Skip to main content

பாகவத திருப்பாவை - 3 ( செல்வம் )

பாகவத திருப்பாவை - 3 ( செல்வம் ) 



# ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள**
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் 476/3


மூன்று உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருவிக்ரமனின் 
நாமங்களைப் பாடி நாம் பாவை நோற்று நீராடினால்;
நாடெல்லாம் தீமை இல்லாமல் மாதம் மும்மாரி மழை பொழியும். (அதனால்)
ஓங்கி வளரும் செந்நெல் பயிர்களின் நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய குவளை பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க, அசையாமல் நின்று 
வள்ளல்களைப் போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க,
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.


’ஓங்கி உலகு அளந்த’ என்றவுடன் நமக்கு வாமன அவதாரம் நினைவுக்கு வந்து 


இந்திரனுக்காகக் குள்ள வடிவம் எடுத்துக் கூனிக்குறுகி தானம் வாங்கச் சென்று, ’மூவடி மண் தா’ என்று கேட்டு ஓரடியால் பூமி; மற்ற அடியால் வானம், மூன்றாம் அடிக்கு இடமில்லாது மகாபலியின் தலையில் வைத்தார்”


என்ற இந்த மூன்று அடி கதை நமக்கு நினைவுக்கு வரும். 


சுக்ராசார்யார் எவ்வளவு கூறியும் மகாபலி ”கொடுக்கிறேன்” என்ற தன் வாக்கை மீறவில்லை. அப்போது மகாபலி என்ன கூறினான் என்பதைப் பாகவதம் மிக விரிவாகக் கூறுகிறது. அதிலிருந்து சில பகுதிகள். 


குள்ளமான வாமனத் திருமேனியுடன் பிரம்மச்சாரியாக நாடக நடிகன் தன் வேடம் மாற்றி வெளித்தோன்றுவது போலிருந்தது அக்காட்சி ( 8.18.12). 


வாமனன் வேள்வி நடக்கும் இடத்துக்கு வர, (8.18.26,27,28) அவருடைய வரவை ‘நல்வரவு என்று கொண்டாடி, திருவடிகளை நன்னீர் கொண்டு தூய்மைப்படுத்தி முறைப்படி பூசித்தான். பகவானது திருவடிகளை அலம்பிய அந்த ஸ்ரீபாத தீர்த்தம் அனைத்து மங்களங்களையும் ஒருங்கே நல்குவது. பாவத்தையும், தாபத்தையும் போக்கவல்லது. தேவதேவனான பரமசிவன் மிகுந்த பக்தியோடு அந்த நீரைத் தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். இன்று அந்தப் புண்ணிய நீர், தர்மத்தின் உண்மையறிந்த பலிக்குக் கிடைத்தது. அவன் மிகுந்த பக்தியோடு காதலாகிக் கசிந்த அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை தன் தலையில் தெளித்துக் கொண்டான்” 


மகாபலி ”குழந்தாய் எது வேண்டும்? என்று ஒரு பெரிய பட்டியலைக் கூறி, என்னிடம் யாசித்தவன் மறுபடி பிறரிடம் சென்று யாசிக்கக் கூடாது அதனால் தேவையான எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக்கொள் என்கிறான். 

அதற்கு வாமன மூர்த்தி “உண்மையறிந்த அறிவாளி தனக்கு எது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் யாசகமாகக் கேட்டுப் பெற வேண்டும். அப்பொழுதுதான் யாசகம் வாங்கும் பாவத்திலிருந்து தப்ப முடியும்”(8.19.17) என்று எனக்குத் தேவை மூன்று அடி மண்ணை மட்டும் கொடு போதும். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு செல்வம் தான் சேமிக்க வேண்டும் அது தான் இன்பத்தை அளிக்கும் ( 8.19.27 ) 


அப்போது சுக்ராசார்யார் மகாபலியை எச்சரிக்கிறார். இவன் வாமன மூர்த்தியாக வந்திருக்கும் ஸ்ரீமந்நாராயணன். இவனால் உனக்குத் துன்பம் வரப் போகிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளப் போகிறார். வாக்களித்தவாறு தானம் கொடுக்க முடியாமல் போனால் உனக்கு நரகம் தான் கிடைக்கும். மரம் இருந்தால் தான் பூவும் பழமும். அந்த மரத்தின் ஆணிவேர் இல்லை என்றால் பூவும், பழமும் இல்லை. அதுபோல நீ இல்லை என்றால் பிறகு தானமும் தர்மமும் இல்லை! என்கிறார். 


அதற்கு மகாபலி கூறும் பதில்கள் மிக முக்கியமானவை: 


பொய்யைக் காட்டிலும் வேறு அதர்மம் இல்லை. வஞ்சனை நோக்குடன் பொய் கூறுபவனைத் தவிர மற்ற அனைத்தையும் என்னால் தாங்க முடியும் என நினைக்கிறேன் என்று பூமிப்பிராட்டி கூறியிருக்கிறாள். நரகம் கிடைத்துவிடுமே, ஏழ்மை வந்துவிடுமே, துன்பம் நேர்ந்துவிடுமே, அரச பதவி பறிபோகுமே, அல்லது மரணம் நேருமே என்று எதற்கும் பயப்படவில்லை. பொய் கூறுவதற்குத் தான் பயப்படுகிறேன். செல்வம் இறந்தபின் அவனை விட்டுவிடத்தான் போகிறது. ஓர் அந்தணனை மகிழ்விக்க முடியாத செல்வம் இருந்து என்ன பயன் ? ( 8.20.4, 5, 6 ) 


என்று கூறிய மகாபலி வாமன மூர்த்தியின் திருவடிகளைக் கழுவி, அகில உலகங்களையும் தூய்மையாக்கும் வல்லமை பொருந்திய அந்தப் பாதத்தீர்த்தத்தை தன் தலையிலும் தன் மனைவி தலையிலும் தெளித்துக்கொண்டான் ( 8.20.18 ) 


எல்லா ஐசுவரியங்களையும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவரான ஸ்ரீமந்நாராயணன் விஸ்வரூபம் எடுக்க அகில உலகங்களையும் கண்டான் மகாபலி. 


மூன்றாவது அடி நிலம் தர முடியாமல், “நமது மரியாதைக்குரிய சான்றோர்கள் அளிக்கும் தண்டனை, வாழ்க்கைக்கு மிகமிக உகந்தது என்பது என் கருத்து. ஏன் என்றால் அம்மாதிரியான தண்டனையைத் தாய் தந்தை, உடன் பிறந்தவர்களோ, நண்பர்களோ தப்பித்தவறிகூட தரமாட்டார்கள். செருக்கில் இருந்த எங்களிடம் செல்வத்தைப் பறித்து, கண்களைத் திறந்தீர்கள். (8.22. 5 ) 


கடைசியாக வானமமூர்த்தி கூறும் அட்வைஸ் -  ”இந்த மனிதப்பிறவி பெற்றும், நற்குடி பிறப்பு, நற்செயல், இளமை, அழகு, சிறந்த கல்வி, பெருஞ்செல்வம், ஆகியன நிறைந்து அவற்றால் அவன் செருக்கடையாமல் இருபானேயானால், அது தான் ’எனதருள்’ என்கிறார். ( 8.23.26)


ஆண்டாள் இதைத் தான் ’நீங்காத செல்வம் நிறைந்து’ என்று கூறுகிறாள். 


பிறரை வியப்பில் ஆழ்த்தும் வாமன திரு அவதாரச் சரித்திரத்தைக் கேட்பவன் உயர்ந்த கதியைப் பெறுகிறான் என்று ஸ்ரீசுகர் பரீக்ஷித் மன்னனுக்கு  சொல்லுகிறார். அதனால் தான் ஆண்டாள் தன் திருப்பாவையில் மூன்று இடத்தில் வாமன அவதாரத்தைக் குறிப்பிடுகிறாள் போலும்!. 


பலியின் செல்வத்தைக் கவர்வதன் மூலம் ‘யான் எனது’ என்ற மமதையை ஓங்கி உலக அளந்ததன் மூலம்  அழித்து, 

பலியின் உடலைத் தன் திருவடியால் அளப்பதன் மூலம் அவனது அகங்காரத்தை நசுக்கி  அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்து பரம அனுக்கிரகத்தைச் செய்து, 

இவனைப் போன்ற சத்தியச் சந்தன் வேறு ஒருவரும் இல்லை என்ற  புகழைப்  பரப்பி  அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி !


- சுஜாதா தேசிகன்

ஒங்கி - 3 

18.12.2021

படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments