Skip to main content

பாகவத திருப்பாவை - 8 ( போவான் போகின்றாரை )

 பாகவத திருப்பாவை - 8 ( போவான் போகின்றாரை ) கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல்காத்து*உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்** கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்*
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் 481/8

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள்  பனிப்புல் மேயச் செல்கின்றன 
போகின்ற பெண்களைத் தடுத்து நிறுத்தி 
உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல 
உன் வாசலில் வந்து காத்திருக்கிறோம்.
குதூகலமுடைய பெண்ணே! 
கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்ள எழுந்திரு! 
குதிரையாக வந்த கேசி அசுரனின் வாயைக் கிழித்து, 
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவனை சென்று நாம் சேவித்தால் 
நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான் !


’போவான் போகின்றாரை’ என்ற இந்தச் சொற்றொடரை நாம் கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம்.  


 ’போவான் போகின்றாரை’ என்பது போகிற அனுபவத்துக்காகவே போகிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.  


சுலபமாக புரிந்துகொள்ளத் திருமலை யாத்திரையை நினைத்துக்கொள்ளுங்கள். யாத்திரை செல்லும்போது காடுகளில், குரங்குகள், மான்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நீரோடைகளைக் கடந்து  படிகள் பல ஏறி, தள்ளிவிடாமல் தரிசனம் கிடைக்குமா ?  லட்டு எக்ஸ்டரா கிடைக்குமா ?  என்று பல விஷயங்கள் யோசித்தவாறே நடந்து சென்று  கடைசியாகப் பெருமாளை சில நொடிகளே சேவிக்கிறோம். 


திருமலைப் பயணமே பயனாக செல்லும் அனுபவமே மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இதைத் தான் ஆண்டாள் ‘போவான் போகின்றாரை’ என்று அழகாக கூறுகிறாள். 


‘கோதுகலம் உடைய பாவாய்’ என்ற பெண்ணை  ’ நீராடச் செல்லுவதையே பயனாக செல்லும் தோழிகளைக் கொஞ்சம் இருங்கள் என்று நிறுத்தி வைத்திருக்கிறேன்’ அதனால் நீ சீக்கிரம் எழுந்திரு! எங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாம்” என்று ஆண்டாள் கூப்பிடுவதாக அமைத்துள்ளது.


இதற்கு இன்னொரு உதாரணம் பார்க்காலம். கோயிலில் பெருமாளைச் சேவிக்க வரிசையில் சென்று கொண்டு இருப்போம். பெருமாள் சந்நிதி அருகில் வந்தவுடன் ஒரு சின்ன சுயநலம் நம்முள் எட்டிப் பார்க்க தொடங்கும், உடனே  முண்டி அடித்துக்கொண்டு முன்னே செல்ல அங்கே ‘க்யூவில் வாங்க’ என்று ஒரு சலசலப்பு ஏற்படும். 


ஆண்டாள் கண்ணன் அனுபவத்துக்கு முன்னே ’போவான் போகின்றாரை’ நிறுத்தி, இருங்கள் ’கோதுகலம் உடைய பாவாயும்’ நம்முடன் சேர்ந்து வரட்டும் ‘செய்யாதன செய்யோம்’  என்று முன்பு கூறிவிட்டு இப்போது நாம் மட்டும் தனியே முன் சென்று அனுபவித்தல் கூடாது, எல்லோரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதை இந்தப் பாசுரத்தில் கூறுகிறாள். 


அடுத்த முறை கூட்டமாகப் பெருமாளை சேவிக்க செல்லும்போது அல்லது உங்களுக்கு ஸ்பெஷலாகத் தனியே பிரசாதம் கவனிப்பு நடந்தால் அதை யாருக்கும் தெரியாமல் இலையில் மூடிக்கொண்டு எடுத்துவரும்போது இந்தப் பாசுரத்தை நினைத்துக்கொள்ளுங்கள்!


திருமலை யாத்திரை போலப் பாகவதத்தில் அக்ரூரர் கோகுல யாத்திரையைக் கூறலாம் ( 10.38.1 ) 


கம்சன் கண்ணனுக்குச் செய்த இன்னல்கள் பல. ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தோல்வி தான். கம்சன் மேலும் ஒரு திட்டம் தீட்டினான். அவனிடம் பணிபுரியும் அக்ரூரரை அழைத்து ( 10.37.38) “தனுர்யாகத்தைக் காணக் கண்ணையும் பலராமனையும் மதுராவிற்கு விரைவில் அழைத்து வாருங்கள்!” என்று ஒரு சதி திட்டம் தீட்டுகிறான். 


