Skip to main content

பிள்ளைக் கதைகள்

பிள்ளைக் கதைகள் 



ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று சொற்களை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். 

பிரமாணம், 

பிரமேயம் 

பிரமாதா. 

இந்த மூன்று சொற்களைத் தெரிந்துகொள்ள ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 


பிள்ளை + லோகாசார்யார்   என்று இரண்டாக பிரித்து இரண்டு கதையாகச் சொல்லப் போகிறேன். 


பிள்ளை கதை : 


சற்றே பின்னோக்கி பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை காலத்துக்கு உங்களை அழைக்கிறேன். 


நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை அருளினார். அதை ’படிக்கும் படியாக’ இன்னொரு படி(copy) ( அப்போது எல்லாம் ஸிராக்ஸ் கிடையாது ! ) எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். 


பள்ளியில் அழகாகக் கையெழுத்து உடைய மாணவனைக் கூப்பிட்டு ரிகார்ட் நோட்ஸ் எழுதித் தரச் சொல்லுவது போல 


“அழகாகப் பிரதி எழுதித் தருவாருண்டோ ?” என்று சிஷ்யர்களைக் கேட்டார் நஞ்சீயர். 

“இங்கே அடிக்கடி வரும் நம்பூர் வரதருடைய கையெழுத்து அருமையாக இருக்கும்” என்று சிஷ்யர்கள் கூறினார்கள். 


நம்பூர் வரதரின் எழுத்துக்கள் முத்து போன்று இருந்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமாக அவரைத் தேர்ந்தெடுத்து, உபதேசம் செய்து, “இப்படியே தப்பாமல் எழுதித் தாரும்” என்று சுவடிக்கட்டை அவரிடம் ஒப்படைத்தார்.


”அடியேன் ஊருக்குச் சென்று கவனமாக எழுதிக் கொண்டு வருகிறேன்” என்று விடைபெற்று காவேரியைக் கடந்து செல்லும் போது நடுவில் வெள்ளப்பெருக்கு அதிகமாக சுவடிக்கட்டை தலையில் கட்டிக்கொண்டு நீந்திக் கடக்கும் போது அது நழுவி காவிரியில் அடித்துச் சென்றது.


தன் ஆசாரியர் தன்னை நம்பிக் கொடுத்த பொக்கிஷத்தை நழுவவிட்ட நம்பூர் வரதராசர் கரையை அடைந்து “பட்டோலை போய்விட்டதே! ஆசாரிய அபசாரம் ஆகிவிட்டதே இனி என்ன செய்வது ?” வருத்தத்துடன் பதட்டம் அடைந்தார்.


தம் இல்லத்தில் இருந்த  திருவாராதனப் பெருமானுக்கு ஆராதனம் செய்தபின் உண்ணாமல் படுத்துறங்கினார். 


“வருந்த வேண்டாம்... உம்முடைய ஆசாரியனை முன்னிட்டு நீ எழுத ஆரம்பியும், உம் நினைவில் உம்முடைய ஆசாரியன் சொன்னவற்றை ஒன்றும் தவறாது எழுத உதவுவோம்!” என்று கனவில் உத்தரவாதம் கொடுத்தார் நம்பெருமாள்!


ஆசாரியனை தியானம் செய்து, நம்பெருமாள் துணையுடன் தவமாக எழுதி முடித்தார்.அப்படி எழுதும் போது பல இடங்களில் சில விசேஷ அர்த்தங்களையும் ’எக்ஸ்டரா டாப்பிங்காக’ சேர்த்து எழுதி சுவடிக்கட்டை நஞ்சீயர் திருக்கரத்தில் சேர்ப்பித்தார். 


நஞ்சீயரும் அதனை அவிழ்த்துப் படித்துப் பார்த்தார். மூலப்பிரதியைக் காட்டிலும், பல இடங்களில் சொற்களுக்கு விசேஷார்த்தங்களும் இருப்பதைக் கண்டு அதைக் குறித்துக் கேட்க வரதராசரும் அச்சத்துடன் தயங்கி நிற்க  


“அஞ்ச வேண்டாம்; உண்மையைச் சொல்லும்” என்று கேட்க நடந்தவற்றைச் சொன்னார் நம்பூர் வரதர்.


 நஞ்சீயர் வரதாராசருடைய அறிவும் ஆற்றலையும் வியந்து திருவுள்ளம் உகந்து “இவர் நம் பிள்ளை” என்று தழுவிக்கொண்டார். அன்று முதல் வரதராசர் ‘நம் பிள்ளை’யானார். இந்த நம்பிள்ளையே தான் லோகாசாரியன் என்ற அழைக்கப்பட்டார்.  அந்தக் கதையைப் பார்க்கலாம். 


லோகாசாரியன் கதை: 


நம்பிள்ளையின் ஈட்டில் அந்தக் கால வாழ்க்கை முறைகள் போன்ற பல வரலாற்றுத் தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியம் அவருடைய வாழ்க்கை சில சம்பவங்களை நோக்கும் போது ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லும் பாடங்கள் தான். 


பெரிய பெருமாளின் திருவடிக்கீழ் ஒரு நான்கு கால் மண்டபத்தூணில் சாய்ந்து கொண்டே திருவாய்மொழி காலஷேபம் நிகழ்த்துவார். “நம் பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ” என்று மக்கள் வியந்து பேசினார்கள். நம்பெருமாளே ஒரு முறை நடந்து வந்து எட்டிப் பார்த்து ‘திருவிளக்கு பிச்சன்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு மறுபடியும் சயனித்தார்.


முதலியாண்டானின் திருப்பேரனார் கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளைக்குப் பெரிய கோஷ்டி  சேர்வதைக் கண்டு பொறாமை ஏற்பட்டது. ஒரு முறை நம்பிள்ளையை கடும் சொற்களால் கடிந்துகொண்டார்.நம்பிள்ளை மன வேதனையுடன் அமைதியாக தம் அகத்துக்குச் சென்றுவிட்டார். 


இதைக் கேள்விப்பட்ட தோழப்பருடைய மனைவி கணவரிடம் ”ஆழ்வாரின் அவதாரம் போன்ற நம்பிள்ளையிடம் எப்படி அபசாரம் படலாம் ? உம்மோடு வாழவே பிடிக்கவில்லை ?” என்றாள்


தோழப்பரும் மனம் வருந்தி ”நம்பெருமாளின் காலில் விழுந்துவிடலாம்” என்று முடிவு செய்ய, “குளத்தில் தொலைத்துவிட்டு குட்டையில் தேடலாமோ ?” என்று கூறி “நம்பிள்ளை திருவடிகளிலே விழுவதே வழி” என்று தோழப்பர் மனைவி கூற, அதை ஆமோதித்த தோழப்பர், பொழுது சாய்ந்த நம்பிள்ளை இல்லத்துக்கு கிளம்ப, வீட்டுக் கதவை திறக்க அங்கே திண்ணையில் நம்பிள்ளை படுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு,  


“கோயிலில் இன்று நான் பேசியதற்கு என்னைப் பழிவாங்க இங்கு வந்தீரோ ?” என்று மீண்டும் கடும் சொற்களால் கேட்க, அதற்கு நம்பிள்ளை 


“ஸ்ரீராமானுஜ தேக சம்பந்தம் உடைய முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தங்கள் திருவுள்ளம் கலங்கும் படி நடந்துகொண்ட பாவியை மன்னிக்க வேண்டும்” என்று தோழப்பர் காலில் விழ, மயிர்க்கூச்செறியத் தோழப்பர் நம்பிள்ளையை வாரியணைத்துக் கொண்டு “இவ்வளவு நாளும் உம்மைச் சிலருக்கே ஆசாரியன் என்று நினைத்திருந்தேன்; இப்போது உலகுக்கெல்லாம் நீரே ஆசாரியராவதற்குத் தகுதி பெற்றவர்” என்று இன்று அறிந்தேன். இனி உம்மை உலகம் “லோகாசாரியர்” என்று அழைக்கட்டும் என்று தாமும் தன் மனைவியும் நம்பிள்ளையைக் கௌரவித்து சிஷ்யர்களானார்கள்.


சிறந்த சிஷ்யர் என்பதற்கு ‘நம் பிள்ளை’ என்ற திருநாமத்தைப் பெற்றார். 

சிறந்த ஸ்ரீ வைஷ்ணவப் பண்புகளுக்கு ’லோகாசாரியர்’ என்ற திருநாமம் பெற்றார். 


நம்பிள்ளைக்கு இரண்டு ’பிள்ளை’ சிஷ்யர்கள். அவர்களின் கதைகளைப் பார்க்கலாம். 


இரண்டு பிள்ளைகளின் கதைகள் :


நம்பிள்ளைக்கு இரண்டு சிஷ்யர்கள். 

வடக்கு திருவீதி பிள்ளை 

பெரியவாச்சான் பிள்ளை


ஒரு முறை நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையிடம் வியாக்கியானம் எழுத நியமித்தார். ஆசாரியன் அருளால் வியாக்கியானம் எழுதினார். அதே சமயம், வடக்கு திருவீதி பிள்ளை ஒவ்வொரு நாளும் பகலில் கேட்டு அனுபவித்து அதன் அர்த்தங்களை இரவு எழுதிக்கொண்டு வந்தார். 


பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளையிடம் திருவாய் மொழி வியாக்கியானத்தை எழுதிச் சமர்ப்பிக்கும் போது வடக்கு திருவீதி பிள்ளையும் ஒன்றை எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்ல நம்பிள்ளை அதை வாங்கிப் பார்க்கும் போது அவர் திருவாக்கில் உதிர்ந்த முத்துக்களைப் பொறுக்கி மிகச் சுருக்கமாகவும் இல்லாமல், மிக விரிவாகவும் இல்லாமல் அழகாய் இருப்பதைக் கண்டு மிகவும் உகந்து வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்து 


“நன்றாக பட்டோலைப் படுத்தினீர் ஆனாலும் நம்முடைய அனுமதியில்லாமல் எழுதியதால் அது என்னிடமே இருக்கட்டும்” என்று வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். அதை படித்து அனுபவிக்கச் சிஷ்யர்கள் விருப்பப்பட்டார்கள்.  


ஈயுண்ணி மாதவன்  என்ற சிஷ்யர் நம்பெருமாளிடம் சென்று அழுதுகொண்டு நிற்க. நம்பெருமாள் பதறிப் போய் ”என்ன வேண்டும்?” என்று கேட்க நம்பிள்ளையிடமிருந்து திருவீதி பிள்ளை கொடுத்த பட்டோலை வேண்டும் என்று வேண்டினார். 


ஒரு நாள் நம்பிள்ளை நம்பெருமாளைச் சேவிக்கும் போது, அவருக்குத் தீர்த்தம் பிரசாதங்களுடன், “ஈடு முப்பத்தாறாயிரத்தை ஈயுண்ணி மாதவருக்கு ப்ரஸாதியும்” என்று நியமிக்க, நம்பிள்ளை அந்த ஓலைச் சுவடிகளை ஈயுண்ணி மாதவரிடம் கொடுத்தருளினார். 


இன்று நாம் படிக்கும் நம்பிள்ளை ஈடு கிடைத்ததற்கு ஈயுண்ணி மாதவனும், நம்பெருமாளுமே காரணம். நம்பிள்ளை திருவாக்கில் உதிர்த்த முத்துக்களை அழகாக கொத்து ’ஈடு’ என்ற மாலையாக கொடுத்தவர் வடக்கு திருவீதிபிள்ளை. இவருடைய திருக்குமாரர் ’பிள்ளை லோகாசாரியார்’. 

அவருடைய கதையைப் பார்க்கலாம். 


பிள்ளை லோகாசாரியார் கதை : 


வடக்கு திருவீதிபிள்ளை திருமணம் ஆனவர் ஆனால் தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாமல் பிரமசரியத்தைக் கடைப்பிடித்தார். அவருடைய தாயார் நம்பிள்ளையிடம் சென்று ஸ்ரீ வைஷ்ணவச் சொத்தை பாதுகாக்க தன் மகனுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்க பிராத்தித்தாள். 


நம்பிள்ளை வடக்கு திருவீதி பிள்ளையிடம் அறிவுறுத்த ஆசாரியன் ‘சொல்’ நமது ‘கடமை’ என்று இல்லறத்தில் ஈடுபட்டு, பன்னிரண்டாம் மாசத்தில் ஐப்பசி திருவோணத்தில் வடக்கு திருவீதி பிள்ளைக்கு ஒரு திருக்குமாரர் அவதரித்தார்.  


ஆசாரியன் அனுக்ரஹத்தால் கிடைத்த ’பிள்ளை’க்கு தன் ஆசாரியன் திருநாமமான ‘லோகாசார்யர் பிள்ளை’ என்று சூட்டினார். அதுவே காலப் போக்கில் ‘பிள்ளை லோகாசார்யர்’ என்று மாறியது. 


ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரின்  அச்சாவதாரம் பற்றி இப்படிக் கூறுகிறார் 


கோயிலில் இருக்கும் பெருமாள் அர்ச்சாவதாரம். ’தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்’ என்பது பொய்கை ஆழ்வாரின் பாசுரம். எந்த உருவத்தில் நீ என்னைப் பார்க்க விரும்புகிறாயோ அர்ச்சாவதாரத்தில் அதே உருவத்தில் தான் காட்சி தருகிறார். பெருமாள் கல், மரம் அல்லது சித்திரமாக என்று எதில் இருந்தாலும் அந்தத் திரவியம் முக்கியமில்லை. எப்படிச் செய்தாலும் பெருமாள் அதில் வருகிறார்.  


நவராத்திரி சமயம் மாம்பழம், கிளி, கண்ணன் என்று பல மண் பொம்மைகள் பார்த்திருப்பீர்கள். எல்லாம் மண் என்று நமக்குத் தெரிந்தாலும்  நாம் கடைக்காரரிடம் அந்தக் கிளி என்ன விலை, மாம்பழம் என்ன விலை, கண்ணன் என்ன விலை என்று தான் கேட்போம். ”இந்த மண்ணு என்ன விலை” என்று கேட்பதில்லை. மண் என்ற திரவியத்தைப் பார்க்காமல், மண் பொம்மையின்  உருவத்தைப் பார்ப்பது போல நாம் அர்ச்சாவதாரத்தில் நம்பெருமாள், பேரருளாளன் என்று பார்க்கும் போது அது எந்தத் திரவியத்தால் என்று பார்க்காமல் பெருமாளின் சொரூபத்தைப் பார்க்க வேண்டும். 


என்று ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் போற்றிய அர்ச்சாவதாரத்துக்கு அதுவும் நம்பெருமாளுக்கு ஓர் ஆபத்து வந்தால் ? வந்தது.  


பிரமேயம்


ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் முகமதுபின் துக்ளக் 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுத்தான்.  1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  தொண்டை மண்டலத்தைச் சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வலியிலுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றைப் பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்கிரகங்களை உடைத்து நொறுக்கினார்கள். 


 ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சி, ஸ்ரீரங்க நாராயண ஜீயர், அர்ச்சகர்கள், திருகோபுரத்து நாயனார், ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்  , ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் சிலர் ஒன்று கூடி திட்டம் தீட்டினார்கள். 


திருவரங்கனின் மூலவரைக் காப்பதற்காகக் கருவறை வாசலை கற்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு விக்கிரகத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் உற்சவரையும் திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியிலே பாதுகாப்பாக வைத்து, மற்றைய ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தார்கள். 


பிள்ளைலோகாசாரியரும்அவருடைய அந்தரங்கச் சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் ஸ்ரீரங்கத்து காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரம் அடைந்து, பிறகு மணப்பறை மற்றும் வேலூர் மார்க்கமாக தென் திசை நோக்கி கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்து யானை மலை அடிவாரத்தில் ஜ்ஜோதிஷ்குடி என்ற ஊருக்குச் சென்று சேருகிறார்கள் ( கொடிக்குளம் ). அங்கே இருக்கும் செந்தாமரைக் குளத்தின் அருகில் பாதுகாப்பாக எழுந்தருளச் செய்து, நம்பெருமாளுக்கு நித்தியத் திருவாராதனம் முதலியவற்றை பிள்ளைலோகாசார்யர் மற்றும் அவருடைய சிஷ்யர்கள் செய்தார்கள். 


அப்போது திருமலையாழ்வாரின் திருத் தாயாரிடம் “நம்பெருமாளுக்கு வியர்க்கும் சற்று திருவாலவட்டத்தால்  வீசு” என்றார். அப்போது அவள்  கண்ட காட்சி - நம்பெருமாளின் திருமுகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. 

“ஸ்வாமி பெருமாளின் திருமேனியும் புழுங்குமோ ?” என்றாள்.  

அதற்குப் பிள்ளைலோகாசாரியார் 

“வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்போது” என்று ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் கூறியிருப்பது பொய்க்குமோ ?” என்றார். 


தொடர்ந்து ஆலவட்டம் வீச வியர்வை அடங்கியது. 


1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரமத் திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளி படுத்தித் திருவரசு எழுப்பினார்கள். 


பிறகு நம்பெருமாள் மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம், திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். 


ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கி செயல்பட்டவர்களுக்குத் தலைமை தாங்கியவர் சுதர்சனப் பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். அவருக்கு வயதாகிவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சனப் பட்டர் ஸ்ரீ பாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் ( நடாதூர் அம்மாள் காலட்சேபக் குறிப்புகள் ) பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பன்றியாழ்வான் சன்னதிக்குச் சென்ற போது அங்கே 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக அவரும் அங்கேயே கொல்லப்பட்டு பரமபதித்தார்.


பிரமாணம்!


 வேதாந்த தேசிகன் ஊரைவிட்டுக் கிளம்பும் முன் உலூக்கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரத்தாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார் ஸ்ரீ வேதாந்த தேசிகன். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு நடுவே பிணமாக கிடந்தார். 


உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர்  சத்தியமங்கலம் காடுகள் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். ( இதனால் தான் ஸ்ரீபாஷ்யத்தை சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தனியன்கள் சேவிக்கப்படுகிறது )


பிரமாணம், பிரமேயம் பிரமாதா !


பிரமாணம் என்றால் ஆதாரம். பிரமாணப் பத்திரம் என்கிறோம் அது தான் ஆதாரம். அதில் சொல்லப்பட்ட இடமோ பொருளோ உங்கள் சொத்து என்பதற்கு இது ஆதாரம். 


பெருமாள் என்ற சொத்தை அறிந்துகொள்ள ஆதாரம் எது? வேதங்கள், ஆழ்வார் அருளிச்செயல்கள், ஸ்ரீபாஷ்யம் முதலானவை.  


பிரமேயம் என்றால் சொல்லப்படும் பொருள். அதாவது சொத்து. மற்ற அவதாரங்களில் நாம் அவருக்குச் சொத்து ஆனால் அர்ச்சாவதாரத்தில் அவர் நம் சொத்து. 

பிரமாதா என்பவர் அந்த ஆதாரம் கொண்டு பொருளை அளந்தறிபவன் - பதிவாளர் ( registrar ) என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு நம் சொத்தை ஆதாரம் கொண்டு காட்டிக்கொடுப்பவர்கள் ஆசாரியர்கள். 

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் - பிரமாதாக்கள் !

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   பிரமேயத்தைக் காத்துக்கொடுத்தார்;

ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரமாணத்தைக் காத்துக்கொடுத்தார்;

முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகன் மூவரும் திருவோணத் திருநட்சத்திரம் ! 

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்  கிரந்தங்களில் கடுமையான ஒரு வாக்கியமும் கிடையாது என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.  நாமும் அவரை போல் கடுமையாக எதுவும் பேசாமல் இருப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. 

ஸ்ரீபொய்கை ஆழ்வார்,  ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் 

 - சுஜாதா தேசிகன்
11-11-2021
ஐப்பசி திருவோணம் - ஸ்ரீ பொய்கை ஆழ்வார், ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார் திருநட்சத்திரம். 

Comments

  1. Regarding Muslim invasion and the subsequent events at Srirangam, pls read "Thiruvarangan Ula" (two volumes) by Sri Venugopalan (Also known as Pushpa Thangathurai). This book may probably be available in Amazon.

    ReplyDelete
    Replies
    1. I have read it. Also i have written it in detail in another article as well.

      Delete

Post a Comment