றவள்" என்று பொருள் அதுவே ’ஜனந்யாச்சாரியார்’ ஆகியது).  திருநாராயணபுரத்தில் அவதரித்ததால் ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’  என்று அழைக்கப்பட்டார். 

எதிராஜர் தம் திருக்கையாலே திருவாராதனம் செய்த எதிராஜ சம்பத் குமாரனான செல்வப்பிள்ளைக்கு யசோதை போலப் பாலமுதும், பெரியாழ்வார் ஆண்டாள் போல மாலைக் கட்டி புஷ்ப கைங்கரியமும் செய்து வந்தார். 

நம்பிள்ளையின் சிஷ்யர்களில் ஒருவரான ஈயுண்ணி மாதவர் என்பவர் திருவாய்மொழி உரையை ( ஈடு) நம்பெருமாள் சிபாரிசில் பெற்றார். ( பிள்ளைக் கதைகள் என்ற கட்டுரையில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது ) அவருடைய குமாரர் ஈயுண்ணி பத்மநாபர். இவருடைய சிஷ்யர் நாலூர்பிள்ளை. அவருடைய குமாரர் நாலூர் ஆச்சான்பிள்ளை. இவரே திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியாருக்கு ஆழ்வார் அருளிச் செயல்களும், கிரந்தங்களும் உபதேசித்த ஆசாரியர். 

இங்கே ஆசாரியர்களின் காலங்களைத் தெரிந்துகொண்டு மேலும் படிக்க வாசகர்களை அழைக்கிறேன். 
மணவாள மாமுனிகள் நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்ய எண்ணி நம்பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்கு சென்றார். அங்கே நம்மாழ்வாரைச் சேவித்து பக்தர்கள் சூழ அங்கே சில காலம் திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கும், ரகசிய கிரந்தங்களை உபதேசித்துக்கொண்டு இருந்தார். ஒரு நாள் ஆசாரிய ஹ்ருதயம் உபதேசிக்கும்போது ஒரு வாக்கியத்துக்குப் பொருள் விளங்காதிருக்க ”இதற்கு அர்த்தம் அருள்பவர் யாரோ ?” என்று மனம் கலங்கி விசாரித்த போது திருநாராயணபுரத்து ஆய் என்ற பெரியவருக்கு இதன் அர்த்தம் தெரியும் என்று கேள்விப்பட்டு, ஆழ்வாரிடம் விடைபெற்றுக்கொண்டு பேராசையுடன் திருநாராயணபுரம் நோக்கிப் புறப்பட்டார். 

இதே சமயம் திருநாராயணபுரத்து ஆயி மணவாள மாமுனிகளின் பிரபாவங்களைக் கேள்விப்பட்டு தெற்கே நெடுந்தூரம் பிரயாணப்பட்டு ஆழ்வார் திருநகரியை நோக்கி வந்துகொண்டு இருந்தார்!ஆழ்வார் திருநகரி எல்லையிலேயே மணவாள மாமுனிகள் திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியாரை வழியில் கண்டு வியந்து ”எண்ணிய பலன் எதிரே வந்தது!” என்று அவரை மாமுனிகள் திரிதண்டத்துடன் தண்டன் சம்பர்பித்தார்(சேவித்தார்). ஆயி ஸ்வாமியும் பிரியமுடன் கைகூப்பி தண்டன் சமர்ப்பித்த சம்பவத்தைக் கண்ட சிஷ்யர்கள் “மதுராந்தகத்தில்  எம்பெருமானாரும், பெரியநம்பிகளும் இப்படித் தான் சந்தித்துக்கொண்டார்கள் போலும்!” என்று உகந்தார்கள்.இருவரும் ஆழ்வார் திருநகரிக்கு சென்று ஆழ்வாரைத் தொழுத பின் ஆயிடம் மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயகாலசேஷம் கேட்டு மனம் உகந்து, நன்றியாக அவருக்கு ஒரு தனியன் அருளினார். 

ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஆசாரிய ஹ்ருதயத்தின் அர்த்தங்களை எல்லாம் அருளியவராய் ஸ்ரீஸாநுதாஸர், தேவராஜர் என்ற திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்தாயை ஆச்ரயிக்கிறேன். 

இதைக் கேட்ட ஆயி ஸ்வாமி அதில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி மாமுனிகளின் பெருமைகளை ஒரு பாசுரமாக அருளிச் செய்தார். 

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாருமகிழ்மார்பன் தானிவனோ?
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த யதிராசனோ ?
மகிழ மாலை அணிந்த நம்மாழ்வாரோ ?
தூது சென்ற கண்ணனோ ?
என்னிடம் தந்தை போன்று பாசம் வைத்துள்ள இம்மூவரில் மாமுனிகள் யார் ?

என்று மாமுனிகளுடன் ஆழ்வார் திருநகரியில் ஆழ்வாரை அனுதினமும் சேவித்துக்கொண்டு அங்கேயே சில காலம் இருந்தார். ஆயி ஆழ்வார் திருநகரியில் இருந்த காலத்தில் இவர் பரமபதித்தார் என்று நினைத்து, மேல்கோட்டையில் இருந்த அரச அதிகாரிகள் இவருடைய சொத்துக்களைத் திருக்கோயிலுடன் சேர்த்துவிட்டார்கள். ஊருக்குத் திரும்பி விஷயம் அறிந்த ஆயி “எவனுக்கு நான் அருள்புரிய விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்ற பகவானுடைய சொல்லை நினைத்து,  செல்வப்பிள்ளைக்குத் தன் மேல் உள்ள அபிமானத்தை எண்ணி மகிழ்ந்து தன் ஆசாரியர் ஆராதித்த ஞானப்பிரானை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு எம்பெருமானார் கூறியது போல அங்கே ஒரு குடில் அமைத்துக்கொண்டு ராமப்ரியனுக்கு மாலாகாரர் போல புஷ்பக் கைங்கரியம் செய்துகொண்டு முடிவில் சந்நியாச ஆஸ்ரமத்தைப் பெற்று 105வயதில் பரமபதித்தார். 

திருநாராயணபுரத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதியில் ஆயியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் அவர் எழுந்தருளியிருந்தார். ஆயியின் திருவரசு திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரணி அருகில் யோக நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் இருக்கிறது. மேல்கோட்டையில் கொல்ல இடையர்கள், மைசூரில் உள்ளப் பதினெட்டு ஜாதி மக்கள், பல கிராமங்களில் அறுபது குலங்களைச் சேர்ந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஆயி வம்சப் பரம்பரை சிஷ்யர்கள். 

திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார் திருவடிகளே சரணம்

- சுஜாதா தேசிகன்
ஐப்பசி பூராடம் ஆயி ஸ்வாமி திருநட்சத்திரம். (9-11-2021) அன்று எழுத ஆரம்பித்து இன்று தான் முடிக்க முடிந்தது. 

படங்கள்:  திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்(மேல் கோட்டை), ஆசாரியர்கள் காலம், மாமுனிகள் சந்நிதியில் ஓவியம், திருவரசு. 


Comments

  1. 🙏🏼 மிக அருமையான பதிவு சுவாமி!

    ReplyDelete
  2. VERY enlightening, your details has ignited the Urge to visit the Holy place, THANKS, Hare Krsna!!

    ReplyDelete

Post a Comment