Skip to main content

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் !

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் ! 


இன்று கார்த்திகையில் கார்த்திகை. நம் கலியனான திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்.

நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் இரணியனுக்குத் திருத்திப்பணி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் பிராட்டிக்கு வருத்தம். இராமாவதாரத்தில் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார் (இன்று போய் நாளை வா .. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்). 

பெருமாளின் பத்து அவதாரங்களையும் இரண்ரே வரியில் திருமங்கை ஆழ்வார் சொல்லும் அழகைப் பாருங்கள்.

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் ஆனான்

இதில் முன்னும் இராமனாய் - பரசுராமரையும், பின்னும் இராமனாய் - பலராமனையும் குறிக்கிறது. ஆனால் இராமாவதாரத்தை ‘தானாய்’ என்கிறார். 

அவதாரங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சொரூப அவதாரம் - பகவான் தானே அவதாரம் எடுப்பது. மற்றொன்று ஆவேச அவதாரம். ஒரு ஆத்மாவை தேர்ந்தடுத்து ஒரு பயனுக்காக தன் சக்தியை அதில் வைத்து ஆவேசிப்பது.

பரசுராமரும், பலராமரும் ஆவேச அவதாரங்கள். ராமர் சொரூப அவதாரம். 

பத்து அவதாரங்களில் பரசுராமர் ராமரை ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதே போல பலராமரும், கண்ணனும். 

திருமங்கை ஆழ்வார் அதனால் தான் ஸ்ரீராமாவதாரத்தை ‘தானாய்’ என்கிறார்.  இந்த ராமரே அவர் சிந்தனையில் எப்போதும் இருந்தார். 

சில வருடங்கள் முன்பு திருவாலி திருநகருக்குச் சென்றபோது அங்கே பெருமாள் சன்னதிக்குப் பக்கம் இன்னொரு அறை இருந்தது. பெருமாள் வஸ்திரங்கள் வைக்கும் அறை என்று எட்டிப்பார்த்தபோது அங்கே சங்கு சக்கரங்களுடன் மிக அழகான பெருமாள் !  யார் என்று விசாரித்த போது அவர் பெயர் ”ஏ வரி வெம் சிலையான்” என்றார்கள். 

ஏ வரி வெம் சிலையான்


ஏ வரி வெம் சிலையான் =  அம்புடன் வில்லேந்திய பெருமாள். ஆனால் அவர் கையில் வில் இல்லை. இந்த பெருமாளைக் குறித்து மேலும் தகவலை அறிந்த போது வியப்பாக இருந்தது. 

யுத்தத்தில் இராவணன் விழுந்து கிடக்க அதைக் கண்ட மண்டோதரி புலம்புகிறாள். அவளுக்கு ஸ்ரீராமர் சதுர்ப்புஜங்களுடன் சங்கு சக்கரத்துடன் சேவை சாதிக்கிறார். அதே நிலையில் இன்றளவும் நமக்கும் சேவை சாதிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்
தூவிரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே!
தீவிரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏவரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே

என்று ‘ஏவரி வெம் சிலையானுக்கு’ மங்களாசாசனம் செய்கிறார். 

ஆழ்வார் தன் நித்தம் ஆராதனை செய்த பெருமாளின் பெயர் ‘சிந்தனைக்கு இனியான்’. இன்றும் ஆழ்வாருடன் இந்த சிறிய பெருமாளை சேவித்துக்கொள்ளலாம். 


சிந்தனைக்கு இனியான்


சிந்தனைக்கு இனியானை இப்படி மங்களாசாசனம் செய்கிறார்


வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய், திருவே,
என்ஆருயிரே, அம்தளிர் அணிஆர் அசோகின் இளம்
தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரையும் திருவாலி அம்மானே

இப்போது ‘ஏவரி வெம் சிலையான்’ தான் ஸ்ரீராமர் என்று குலசேகர ஆழ்வார் தாலாட்டு பாடுகிறார்.  

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ
”ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ” 


இன்னொரு பாசுரத்தில் ஆலிநகர்க்கதிபதியே ஸ்ரீராமர் என்று தாலாட்டு பாடுகிறார். 


ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

‘ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!’ என்று திருவாலி பெருமாளை மங்களாசாசனம் செய்கிறார்.


ஏவரி வெம் சிலையானுக்கு, சிந்தனைக்கு இனியனுக்குச் சங்கு சக்கரம் இருக்கிறது ஆனால் வில் இல்லை. வில் இல்லாத ராமரா ? வில் இருக்கிறது ஆனால் நாம் தான் அதை தேட வேண்டும். ( இது அடியேனின் அனுமானம்). 


திருமங்கை ஆழ்வார் தனியன் இது

விருச்சிகே க்ருத்திகா ஜாதம் சதுஷ்கவிசிகாமணிம்
ஷாட்ப்ரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹமாச்ரயே

இதன் பொருள் : கார்த்திகையில் கார்த்திகை திருநட்சத்திரத்தில் அவதரித்தவராய், நாலுகவிப் பெருமாளாய், ஆறு திவ்யபிரபந்தங்களை அருளியவர், சார்ங்கத்தின் அம்சமானவரான கலிகன்றி என்னும் திருமங்கையாழ்வாரை வணங்குகிறேன்.

திருமங்கை ஆழ்வாரே வில்லின் அம்சம். வில் பக்கத்தில் இருக்கப் பெருமாளுக்கு எதற்குக் கையில் இன்னொரு வில் ?

சிந்தனைக்கினியான்(விக்ரகம்) ஸ்ரீராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து திருவாலி-திருநகரியில் எழுந்தருளப்பட்டு, சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.



படம் : இன்று சிந்தனைக்கு இனியானுடன் திருமங்கை ஆழ்வார் சேவை. கூடவே மீனோடு ஆமை கேழலாக பத்து அவதாரங்கள் சேவை, சிந்தனைக்கு இனியானை மங்களாசாசனம் செய்த கலியன் எப்போதும் நம மனதுக்கு இனியான்!. 

- சுஜாதா தேசிகன்
19-11-2021

கார்த்திகையில் கார்த்திகை
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்

Comments