Skip to main content

2021 திரும்பி பார்க்கிறேன் !

2021 திரும்பி பார்க்கிறேன் !

2021 மற்ற வருடங்கள்போல இப்ப தான் ஆரம்பித்தது அதற்குள் முடிந்துவிட்டது.  சில நினைவுகள். 

உருப்படியான விஷயம் :

பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் வெளியிட்டது .  மணக்கால் நம்பி திருநட்சத்திரம் அன்று அறிவிப்பு செய்து, பங்குனி உத்திரம் அன்று அச்சுக்குச் சென்று, உடையவர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டது. 1300 புத்தகம் முழுவதும் தீர்ந்து, கொரோனா இரண்டாம் அலையின்போது அனுப்பப்பட்டப் புத்தகம் மொத்தம் 1008(!). பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அடுத்த வருடம்(2022) அதன் இரண்டாம் பதிப்பு கொண்டு வரப் பெருமாள் அருள் புரிய வேண்டும். வேலைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது. 



எழுத்துப் படிப்பு : 

கல்கி கடைசிப் பக்கம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பல கடைசிப் பக்கம் இரவு 12 மணிக்கு டெட்லைனுக்குள் கடைசியாக அனுப்புகிறேன். 

தினம் ஒரு பாசுரம் எழுதத் தொடங்கி, கூட்ஸ் வண்டிபோல நடுநடுவே நிறுத்திவிட்டுத் தொடர்கிறேன். 

எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க வில்லை. ஏ.கே.செட்டியார் முழுத் தொகுப்பு, கல்கி ஆசிரியர் அன்புடன் கொடுத்த முகம் ( சிறுகதை தொகுப்பு ), கடைசிக் கோடு படித்தேன். 

சினிமா : 

பல வேற்று மொழிப் படங்கள் பலவற்றைப் பார்த்தேன். மற்ற சினிமாவைக் காட்டிலும், தமிழ் சினிமா வேறுபடுகிறது. கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கெடுக்கப்படுகிறது.  தமிழ் சினிமா உலகத்தில் நடக்கும் பாலடிக்ஸ் சினிமாவை விடச் சுவாரசியமாக இருக்கிறது. எல்லா விமர்சனங்களும் - வேற லெவல் - வெறித்தனம் - தெறிக்கவிட்டார் - செம்ம மாஸ் என்பதில் அடங்கிவிடுகிறது. 


அடிக்கடி சானிடைசர் தடவிக்கொள்வது போலப் பல படங்களை ஓ.டி.டியில் பார்த்தேன். Nayattu, Home போன்ற மலையாளப் படங்களில் நினைவில் இருக்கிறது. ஜெய் பீம் படத்தில் எங்கு எல்லாம் நாட்காட்டி இருக்கிறது என்று வந்த செய்திகள் அப்படத்தைத் தக்காளி விலைபோல உயர்த்தியது.  ஒ.டி.டியில் சப்-டைட்டில், டப்பிங்கிற்கு பெரிய சந்தை ஒன்று உருவாகியிருக்கிறது. 

எப்போது மழை வரும் என்று வானிலை அறிக்கை பார்த்துக் கவலைப்பட்ட அதே மக்கள் மாநாடு வெளியீடு ஆகுமா என்றும் காலை நான்கு மணிக்குக் கவலைப்பட்டார்கள்.  இந்த வருடம் கஷ்டப்பட்டுப் பார்த்த படம் அண்ணாத்தே. கஷ்டப்படாமல் பார்த்த படம் மாநாடு.  வெப் சீரிஸ் பல நன்றாக இருக்கிறது ( கெட்ட வார்த்தை, கெட்ட காரியங்கள் பல சர்வசாதாரணமாக வருகிறது அதனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது! ). மணி ஹெய்ஸ்ட் டிராமா பல சீசன் கடந்து ரஜினியின் அரசியல் போல முடிவுக்கு வந்தது. 


எந்த யூடியூப் சேனல் சென்றாலும் லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்கள் என்கிறார்கள். Rithu Rocks, village cooking channel ( சைவம் மட்டும் ) பார்க்கிறேன். எல்லாத் தமிழ் செய்தி சேனலும் ஒன்று இடது அல்லது வலமாக இருக்கிறது. செய்திகளுக்கு பொதிகை மட்டுமே பார்க்கிறேன். 

சினிமா சம்பந்தம் இல்லாத பல பாடல்கள் டிரெண்டிங் ஆனது. உதாரணம் Enjoy Enjaami. மாநாடு எடிட்டிங் போலச் செய்த Enjoy Enjaami Moana Version கவர்ந்தது. 

துயரம்

பழைய ‘சபாபதி’ படத்தைப் பார்க்க ஆவல் என்று ஜனவரியில் எழுதியிருந்தேன். சில வரங்களில் Namperuman Raghavan என்ற முகநூல் நண்பர் எங்கோ ஒரு சிடி வாங்கி எனக்குக் கொரியரில் அனுப்பினார். பிறகு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுப் பிரிந்தார் என்பது வேதனையாக இருந்தது. இந்த வருடம் முழுவதும் முக நூலைத் திறந்தால் தெரிந்தவர்கள் மறைந்துகொண்டே இருந்தார்கள். 

பொது

தடுப்பு ஊசி பயம் விலகிப் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். மழைக்கு காகிதக் கப்பல் விட்ட காலம் போய், அண்ணாமலை நிஜக் கப்பலில் சென்றார். எப்போது வெளியே சென்றாலும் நிச்சயம் swiggy, zomoto வண்டிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டு தொலைப்பேசி அழைப்பு வந்தால் அதில் ஒன்று 'பஜாஜ் ஃபினான்ஸ்’  லோன் எடுத்துக்கோங்க என்று படுத்துகிறார்கள். சில நாட்கள் முன் இவர்கள் கால் செய்த போது, சித் ஸ்ரீராம் போல உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் பாடிக் காண்பித்தேன் இதுவரை அவர்களிடமிருந்து கால் வரவில்லை.

விரும்பி பார்த்தவை : 

தினமும் திரு கேஷவ் ஓவியங்களும், நண்பர் எதிராஜன் அவர்களின் புகைப்படங்களும். 

சிறந்த அனுபவம் : 

வருடக் கடைசியில் சென்னை விஜயத்தின்போது திருகடல் மல்லை பூதத்தாழ்வார் அவதாரத் தலமான ஸ்தல சயனப்பெருமாள் கோயிலுக்குச் சென்றேன். பூதத்தாழ்வார் அவதார இடத்தைப் சேவிக்க வேண்டும் என்று விரும்பியபோது “நான் அழைத்துச் செல்கிறேன்” என்று ஒருவர் வந்தார். முழு இடத்தையும் சுற்றிக் காண்பித்தார்.  

”---------- பெயர் காண்டீபன்.மீனவ வகுப்பைச் சேர்ந்தவன். மீன் பிடிப்பது எங்க தொழில். ------ ஸ்ரீபாத தாங்கி. இந்த தோளில் ஆழ்வாரை தாங்கிச் செல்வேன். மாசி மாதம் ஆழ்வார் எங்க இடத்துக்கு வருவார். 

---------- கோயிலுக்கு வரும் போது கைலி எல்லாம் கட்ட மாட்டேன்.  எங்களுக்கு எல்லாமே ஆழ்வார் தான் என்று அவர் பேசிய போது  -------- இடத்தில்  உபயோகித்த வார்த்தை ”அடியேன்!” 

அவரையும் வணங்கிவிட்டு வந்தேன். 

கடைசியாக : 

வருடக் கடைசியில் அன்னபூர்ணி troll ஆகி அடுத்த வருடம்   ஓமிக்ரோனுடன் வலிமை, பீஸ்ட்  ட்ரெண்டாகி எல்லோரும் பிஸியாக இருக்க போகிறார்கள் என்று நினைக்கிறேன்.  

எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  

- சுஜாதா தேசிகன்
31.12.2021 


Comments