Skip to main content

பாகவத திருப்பாவை - அவதாரிகை

பாகவத திருப்பாவை - அவதாரிகை


கடந்த பல வருடங்களாக மார்கழி மாதம் திருப்பாவைக்கு ஆண்டாளின் ஆசியுடன் ஏதாவது ஒரு ’தீம்’ல் அடியேன் எழுதிக்கொண்டு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தினமும் எழுத வேண்டும் என்று தொடங்கி எப்படியாவது திருவாடிப்பூரத்துக்கு முன் முடித்துவிடுவேன். 

சென்ற வருடங்களில் ஸ்ரீமத் ராமாயணம், திருக்குறள்  என்ற வரிசையில் இந்த வருடம் ஸ்ரீமத் பாகவதமும் திருப்பாவையும் சேர்ந்து ’பாகவத திருப்பாவை’ என்று அனுபவிக்கலாம் என்று எண்ணம். 

ஜனகருக்கு சீதை கிடைத்தது போல, பெரியாழ்வாருக்கு அவருடைய நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் கோதை என்ற ஆண்டாள் கிடைத்தாள். 

பாகவதத்தில்  ( 3.10.19 ) ஒரு ஸ்லோகத்தில் ”பகவான் மிக்க விருப்பத்துடன் துளசி மாலைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். அதன் நறுமணத்தையே முகர்ந்து மகிழ்கிறார்” என்பதிலிருந்து துளசியின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

இன்னொரு இடத்தில்  ( 10.29.37 ) கண்ணனிடம் கோபிகைகள். 

“லக்ஷ்மியின் கடைக்கண் பார்வையைப் பெற எல்லாத் தேவர்களும் தவம் கிடக்கின்றனர். அந்த லக்ஷ்மி உன் மார்பில் இடம் பெற்ற பின்னரும் பக்தர்கள் வணங்கும் உமது திருவடித்துகளை துளசி தேவியுடன் பெற விரும்புகிறாள். அதே போன்று நாங்களும் உன் திருவடித்தூசியை அடைய வந்துள்ளோம்” என்கிறார்கள். 

பெரியாழ்வார் கண்ணன் கதைகளை ஊட்டி ஆண்டாளை வளர்க்க, அவளும் தன்னை ஒரு கோபிகையாகவே பாவித்து மிக உயர்ந்த பக்தி செய்து அதை நமக்கும் திருப்பாவையாகக் கொடுத்திருக்கிறாள். 

ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் குரவைக் கூத்துக்கும் ( ராசக்ரீடை ) பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. நாச்சியார் திருமொழிக்கு அதுவே base என்று கூடச் சொல்ல தோன்றுகிறது. 

பக்தி, ஞானம், வைராக்கியம் மூலம் அடையப்படும் பெருமாளைப் பற்றிய அறிவை எவ்வாறு பெறலாம் ? பகவானுடைய அடியவர்களைச் சம்சார மயக்கத்திலிருந்து எவ்வாறு தங்களைக் காத்துக்கொள்ளலாம் என்று வேதவியாசர் சுகருக்கு உபதேசித்த பாகவதம்  தான் கோரமான கலியுகத்தில் பக்தியே  சிறந்த வழி என்ற கூறும் பாகவதத்தின் சாரமே திருப்பாவையோ என்று கூடத் தோன்றுகிறது. 

பாகவதத்தில் ’பக்தி’யின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பக்தி என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் - ஞானம், வைராக்கியம். பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க, அதற்குப் பக்தி கூறிய பதில் இது. 

“நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன். பிறகு அங்கிருந்து மகாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது.  கூடவே வந்த  ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் கரையை அடைந்து, பிருந்தாவனம் வந்தடைந்தபோது கண்ணன் விளையாடிய இடங்களின்  ஸ்பரிசம் பட்டவுடன் எனக்கு இளமை திரும்பியது. ஆனால் ஞானம் வைராக்கியத்துக்கு இளமை திரும்பவில்லை, அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் தான் அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்!” என்றாள். 

இதைக் கேட்ட நாரதர் வேதம், உபநிஷம், பகவத்கீதை ஆகிய மூன்றையும்  அவர்களுடைய காதுகளில் பல முறை ஓதினார். ஆனால் பயன் இல்லை. பிறகு அவருக்குச் சனத்குமாரர்கள் ஓர் உபாயத்தைக் கூறினர். அது ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டால் அவர்களுக்கு இளமை திரும்பிவிடும் என்று சொல்ல அதன்படி அவர்களுக்கு இளமை திரும்பியது. 

பக்தி, ஞானம், வைராக்கியம் என்று மூன்று சொற்களைப் பார்த்தோம்.  ஒரு பொருளின் மீது அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி. அந்தப் பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம்.அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம். இங்கே பொருள் என்பது பெருமாள். 

பாகவதம் கேட்பதால் முதலில் பக்தி ஏற்பட்டு ஞானம் வைராக்கியம் கூடவே வந்துவிடும்.

பாகவதத்தில் கூறப்பட்ட கதைகள் அனைத்தும் ( 1.2.67 ) வேதம் உபநிஷத்தின் சாரத்தை அதனுள் கொண்டவை. மரத்தின் ரசம் வேர் முதல் நுனிக்கிளை வரை பரவியிருந்தாலும் அதன் சுவையை நாம் பழத்தில் தான் அனுபவிக்க முடியும். பாகவதம் பழம் போல். ஸ்ரீமத் பாகவதம் முழுக்க முழுக்க வேதத்தின் சாரம் ( 1.2.70 ) 

அந்த  வேதம் அனைத்துக்கும் வித்து திருப்பாவை. அதை நாளையிலிருந்து அனுபவிக்கலாம். 

- சுஜாதா தேசிகன்
15.12.2021
படங்கள் : உதவி திரு கேஷவ் 


Comments