ஸ்ரீ வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி
இன்று மத்தியம் வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார் என்று கேள்விப்பட்டு மனம் கலங்கியது. இவர் முதலியாண்டான் வம்சம்.
ஒரு முறை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து முதலியாண்டான் அவதார ஸ்தலமான புருஷமங்கலம் சென்றிருந்தேன். ஸ்ரீ முதலியாண்டான், ஸ்ரீராமானுஜரின் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் கிபி 1027ல் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கு இடையே புருஷமங்கலம், வரதராஜபுரம் என்ற ஊரில் அவதரித்தவர். இன்று இந்த ஊர் பெயர்களைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் வழி சொல்ல தெரியாது. தற்போது நாசரத்பேட்டை என்று இந்த ஊர் பெயர் மாறியிருக்கிறது. ஸ்ரீராமானுஜரின் சகோதரியின் மகனான முதலியாண்டான் உடையவரின் சிஷ்யர்கள்(முதலிகள்) அனைவருக்கும் முதல்வர் என்பதால் முதலியாண்டான் என்று பெயர் பெற்றார். எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது.
எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்கே அவருக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. மேல்கோட்டை பக்கம் மிதுலாபுரி சாளக்கிராமம் என்ற ஊரில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அவர்களைத் திருத்த வேண்டும் என்று எண்ணிய உடையவர் முதலியாண்டானைப் பார்த்து “அவர்கள் நீர் எடுக்கிற துறையிலே திருவடிகளை விளக்கிவாரும்” என்று நியமித்தார். அவரும் அப்படியே செய்தார். யார் எல்லாம் இவர்களை எதிர்த்தார்களோ புனிதமான தீர்த்தத்தைப் பருகியதால் மறுநாள் கிராமமே ஸ்ரீராமானுசரை அணுகி அவர் திருவடியை ஆச்ரயித்தார்கள். அவர்களில் ஒருவர் ஆந்தர பூர்ணர் எனும் வடுக நம்பி ! அவருக்கு ஸ்ரீவைஷ்ணவ தாத்பர்யங்களை உபதேசம் செய்தார்.
அங்கே திருவடிகளில் நித்யசேவை உண்டாகும் படி தம்மை ஆசிரயித்ததைக் கல்வெட்டிலே பொறித்து வைத்தார் ( இன்றும் இது அங்கே இருக்கிறது ) . எம்பெருமானார் மேலும் அங்கே மறைவாக ஓரிடத்தில் நிக்ஷப்த தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார் ( இன்றும் ஸ்ரீராமானுசர் திருவடிகளாம் முதலியாண்டான் ஸ்பரிசம் பட்ட தீர்த்தம் அங்கே இருக்கிறது. )
அடியேன் அவதார ஸ்தலம் சென்றபோது அங்கே பச்சைவர்ண பெருமாளுடன் வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி அவர்களும் எழுந்தருளியிருந்தார்கள். அவரைச் சேவித்தவுடன் ஆசிர்வதித்து, நெடுநாளைய நண்பர்போல என்னை விசாரித்துச் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
இனிமையாகப் பழகக் கூடியவர், இன்று மத்தியம் ஆசாரியன் திருவடியை அடைந்தார் என்ற செய்தி கேட்டு மனம் கலங்கியது.
- சுஜாதா தேசிகன்
23-11-2021
Second paragraph last few lines have to be எம்பெருமானார்
ReplyDelete