பாகவத திருப்பாவை - 7 ( மத்தினால் ஒசை )
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்* கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே*
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து*
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்** மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?*
தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் 480/7
கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்கவில்லையா? பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை கேசவனை பாடுகிறோம்.
அதை கேட்டும் படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே! கதவைத் திறப்பாயாக!
பால், தயிர், வெண்ணெய் என்றால் உடனே நமக்குக் கண்ணன் நினைவு வந்து, கண்ணனை உரலில் கட்டுண்டது நினைவுக்கு வரும். எல்லா ஆழ்வார்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டாள் ‘தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை’ என்று ஐந்தாம் பாசுரத்தில் குறிப்பிடுகிறாள்.
கண்ணன் கீதையை உபதேசித்திருந்தாலும், கண்ணனின் இந்த வெண்ணெய் திருட்டு படலத்தைக் கீதையை விட ஆழ்வார்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காகக் காரணம் ஸ்ரீமத் பாகவதத்தில் குந்தியின் துதியில் ஒரு பகுதியில் இருக்கிறது.
கண்ணன் உத்தரையின் கர்ப்பத்தைப் பிரம்மாஸ்திரத்திலிருந்து காத்து துவாரகைக்குப் புறப்படும் சமயம், குந்தி தேவி கண்ணணை வணங்கும் இடம் தான் குந்தி துதி.( 1.8.18 ) அதில் முக்கியமான பகுதி (1.8.20 )
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம:
என்ற பிரபலமான ஸ்லோகம் அதில் வருகிறது.
உன் உண்மை ஸ்வரூபத்தை நாங்கள் காணமுடியவில்லையே என்பதற்காக நாங்கள் உன்னை விடமாட்டோம். உனது நாமத்தைக் கூறிக் கொண்டே தான் இருப்போம்.
ஸ்ரீ கிருஷ்ணா! தேவகி நந்தனா ! நந்தகோப குமாரா ! கோவிந்தா! உனக்கு வணக்கம் ! மீண்டும் மீண்டும் வணக்கம் !
என்கிறது இந்த ஸ்லோகம்
இது ஒரு சாதாரண ஸ்லோகம் இல்லை, இதில் reading between the lines என்று அதில் சொல்லப் பட்ட வரிசையைச் சற்று பார்க்கலாம்.
”ஸ்ரீ கிருஷ்ணா! தேவகி நந்தனா !” - கண்ணனைப் பெற்ற தேவகியும் வசுதேவரும் பாக்கியவான்கள்;
”நந்தகோப குமாரா ”! - நீ பிறந்த உடனேயே கம்சனிடமிருந்து காக்க கோகுலத்தில் ’நந்தகோபன் குமரன்’னாக வளர்ந்தாய் அதை அனுபவித்த நந்தகோபன் வசுதேவனை விட பாக்கியசாலி.
”கோவிந்தா!” - ஆயர்பாடியில் ’கோவிந்தா! கோவிந்தா!’ என்று உன்னைக் கூப்பிட்டு உன்னோடு சரிக்குச் சமமாக முதுகைக் குனிந்து உன்னோடு விளையாடிய இடையர்களும், உன் திருமேனியை நக்கிய மாடுகளும் அவர்களை விடப் பாக்கியசாலிகள் என்று சொன்ன குந்திக்குத் தனக்கு கிருஷ்ணன் செய்த உபகாரங்கள் நினைவுக்கு வருகிறது.
துரியோதனன் செய்த சூழ்ச்சிகள், கொலை முயற்சிகளிலிருந்து பாண்டவர்களைக் காத்தாய், பாரதப் போரில் பீஷ்மர், துரோணர் அஸ்திரங்களிலிருந்து காத்தாய். இப்போது அசுவத்தாமானின் பிரும்மாஸ்திரத்திலிருந்து காத்தாய் ( 1.8. 25 ) என் மருமகள் திரௌபதி ‘கோவிந்தா!’ என்று கூப்பிட அவள் மானம் காக்க அவள் எதிரில் புடவையுடன் வந்து நின்றாய் ! ( 1.8.23, 24 )
அடிக்கடி இன்னல்கள் வந்ததால் தான் உன் நினைவும் அடிக்கடி வந்தது.
விபத்து வந்தால் உன் நினைவு வரும், சம்பத்து வந்தால் உன் திருநாமங்களை மறந்துவிடுவோம். அதனால் அதிகத் துன்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கட்டும் ( 1.8.25, 26 ) என்று குந்தி வேண்டிக்கொள்கிறாள்.
இப்படிப் பாக்கியசாலிகளை அடுக்கிக்கொண்டு வந்த குந்தி இவர்கள் எல்லோரைக் காட்டிலும் பெரும் பாக்கியசாலியாக யசோதையைப் போற்றுகிறாள். யசோதைக்குப் பிறகு வேறு யாரையும் சொல்லவில்லை. (1.8.31)
ஸ்ரீகிருஷ்ணா! நீ குழந்தையாக இருந்தபோது தயிர் சட்டியை உடைத்த தவற்றுக்காக உன்னைக் கட்டிப்போட நினைத்து யசோதை கயிறு கொண்டு வந்தாள். அதைக் கண்ட நீ பயந்தவன் போலக் கண்களில் நீரைப் பெருக்கினாய். அதில் உன் கண்மை கரைந்து வழிந்தது. அப்போது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மிரள மிரள நீ பார்த்த அழகு உண்டே! ஆகா அதை நினைத்தால் என் மனம் மிகவும் மயங்குகிறது! ஒன்றுமே புரியவில்லையே உன்னைக் கண்டு எமக்குப் பயமே. ஆனால் உனக்கு எப்படிப்பா பயம் ஏற்பட்டது ? (1.8.31 )
கண்ணனுக்குப் பயம் எப்படி ஏற்பட்டது ?
பல அவதாரங்கள் செய்த பகவான் எதிலும் பயப்படவில்லை. அதனால் யசோதை அதட்டியபோது கண்ணனுக்குப் பயப்படத் தெரியவில்லை. கண்ணன் என்ன செய்யப் போகிறான் என்று ஆவலுடன் தேவர்களும், நித்தியச் சூரிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, மூலையில் ’பய தேவதை’ ஒளிந்துகொண்டு எட்டிப் பார்க்க, கண்ணன் “ஏ பயமே இங்கே வா! என் முகத்தில் கொஞ்சம் பயத்தைத் தீட்டு” என்று கூப்பிட பயம் “கண்ணா உன்னிடமும் வரமாட்டேன், உன் அடியார்களிடத்திலும் வரமாட்டேன்” என்று பயம் பயந்துகொண்டு ஓடியது. பயம் பயந்து கொண்டு ஓடியதைக் கண்ட கண்ணன் “ஓ இதுதான் பயமா ?” என்று பயத்தின் முகபாவனையைத் தன் முகத்தில் காட்டி நின்றான்.
பிரம்மானந்தம் என்பதற்கு எல்லை இல்லை என்பார்கள். முனிவர்களும் யோகிகளும் கூட அதை முழுமையாக அனுபவிக்கவில்லை. ஆனால் நீ பயந்த போது பிரமானந்தத்தை முழுமையாக யசோதை பார்த்து அனுபவித்துவிட்டாள் !
இதைக் குலசேகர ஆழ்வார்
’அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்’ அந்த அழகை யசோதை ‘இன்பத்து இறுதி (எல்லையை) கண்டாளே’ என்று கொண்டாடுகிறார்.
முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே
நம்மாழ்வார் இந்த நிகழ்வை நினைத்து ஆறு மாதக் காலம் பேச்சு மூச்சு இல்லாமல் நினைவு இழந்து கிடந்தார். நம்மாழ்வார் மோகித்த இந்தப் படலத்தை நினைவு கொண்டு தான் மதுரகவி ஆழ்வார் “கண்ணி நுண் சிறுத்தாப்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்று ஆரம்பிக்கிறார்.
ஆண்டாள் 8 அடிகள் உள்ள திருப்பாவை பாசுரத்தில் மூன்று அடிகளைத் தயிர் கடையும் ஓசைக்கு ஒதுக்கி ஏன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள்.
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்** மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?*
காரணம் பாகவதத்தில் இருக்கிறது.(10.46.1, 2 ) உத்தவர் கண்ணனின் அன்புக்குரிய ஆத்ம நண்பர். ஒரு நாள் கண்ணன் உத்தவரைத் தனியாக அழைத்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு
“அன்பான உத்தவரே! நீ கோகுலம் சென்று என் பெற்றோருக்கும் கோபிகைகளுக்கும் எனது இனிய செய்தியைக் கூறி மகிழ்ச்சியை அளிக்க வேண்டும். கோபியர்கள், என்னை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்டுள்ள துயரைப் போக்க வேண்டும்”
என்று கூறி கோபியர்களுக்கு இவ்வாறு சான்றிதழ் கொடுக்கிறார் கண்ணன் ( 10.46.3 ) ”அவர்கள் என்னிடமே மனத்தைப் பறிகொடுத்தவர்கள். என்மீது உயிரையே வைத்துள்ளார்கள். எனக்காகத் தங்கள் கணவர்கள், புத்திரர்களைத் துறந்து இனிய சுகத்தை விட்டவர்கள். அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய ஆத்மாவாக என்னையே கொண்டவர்கள். எனக்காக ஆற்றவேண்டிய அறநெறிக் கடமைகளை நீத்தவர்கள். ஆகவே எனக்காவே நான் அவர்களைக் காத்து வருகிறேன்”
”ஆகவே உத்தவரே நான் அவர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பதால், என்னையே நினைத்து என்னைக் காணும் பேராவலால் தளர்ந்து மயங்கி நிற்கின்றனர். நான் விரைவில் திரும்புவேன் என்று கூறி எப்படியாவது கஷ்டப்பட்டு தங்கள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க சொல்” என்று சொல்லி அனுப்புகிறார்.
தூது சென்ற கண்ணனுக்கே தூதனாக நந்த கோகுலம் சென்றார் உத்தவர். அங்கே அவர் கண்ட காட்சிகளை விவரிக்கிறது பாகவதம் ( 10.46. 9 - 49 ) இது அப்படியே திருப்பாவையில் ஆண்டாள் உபயோகித்திருக்கிறாள் என்றே தோன்றுகிறது. ( அதை வேறு பாசுரத்தில் பார்க்கலாம் )
கோகுலம் சென்ற உத்தவர் கோபிகைகளிடம் “கண்ணன் மிக விரைவிலேயே கோகுலம் வந்து உங்கள் அருகில் இருக்க போகிறார்!” என்று கூறிவிட்டு நந்தரும் உத்தவரும் பேசிக்கொண்டு இருந்தபோது இரவு கழிந்தது. விடியற்காலை உத்தவர் கண்ட காட்சி ( 1.47.45 ) இது
“கோபிகைகள் விடியற்காலை எழுந்தனர். தீபங்களை ஏற்றினார்கள். வீட்டு வாசலில் மஞ்சள் குங்குமமிட்டு வாஸ்து தேவதையை வணங்கினர். பின் தயிர் கடையத் தொடங்கினார்கள். கடைகிற கயிறு இழுக்கும் கைகளில் வளைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களில் தீப ஒளிபட்டு அவை மேலும் ஒளிர்ந்தன. இடுப்பு அசைய அசைய ஹாரங்களும் குண்டலங்களும் குலுங்கின. கன்னத்தின் சிகப்பும், நெற்றிக் குங்குமச் சிகப்பும் முகத்தை மேலும் அழகுறச் செய்தன. தாமரைக் கண்ணனைப் பற்றிப் பாடுகிற கோகுலத்து மாதர்களின் குரலுடன், தயிர் கடைகிற ஒலியும் கலந்து வானை எட்டியது. அந்த ஒலி நான்கு திசையும் பரவத் தீயவை விலகின.
இப்போது ஆண்டாள் அருளிய திருப்பாவையுடன் இதைப் பார்க்கலாம்.
தீபங்களை ஏற்றினார்கள்.(தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய)
வீட்டு வாசலில் மஞ்சள் குங்குமமிட்டு வாஸ்து தேவதையை வணங்கினர்.
பின் தயிர் கடையத் தொடங்கினார்கள். கடைகிற கயிறு இழுக்கும் கைகளில் வளைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களில் தீப ஒளிபட்டு அவை மேலும் ஒளிர்ந்தன. இடுப்பு அசைய அசைய ஹாரங்களும் குண்டலங்களும் குலுங்கின.
( காசுமாலையும், குண்டுமாலையும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்)
கன்னத்தின் சிகப்பும், நெற்றிக் குங்குமச் சிகப்பும் முகத்தை மேலும் அழகுறச் செய்தன. தாமரைக் கண்ணனைப் பற்றிப் பாடுகிற கோகுலத்து மாதர்களின் குரலுடன், தயிர் கடைகிற ஒலியும் கலந்து வானை எட்டியது. அந்த ஒலி நான்கு திசையும் பரவத் தீயவைகள் விலகின. (ஓசை படுத்த தயிர் அரவம் )
தயிரைக் மத்தினால் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும்.
பாகவதத்தைத் திருப்பாவை என்ற மத்தினால் கடைந்தால் நமக்குக் ’வெண்ணெய் உண்ட வாயன்’ கண்ணன் கிடைப்பான்.
பாகவதம், திருப்பாவை இரண்டிலும் கண்ணன் தானே இருக்கிறான் !
கீசு கீசு - 7
23.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்
Comments
Post a Comment