Skip to main content

பாகவத திருப்பாவை - 12 ( நற் செல்வன் )

 பாகவத திருப்பாவை - 12 ( நற் செல்வன் ) 


கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலை வழியே நின்று பால் சோர*
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!*
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி**
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற*
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்*
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!*
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் 485/12

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி 
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்க, 
இதனால் வீடு முழுவதும் சேறாகியிருக்கும் 
நற் செல்வனின் தங்கையே!
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் 
உன் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனை வென்ற மனதுக்கு இனியனான 
இராமனைப் புகழ்ந்து பாடுகிறோம் 
நீ வாய் திறவாமல் தூங்குவதை எல்லோர்
வீட்டினரும் அறிந்து விட்டார்கள் !

ஆண்டாள் ‘நற்செல்வனுடைய தங்கை’  என்கிறாள் ஆண்டாள். யார் இந்த நற்செல்வன் ?  கண்ணனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்க்கும் முன் முதல் இரண்டு வரிகளை நாம் அனுபவிக்கலாம் 

கன்றைப் பிரிந்த எருமை, தன் கன்றை நினைத்துக் கனைத்து அந்த நினைப்பால் தனது காம்புகளிலிருந்து விடாது பாலைப் பொழிகிறது. 

இது ஏதோ கவிதை நயத்துக்கு ஆண்டாள் கற்பனையாக எழுதியது என்று நினைக்க வேண்டாம். பாகவதத்தில் (10.13.1-32) பிரம்மா கண்ணனிடம் சரணாகதி அடைந்த கதை உங்களுக்குத் தெரிந்தது தான். இருந்தாலும் சுருக்கமாக இங்கே தருகிறேன். 

ஒரு நாள் யமுனை ஆற்றின் நடுவில் சிரிய திட்டின் மேல் கண்ணன் & நண்பர்களும்  லஞ்ச் - தயிர் சாதம் + ஊறுகாயை ஆனந்தமாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க,  கன்றுகள் ஆற்றின் நீரைப் பருகிவிட்டு, மெல்லப் புல் மேயச் சென்றன. கண்ணனுடன் ஜாலியாக பேசிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்த தோழர்கள் திடீர் என்று புல் மேய்த்துக்கொண்டு இருந்த கன்றுகளைக் காணாமல் திடுக்கிட்டார்கள்.  அவை  எங்கோ சென்றுவிட்டது என்று அஞ்சினார்கள். 

கண்ணன் “நண்பர்களே! பயப்படாதீர்கள். நீங்கள் நிம்மதியாக சாப்பிடுங்கள். நானே கன்றுகளைத் தேடி இங்கே அழைத்து வருகிறேன்!” என்று கண்ணன் கன்றுகளைத் தேடிச் சென்றான். 

பல இடங்களில் தேடியும் கன்றுகள் கிடைக்கவில்லை. திரும்ப வந்த போது யமுனை ஆற்றின் திட்டில் தன் நண்பர்களையும் காணவில்லை. ’இது பிரம்மாவின் தந்திரச் செயல்’ என்று கண்ணன் உணர்ந்தான். 

கன்றுகளைக் காணாமல் பசுக்களும், தங்கள் குழந்தைகளைக் காணாமல் கோபியர்களும் வருத்தப்படுவார்கள் என்று எண்ணிய கண்ணன், தானே கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் ஆனார். 

அவனே அவனு மவனுமவனும் 
அவனே மற்றெல்லாமு மறிந்தனமே 

என்று நம்மாழ்வார் கூறுவது போல, நெருப்பு எப்படிப் பொருள்கள் அனைத்திலும் புகுந்து அந்தந்தப் பொருளின் உருவத்துக்கு ஏற்றவாறு மாறுகிறதோ அதே போலக் கண்ணன் உயிர்கள் அனைத்திலும் அந்தராத்மாவாக தன்னை அமைத்துக்கொண்டான். 

’இவ்வுலகமனைத்தும் விஷ்ணுமயம்’ என்று எல்லாமும் ஆன கண்ணன் தானே சிறுவர்களாகவும், பசுக்களாகவும் கோகுலத்தில் நுழைந்தார். 

இடைச்சிறுவர்களை கண்ட தாய்மார்கள் தழுவிக்கொண்டார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து, நீராட்டி, சந்தனம் பூசி, திருஷ்டிக்குச் சுற்றிப் போட்டுச் சீராட்டி மகிழ்ந்தார்கள். 

பசுக்களும் விரைந்து கொட்டில்களைச் சென்றடைந்து, கன்றுகளை அழைத்து மடியிலிருந்து பாலை சுரக்க செய்து, நாக்கால் நக்கித் தடவிக் கொடுத்தன. 

இப்படியே ஓராண்டுக் காலம் கண்ணன் தன் லீலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் கண்ணன் பலராமனுடன் கன்றுகளை மேய்த்துக் கொண்டு காட்டிற்குச் சென்றார். 

கோவர்த்தன மலை மீது மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் , அங்கிருந்து தூரத்தில் கோகுலத்தில் தங்கள் கன்றுகளைக் கண்டன, அவ்வாறு கண்டதும் அந்தப் பசுக்களின் கூட்டம் அன்பின் மிகுதியால் தன்னை மறந்து வேகத்துடன் மான்கள் போலப் பாய்ந்து சென்றன. கன்றுகளிடம் சென்று அவற்றை நக்கிக் கொண்டு மடியின் பாலை பருகச் செய்தன.  தாயன்பின் மிகுதியால் பால் எங்கும் பீச்சி அடிக்க, பால் வெள்ளமாக எங்கும் பரவி அந்த இடமே சேறாக காட்சி அளித்தது. 

இதைத் தான் ஆண்டாள் 

கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலை வழியே நின்று பால் சோர*
நனைத்து இல்லம் சேறாக்கும்

என்று கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

யார் அந்தச் செல்வன்?

(10.22.30-32) கடும் கோடையில் வெய்யிலுக்குக் குடை பிடித்தாற்போல இருக்கும் மரங்களைக் கண்ட கண்ணன் தன் தோழர்களை அழைத்து இந்த மரங்களின் பெரிய மனதைப் பாருங்கள். காற்று, மழை, பனியைத் தான் பொறுத்துக்கொண்டு நம்மை அவற்றிலிருந்து காத்து, பிறருக்கென்றே வாழ்கிறது என்கிறார். 

தோழர்களை அழைக்கும் போது பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார் :

 ”ஏய் குட்டி கிருஷ்ணா !
அன்சோ
ஸ்ரீதாமா
அர்ஜுனா
விசாலா
ருஷ்பா
தேஜஸ்வி
தேவபிரஸித்தா 
வரூதபா
என்கிறார். 

இந்தப் பட்டியலில் நற்செல்வன் இல்லை. ஆண்டாளுக்கு மட்டும் தெரிந்த அந்த அந்தரங்க நண்பன்  நற்செல்வன் யார் ? இதற்கு பெரியாழ்வார் திருமொழியில் விடை இருக்கிறது. 

சுரிகையும் தெறி-வில்லும் செண்டு கோலும்*
 மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட*
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி*
 ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்**
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*
 மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள்,*
 அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே 256/3.4.3

சாயங்காலம் ஆகிவிட்டது, சீக்கிரம் வா, மாடு மேய்த்துவிட்டு வரும் (உன் அழுக்கான) அலங்காரத்தைப் பார்க்க வேண்டும் என்று கண்ணனை அழைக்கிறார் பெரியாழ்வார். 

இடிப்பில் பிச்சுவா கத்தி, ’கட்டாபுல்ட்’ (தெறிவில் - சுண்டுவில்)ஒன்றையும், மாடுகளை ஓட்டச் சாட்டையும்(செண்டு)  வைத்துக்கொண்டு கண்ணன் ஓடி வரக் காற்றில் மேலாடை கீழே விழ அதை அவன் தோழர்கள் எடுத்துக்கொண்டு அவன் பின் தொடர அப்போது ஓர் உயிர்த்தோழனுடைய தோளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் பசுக்கள் திரும்ப வருகிறது என்பதைத் தெரியப்படுத்தச் சங்கை ஊத அதைக் கேட்ட பசுக்கள் துள்ளி ஓட…இந்தச் சமயத்தில் 

தோளோடு தோளாக கண்ணனைத்  தாங்குபவன் தான் இந்தச் செல்வன். அந்தரங்கக் கைங்கரியம் செய்வதால் அவனை ‘நற் செல்வன்’  என்கிறாள் ஆண்டாள். 

இந்தச் செல்வன் பற்றி பாகவத்தில் இல்லையே ? நாரதர், சுகர் போன்றவர்களுக்குக் கூடத் தெரியாதது ஆழ்வார்களுக்கு எப்படித் தெரிந்தது ? 

அணில்கள் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை ஆனால் அது தொண்டரடிப்பொடி ஆழ்வார் தெரிந்திருக்கிறது! 

பாகவதம் என்ற அக்கார அடிசிலுடன் திருப்பாவை என்ற எக்ஸ்ட்ரா நெய்யுடன் மூட நெய் பெய்து முழங்கை வழிவார அனுபவிக்கலாம்! 

- சுஜாதா தேசிகன்
கனைத்து - 12
30.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments