Skip to main content

திருப்பாணாழ்வாரும் விளாஞ்சோலைப் பிள்ளையும்

 திருப்பாணாழ்வாரும் விளாஞ்சோலைப் பிள்ளையும்  ஸ்ரீவைஷ்ணவ பெயர்களில் பல தகவல்கள் பொதிந்துள்ளது. அவை பெரும்பாலும் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களுடன் சம்பந்தம் பெற்றிருக்கும். 

குலசேகர ஆழ்வார் “கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே” என்று ஆசைப்படுகிறார்.  கோனேரி என்பது திருவேங்கடத்தில் உள்ள திருக்குளத்தின்(ஏரி) பெயர். திருக்கோட்டியூர் நம்பிகள் சிஷ்யை ’திருக்கோனேரி தாஸ்யை’ என்ற திருநாமத்துடன் விளங்கினார். இந்த அடியார் ’திருவாய்மொழி வாசகமாலை’ என்ற நூலை நமக்கு கொடுத்துள்ளார். 

“குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்” என்ற பாசுரம் பலருக்குத் தெரிந்திருக்கும். திவ்ய பிரபந்தத்தில் பல இடங்களில் “குன்றம் ஏந்தி” என்ற சொல் வருகிறது, இது ஆச்சரியம் இல்லை, ஆனால்  “குன்றம் ஏந்தி பாகவதர்” என்று ஒருவரின் பெயர் இருந்திருக்கிறது. 

”குன்றம் ஏந்தி’ என்ற பெயரா ? என்று நமக்கு தோன்றும். உயர்ந்த கட்டிடங்கள் மேல் சாதாரண கம்பிக்கு  ‘இடி தாங்கி’ என்று பெயர் இருக்கும் போது உயர்ந்த பாகவதருக்கு ’குன்றம் ஏந்தி’ என்று இருப்பதில் என்ன வியப்பு ? 

பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யர் ஒருவரின் பெயர் ’விளாஞ்சோலைப் பிள்ளை’. அவருடைய கதை தான் பார்க்க போகிறோம். 

விளாம் சோலை நிறைந்த தோட்டத்தில் வசித்து வந்ததால் இவருக்கு இந்த பெயர். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் பக்கம் ஆறனூர் என்ற கிராமத்தில் ஈழவர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தாழ்ந்த குலம் என்பதால் பத்மனாப பெருமாளை சேவிக்க ( திருப்பாணாழ்வார் காவிரிக்கரையில் இருந்தே சேவித்தது போல  )  இவர் கோயிலுக்குள் செல்லாமல், விளா மரங்கள் நிறைந்த சோலையில் இருந்த ஒரு உயர்ந்த தென்னை மரம் மீது தினமும் ஏறி அங்கிருந்து அனந்தபத்மனாபனின் விமானம் தெரிய அதை தரிசனம் செய்வது வழக்கம். 

ஸ்ரீவைஷ்ணவ நெறியை ஏற்க குலப்பிறப்பு தடை இல்லை. இவர் திருவரங்கம் வந்து பிள்ளைலோகாசாரியாரிடம் அடிபணிந்தார். இவருக்குப் பிள்ளைலோகாசாரியார் ’நலம் திகழ் நாராயண தாஸர்’ என்ற திருநாமத்தை சூட்டினார். 

‘விளாம் சோலை பிள்ளை’  சேர தேசத்தவர்(கேரளா). குலசேகர ஆழ்வாரும் அதே தேசம் அதனால் பெருமாள் திருமொழியில் வரும் “நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே” என்ற பாசுர வரிகளில் வரும் பெயரையே அவருக்குச் சூட்டினார் என்று நினைக்கிறேன். இதில் என்ன வியப்பு என்றால் அந்த பாசுரத்தின் பொருள் அப்படியே நிறைவேறியது. எப்படி என்று சொல்லுகிறேன். 

நலம் திகழ் நாராயண தாஸர் பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யராக அவருடைய காலஷேப கோஷ்டியில் இடம்பெற்று, அவர் உபதேசித்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு இவர் ஒருவரே அதிகாரியாகவும் ஆனார். 

பிள்ளைலோகாசாரியார் துலுக்க படையிடமிருந்து நம்பெருமாளைக் காத்து  ஜ்யோதிஷ்குடிக்கு சென்று அங்கே பரமபதிக்கும் முன் ஸ்ரீவசன பூஷணத்தை திருவாய்மொழி பிள்ளைக்கு பிற்காலத்தில் உபதேசிக்குமாறு பணித்தார். 

ஆசாரியரின் ஆசையை நிறைவேற்றுவது தானே சிஷ்யரின் கடமை. மீண்டும் சேர நாட்டுக்கு சென்று திருவாய்மொழி பிள்ளையின் வருகைக்கு பல காலம் அங்கே விளாம் சோலையில் காத்துக்கொண்டு இருந்தார். 

பல காலம் கழித்து திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்துக்கு அனந்தபத்மனாபனை சேவித்து, விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடி தொழ அவரை தேடிக்கொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை வியக்கச் செய்தது. 

விளாஞ்சோலை பிள்ளை தன் ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரை தன் மனத்தில் நிறுத்தி தியானித்துக்கொண்டு இருக்க, அவருடைய திருமேனியில் சிலந்திகள் வலை பின்னி சமாதி நிலையில் காட்சி கொடுத்தார். 

திருவாய்மொழிப் பிள்ளை அவர் திருவடிகளில் தண்டம் சமர்பித்து கைகூப்பி எதிரே நின்றார். விளாஞ்சோலைப் பிள்ளை கண்களை திறந்த போது அவருடைய கடாக்ஷத்துடன் மனதில் வீற்றியிருந்த பிள்ளை லோகாசாரியார் கடாக்ஷமும் திருவாய்மொழிப் பிள்ளைக்கு கிடைத்தது. 

வெகுகாலமாக திருவாய்மொழிப் பிள்ளையின் வருகைக்காக காத்துக்கொண்டு விளாஞ்சோலை பிள்ளை உள்ளம் பூரித்து அவருக்கு ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்த விசேஷங்களை உபதேசித்து அருளினார். ஞான பரிமாற்றத்துக்கு குலம் தடை இல்லை என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை “கொடுமின் கொண்மின்” என்ற பாசுர விளக்கம் அங்கே நடந்தேறியது. 

இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் கூறும் வஞ்ச முக்குறும்பு பிராமணர்களுக்கு ஒரு இடராக இருக்கிறது. இவை சிறிதும் இல்லாத தம்மை தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொள்பவர்கள் உயர்ந்த பிறப்பினர் என்பதற்கு  ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும், ஆசாரியர்களில் விளாஞ்சோலைப் பிள்ளை, மாறநேரி நம்பியும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டுகள். 

விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உபதேசம் பெற்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார் திருநகரியை அடைந்து தன் பிள்ளைலோகாசாரியாரின் ஆசைகளை நிறைவேற்றினார். 

அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஒர் அதிசயம் நடந்தது. ஒரு நாள் நம்பூதிரிமார்கள் அனந்தபத்மநாபனுக்கு திருவாராதனம் செய்துகொண்டு இருக்க, விளாஞ்சோலைப் பிள்ளை கோபுரம் வாசல் வழியாக உள்ளே நுழைந்து பெருமாள் கர்பகிரஹத்தில் இருக்கும் மூன்று வாசலில்,  திருவடிக்கு முன் இருக்கும் வாசல் பக்கம் வந்து நின்றார். 

இதைக் கண்ட நம்பூதிரிகள், ஒரு தாழ்ந்த குலத்தவர் கோயில் உள்ளே வந்துவிட்டார் என்று அந்த கால வழக்கப்படி சந்நிதி கதவுகளை தாழிட்டு கோவிலை பூட்டிவிட்டு வெளியே வந்தார்கள். 

கோயில் வாசலில் விளாஞ்சோலைப் பிள்ளை சிஷ்யர்கள் சிலர் காத்துக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளைலோகாசாரியாரின் திருவடியில் சேர்ந்துவிட்டார். அவருடைய சரம திருமேனிக்கு கோயில் மாலை திருப்பரியட்டம் வேண்டி நின்று கொண்டு இருந்தார்கள். 

இதைக் கண்ட நம்பூதிரிகளுக்கு வியப்பு. சற்றுமுன் கோயிலில் உள்ளே நடந்த அதிசயத்தை விவரித்தார்கள். திருவரங்கம் பெரியபெருமாள் திருவடியில் திருப்பாணாழ்வார் சேர்ந்தது போல, அனந்தபத்மநாபனின் திருவடியில் ‘நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவரே!’ என்ற குலசேகரரின் திருவாக்கு ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரின் அருளால் நிறைவேறியது!

இந்த செய்தியை கேள்விப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளைக்கு சரம கைங்கரியங்களை பெரியநம்பி எப்படி மாறநேரி நம்பிக்கு நிறைவேற்றினாரோ அது போல நிறைவேற்றினார். 


- சுஜாதா தேசிகன்
20-11-2021

இன்று கார்த்திகையில் ரோஹிணி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்(20.11.2021)
ஐப்பசியில் உத்திரட்டாதி ( 15.11.2021) விளாஞ்சோலைப் பிள்ளை திருநட்சத்திரம்.


Comments

Post a Comment