இன்று 45ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் 94வது வார்ஷிக திருநக்ஷத்திரம்.(கார்த்திகை திரு உத்திரட்டாதி). அவதரித்த ஊர் வில்லிவலம்.
வைணவம்
வைகலும்
வீசு தென்றலாய்; விசிட்டாத்வைத
பேசு தென்றலாய்
வீதிவலம் - வரும் ஊர்
வில்லிவலம் !
வில்லிவலம் அழகியசிங்கர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரிடம் ( 42ஆம் அழகியசிங்கர்) வேதாந்த காலஷேபம் செய்ய சென்றார். ஸ்ரீமதழகியசிங்கருக்கு காஷாயகைங்கரியம் பண்ணும் பாக்யத்தை பெற்றார். அதனால் ஏகாந்தத்தில் பல நல்லுபதேசங்களையும் ஆசார அனுஷ்டானங்கள், சாஸ்திரங்கள் இவைகளையும் தெரிந்துகொண்டார். இஞ்சிமேடு ஸ்ரீமதழகியசிங்கர் திருநாமமே இவருக்கு தாரகம். பேஷகம், போக்யம்!.
44ஆம் பட்டம் அழகிய சிங்கர் ‘ஸ்ரீரங்க கோபுர அழகிய சிங்கர்’ திருமேனியில் கொஞ்சம் தளர்வு ஏற்பட தனக்கு பிறகு ஆஸ்தானத்தை நியமிக்க வேண்டி வித்வான்களை வரவழைத்து ஆலோசிக்க அவர்கள் ஏகமனதாக ஸ்ரீவில்லிவலம் ஸ்வாமியை நியமிக்கும்படி ப்ராத்தித்தார்கள்.
21.10.91ல் 45ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராக ஸ்நயாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார். பல கைங்கரியம், மங்களாசாசனம் செய்தார்.
இன்னோர் உடையவரோ ? இவ்ளோர் பராங்குசரோ ?
இன்னொரு தேசிகரோ ? இல்லையில்லை ; ஆன்றோர்
அனைவரின் சேர்க்கை அழகிய சிங்கர்:
வினைவிடும் நெஞ்சே வழுத்து
என்ற கலவையாகத் திகழ்ந்தார்.
இந்த உயர்ந்த ஸம்ப்ரதாயத்தை யாரிடம் ஒப்படைப்பது என்கிற சிந்தனையுடனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபோது, ஒரு நாள் இரவு ஒரு ஸ்வாமி ஸ்ரீமதழகியசிங்கரின் நினைவில் வந்தார். மறுநாள் அதே ஸ்வாமி ஸ்ரீமதழகியசிங்கரைத் தெண்டன் ஸமர்பிக்க நேரில் வந்தார். அப்போது ஸ்ரீமாலோலன், ஸ்ரீமதழகிய சிங்கர் அந்த ஸ்வாமி இவர்களுக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அந்த ஸ்வாமி தான் இன்று 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர்.
மடமென்றால் அகோபிலம் தான்;
மதமென்றால் வைணவம் தான்
தடமென்றால் வைதிகம் தான்;
தமிழென்றால் பிரபந்தம் தாள்
சடமென்றால் சடகோபன் தான்;
சால்புமிகு வடகலைக்கே
திடமென்றால் ஆசார்யன்தாள்
திடமாகப் பற்றுதல்தான்
இந்த மூன்று அழகிய சிங்கர்களையும் அடியேன் சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். ”அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே” என்பது போல
அழகிய சிங்கர் நாமம்
அருமறைச் சொல்லைப் போலே
பழகிய நாவிற்கென்றும்
பழுதுகள் வராதிங்கே !
- சுஜாதா தேசிகன்
12.12.2021
( கட்டுரையில் கவிதைகள் வாலி எழுதியவை,
படங்கள் இணையம் )
Comments
Post a Comment