மிக்க அறிவு படைத்த அக்ரூரர் ( 10.38.1 ) கண்ணனை அழைத்து வர ரதத்தில் கோகுலம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் ( ஜருகண்டி, ஜருகண்டியில் தப்பித்து பெருமாள் சேவிக்க வேண்டும் என்பது போல் ) அவர் தாமரைக் கண்ணனிடம்  அன்புமயமான பக்தியில் மூழ்கி  அவனை நினைத்துக்கொள்கிறார். 


நான் என்ன புண்ணியம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ! சான்றோர்களுக்கு ஏதாவது தானம் கொடுத்தேனா ? ஏன் என்றால் இன்று கேசவனைக் காணப் போகிறேன் ! 


கீழ் ஜாதியில் பிறந்த எனக்கு வேதம் ஓதும் வாய்ப்பு கிடைக்காத போதும், மகான்கள் கொண்டாடும் பகவானின் தரிசனம் எளிதில் கிடைக்க போகிறதே!  யோகிகள் தியானிக்கும் அவன் திருவடிகளை வணங்கி என் பிறவிப் பயனை அடையப் போகிறேன். 


கம்சன் என்ற கொடியவன் இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறான். அவன் திருவடியை வணங்கி, என் அறியாமை இருளை கடக்க போகிறேன். 


அவனுடைய திருவடிகளைப் பிரம்மா, சிவன் முதலிய தேவர்களும், திருமகளும் முனிவர்களும், பக்தர்களும் பூஜித்துள்ளார்கள். கோபர்களுடன் மாடு மேய்க்கக் காட்டில் சுற்றி, கோபிகளின் ஸ்பரிசம் பட்ட அந்தத் திருவடியை நான் காணப் போகிறேன். 


வெளியே கொடிய கம்சனின் தூதுவன் ஆனால் உள்ளே கண்ணனின் அடிமை என் எண்ணத்தைக் கண்ணன் புரிந்துகொள்வான். என்னைப் பார்த்தவுடன் ‘அக்ரூரரே!” என்று கூப்பிடும் அந்த நேரத்துக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். 


இப்படி வழிநெடுக கண்ணனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே மனத்தால் முன்பே கோகுலம் வந்தடைந்த அக்ரூரர் உடலால் இப்போது வந்து சேர்ந்தார்!அங்கே கீழே கண்ணனின் திருவடி சுவடுகளைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி பொங்க, பரபரப்பு மிகுந்து, அன்பால் உடல் புல்லரிக்க, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, இவை பகவான் கண்ணனின் திருவடித்துகள்கள் அன்றோ! என்று அதன் மேல் விழுந்து புரண்டார். 


அங்கே கண்ணன் அவரை வரவேற்று “அன்புக்குரிய ஐயனே! வழிப் பயணம் நன்கு அமைந்ததா ?” என்று விசாரித்தான். 


அக்ரூரர் வந்த விஷயதை சொல்லி கண்ணையும் பலராமனையும் அழைத்துக் கொண்டு மதுராவிற்கு புறப்பட்டார். வழியில் யமுனையை அடைந்து, கைக்கால்களை சுத்தம் செய்து, தெளிந்த நீரில் நீராடினார். அடிக்கடி கண்ணனும் பலராமனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அஞ்சி ரதத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டார். 


அப்படி பயந்துகொண்டு  நீரினுள் முழுகியபோது, அங்கே தண்ணீருக்குள் கண்ணணையும் பலராமனையும் கண்டார். அந்த காட்சி  ( 10.39.46) தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது போல 


அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்


என்று அவனுடைய திருவடியைத் தலைவணங்கித் துதித்துக்கொண்டு இருக்க, ஆயிரம் தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் படுக்கையில் தெளிந்த முகம், அழகிய புன்சிரிப்பு, கருணைப் பார்வை, அழகிய புருவங்கள் என்று திருப்பாணாழ்வார் ’காட்டவே கண்ட’ சேவையை அக்ரூரர் சேவித்து கோதுகலமாக (குதூகலமாக) அவன் ஸ்வரூபத்தைக் கண்டு பரமானந்தத்தை அடைந்தார். 


அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் என்பதற்கு ஓர் அர்த்தம்  ’எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு ஆண்டாள்’ என்பதைப் போல அக்ரூரர் பயந்தார்! 


அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், அவன் ஆவாவென்று ஆராய்ந்து அருள் புரிவான்!


- சுஜாதா தேசிகன்
கீழ்வானம்  - 8
24.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments